ராஜ்கோட்டில் அன்று மூன்று ஓட்டங்களால் கை நழுவவிட்ட வெற்றியை இன்று அதே போன்ற ஒரு விறுவிறுப்பான போட்டியில் கடைசி ஓவரில் அடைந்துள்ளது இலங்கை அணி..
மீண்டும் ஒரு 300 +ஓட்டங்கள் பெற்ற போட்டி.. மீண்டும் கடைசி ஓவர் முடிவு..
இந்திய ரசிகர்கள் இந்தத் தோல்விக்கு கடைசி நேரத்தில் தனது கவனயீனத்தால் களத்தடுப்பில் தவறுவிட்ட சாகீர் கானை வசைபாடலாம்..
இலங்கை ரசிகர்களோ இலங்கை வென்ற உற்சாகத்தில் (இந்தியாவை சொந்தமண்ணில் வைத்து எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் வீழ்த்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமா?) சதங்களாகவும் சாதனைகளாகவும் குவித்துவரும் டில்ஷானையும், அணியைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும் பணியை ஆஸ்திரேலியாவின் முன்னைய பெவான் போல் பொறுபேற்றுள்ள மத்தியூசுக்கு பாராட்டு,நன்றிகளைக் கூறலாம்..
ஆனால் நாக்பூரின் கிரிக்கெட் அமைப்பு, அதன் மைதானப் பராமரிப்பாளர்கள் என்று இன்றைய போட்டியை மூன்று நாட்களுக்குள் திட்டமிட்டு,சீராக நடத்திய அத்தனை பேருக்கும் முதலில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நாம் சொல்லியே ஆகவேண்டும்.
தெலுங்கானாப் பிரச்சினை காரணமாக விசாகப் பட்டினத்திலிருந்து அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போட்டியை எந்தவித குறைகள், அவசர ஏற்பாடுகள் தெரியாமல் நடத்தியது உண்மையில் மிகப்பெரும் சாதனை.
இந்த மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி இதுதான்.
இதற்கு முதல் இந்தியா ஆஸ்திரேலியாவை அண்மையில் 99 ஓட்டங்களால் தோற்கடித்தது.(இந்தியா 354 , ஆஸ்திரேலியா 245 )
இன்று மீண்டும் ஒரு தட்டையான துடுப்பாட்ட சாதக ஆடுகளம்.. ஆனால் ராஜ்கோட்டை விட எவ்வளவோ மேல்..
பந்துவீச்சாளர்களுக்கு ஏதோ கொஞ்சமாவது இருந்தது.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் ச்விங்கும், சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சுழலும் இருந்தன.
எனினும் ஓட்டங்கள் மலையாகவும், சிக்சர் பவுண்டரிகள் மழையாகவும் பொழிந்த வழமையான இந்திய ஒருநாள் போட்டி.. (மீண்டும் பரிதாபப் பந்துவீச்சாளர்கள்)
இந்தியாவுக்கு மீண்டும் யுவராஜ் இல்லாமல் ஒரு போட்டி..
ஆனால் அந்தக் குறை தெரியாமல், சேவாகும், கம்பீரும் குறைந்த ஓட்டங்களோடு ஆட்டமிழந்தது குறையாக அமையாமல், முதலில் சச்சின், கோளி.. பின்னர் தோனி, ரெய்னா என்று அதிரடி ஆட்டம் ஆடி இந்தியாவை 300 ஓட்டங்கள் தாண்ட செய்தார்கள்.
அதிலும் சச்சின்,கோளி இட்டுக்கொடுத்த அடித்தளத்திலே தோனியும் ரெய்னாவும் கடைசிப் பத்து ஓவர்கள் ஆடிய பேயாட்டம் இருக்கிறதே..
கடைசி பத்து ஓவர்களில் நூறு ஓட்டங்கள்.. தோனி சதம்.. அவரது ஆறாவது ஒருநாள் சதம் இது..
ரெய்னாவும் மூன்று சிக்ஸர்களோடு கிடைத்த வாய்ப்பில் சந்தில் சிந்து பாடினார்.
