மும்பாயில் இன்று ஆரம்பமாகும் இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பல முக்கியமான விஷயங்களை தீர்மானிக்கும் களமாக அமையவுள்ளது.
இலங்கையின் இரு தலைகள்.
கான்பூரில் 2வது டெஸ்ட் போட்டியில் வாங்கிய மரண அடியுடன் என்னைப்பொறுத்தவரை சங்கக்கார குழுவினருக்கு இருந்த நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் என நினைக்கிறேன். அதிலும் முரளியின் வித்தைகள் பலிக்காதது இலங்கை அணிக்கு மிகப்பெரிய தலைவலியாகவும் குழப்பமாகவும் மாறியுள்ளது.
சரி முரளியை நிறுத்தி – அஜந்த மென்டிஸைக் கொண்டுவரலாம் என்று இலங்கை அணி யோசிக்க இடம் வைக்காமலே மென்டிசுக்கும் அடி. இன்று ஆரம்பமாகும் போட்டியில் மென்டிஸ் அணியில் இல்லை என்று நேற்றிரவே சங்கக்கார அறிவித்துவிட்டார்.
மீண்டும் இலங்கை அணி தனது வழமையான 3 வேகப்பந்துவீச்சாளர் – 2 சுழல்பந்து வீச்சாளர் கட்டமைப்புக்கு திரும்புகிறது.
இலங்கை அணியின் கடைசி 10 டெஸ்ட் வெற்றிகளும் இதே கட்டமைப்புடன் விளையாடும் போதே பெறப்பட்டவை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.
அத்துடன் கடந்த சில வாரங்களாகவே கிரிக்கெட் ரசிகர்களால், விமர்சகர்களால் கேட்கப்பட்டு வந்த ஒரு கேள்விக்கும் விடைவந்துள்ளது.
அண்மைக்காலத்தில் இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த நுவன் குலசேகர எங்கே? ஏன் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை?
இதற்கெல்லாம் சங்கக்காரவே காரணம் சொல்லியிருக்கிறார்.
'தனக்கு ஏற்பட்ட சிறுஉபாதைகள் அனைத்திலும் இருந்து பூரண குணமடைந்துள்ள குலசேகர மும்பாயில் விளையாடுவார்'
முரளியின் பந்துவீச்சில் மஹேல ஜெயவர்த்தன பிடி எடுத்து ஆட்டமிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 99 . நூறாக இந்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்புள்ளதா?
இலங்கை அணிக்கெதிராக கடைசியாக இரு இன்னிங்சிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியதன் மூலம் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்துக்கு வந்துள்ள கம்பீர் இன்றைய இந்திய அணியில் இல்லை. அவரது சகோதரியின் திருமணம் காரணமாகவே அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அதற்குள் சிலபேர் காது, மூக்கு எல்லாம் வைத்து கண்டுபிடித்து கம்பீரை உபாதைக்காரர் ஆக்கிவிட்டார்கள்.
Purple Patch, Golden touch என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மிகச்சிறப்பான formஇல் கம்பீர் ஓட்டங்கள் குவித்துவரும் இந்த நிலையில் அவரது குடும்பத்தார் கொஞ்சம் இந்தத் திருமணத் தேதியைத் தள்ளிப்போட்டிருக்கலாமே என மனதில் ஒரு அங்கலாய்ப்பு. (ஒருவேளை கம்பீர் வரும் வரை சுபவேளை காத்திருக்காதோ?)
எனினும் கிடைக்கின்ற வாய்ப்புக்களில் எல்லாம் வெளுத்துக்கட்டித் தன்னை நிரூபித்து வரும் தமிழக வீரர் முரளி விஜய்க்கு மீண்டும் ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு.
அவுஸ்திரேலிய அணிக்கெதிராகவும் இதேபோலத்தான் (கம்பீர் ஓரு டெஸ்ட் போட்டித்தடைக்குள்ளான போது) முரளி விஜய் தன் அறிமுகத்தில் பிரகாசித்திருந்தார்.
ஆனாலும் சாதனைகள் படைத்துவரும் கம்பீர் – சேவாக் ஜோடி இருக்கையில் எப்படி இந்திய அணியில் இன்னொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்?
இப்படிக்கிடைக்கும் வாய்ப்புக்களில் தன்னை நிரூபித்தால் தான், குறைந்த பட்சம் பத்ரிநாத்போல – 14 பேரடங்கிய குழுவிலே பெயரிடப்பட்டு யாராவது காயப்பட்டால் விளையாடலாம்.
