என்னா அடி..

ARV Loshan
11

தலைப்பைப் பார்த்தவுடன் வேட்டைக்காரன் விமர்சனம் என்று தப்பாக எண்ணி நீங்கள் வந்திருந்தால் நான் பொறுப்பில்லை..

ஆனால் நான் நேற்று முன்தினம் வேட்டைக்காரன் பார்த்து விட்டேன்.. :) விமர்சனம் அல்லது எனது பார்வை அடுத்து வரும்..


குடும்பமாக அனைவரும் இலவசமாக செல்லக் கூடிய வாய்ப்பு இருந்ததால் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் போட்டியை வேண்டாவெறுப்பாக தியாகம் செய்துவிட்டேன்..
வீட்டிலிருந்து இலங்கை அணியின் ஐம்பது ஓவர்கள் முடிந்த பிறகுதான் கிளம்பினோம்.

இலங்கை அணியின் ஐம்பது ஓவர்கள் முடிவதற்கு நான்கு பந்துகள் இருக்கும் நிலையில் மின் விளக்கு கோபுரம் ஒன்று செயற்படாமல் இருபது நிமிடத் தடங்கல் ஏற்பட்ட பிறகு தான் நினைந்தேன் போட்டியில் இடையிடையே மீண்டும் இவ்வாறான தடங்கல்கள் ஏற்படலாம் என்று.

கொல்கொத்தா ஆடுகளம் பற்றி நான் அறிந்திருந்தவரை இலங்கை பெற்ற 315 ஓட்டங்கள் தோனியும்,யுவராஜும் இல்லாத இந்திய அணியினால் குறிப்பாக இரவு வேளையில் எட்டிப் பிடிப்பது சிரமாகவே இருக்கும் என நம்பித் தான் சென்றேன்.

ஆனால் நடந்தது???

இந்திய அணி திட்டமிட்டு, மிக நேர்த்தியாக இந்தப் பெரிய இலக்கை அடைந்தது.

கொல்கொத்தா மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கான தனது முன்னைய சாதனையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை தானே முறியடிக்க, சில மணிநேரங்களிலேயே இந்தியா அதைத் தன்வசமாக்கியது.

அது மட்டுமா? தொடரும் இப்போது இந்தியா வசம்.

சேவாக் தலைமைப் பதவியில் தான் மிக சந்தோஷமாக உள்ளதாக சொல்கிறார்.
தோனி இல்லாத இரண்டு போட்டிகளிலும் அந்தக் குறையே தெரியாமல் இந்தியா இரு அபார வெற்றிகளைப் பெற்றது இந்தியாவின் அடுத்தகட்ட வீரர்களின் பலத்தை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.


இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான இந்தத் தொடரின் ஏனைய எல்லாப் போட்டிகளையும் போலவே, இந்த கொல்கத்தா போட்டியிலும் சாதனைகள் குறைவில்லாமல் சரிந்துவிழுந்தன.

இந்தப்போட்டிக்கென்று இலங்கை அணி நான்கு மாற்றங்களைச் செய்தமை குறிப்பிடத்தக்கது. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இருப்பை நீடிக்கப் போராடிவரும் 40வயது இளைஞர் சனத் ஜெயசூரியவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்கிடைத்தது.

எனினும் சனத் அதைச் சரியாக பயன்படுத்தவுமில்லை. அதற்கு முதல் நாள் அவர் நடந்துகொண்ட விதமும் சரியில்லை.

கிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பதும், களியாட்டங்களில் ஈடுபடுவதும் தப்பில்லை. அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைளூ எனினும் போட்டியொன்றிற்கு முதல் நாள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அதிகாலை 2 மணிவரை களியாட்ட விடுதியில் மது, மாதுவுடன் டில்ஷானும், சனத் ஜெயசூரியவும் களியாட்டத்தில் ஈடுபட்டது மிகத் தவறானது. அதுவும் இளையவீரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய சிரேஷ்ட வீரர்கள் இருவர் இவ்வாறு நடந்துகொண்டது கண்டிக்கப்படவேண்டியது.

டில்ஷானின் முதலாவது மணவாழ்க்கை பல்வேறு காரணிகளால் முறிந்து – அந்த தடுமாற்றத்தில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் சிக்கி காணாமல் போகும் அபாயத்திலிருந்து அண்மையில் தான் மீண்டு - இரண்டாவது திருமணத்தின் பின்னர் பிரகாசிக்கிறார்.

மீண்டும் ஒரு குழப்படி, கிளுகிளுப்பு தேவையா?

