December 10, 2009

அண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்


இந்த வாரம் வெளிவந்துள்ள 'இருக்கிறம்' சஞ்சிகையில் அதன் ஆசிரியர் இளையதம்பி தயானந்தா எழுதியுள்ள ஒருபக்க ஆசிரியர் பகுதியிலிருந்து மனதைத் தொட்ட, உண்மையான வரிகள் சில..


ஒருவார காலதாமதத்தில் இருக்கிறமை அச்சிட வேண்டிய தேவை இப்போது இல்லை. அத்தகைய தேவைகள் கடந்த காலங்களில் இருந்தன. இப்போது அது இல்லையென்றே தெரிகிறது. நவம்பர் மாதக் கடைசி வாரத்தில் மீண்டும் ஒரு தலையங்கம் எழுதப்படுகிறது. இது எழுதப்படுகிறபோது 27ம் திகதி முடியவில்லை. உங்கள் கைகளில் 'இருக்கிறம்' அச்சாகி வருகிறபோது டிசம்பர் தொடங்கிவிடும். கடலலை போல எதையும் பொருட்படுத்தாது காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சில முடிவுகள் அல்லது தொடக்கங்கள் மிகக் குறுகிய கால இடைவெளியில்கூட நடந்து விடுகிறது. என்னதான் சொன்னாலும் நவம்பரின் இறுதி வாரத்தில் எதையேனும் செய்துவிடும் போக்கு எல்லோரிடமும் தெரிவதை உள்ளூர உணர முடிகிறது.

எங்கட மொழியில் சொன்னா அண்ணன் இப்ப திண்ணையில இல்லை. சும்மா கிடக்கிற அந்தத் திண்ணையில் இப்ப எல்லோரும் கூடிப்பேசுகினம். கூட்டங்கள் போடுகினம். அயலில மாநாடு வச்சு ஒரு பகுதி தன்ர உலகத் தலைமையை உறுதி செய்ய முயலுது. இன்னொரு பக்கத்தில் எல்லாத் தலையளையும் ஒண்டாக்கி யாரோ மிளகாய் அரைக்கினம். என்னத்தைச் சொன்னாலும் உரியவன் இல்லையெண்டால் எல்லாம் ஒரு முழம் கட்டைதான்.

எங்கட பக்கத்தில் இப்ப எல்லோரும் பசியோட இருக்கிறம். யார் குத்தினாலும் அவசரமா எங்களுக்கு அரிசி வேணும். உரல் கொண்டந்தவன் யார்? உலக்கை கொடுத்தவன் யார்? எவன் வீட்டில் நெல்லுக் குத்தப்படுகுது, என்பதான விசயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. காது, கண்ணெல்லாம் பஞ்சாகி அரிசிக்காக நாங்கள் கைகள் நீட்டுகிற காலத்தில இதையெல்லாம் யோசிக்க முடியாது. யாரும் வடை தந்தா சாப்பிட நாங்கள் தயார். உழுந்தாட்டினவன் யார்? ஓட்டை போட்டவன் யார்? எண்டெல்லாம் இனி யோசிக்க முடியாது.

எழுத்தோட எழுத்தா நவம்பர் கடைசியில இன்னொன்றையும் சொல்ல வேணும்.
கோவணத்தையாவது காப்பாத்த நாங்கள் நினைக்கிறபோது, அயல் வீட்டில பட்டு வேட்டி கட்டிக்கொண்டு சால்வை சாத்த வரச்சொல்லி ஒரு மூத்தவா கூப்பிடுகிறார். அவர் கட்டி இருக்கிறது பட்டு வேட்டி இல்லை என்று தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவருக்கு சால்வை போர்த்த தயாராகிறவர்கள் பற்றி மனவேதனை இருக்கிறது.

செம்மொழி மாநாடு என்ன பாரதப் போரின் பத்தாம் நாளா?

அண்ணன் தயானந்தா எம் பலபேரின் மதிப்பிற்குரிய அற்புதமான ஒரு ஊடகவியலாளர்;மனிதர்..
அவர் எழுதும் இந்த ஒருபக்கம் எம்மில் பலர் எழுதும் பல நூறு பக்கங்களுக்கு மேலான வலிமையையும்,அடர்த்தியான பொருளும் அடங்கியது. இந்த ஒருபக்கத்துக்காகவே இருக்கிறம் வாசிக்கும் பலரை நான் அறிவேன்.

