எந்திரன்

ARV Loshan
75
அண்மைக்காலத்தில் எந்திரன் அளவுக்கு வேறு எந்தப் படத்துக்கும் இத்தனை பரபரப்பு இருந்திருக்குமோ தெரியாது.
சில நேரம் எரிச்சல் வருமளவுக்கு எங்கு பார்த்தாலும் 'எந்திரன்',எந்திரன் தான்..
ரஜினி என்ற மந்திர சொல்லுக்கு (இன்னும்) இருக்கும் மவுசு புரிந்தது.
ஷங்கர்,ரஹ்மான்,சன் என்று நான் அடுக்கிட்டே போக நீங்கள் எல்லாரும் கொட்டாவி விட்டுட்டே அடுத்த பந்திகளைத் தேட தேவையா?

நேரே நேற்று பார்த்த எந்திரன் பற்றிய என் பார்வைக்குப் போயிடுறேனே..

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நேற்று மாலை நடைபெற்ற எந்திரன் அறிமுகத் திரையிடலுக்கு அழைப்பிதழ் கிடைத்தது.
இறக்குமதி செய்துள்ள EAP மற்றும் MR Associates நிறுவனங்களுக்கு நன்றிகள்+வாழ்த்துக்கள்.

ஷங்கரின் இயக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ள திரைப்படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மாபெரும் பொருட்செலவில் வந்துள்ளது எந்திரன்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கலாநிதி மாறனின் பணமும் ஷங்கரின் தாராளமயமும் தெரிகிறது.
தமிழில் இப்படி பிரமாண்டத்தை திரையில் தர ஷங்கரால் தான் முடியும் என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப் பட்டுள்ளது.

ரோபோ சண்டைக் காட்சி வித்தியாசமான விருந்து.தமிழில் இப்படி ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கவும் முடியாது;இதுவரை பார்த்திருக்கவும் முடியாது..

  புதியமனிதா பூமிக்கு வா என எஸ்.பீ.பி அழைக்க படம் ஆரம்பிக்கிறது.
வழமையான ரஜினிக்கான அறிமுகம் மிஸ்ஸிங்.
ஆனால் இது ஷங்கரின் பத்துவருடக் கனவு என்பதால் ஓகே.

ரஜினி(வசீகரன்) ஒரு விஞ்ஞானி. அவரது பத்துவருட (இங்கேயும் பத்து??!!) கடுமையான ஆராய்ச்சி+உழைப்பில் உருவாகும் ரோபோவைத் தன் உருவத்துடனே படைக்கிறார்.
இந்த உழைப்பின் மத்தியில் தனக்காக உருகி,அலையும் அழகிய ஐஸையும் மறந்து தாடி,மீசை+தலைமுடியும் வளர்த்து பாடுபடுகிறார்.
இந்திய ராணுவத்தில் உயிரிழப்பைக் குறைக்க இந்த ரோபோவைப் பயன்படுத்த முயல்கிறார்.ஆனால் இவர் புகழ்பெறுவதைத் தடுக்க முயலும் வசீகரனின் பேராசிரியர் போரா தரும் தொல்லைகள் ரஜினியின் நிம்மதியை கெடுக்க, பேராசிரியரை ஜெயிக்க ரோபோவான சிட்டிக்கு மனிதனுக்கிருக்கும் உணர்வுகளை ஊட்டுகிறார் வசீகரன்.
அங்கே ஆரம்பிக்கிறது திருப்பம்.. அப்போ தான் இடைவேளை டொட்.(இப்படித்தான் ஹீரோ ரஜினி அடிக்கடி சொல்கிறார்)

சந்தானம்_கருணாஸ் சொல்லும் மனிதரிடம் உள்ள ரோபோவிடம் இருக்காத ஒன்று - அதாங்க பீலிங்க்சாம்.. சிட்டி ரோபோவிடம் வந்து சேர்ந்த பிறகு தான் வசீகரனுக்கு ஆரம்பிக்கிறது தலைவலி.
வரம் கொடுத்த சாமியின் தலையிலேயே கை வைத்த கதையாக வசியின் காதலி அழகிய சனாவிலேயே காதல் கொள்கிறது ரோபோ.