இலங்கை அணி இந்தப் போட்டிக்கு முன்னர் ராஜ்கோட்டில் கண்ட மூன்று ஓட்ட மயிரிழைத் தோல்வியினாலும், முரளி, மாலிங்க, டில்கார பெர்னாண்டோ ஆகியோரின் காயங்களினாலும் கலங்கிப் போயிருந்தது.
அதிலும் முரளி,டில்ஹார ஆகியோர் இந்தத் தொடரில் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாமல் இலங்கை வந்துவிட்டார்கள்.
போட்டியில் கடந்த போட்டியில் கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம் அதிரடியாக மூன்று மாற்றங்களை இலங்கை அணி மேற்கொண்டது. டில்ஹாரவின் காயம் காரணமாக நான்காவது மாற்றமும் நிகழ்ந்தது.
அதிரடி மன்னன் (முன்னாள் என்று சொல்வது தான் பொருத்தமோ??) சனத் ஜெயசூரிய, ஒருநாள் தரப்படுத்தலில் முதல் நிலை பெற்ற நுவான் குலசேகர, திலான் சமரவீர ஆகிய மூவரையும் வெளியேற்றி, சாமர கபுகெடர மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரோடு இரு அறிமுக வீரர்களையும் இன்றைய போட்டிக்கான அணிக்குள் கொண்டுவந்தது.
சுழல் பந்துவீச்சாளர் சுராஜ் ரண்டிவ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால்.
எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் கால்பதித்து இருபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் சனத் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் காலகட்டத்தில் இருக்கிறார் என்பது மிகத் தெளிவாக உணர்த்தப்படுகிறது.
சுராஜ் மொகமத் என்றும் அழைக்கப்படும் சுராஜ் ரண்டிவ், அண்மைக்காலமாகவே உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாகப் பந்துவீசி வரும் இளம்வீரர்.
இலங்கையின் 19 வயத்டுக்குட்பட்ட அணிக்காக விளையாடி தற்போது ப்லூம்பீல்ட்(Bloomfield) கழகத்துக்காக தன ஓப்ப் ஸ்பின் மூலமாக வெற்றிகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்தும் வருபவர்.ஓரளவு துடுப்பெடுத்தடவும் கூடியவர்.
அண்மையில் தான் இவர் எதிர்கால இலங்கை அணியில் விளையாடுவார் என 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் எதிர்வு கூறியிருந்தேன்.
நேற்றுமுன்தினம் அவசரமாக அழைக்கப்பட்டு இன்று விளையாடிய சுராஜ் முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அதுவும் அவரது பந்து திரும்பும் கோணமும், சுழற்சியும் இந்தியவீரர்களை இன்று கொஞ்சமாவது தொல்லைப்படுத்தியது.
(மென்டிசும் இப்படித் தான் இதே மாதிரி இந்திய அணியுடன் பிரகாசித்து ஆரம்பித்தார்.. இப்போது??)
302 என்ற இலக்கு எந்த ஆடுகளத்திலுமே அவ்வளவு இலகுவான ஒன்றல்ல..(ராஜ்கோட் தவிர)
இலங்கையின் ஆரம்பமே அதிரடி+அசத்தல்..
டில்ஷான் இருக்க கவலை ஏன்?
டில்ஷானின் அசுர,அதிரடி போர்ம் தொடர்கிறது.
அடுத்தடுத்து அபாரசதங்கள்..
இந்த வருடத்தில் நான்காவது சதம்..
தரங்கவுடன் 14 ஓவர்களுக்குள் சத இணைப்பாட்டம்.
உபுல் தரன்கவைத் தொடர்ந்து சங்கக்கார, மகெல ஜெயவர்த்தன, கண்டம்பி ஆகியோரின் சராசரிப் பங்களிப்பு இருந்தபோதும் டில்ஷான் இருக்கும்வரை இலங்கை அணிப்பக்கமே வெற்றி வாய்ப்பு சாய்ந்திருந்தது.
டில்ஷான் ஆட்டமிழக்க இலங்கை அணி வழமையான எமக்குப் பழகிப்போன பதற்றம், தடுமாற்றத்துக்கு உள்ளாகியது.
இலங்கை,இந்திய அணிகள் விளையாடும்போது மட்டும் அடிக்கடி இப்படியாக இறுதிவரை வந்து எங்களை நகம் கடிக்கவைத்து, இதயங்களை வாய் வரை வந்து துடிக்க வைத்து, மாரடைப்பு வந்திடுமோ எனப் பயப்பட வைக்கும்படியாக போட்டிகளை விளிம்புவரை கொண்டுவருவார்கள்.