இதே இதழில் ஒவ்வொரு வாரமும் விளையாட்டு கட்டுரைகளை நான் எழுதிவருகிறேன்..

இவ்வார இதழை நான் நேற்று வாசித்தபோது எனக்கு கடும் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்திய விடயம்..
ஊடக மாயம் என்றவொரு கட்டுரை..

இந்தக் கால இலத்திரனியல் ஊடகங்கள் பற்றி எல்லாருமே வரிந்து கட்டிக்கொண்டு விமர்சனங்கள் தொடுத்துவரும் நிலையில் (என்ன செய்வது.. ஒரு சிலர் விடும் தவறுகளால் ஒட்டுமொத்த ஊடகவியலாளரும் விமர்சிக்கப்படுவது எமது சாபமாகிப் போனது) எஸ்.ஜனூஸ் என்பவர் கண்மூடித் தனமாக இந்தக் கால ஊடகவியலாளர் வெட்டுக் கொத்துக்களே பிழைப்பாகக் கொண்டுள்ளது போலவும், வாழ வருமானம் இல்லாமல் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலையில் அல்லலுறுவது போலவும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

இதில் அது தொடரும் எனப் போட்டிருப்பது மற்றுமொரு வேடிக்கை..

யாரடா இந்த ஜனூஸ்.. இப்படியொரு ஒலிபரப்பாளரை இதுவரை கேள்விப்பட்டதில்லையே என விசாரித்துப் பார்த்தால் ஒரு சில மாதங்கள் இன்னொரு தனியார் வானொலியில் பணி செய்துகொண்டிருந்து பின் ஒழுங்கான உச்சரிப்பு இல்லாததாலும் சில ஒழுக்காற்றுப் பிரச்சினைகளாலும் விலக்கப்பட்டவராம் எனத் தெரியவந்தது.
இப்படிப்பட்ட ஒருவர் பல ஆண்டுகளாக நிலைத்துள்ள ஊடகங்களையும் எம்மையும் தரக்குறைவாகப் பேசுவதா?
இப்படிப்பட்ட ஒருவர் தான் இவ்வளவு தூரம் விமர்சிக்கிறாராம்..

அவரின் அக்கட்டுரையில் ஒரு சில வசனங்கள்...


வளரும் பயிரை முளையிலே கிள்ளி எறிகின்ற உத்தமர்கள் நிறைந்த இடம்தான் இந்த ஊடகங்கள்.


எனது பார்வையில், இந்த வரலாற்றுத் தவறை அதிகம் புரிந்து கொண்டிருப்பது இலத்திரனியல் ஊடகங்களே. சம்பாத்தியம் அதிகம் இல்லாவிட்டாலும், அற்ப சொற்ப சம்பாத்தியங்களுக்காக வேண்டாத வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக இன்றைய ஒளி, ஒலி ஊடகங்களில் அரங்கேறும் அசிங்கங்களை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. இப்போதெல்லாம் மழை பெய்யாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்தனை அசிங்கங்கள். அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் புரியும் மாயலீலைகள், தந்திரங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா? இந்தக் கேள்வியை முக்கியத்துவமாகப் பார்க்கவேண்டும்.

இலங்கையிலே மிகவும் குறைவாக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இவர்களின் பெயர்தான் முதன்மை வகிக்கும். அதிலும் எவ்.எம் வானொலிகளில் பணியாற்றும் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை மென்று விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜீவிதத்தின் பிடிமானம் குறைந்து எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளோடு அலைகிறார்கள். 'கொழும்பு காசு இல்லாவிட்டால் எலும்பு' என்ற நிலை வரும் போது ஊடகத்தில் மகனுக்கோ, மகளுக்கோ ஊரிலிருந்து A.T.M பணம் அனுப்பும் அப்பாவிப் பெற்றோர்கள் எத்தனையோ பேர். 'இதைவிட இவன் என்னோடையே இருந்து ஆடு, மாடாவது மேய்ச்சிருக்கலாம்' என்று ஒரு அப்பா சலிக்கிற நேரமா பார்த்து 'ஹலோ யாரு பேசுறீங்க, உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்' என்று ஏதோ ஒரு அலைவரிசையில் பேசிக்கொண்டிருப்பான் மகன். அந்த வரட்டு சந்தோஷத்தில் தன்னை சமாதானப்படுத்திக் கொள்ளும் தாய்மார்களும், தந்தைமார்களும் எத்தனை பேர்?