முதலிரு போட்டிகளில் சதமடித்து அபார ஆட்டம் ஆடிய டில்ஷான், மூன்றாவது போட்டியிலும் விரைவாக 40 பெற்றாலும், நேற்று முன்தினம் சறுக்கினார்.

அவரது சக இரவுத் தோழன் சனத்தும் சறுக்கினார்.

இவர்களது இரவு நடத்தைக்கும் இந்தப் போட்டியில் குறைவாக ஆட்டமிழந்ததற்கும் சம்மதமுண்டா என்பது சம்பந்தமில்லாத கேள்வி. எனினும் இலங்கை கிரிக்கெட் இவர்கள் மீது எடுக்கவுள்ள நடவடிக்கை ரகசியமானது என்கிறது உள்வட்டாரம்.

எமது விளையாட்டு நிகழ்ச்சியான அவதாரத்திலே அடிக்கடி நான் புகழ்ந்து வந்த திஸ்ஸர பெரேரா இலங்கை சார்பாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 141வது வீரரானார். 14 பந்துகளில் அவர் ஆடிய துரித ஆட்டம் அறிமுகப் போட்டியில் ஒரு வீரர் பெற்ற வேகமான இனிங்ஸ் (Strike rate) என்ற சாதனை இப்போது திஸ்ஸர வசம்.

உபுல் தரங்கவின் 7வது ஒருநாள் சதம் - அவர் இந்தியாவிற்கு எதிராகப் பெற்ற முதல் சதம். 3 வருடங்களின் பின்னர் தரங்க சதமொன்றையும் பெற்றார்.

டில்ஷான் வழமையாக எடுத்துக்கொடுக்கும் அதிரடி ஆரம்பம் இம்முறை கொஞ்சம் தவறினாலும் தரங்க -சங்கக்கார சத இணைப்பாட்டம் இலங்கை பாரிய ஓட்ட எண்ணிக்கை பெறுவதை உறுதிப்படுத்தியது.

இவர்களது சத இணைப்பாட்டம் ஒருநாள் வரலாற்றில் 3வது விக்கெட்டுக்கான 400வது சத இணைப்பாட்டம்.

மஹேல, திஸ்ஸர பெரேரா, கண்டம்பி ஆகியோரின் அதிரடிகள் மூலம் 315ஐ இலங்கை அடைந்தது.

இலங்கை அணி தற்போது முரளீதரன், டில்ஷார பெர்ணான்டோ ஆகியோரை விட ஏஞ்சலோ மத்தியூஸையே இழந்திருப்பதை அதிகமாக உணர்கிறது.

அடுத்த போட்டியில் இஷாந்த் சர்மா அணியில் இடம்பெறமாட்டார் என உறுதியாக சொல்லலாம். இலங்கை அணியைப் பொறுத்த வரை அவர் ஓட்டங்கள் வழங்கும் ஒரு வள்ளல்.

இந்தியாவின் இரு பெரும் விக்கெட்டுக்களான சேவாக்கும், சச்சினும் புதிய வீரர் சுரங்க லக்மாலினால் சுருட்டப்பட்ட பிறகு இலங்கை அணி இலகுவாக வென்றுவிடும் என்று பார்த்தால்...

என்னா அடி.. மரண அடி...
36 ஓவர்கள் - 224 ஓட்டங்கள்.

கம்பீரும் - கோளியும் காட்டிய நிதானம், ஆக்ரோஷம், அதிரடி இந்தியாவின் அடுத்துவரும் எதிர்காலத்தைப் பிரகாசமாகக் காட்டியுள்ளது.

இந்த 224 ஓட்ட இணைப்பாட்டம் இந்திய அணியின் இரண்டாவது மிகச்சிறந்த 3வது விக்கெட் இணைப்பாட்டமாக மாறியுள்ளது.

1999ம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியின் போது கென்யாவுக்கெதிராக டென்டுல்கரும், டிராவிடும் இணைந்து பெற்ற 237 ஓட்டங்களே இந்திய சாதனை.

கோளி - கன்னி சதம்
கம்பீர் - 7வது சதம்

இதே வருடத்தில் இலங்கையில் வைத்து கம்பீர் 150 ஓட்டங்களை எடுத்திருந்தார். நேற்று முன்தினம் ஆட்டமிழக்காமல் அதே ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றார்.

அத்தோடு இந்தப் போட்டியின் போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3000 ஓட்டங்களையும் கடந்திருந்தார். இந்த எல்லை கடந்த 15வது இந்தியவீரர் கம்பீர்.

இலங்கைப் பந்து வீச்சாளர்கள் எவராலும் இடைநடுவே எதுவித அழுத்தங்களையும் கம்பீருக்கோ, கோளிக்கோ கொடுக்க முடியாமல் போயிருந்தது.