இரண்டு அணிகளுமே தத்தம் ரசிகர்களைப் பதறவைத்துவிடுகின்றன..
கொஞ்சம் பார்த்து விளையாடுன்கப்பா.. எத்தனை பேர் மாரடைப்பில் போகப்போறாங்களோ?
அண்மைக்கால இலங்கை அணியின் finisherஆக மாறியுள்ள மத்தியூஸ் இன்றும் கடைநிலை துடுப்பாட்டவீரர்களோடு இணைந்து இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்.
அனால் இந்த 21 வயது இளைஞனுக்கு தான் எத்தனை பக்குவம்?
கால் தசைப் பிடிப்பு வந்தபோதும் துடுப்பை சரியாகப் பிடிக்கவே தடுமாறும் மென்டிசையும் வழிநடத்தி கடைசி ஓவரில் வெற்றியை அடையவைத்தர்.
அபாரம்..
ஆனால் தோனி பந்துவீச்சாளர்களை சரியாகக் கணிக்காமல் நல்ல பந்துவீச்சாளர்களை அவசரமாக முதலிலேயே முடித்ததும், இந்திய வீரர்களின் அண்மைக்காலமாக இருந்துவரும் மோசமான களத்தடுப்பும் இந்திய அணிக்கு வில்லன்களாக மாறியது.
கைக்குள்ளேயே சென்ற பந்தைக் கோட்டைவிட்டு நான்காக மாற்றிய சாகீர் கான், அடுத்தடுத்த பந்தில் கொஞ்சம் சிரமமான பிடியையும் நழுவவிட்டார்.
போட்டி ஆரம்பிக்குமுன் தோனி கவலைப்பட்ட களத்தடுப்பு பலவீனம் மீண்டும் காலை வாரிவிட்டது.
றொபின் சிங்கை மீண்டும் பயிற்சி வழங்க அழைக்குமா இந்தியா?
இலங்கை வீரர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல.. தம் பங்குக்கு பிடிகள்,பந்துகளைக் கடைசி நேரம் தானம் வழங்கினார்கள்.. வழிகாட்டி தலைவர் சங்கக்கார.. ஸ்டம்பிங் வாய்ப்பு, பிடிஎடுப்பு என்று தாரளமாக விட்டார்.(பஞ்சாப் ராணி ப்ரீத்தி சிந்தா கனவிலே வந்தாரோ???)
இந்த வெற்றியின் மூலம் தொடர் சமப்பட்டுள்ளது.. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளன..
டில்ஷானின் போர்ம் கலக்கலாக உள்ளது..இவ்வளவு காலமும் இதை எங்கே வைத்திருந்தாய்?
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்தபின் தான் அத்தனையும் வருகிறதா?
அடுத்தபோட்டியிலும் சதம் அடித்து சாதனை படைப்பாரா பார்க்கலாம்..
பிந்திக் கிடைத்த தகவல் ஒன்று.. ஸ்ரீசாந்த் போலவே யுவராஜ் சிங்குக்கும் பன்றிக் காய்ச்சல் தோற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாம்..
உறுதியாகத் தெரியவில்லை..
இன்னொரு மகிழ்ச்சியான செய்தி..
என் வலைத்தளத்தைத் தொடர்வோர்(Followers) தற்போது 300 ஆக மாறியுள்ளார்கள்.. நன்றி நண்பர்களே.. உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறேன் என நம்புகிறேன்..
பி.கு - என்னிடமிருந்து வேட்டைக்காரன் விமர்சனம் எதிர்பார்க்கும் அன்புள்ளங்களே, இன்னும் பார்க்கவில்லை.. பார்க்காமலே எழுதலாம் என்றாலும், பார்த்தபின் எழுதுவதே பழக்கம் என்பதால், இலவச டிக்கெட் கிடைக்கும் திங்கள் வரை காத்துள்ளேன்..
சனி,ஞாயிறு வெளிவேலை இல்லாமல் கொஞ்சம் ப்ரீயாக குடும்பத்தினரோடு இருக்க விரும்புகிறேன்.. :)