திறமையை வெளிப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுக்கும் களங்களில் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும். அதைவிடுத்து, அனுபவிப்பவர்கள் அனுபவிக்க, வாழ்க்கையில் போலி அரிதாரம் பூசி நடிப்பவர்கள் அறிவிப்பாளர்களா?

ஒரு ஒலிபரப்பாளனாக நான் கௌரவமாகவும், என் சக ஒலிபரப்பாளர்கள் மரியாதையாகவும் நடத்தப்படுவதையே நான் விரும்புகிறேன்.

இவர் தான் பட்ட கசப்பான அனுபவங்களை பொதுமைப்படுத்துவது சரியல்ல. தனது நடத்தையால் தானே தேடிக் கொண்டவை அவை.. இது போன்ற ஆக்கங்களை வெளியிடுவது வளர்ந்துவரும் இருக்கிறம் சஞ்சிகைக்கும் அழகல்ல.

அதுவும் தயானந்தா அவர்கள் ஆசிரியராக இருக்கும் ஒரு சஞ்சிகையிலா?
(அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் தம்பிமார் எதை வேண்டுமானாலும் பிரசுரித்து அண்ணனுக்கு களங்கம் தேடித் தரப் போகிறார்களா?)
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாமா?
இருக்கிறம் காரர் எதை பிரசுரிப்பது எதை தணிக்கை செய்வது என சிந்திக்காமலா அச்சிடுகிறார்கள்?

உடனடியாகவே இருக்கிறமின் இலங்கையில் உள்ள துணை ஆசிரியர் சஞ்சீத்துக்கு ஒரு கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளேன்..
ஒரு பொறுப்பான ஊடகத்தின் முதன்மைப் பதவியில் இருக்கும் என்னால் நான் இருக்கும் துறையையே விமர்சித்து இப்படிப்பட்ட குப்பைத் தனமான ஆக்கங்கள் வரும் சஞ்சிகைக்கு தொடர்ந்து எழுத முடியாதென்று..
இருக்கிறம் சஞ்சிகைக்கு நான் தொடர்ச்சியாக எழுதிவர ஒரே காரணம் தயானந்தா அண்ணா மட்டுமே.. (தரப்படும் சன்மானம் பற்றி பேசவேண்டாமே.. ;))

விமர்சனங்கள் என்றால் வேறு.. இது சேறு பூசும் செயல் அல்லவா?

ஏற்கெனவே அச்சுவாலை சந்திப்பினால் பதிவர்கள் பலரோடு முரண்பட்டுள்ள இருக்கிறம், இவ்வாறு ஆதாரமில்லாத கட்டுரைகளினால் வானொலிகளையும் பகைத்துக்கொள்ளப் போகிறதா?

நண்பர் ஹிஷாமின் நியாயமான கோபப் பதிவு இது..

36 comments:

Unknown said...

பேப்பர் தம்பி சொன்ன மாதிரி யார் விரும்பினாலும் பதிவு ஏழுதலாம் எண்ட நிலைமை மாறி இப்ப யார் விரும்பினாலும் சஞ்சிகையில எழுதலாம் எண்ட நிலை வந்திற்று போல...

உதப் பற்றி நான் நிறையக் கதைச்சா அது பிழச்சுப் போடும்.

மட்டறுத்தல்கள் சஞ்சிகைகளில் தேவை.

இனிவரும் காலங்களில் கவனித்துக் கொள்வார்களா என்றும் இந்த ஆக்கத்திற்கு என்ன சொல்கிறார்கள் என்றும் பொறுத்திருந்து பார்ப்போம்...

Nimal said...

நானும் ஜனூஸ் எழுதிய கட்டுரை பகுதியை வாசித்தேன். இங்கு அவர் குறிப்பிட்ட விடையங்கள் பொதுமைப்படுத்தப்பட்டது மட்டுமே தவறு என்று நினைக்கிறேன்.