யுவராஜ்சிங் இல்லாததால் தனக்குக் கிடைத்த அரியவாய்ப்பொன்றில் இலங்கைப் பந்து வீச்சாளர்களைக் கொத்து ரொட்டி போட்டிருந்தார் கோளி.

மறுபக்கம் முன்னைய ஒருநாள் போட்டிகளில் பெரிய பெறுபேறுகள் காட்டாமலிருந்த கம்பீரும் காய்ச்சி எடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது பெற்றும் அதை அப்படியே கன்னிச்சதம் பெற்ற கோளிக்கு வழங்கிய கம்பீரின் பெருந்தன்மை பெரியது.

சங்கக்கார ஆடுகளம், காலநிலை என்பவற்றை சரியாகக் கணித்திருக்கவில்லை என்று கூறுகிறார் இந்திய அணித்தலைவராகக் கடமையாற்றிய சேவாக். உண்மைதான்ளூ வழமையான மைதானங்களில் இரவில் துடுப்பெடுத்தாடுவது கடினம். ஆனால் கொல்கத்தாவில் பனியும் ஈரலிப்பும் இலங்கைப் பந்துவீச்சாளர்களையும் களத்தடுப்பாளர்களையும் சிரமப்படுத்திவிட்டது.

இந்தியா இலங்கைக்கெதிராக வென்ற தொடர்ச்சியான 5வது ஒருநாள் தொடர் இது. இலங்கை இந்தியாவைத் தோற்கடித்து 12 வருடங்களாகிறது. இந்தத் தொடரில் அடைந்த தோல்வியும் இலங்கைக்குப் பல புதிய பாடங்களைத் தந்துள்ளது. இவற்றைத் திருத்திக்கொண்டு இன்றும் சில வாரங்களில் வங்கத்தேசத்தில் இடம்பெறவுள்ள முக்கோணத் தொடரில் இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்குமா என்பது இப்போதைய கேள்வி.

அத்துடன் சுராஜி ரந்தீவ், சுரங்க லக்மால், திஸ்ஸர பெரேரா ஆகிய புது முகங்களின் புது ரத்தமும் இலங்கைக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடும்.

சனத் ஜெயசூரிய, அஜந்த மென்டிஸ், கபுகெதர ஆகியோர் இனி புது வழிகளைத் தேடவேண்டியது தான்.

மறுபக்கம் இந்திய அணிக்கும் ஆரோக்கியமான போட்டி – தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களில் ஒரு சதத்தையும், ஒரு அரைச்சதத்தையும் பெற்றுத் தன்னை நிரூபித்துள்ள கோளி, யுவராஜ், தோனி வந்தால் வெளியேவா?

பாவம் கோளி!

ஆனால் இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளர்களை கொஞ்சம் மெருகேற்றி Fine tune செய்ய வேண்டியுள்ளது.

நாளைய டெல்லி ஒருநாள் சர்வதேசப்போட்டி அர்த்தமற்ற ஒன்றாக இருந்தாலும், இலங்கை அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியைப் பெற்றுக்கொஞ்சம் மரியாதையாக நாடு திரும்பவும், இந்திய அணிக்கு வாய்ப்புக்காகக் காத்துள்ள இளையவர்களுக்கு அவர்கள் தம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியதாகவும் அமையவுள்ளது.

இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 20 சாதனை ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள மாத்தறை தந்த மன்னன் - சாதனை வீரர் சனத் ஜெயசூரியவுக்கு வாழ்த்துக்கள்.

அவர் பற்றிய படத்தொகுப்பு & பதிவு விரைவில்!

இலங்கை வென்றால் மட்டும் தான் பதிவா.. இலங்கை தோத்தாப் பதிவு போட மாட்டீங்களா என்று பெயரில்லா நண்பர் ஒருவர் அண்மையில் பின்னூட்டி இருந்தார்.. என் முன்னைய பதிவுகளைப் பார்க்கவில்லை போலும்..
அப்படித் தான் இருந்தாலும் எது பற்றிப் பதிவிடுவது என்பதை நான் தானே தீர்மானிக்கவேண்டும்..
என் பதிவுகள் எது பற்றி எனத் தீர்மானிப்பது என் மனமேயன்றி பெயரில்லா அவரல்ல. :)

கடந்தவார ஆணிகள் பலவற்றால் போடவேண்டும் என்று நினைத்த பல பதிவுகளே போடமுடியாமல் போன நிலையில் இவர் வேற.. ;)

Post a Comment

11Comments

Please Select Embedded Mode To show the Comment System.*