ஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்

ARV Loshan
39


ஒரு நாள் காலை. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஒபாமாவின் தனிப்பட்ட நேரடி தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.
எடுத்தால் 
"மிஸ்டர் ஒபாமா.. உமக்கு எதிராகவும் உம் நாட்டுக்கு எதிராகவும் போர் தொடுக்க முடிவெடுத்திருக்கிறேன்" என்று ஒரு குரல்.


கொஞ்சம் துணுக்குற்றுப் போன ஒபாமா சிரித்துக்கொண்டே "என்னது போரா?ஏன்? யாரது? எங்கிருந்து பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்.


"நான் இலங்கையின் கொழும்பிலிருந்து கஞ்சிபாய்.உங்க அமெரிக்கா எங்கள் மேதகு ஜனாதிபதியை ஒழுங்கா மரியாதையா கவனிக்குதில்லை.உங்கள் நாட்டில் இருந்து அடிக்கடி இறுக்கியும் உங்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.நா வும் அடிக்கடி நம்ம ஜனாதிபதியை வம்புக்கு இழுக்குது. அதனால தான் போர்" என்றும் கம்பீரமாக குரல் வந்தது.


பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "சரி உங்களிடம் இப்போது எத்தனை பேர் படையில் இருக்கிறார்கள்?" என்று கேட்டார் ஒபாமா.


"ம்ம்.. இப்போ நான், சிங்கப்பூர் சீலன்,லபக்கு தாஸ் இப்படி எல்லாமா ஒரு பத்துப் பேர் இருக்கிறோம்" என்றார் கஞ்சி பாய்.


"ம்ம் ஓகே.. ஆனால் மிஸ்டர் கஞ்சி.. என்னிடம் ஒரு பதினைந்து லட்சம் பேராவது படையில் இருக்கிறார்கள்... தெரியுமா?" என்று கெத்தாகக் கேட்டார் ஒபாமா.


"நாசமாப் போக.. ஓகே மிஸ்டர் ஒபாமா.. நான் கொஞ்ச நேரத்தில் யோசிச்சிட்டு மறுபடி எடுக்கிறேனே" என்று அவசரமாக தொலைபேசியைத் துண்டித்தார் கஞ்சி பாய்.


இதை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தார் ஒபாமா..


பார்த்தால் மீண்டும் கொஞ்ச நேரத்தில் அழைப்பு..

எடுத்தால் மீண்டும் அதே கஞ்சி பாய்..
"மிஸ்டர் ஒபாமா.. நான் அதே கஞ்சிபாய்.உங்கள் மீது போர் தொடுக்கும் ஐடியாவில் மாற்றமில்லை.எங்கள் படைக்கு கொஞ்சம் வாகனங்களும் ஆயுதங்களும் எடுத்திட்டம்"


பலமாக சிரித்துக் கொண்டே"அப்படியா? என்னென்ன ஆயுதங்கள்?என்னென்ன வாகனங்கள்?" என்று கேட்டார் ஒபாமா.


"ம்ம்.. ஒரு ட்ராக்டர்,ரெண்டு லொறி,நாலஞ்சு கார்,வான் இருக்கு.. அப்ப்பிடியே கொஞ்சக் கத்தி,பொல்லுகள்,அலவாங்குகள்,கோடரிகள்,கட்டுத் துவக்குகள் அப்பிடி ஆயுதங்கள் சேர்த்திட்டம்" என்று நம்பிக்கையாக சொன்னார் கஞ்சி பாய்.


இவனையெல்லாம் என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டு "ஐ சே கஞ்சி பாய்.. என்னிடம் உள்ள ஆயுதங்கள் உலகத்திலேயே வேறு யாரிடமும் இல்லை.மில்லியன் கணக்கான ஆயுதங்கள்,சகல விதமான நவீன ஆயுதங்களும் இருக்கு.. அணுகுண்டு உட்பட" என்று ஒபாமா சொன்னார்.


"ஆகா.. இப்பவே கண்ணைக் கட்டுதே" என்று முணுமுணுத்த கஞ்சிபாய் "ஓகே.. இது பற்றி எனது சகாக்களிடமும் கொஞ்சம் பேச இருக்கு. நான் மறுபடி எடுக்கிறேனே" என்று மீண்டும் தொலைபேசியைத் துண்டித்தார்.


எப்படி இப்படியான ஒருவனிடம் தான் மாட்டினேன் என்று புரியாமல் முடியில்லாத தன் தலையைப் பிய்த்துக் கொண்டார் ஒபாமா..


இப்படியே ஒரு நான்கைந்து தடவை கஞ்சிபாய் அழைப்பு எடுப்பதும் ஒபாமா தனது அமெரிக்கப் படைபலத்தைப் பற்றிப் பீற்றுவதுமாக அன்றைய நாள் கடந்துவிட்டது.


அடுத்த நாள் காலை..


மவனே இன்று மட்டும் தொலைபேசி எடு, நிச்சயமா அணுகுண்டு போட்டு அழித்து விடுகிறேன் என்னும் முடிவோடு இருந்தார் பராக் ஒபாமா.


முதல் நாளின் கடுப்பு அவரது தூக்கத்தையே போக்கடித்திருந்தது சிவந்து வீங்கிய கண்களில் தெரிந்தது.


தொலைபேசி கிணுகிணுத்தது..
எடுத்து காதில் வைக்கிறார் ஒபாமா.

"குட் மோர்னிங் மிஸ்டர் ஒபாமா.. நான் கஞ்சிபாய் ப்றோம் ஸ்ரீ லங்கா"

வந்திட்டான்யா வில்லன் என்று மனசில் கறுவிக் கொண்டே " ம்ம் தெரியுது சொல்லுங்க" என்று பல்லைக் கடித்துகொண்டார் ஒபாமா.


"மன்னிக்கணும்.. உங்கள் மீது போர் தொடுக்கும் ஐடியாவை தற்காலிகமாகப் பின் தள்ளிப் போட எண்ணியுள்ளேன்"
என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார் கஞ்சிபாய்.


"ஆ? என்னது?" என்று கொஞ்சம் ஆச்சரியப்பட்ட ஒபாமா, "ஏன் திடீரென்று இப்படியொரு முடிவு?" என்று கேட்டார்.


"பயம் எல்லாம் இல்லை. ஆனால் நேற்று ஒரு யோசனை வந்தது. உங்க அமெரிக்காவை நாங்க போரில் வென்ற பிறகு, நாங்கள் சிறைப்பிடிக்கப் போகும் உங்க படைவீரர்கள் பத்து, பதினைந்து லட்சம் பேரையும் எங்கே சிறை அடைப்பது? அதான்.. அதுக்கேத்த ஏற்பாடு செய்யும்வரை போரை ஒத்திவைக்கிறேன்" என்று கஞ்சிபாய் சொல்லி முடிக்க,தொலை பேசி ஒரு பக்கம் விழ மயக்கம் போட்டு ஒபாமா சாய்ந்தார்.


CNN BREAKING NEWS - President Obama faints after attending to a phone call.


இன்று காலை விடியலில் சொன்ன கதை. :)


சிறு தகவல் - இன்று வெள்ளை மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 218 ஆண்டுகள் ஆகிறதாம்.

Post a Comment

39Comments

Please Select Embedded Mode To show the Comment System.*