இலத்திரனியல் ஊடங்களில் (வானொலி + தொலைக்காட்சி) பணியாற்றிய, பணியாற்றுகிற நண்பர்கள் மூலம் நான் அறிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் அவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் இருக்கும் உண்மையை மறுக்கமுடியாது.

ஊடங்களின் பெயரைக்குறித்து இங்கு எழுதுவது பொருத்தமானதாக இருக்காது.

ஜனூஸ் எல்லா ஊடகங்களையும் பொதுமைப்படுத்தி எழுதியது தவறே எனினும், இது அவரின் தனிப்பட்ட கோபம் 'மட்டுமே' என்று புறக்கணிப்பது எவ்வளவு தூரம் சரியானது என்பதை நாம் யோசிக்க வேண்டும். அவரின் நோக்கம் 'சேறு பூசுதல்' என்றாலும் அவர் குறிப்பட்ட விடையங்கள் அனைத்தும் 'அவருக்கு மட்டும்' நடந்தவையா, கற்பனை 'மட்டுமா' என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

தர்ஷன் said...

ஒரு சிறுப்பத்திரிகைக்கு உரிய அந்நியத் தன்மையோ அல்லது பத்தோடு பதினொன்றாக வரும் சஞ்சிகைகளுக்கே உரிய பாமரத் தன்மையோ இல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் வந்த ஒரே இலங்கை சஞ்சிகை நீங்கள் அதில் எழுதி வரும் நிலையில் நீங்கள் சார்ந்த துறை தொடர்பிலான இவ்வாறன பதிவுகவலைக்குரியது.

Admin said...

இந்த நபர் தன்னை வைத்து மற்றவர்களை ஒப்பிட்டு இருக்கிறார் போலும். தான் ஊடகத்திலிருந்து விலக்கப்பட்டதுக்காக ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும். கேவலமாக விமர்சிப்பதற்கு என் இந்த இருக்கிறம் இடம் கொடுத்தது? அதுவும் தொடர்ந்து விமர்சிப்பதற்கு. ஊடகவியலாளர்களை இழிவு படுத்தும் முயற்சியா? இந்த விடயத்தில் இருக்கிறம் குழுவினர் கவனம் செலுத்துவது நல்லது.

சப்ராஸ் அபூ பக்கர் said...

////வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா? இந்தக் கேள்வியை முக்கியத்துவமாகப் பார்க்கவேண்டும்.////

தன்னை அந்தத் துறையிலிருந்து விலக்கி வைத்ததன் பின்னால் அவர் அடைந்த கவலையின் வெளிப்பாடே இவைகள் என நினைக்கிறேன் அண்ணா.....

(S . ஜெனூஸ்ஸின் நிறைய ஆக்கங்களும், தயாரிப்புக்களும் நிரய்யப் பேரால் பாராட்டப் பட்டது அவர் அதே வானொலியில் கடமையாற்றும் போது......குறிப்பாக சில நாடகங்கள்..... ஆனால் அவரே இப்படி எழுதியது மன வேதனை தான் ..........)

Admin said...

//நிமல்-NiMaL said...
நானும் ஜனூஸ் எழுதிய கட்டுரை பகுதியை வாசித்தேன். இங்கு அவர் குறிப்பிட்ட விடையங்கள் பொதுமைப்படுத்தப்பட்டது மட்டுமே தவறு என்று நினைக்கிறேன்.

இலத்திரனியல் ஊடங்களில் (வானொலி + தொலைக்காட்சி) பணியாற்றிய, பணியாற்றுகிற நண்பர்கள் மூலம் நான் அறிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் அவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் இருக்கும் உண்மையை மறுக்கமுடியாது.

ஊடங்களின் பெயரைக்குறித்து இங்கு எழுதுவது பொருத்தமானதாக இருக்காது.

