அவமான ஆடுகளம்..

ARV Loshan
13


இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரைக் கொல்கொத்தா போட்டி வெற்றியுடனேயே இந்தியா கைப்பற்றியிருந்ததனால், நேற்றைய டெல்லி ஒருநாள் போட்டியானது ஆரம்பத்திலேயே செத்த போட்டி (Dead Rubber) என்றே கூறப்பட்டது.

எனினும் நேற்று நடந்தது போல போட்டியின் பாதியில் இப்படி செத்துப்போகும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

கடும்பனி மூட்டத்துக்கு நடுவே நேற்று காலை 9 மணிக்குப் போட்டி ஆரம்பித்தபோதே ஆடுகள அறிக்கையை நேர்முக வர்ணனையாளர் வழங்கியபோது, டெல்லி பெரோஸ் ஷா கொட்லா ஆடுகளத்தில் காணப்பட்ட (Pitch report) வழக்கத்துக்கு மாறான வெடிப்புக்கள், பிளவுகள் பற்றிப் பெரிதாக எதுவும் சொல்லவில்லையே என யோசித்தேன்.

ஆரம்பத்திலிருந்தே பந்துகள் திடீரென அபாயகரமாக மேலெழுவதும், ஆச்சரியகரமாக நிலத்தோடு உருண்டு செல்வதுமாக இருந்தன.

இலங்கைத்துடுப்பாட்ட வீரர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. டில்ஷானுக்கு கையில் அடி; ஜயசூரியவுக்கு விரல் மற்றும் முழங்கையில்; கண்டம்பிக்கு கையில் பந்துபட்டது; இறுதியாக முத்துமுதலிகே புஷ்பகுமாரவுக்கு தலையில் படவிருந்த பந்து கையைப் பதம் பார்த்ததோடு இனிப்போதும் என்று போட்டித் தீர்ப்பாளர் அலன் ஹேர்ஸ்ட்டினால் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.



எனினும் 24வது ஓவர்கள் வரை நடுவர்களாலோ, போட்டித்தீர்ப்பாளராலோ, மைதானம் முதல் வீரர்களின் அணுகுமுறை, தலைவர்களின் சிந்தனைப்போக்குகள் வரை அக்குவேறு ஆணிவேறாக அலசிப்போடும் கிரிக்கெட் பண்டித நடுவர்களாலோ இந்த ஆடுகளம் பயங்கரமானது; கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்கு உகந்ததல்ல எனத் தீர்மானிக்க முடியாமல் போனது வெட்கம் &வேடிக்கை.

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட இன்னொருவர் இந்திய அணியின் தலைவர் தோனி. 2 போட்டித்தடையின் பின்னர் மீண்டும் விளையாட வந்த தோனி பந்துகளையும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சியோடு மனிதர் பிடித்த விதம் அபாரம். எந்தவொரு 'பை' (bye) ஓட்டங்களையும் அவர் கொடுக்கவில்லை என்பதனைப் பாராட்டலாம்.

மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார இருவரும் வழங்கியுள்ள பேட்டியில், ஆரம்பத்தில் அபாயகரமான பந்துகளில் அச்சம்கொண்டாலும், ஆடுகளம் போகப்போக சரியாகிவிடும் என்று நம்பியிருந்ததாகவும், இறுதியாக புஷ்பகுமாரவின் தலைக்கு மேலெழுந்த பந்தோடு 'பொறுத்தது போதும்' என்று போட்டித் தீர்ப்பாளரிடம் சென்று பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு பிறகுதான் போட்டித்தீர்ப்பாளர் அவசரமாக விழித்து நடுவர்கள் டராபோரே, எரஸ்மஸ், அணித்தலைவர்கள், பயிற்றுனர்கள். மைதானம் பராமரிப்பாளர் ஆகியோரோடு மைதானத்தின் நடுவே கூட்டமொன்றை நடத்தி – போட்டியைக்கைவிடும் முடிவெடுத்தார்.

அதற்குள் டெல்லி கிரிக்கெட் அமைப்பினாலும் இரு அணிகளினாலும் அந்த அபாய ஆடுகளத்துக்கு அருகேயுள்ள மற்றொரு ஆடுகளத்தில் போட்டியை நடாத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டாலும் பல்வேறு காரணிகளால் அதன் சாத்தியமற்ற தன்மை குறித்து போட்டி மத்தியஸ்தர் மறுத்துவிட்டார்.

மைதானத்தை நிறைத்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் எத்தனை பெரிய ஏமாற்றம்? உடனடியாகவே டெல்லி கிரிக்கெட் அமைப்பு பகிரங்க மன்னிப்பும் கோரி, ரசிகர்கள் வழங்கி டிக்கெட் பணம் மீளளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

எனினும் யாராவது ஒருவீரர் பாரதூரமாகக் காயமடைந்து, ஆயுட்காலத்துக்கே முடமாகியிருந்தால் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்கள் நிறைந்த பருவகாலத்தில் காயமடைந்து ஒதுங்கியிருந்தாலே அவர்களுக்கும் அணிக்கும் எவ்வளவு பாதிப்பு?