இன்னுமொரு சிறப்பு இருபதாண்டுகள் கண்ட சச்சின் டெண்டுல்கர் தனது சொந்த ஊரில் விளையாடுகிறார். அண்மையில் அவருக்கெதிராகக் கிளம்பிய தாக்கமே அரசியல் பரபரப்பு ஏதாவது விளையாட்டுக் காட்டுமோ எனக் காத்திருக்கிறேன்.
இன்று போட்டி இடம்பெறுகிற மும்பை ப்ரட்பெர்ன் மைதானம் முப்பத்தாறு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியை நடத்துகிறது.
எனவே இரு அணிகளுக்குமே இந்த மைதானத்தின் தன்மைகளைப் பற்றிப் பெரிதாக தெரிய நியாயமில்லை.
எல்லாவற்றிலும் மிக முக்கியமானது அணிகளின் டெஸ்ட் தரப்படுத்தல்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றால் டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதலாது இடத்தைப்பிடிக்கும்.
இலங்கை வென்றால் தரப்படுத்தல்களில் மாற்றமில்லை. (தென் ஆபிரிக்கா முதலாமிடம், இலங்கை இரண்டாமிடம், இந்தியா மூன்றாமிடம்)
சமநிலையில் முடிவுற்றால் - இந்தியா இரண்டாமிடம் & இலங்கை மூன்றாமிடம்.
ஆனால் மறுபக்கம் ஆரம்பமாகவுள்ள தென் ஆபிரிக்க - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கள் பின்னர் எல்லாவற்றையும் மாற்றிப்போட்டுவிடும்.
சங்கா எதிர்வு கூறிய சரித்திரபூர்வ வெற்றி கிடைக்குமா? இல்லை same old story தானா?
வெளிநாட்டுப்பக்கத்திலிருந்து...
அண்மையில் நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளில் தத்தம் அணிகளுக்காக வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து, போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதுகளைப் பெற்ற இருவருமே (அவுஸ்திரேலியாவின் பென் ஹில்ஃபென்ஹோஸ், நியூசிலாந்தின் ஷேன் பொண்ட்) காயங்கள் காரணமாக அடுத்த போட்டிகளில் விளையாடவில்லை.
இன்று காலை பதிவர் கனககோபி ட்வீட்டிய சில கிரிக்கெட் துளிகள் அவர் அனுமதியோடு..
முரளி இன்றைய போட்டியில் ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்தால் அதிக முறை ஓட்டம் பெறாமல் (ரெஸ்ற் போட்டிகளில்) ஆட்டமிழந்த வீரர்கள் பட்டியலில் முரளி 3ம் இடத்துக்கு முன்னேறுவார்... 1ம் இடத்தில் : கொட்னி வோல்ஸ் - 45 முறை - 132 போட்டிகளில். 2ம் இடத்தில் மக்ரா - 35 முறை - 124 போட்டிகளில். 3ம் இடத்தில் வோர்ண் - 34 முறை - 145 போட்டிகளில். 4ம் இடத்தில் முரளி - 33 முறை - 131 போட்டிகளில்....
LBW முறையிலான 9 இலக்குகளை முரளி கைப்பற்றினால் ரெஸ்ற் கிறிக்கெற் வரலாற்றில் LBW முறையில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரராக முரளி மாறுவார்... முதலாம் இடத்தில் கும்ப்ளே - 156 விக்கட்டுக்கள்.. இரண்டாம் இடத்தில் முரளி - 148 விக்கட்டுக்கள்....
இன்றைய போட்டியில் முரளி 201 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தால் ரெஸ்ற் கிறிக்கெற் வரலாற்றில் இரண்டாவது அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த வீரராக மாறுவார்.... முதலாம் இடத்தில் கும்ப்ளே- 18335 ஓட்டங்கள் - 132 போட்டிகளில் - 40850 பந்துவீச்சுகளில்.... இரண்டாம் இடத்தில் வோர்ண் - 17995 ஒட்டங்கள் - 145 போட்டிகள் - 40705 பந்துவீச்சுகள்.... 3ம் இடத்தில் முரளி - 17794 ஓட்டங்கள் - 131 போட்டிகள் - 43363 பந்துவீச்சுகள்....
***
cricinfoஇல் நான் பார்த்த இரு சுவாரஸ்யமான படங்களையும் இணைத்துள்ளேன்..
இந்தியாவின் முப்பெரும் தூண்கள் & இலங்கையின் இரு தலைகள்..