ஜனூஸ் எல்லா ஊடகங்களையும் பொதுமைப்படுத்தி எழுதியது தவறே எனினும், இது அவரின் தனிப்பட்ட கோபம் 'மட்டுமே' என்று புறக்கணிப்பது எவ்வளவு தூரம் சரியானது என்பதை நாம் யோசிக்க வேண்டும். அவரின் நோக்கம் 'சேறு பூசுதல்' என்றாலும் அவர் குறிப்பட்ட விடையங்கள் அனைத்தும் 'அவருக்கு மட்டும்' நடந்தவையா, கற்பனை 'மட்டுமா' என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.//


ஜனூஸ் குறிப்பிட்டிருக்கின்ற கருத்துக்களை பாருங்கள் அவர் ஒட்டு மொத்த இலத்திரனியல் ஊடகங்களையும் குற்றம் சுமத்தி இருக்கிறார். தவறுகள் இல்லாமல் இல்லை ஒரு சிலர் செய்கின்றனர். அதற்காக எல்லோரையும் குற்றம் சொல்வதா? அறிவிப்பாளர்கள் மாய லீலைகள் செய்வதாக குறிப்பிடுகின்றார். எல்லோரும் செய்கின்றனரா? யாராவது இவரைப் போன்றவர்கள் செய்திருக்கலாம் அதற்காக எல்லோரையும் குற்றம் சொல்வதா? இன்று எந்தத் தொழில் செய்பவர்களை எடுத்தாலும் சிலர் காம, மாய லீலைகள் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதற்காக அந்த தொழில் செய்வோர் எல்லோரையும் குற்றம் சொல்வதா?

இவர் ஒரு சிலர் என்ற சொல்லை பயன் படுத்தியிருக்கலாம்.

என்ன கொடும சார் said...

அண்ணா, நீங்கள் தந்துள்ள ஜனூஸின் கட்டுரையில் என் பார்வைக்கு பெரிதாய் பிழைகள் தெரியவில்லை! அதில் ஆரம்பமாகும் முதல் பந்தி மாத்திரம் (வளரும் பயிரை முளையிலே கிள்ளி எறிகின்ற உத்தமர்கள் நிறைந்த இடம்தான் இந்த ஊடகங்கள்.) அவரது தனிப்பட்ட கோபமாக இருக்கும் என்பதும், அது தவிர இலத்திரனியல் ஊடகவியலாளர்களின் சம்பளப்பிரச்சினை பற்றி எழுதியிருப்பதில் ஒரு வேதனைக்குரல் கேட்கிறது.

வெற்றியில் உள்ளவர்களுக்கு இப்பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவற்றில் இருப்பதை அவர் வெளிக்கொணர்ந்திருப்பது வரவேற்கக்கூடியதே..

என்னைப்பொறுத்தவரையில் தனிமனித கீழ்த்தரமான தாக்குதல் அற்ற விமர்சனங்கள் உள்வாங்கப்பட்டு பின் பதிலழிக்கப்படவேண்டும். அதுதான் ஆரோக்கியமான சகிப்புத்தன்மை மிக்க கருத்துச்சுதந்திரம் மிக்க சமூகத்துக்கு அவசியம். நீங்கள் கருத்துச்சுதந்திரத்தில் நம்பிக்க கொண்டவர் என்றே நானும் நம்புகிறேன். அதற்காகவே வேறு எல்லாவற்றுக்கும் விட உங்களை நான் மதிக்கிறேன்.

இளையதம்பி தயானந்தா சொல்வதுபோல அண்ணன் இப்ப திண்ணையில இல்லை என்பதற்கும் கருத்துச்சுதந்திரம்தானே காரணம்?

நீங்கள் இவ்வளவு ஆத்திரப்பட்டிருக்கவேண்டியதில்லை.

தயான்ந்தாவின் எழுத்துக்களை பார்க்கும்போது நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டபோது அவ்ர் ரூபவாஹினியில் சம்பந்தரை பேட்டிகண்டதும் (கேள்விகளும்) சம்பந்தரின் பதில்களும் ஞாபகம் வருகிறது.

ம் ம் இந்தக்கொலைகள் பற்றி வானொலிக்கு "இந்தநாளில்" பகுதியில் முண்டியடித்து ஞாபகப்படுத்த யார்தான் இருக்கிறார்கள்.. match முடிந்தபோதும் pitch இன்னமும் மாறவில்லை.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பதிவை கஷ்டப்பட்டு இழுத்து சமநிலையில வச்சிருக்க முயன்றாலும் பின்பாதிதான் வாசிப்பினை ஆக்கிரமித்து நிற்கிறது. மேற்பாதிக்கு பின்னூட்டங்கள் வரும்போல இல்லை. :))

KANA VARO said...