தற்செயலாக யாராவது ஒரு இலங்கை வீரர் பாரதூரமாகக் காயமடைந்திருந்தால்?(டில்ஷான், சனத் ஜெயசூரிய ஆகியோரின் உபாதைகள் சம்பந்தமான முழுமையான மருத்துவ அறிக்கை இன்னமும் வரவில்லை.. இதனால் இவர்களின் கொல்கொத்தா இரவுக்கூத்து கொஞ்சம் பின் தள்ளப்பட்டு விட்டது என்பது இவர்களுக்கு ஆறுதலான செய்தி) இல்லை இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி முக்கியமான இந்திய வீரர் ஒருவர் பந்துபட்டுக் காயமுற்றிருந்தால்?
சர்வதேசக் கிரிக்கெட் ஒன்றும் கிட்டிப் புள்,கிளித்தட்டு இல்லையே..

பொறுப்பற்ற DDCA(டெல்லி மாவட்ட கிரிக்கெட் ஒன்றியம்), BCCI(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை) ஆகியன கண்டிக்கப்படவேண்டியன.

அணித்தெரிவில் இடம்பெறும் மோசடிகள் பற்றி அண்மையில் டெல்லி அணியின் தலைவர் வீரேந்தர் சேவாக் பொங்கி வெடித்த பின்னர், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றன. டெல்லி கிரிக்கெட்டுக்கு மேலும் ஒரு கரும்புள்ளி.

டெல்லியின் கிரிக்கெட் சபைத்தலைவர் அருண் ஜெய்ட்லி மீது மேலும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

முன்னாள் இந்திய வீரர்களும் கொதித்துப் போயுள்ளார்கள்..
நேற்று பயன்படுத்தப்பட்ட இந்த குறித்த ஆடுகளத்தில் இந்தப் பருவகாலத்தில் எந்தவொரு உள்ளூர்ப் போட்டிகளோ பயிற்சிப் போட்டிகளோ கூட நடைபெறாத நிலையில் எவ்வாறு சர்வதேசப் போட்டிகளை நடத்த நினைத்தார்கள் என்று அவர்கள் எழுப்பும் கேள்வி நியாயமானதே..

உடனடியாகவே நேற்றைய ஆடுகள அவமானத்துக்கும், ரசிகர்களின் ஆத்திரத்துக்கும் பொறுப்பேற்று டெல்லி சபையின் உபதலைவரும், முன்னாள் டெஸ்ட் வீரரும், டெல்லி மாவட்ட ஆடுகளங்கள், மைதானங்கள் பராமரிப்புக்குழுவின் தலைவருமான சேட்டன் சவுகான் பதவிவிலகியுள்ளார். அவருடன் ஒட்டுமொத்த பராமரிப்புக் குழுவும் விலகியுள்ளனர்.

உலகின் மிகப் பணக்கார விளையாட்டு அமைப்பாக இருந்தும் பல விடயங்களில் பொறுப்பற்று நடந்து – பண விடயத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாகவுள்ள இந்திய கிரிக்கெட் சபை காலம் கடந்ததாக மத்திய மைதானம் பராமரிப்பு – ஆடுகள குழுவைக் கலைத்துள்ளது.

இதெல்லாம் கண்கெட்ட பிறகான நமஸ்காரங்கள்...

டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானம் அண்மையில் தான் புனரமைக்கப்பட்டு, ஆடுகளமும் புதிதாக இடப்பட்டது.

அதன் பின்னர் புதிய ஆடுகளம் என்பதனால் அடிக்கடி மைதானம் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதன்பின்னர் நடைபெற்ற சில சாம்பியனஸ் லீக் வT20 போட்டிகள்,உள்ளூர்ப் போட்டிகள், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டி ஆகியன இடம்பெற்ற போதிலும், அந்தப்போட்டியின் போது ஆடுகளம் காட்டிய தன்மைகள் சர்வதேசப்போட்டிகளுக்கான ஆரோக்கிய அறிகுறிகளைக் காட்டவில்லை.

ஆஸ்திரேலிய விளையாடிய அந்த ஒருநாள் போட்டிக்கு முதல் நாள் பயிற்சிகளுக்காக வந்த பொன்டிங் கோபமாக இந்த டெல்லி மைதானம் பற்றி சொன்ன விஷயங்கள் இப்போது வெளியுலகுக்கு பல உண்மைகளை சொல்கின்றன..

ஆஸ்திரேலிய அணி பயிற்சிக்காக வந்தவேளை பயிற்சிக்கான அத்தனை ஆடுகளங்களும் ஈரமாக இருந்துள்ளன;பயிற்சிக்குரிய எந்தவொரு வசதியும் இருக்கவில்லை;மைதானப் பராமரிப்பாளரையும் தேடித் பிடிக்க முடியவில்லை.

அப்போதே இந்தியக் கிரிக்கெட் சபையும், டெல்லி கிரிக்கெட் சபையும் இதுகுறித்து நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

இப்போது பயங்கரமான, படுமோசமான ஆடுகளங்களும் ஒன்றாக மாறியுள்ள டெல்லி – கொட்லா இன்னும் 12 மாத காலத்துக்குள் இதுகுறித்த நடவடிக்கை எடுத்து. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடுகளப்பராமரிப்புக் குழுவின் அங்கீகாரம் பெறத்தவறின் சர்வதேச அந்தஸ்தை இழக்கும்.

2011ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்தை நடாத்தவுள்ள மைதானங்களில் ஒன்றாக உள்ள அந்தஸ்தையும் டெல்லி இழக்கும் அபாயம் உள்ளது.

இனியாவது இந்திய கிரிக்கெட் சபை விழித்துக் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமா?

Money is not everything !!!!
பணம் மட்டுமே எல்லாம் அல்ல..



Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*