அதுவும் உங்க வீட்டு,எங்க வீட்டுக் காதல் அல்ல.. ரோபோ வீட்டுக் காதல். ரொம்பவே ஸ்ட்ரோங்.
இந்தக் காதலால் ரோபோவைப் படைத்த ரஜினி அதை உடைத்துப் போட்டுவிடுகிறார்.
வில்லன் அந்த ரோபோவை எடுத்து தன்வயப்படுத்தி,ஆக்க சக்தியாக விஞ்ஞானி ரஜினி உருவாக்கியதை அழிவு சக்தியாக மாற்றி விடுகிறார்.
அதுக்குப் பிறகு ஆரம்பிக்கிறது ரஜினியின் ஆட்டம்.
வில்லன் ரோபோ செய்யும் அட்டகாசம் ரஜினி ஸ்டைல்+ரஜினி பஞ்ச். அண்மையில் இப்படிப்பட்ட ரஜினி டைப் வில்லத்தனம் பார்த்தது வேட்டையன்(சந்திரமுகி) இல் தான்.

அப்புறம் என்ன,தன் காதலியை ரோபோ கடத்த,விஞ்ஞானி இந்திய ராணுவம்+போலீசுடன் சேர்ந்து ஐஸை மீட்கவும் ரோபோவை அழிக்கவும் போராட , பெரிய ரணகளம்+ஹோலிவூடில் மட்டுமே இதுவரை பார்த்த பிரம்மாண்ட அக்ஷன் காட்சிகளோடு எந்திரன் நிறைவடைகிறான்.

ஆரம்பம் போலவே முடிவும் அமைதியாக.
ரஜினி படம் என்றே உணர்வு அழுத்தமாக இல்லாமல்,Typical ஷங்கர் படமாகவே உணரவைக்கிறது.

ரஜினியின் இரு பாத்திரங்களையும் உருவாக்குவதில் ஷங்கர் எடுத்துள்ள சிரத்தை நன்றாகவே தெரிகிறது.
ஆனாலும் படம் முழுவதும் ஆக்கிரமிப்பதும் விஞ்சி நிற்பதும் சிட்டி ரோபோ ரஜினி தான். இந்த அறுபது வயதிலும் ரஜினி ரொம்பவே மினக்கெட்டிருக்கிறார்.
சில,பல காட்சிகளில் கிராபிக்ஸ் உதவி செய்திருந்தாலும்,அமெரிக்க ஸ்டூடியோக்களின் கைவண்ணம் இருப்பது தெரிந்தாலும் ரஜினி பளிச்சிடுகிறார்.
குறிப்பாக ரோபோ வில்லனாக மாறிய பிறகு அதகளம்.
விஞ்ஞானியைப் பிடித்து வதைக்க எண்ணுகையில் சிட்டியின் வில்லத்தனம் மின்னுகிறது.
இறுதிக்கட்டக் காட்சிகள் முழுக்க முழுக்க ரஜினி மாயம். ரோபோக்கள் அத்தனையும் ரஜினி போலவே மாறியிருப்பது பிரமிப்பு+கொஞ்சம் சலிப்பு.




பின்னே இத்தனை ரஜினிகளா,ரஜினி மலிந்துவிட்டாரா என்று எண்ண வைத்துவிடுகிறதே..

ரோபோ ரஜினி செய்யும் சில லீலைகளும் வேலைகளும் சொன்னதை சொன்னபடியே செய்யும் குறும்பும் ரசிக்க வைப்பன.

எனினும் ஹீரோ ரஜினி ஒரு டம்மி போல தென்படுவது படத்தைக் கொஞ்சம் தளர செய்தது போல ஒரு உணர்வு. என்னுடன் படம் பார்த்த ஒரு சில ரஜினி ரசிகர்களுக்கும், இன்று சட்டிய ஒரு ரஜினி வெறியருக்கும் இது அறவே பிடிக்கவில்லை.
தலைவரை டம்மியாக்கி ரோபோவை ஹீரோவாக்கி விட்டார் ஷங்கர் என்று குமுறினார்கள்.
இதனால் தான் ஷங்கர் ஆரம்பத்திலேயே 'எனது பத்து வருட கனவுப் படம்' என்று அடிக்கடி சொல்லிவந்தார்.

எனக்கு எந்திரன் வரு முன் வந்த ஒரு sms தான் ஞாபகம் வந்தது..

ஹீரோ கிழவன் ஆனால் இந்தியன்.
கிழவன் ஹீரோவானால் எந்திரன்..


ஐஸ்வர்யா ராய் - அழகாய்த் தான் இருக்கிறார்.நளினமாக நடனமாடுகிறார்.ஓரளவு நடிக்கவும் செய்கிறார். பாய்ந்து பாய்ந்து முத்தமிடுகிறார்.கவர்ச்சியையும் அள்ளி வீசுகிறார்.
ஆனால் அவரது கவர்ச்சி எனக்கென்னவோ அருவருப்பாக இருக்கிறது.முதிர் கவர்ச்சி தான் காரணமோ?

நயவஞ்சக விஞ்ஞானியாக வரும் Danny Denzongpa அமைதியான வில்லன். நல்ல தெரிவு.
ஆனால் இவரிடமிருந்து வில்லன் பாத்திரத்தை ரோபோ பிற்பாதியில் எடுத்துவிடுகிறது.

நகைச்சுவை வைக்கவில்லை. சின்னப் பிள்ளைகளை சிரிக்கவைப்பதாகவே சந்தானம்+கருணாசின் நகைச்சுவைகள்.
கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் ஒரு லட்சிய விஞ்ஞானியிடம் இவர்கள் போல அசடுகள் உதவியாளர்களா? சகிக்கவில்லை.

வசனங்களால்+நகைச்சுவைகளால் ரஜினி சிரிக்கவைப்பது பரவாயில்லை.

வசனங்கள் - சுஜாதா,ஷங்கர்,கார்க்கி என்று காட்டப்படுகிறது.
சுஜாதாவின் நறுக்,சுருக் சில இடங்களில் தெரிகிறது.
மற்றைய ஜவ்வு வசனங்கள் மற்ற இருவரா? 

திரைக்கதையின் வேகமும் அக்ஷன் காட்சிகளும் படத்தை விறு விறுவாக்கியுள்ளன.
அந்த ட்ரெயின் சண்டை அமர்க்களம். ரோபோ சண்டையில் அக்ஷனை விட கிராபிக்ஸ் தான் அதிகம் விளையாடுகிறது.

ரோபோ நாயகியைத் தூக்கி வரும் இடத்தில் car chasing action பிரமாதமாக வந்திருந்தாலும் அத்தனை போலீசார் பலியாவதும்,நாயகி இருக்கிறாளே என்று பார்க்காமல் கண்மூடித் தனமாக போலீஸ் சுடுவதும் கொஞ்சம் அல்ல நிறையவே இடிக்கிறது.

ஆனாலும் இந்தப் படத்தில் வேறு  லொஜிக் எல்லாம் பார்த்து யாராவது நொட்டை சொன்னால் பேரரசுவின் படங்கள் பதினைந்தை அடுக்கடுக்காகப் போட்டு ஒரு அறையில் மூடிவிடவேண்டும்.
விஜய்,அஜித் எல்லாம் சாதாரண மனிதராக இருந்து பறந்து,பறந்து அடித்தால் பார்ப்பீர்கள்;ஒரு ரோபோவால் முடியாதா?
ஹோலிவூட் படங்களில் வரும் Sci fi Graphics காட்சிகள் பிடிக்கும்;இங்கே புளிக்குதா?

இசைப்புயல் ஆணித்தரமாக நிற்கிறார்.பாடல்களில் அசத்தியவர் படம் முழுவதும் இசை ராஜாங்கம் நடத்துகிறார்.காட்சிகளுக்கு தகுந்த இசை.காட்சிகளைப் பிரம்மாண்டமாக்கும் இசை.
சுருங்கக் கூறின் தமிழ் ஹோலிவூட் படத்துக்கு ஒஸ்கார் நாயகனின் இசை class :)

ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு இந்திரனின் மற்றொரு முக்கிய பலம்.
சாபு சிறிலின் மிகப் பிரம்மாண்ட அரங்க அமைப்புக்களை மேலும் பிரமாதப்படுத்தி தருவது ஒளிப்பதிவு தான்.
அதுவும் ஒளியமைப்பு - அற்புதம்.

படத்தின் நீளத்தை வெட்டி,நறுக்கி நெறிப்படுத்தி இருப்பதோடு பாடல்காட்சிகளிலும் நான் உள்ளேன் ஐயா சொல்லி இருப்பவர் அன்டனி.
இவர் திறமைக்கு ஒரு சர்வதேசப் படம் கிடைத்து ஒஸ்கார் வெல்லவேண்டும் என அடிக்கடி நினைக்கிறேன்.

அமரர் ஹனீபா,கலாபவன் மணி வருவன தலா ஒவ்வொரு காட்சிகளே ஆனாலும் முக்கியமானவை.
வசனங்களின் பளிச் இடங்கள் அவை.

பாடல் காட்சிகள் வழமையான ஷங்கர் டச்.
அரிமா,இரும்பிலே  பாடல்கள் அரங்க அமைப்பில் அசத்துகின்றன.
இயற்கைக் காட்சிகளால் மனசை அள்ளுவன - காதல் அணுக்கள்,கிளிமஞ்சாரோ..
புதிய மனிதா பாடலின் சில வரிகள் இடை இடையே வந்து வைரமுத்துவின் வரிகளின் வலிமை சொல்கிறது.

ஆனால் எல்லாவற்றிலும் புதுமை பார்க்க எண்ணும் ஷங்கரும் கூட இன்னும் கோஷ்டி நடனங்களையே நம்பி இருப்பது ஏன்?
ரஹ்மானும் வைரமுத்துவும்,கார்க்கியும் படைத்த வித்தியாச படைப்பாற்றலை இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்தி இருக்கலாமே..
பிரம்மாண்டமாக இருப்பவை மனசில் நிலைகொள்ளாமல் போகலாம்.

 முக்கோணக் காதல் முதல் தடவை வெளிப்படுத்தப்படும் இடமும், இரு ரஜினிகளும் ஐஸ்வர்யா ராயும் சந்திக்கும் இடங்களும்,தீ விபத்தில் ரோபோ காப்பாற்றும் இடமும் பரபரப்பானவை.
வசனங்களும் நறுக்கென்று இருக்கும் இடங்கள் இவை.

இன்னுமிரு நெகிழ்வான இடங்கள் ரோபோ பார்க்கும் பிரசவம் (ரோபோ தன் உணர்ச்சியை முதல் தடவை காட்டுவதாக ரஜினி தனது நடிப்பின் பரிமாணத்தைக் காட்டுகிறார்) மற்றும் climax dismantle காட்சி.
ஆனால் ஷங்கரிடம் இதை விட அதிகமாக எதிர்பார்த்தேன்.

கதை இப்படித்தான் என்று ஏற்கெனவே தெரிந்தபின்னும், பாடல்கள் மூலமாக மேலும் ஊகித்த பின்னும்,160 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாகும் படம் என்பதனால் பிரம்மாண்டம் பற்றி அறிந்த பின்னரும் நான் எதிர்பார்த்த ஷங்கரின் கனவுப் படைப்பு மேலும் வித்தியாசமானது. 
 
சுஜாதாவின் பங்கும் இருக்கிறது என்றவுடன் முன்னைய சுஜாதாவின் படைப்புக்களின் தழுவல் அல்லது சாயல் (முக்கியமாக என் இனிய இயந்திரா) இருக்கும் என்று இறுதிவரை எதிர்பார்த்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே.
சுஜாதாவின் என் இனிய இயந்திராவும் , மீண்டும் ஜீநோவும் வாசித்தவர்களுக்கு இன்னும் ஏமாற்றம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஷங்கரின் சிவாஜிக்கும் அந்நியனுக்கும் முன்னர் வந்திருந்தால் இக் கதையை வரவேற்றிருப்போம்.
ஆனால் இந்தக் காலத்தில் முதல் படம் எடுக்க வருபவனே கதைக்குள் பல புதுமைகள்,பல திருப்பங்கள் வைத்து ஆச்சரியப்படுத்தும் போது, ஷங்கர் பணம் + பிரம்மாண்டம் என்ற பூச்சோடு ரஜினி என்ற மாயாஜாலத்தை இப்படி சாதாரணமாக பயன்படுத்தி இருப்பது கொஞ்சம் ஏமாற்றமே.

சன் டிவியும்  ரஜினி ரசிகர்களும் தமிழில் எந்திரனை வெற்றிபெற வைத்துவிடுவார்கள். வட இந்தியாவில்?

எந்திரன் பிரம்மாண்டம்_தொழிநுட்பத்தில் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத மைல் கல். ஆனால் கதை,திரைக்கதையில் ஷங்கர் பத்தாண்டுக் கனவு போலவே பத்தாண்டுக்கு முன் நிற்கிறார்.

அத்துடன் உண்மையான ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் ஏக்கப்படவே கூடும்..  சிவாஜியில் அதிரடித்த ரஜினி இங்கே அடக்கி வாசிப்பது கதைக்கேற்பவே என்றாலும் கூட ரஜினி காந்த் என்ற சூப்பர் ஸ்டாரிடம் ஒவ்வொரு ரசிகனும் எதிர்பார்ப்பது எதை என்பதை சாதாரண ரசிகனும் சொல்வானே.
என்னைப் பொறுத்தவரை

எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
(திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை)

Post a Comment

75Comments

Please Select Embedded Mode To show the Comment System.*