//அவர் எழுதும் இந்த ஒருபக்கம் எம்மில் பலர் எழுதும் பல நூறு பக்கங்களுக்கு மேலான வலிமையையும்,அடர்த்தியான பொருளும் அடங்கியது. இந்த ஒருபக்கத்துக்காகவே இருக்கிறம் வாசிக்கும் பலரை நான் அறிவேன்.//

உண்மைதான்… இலக்கணம் தெரிந்தவர்களாலும் விலங்கிக் கொள்வது கடினம். நாசூக்காக அரசியலுக்கு சாட்டை அடி கொடுப்பதில் வல்லவர்.

//அதுவும் தயானந்தா அவர்கள் ஆசிரியராக இருக்கும் ஒரு சஞ்சிகையிலா?
(அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் தம்பிமார் எதை வேண்டுமானாலும் பிரசுரித்து அண்ணனுக்கு களங்கம் தேடித் தரப் போகிறார்களா?)
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாமா?
இருக்கிறம் காரர் எதை பிரசுரிப்பது எதை தணிக்கை செய்வது என சிந்திக்காமலா அச்சிடுகிறார்கள்?//

இந்த விடயம் கவனமெடுக்க வேண்டிய ஒன்று.
இருக்கிறம் சர்ச்சைகளில் சிக்குவது ஏனோ?????

//வளரும் பயிரை முளையிலே கிள்ளி எறிகின்ற உத்தமர்கள் நிறைந்த இடம்தான் இந்த ஊடகங்கள்.//

இது ஓரளவு இருக்கின்றது தானே?

இங்கு(pathivil) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் சிக்கலான கருத்துக்களை (உண்மைகளை) கூறி நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை

புல்லட் said...

ஊடகவியலும் சினிமா அரசியல் பொல ஒரு தொழில்.. பிரபமடையக்கூடிய தொழில்.. ஆனால் பாதை சற்று கடினமானது பொறுமையும் விடாமுயற்சியும் அவசியப்படுவது.. வெகுசிலரே வெற்றி பெறுகிறார்கள்.எத்தனையோ தோல்வியடைந்த ஊடகவியலாளர்களை கண்டு நான் அவர்ள் எடுத்த றிஸக்கை எண்ணி வியந்திருக்கிறேன்.. இதை அறிந்துதானேபுதிய இளைஞர்கள் அந்த தொழிலுக்கு போகிறார்கள்? பிறகென்ன நிமல் அழுகை வேண்டிகிடக்கு? எனக்கு தெரிந்தவரை யாரும் அங்குபோய் நின்று பிடிப்பவர்கள் அழுது குழறுவதாக தெரியாது.. தொழிலை ரசித்துச்செய்பவர்கள் எங்கோபோய்விடுவார்கள்..

அத்துடன் அங்கு ஆரம்ம ஊதியங்கள் சற்று குறைவாயிருந்தாலும் திறமை அடிப்படை போனஸ்களும் வருடாந்த ஊதிய அதிகரிப்பும் காணப்படுகிறது..

புகழ் புழங்கும் இடங்களில் யூனியர் சீனியர் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. சில இடங்களில் வளைந்து கொடுக்கத்தன் வேண்டும்..

சித்தன் said...

இதில் ஆத்திரப்படுவதற்கு ஒன்றும் இல்லை லோஷன். தன்னை எல்லோரும் திரும்பி பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சக நண்பர் இந்த ஆக்கத்தை எழுதியிருக்கிறார்போலும். ஒரு இலத்திரனியல் ஊடகத்தில் தனது பெயரை நாட்டி விட்டால் அவரை பேரம் பேச நான்கு ஊடகங்கள் அவர் பின்னால் நிற்கும். இதுதான் மரபு. தன்னிடம் திறமை இருந்தால் அனைத்தையும் தன் பக்கம் ஈர்த்துவிடலாம். தன்னிடம் உள்ள தவறுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு. அடுத்தவரிடம் குற்றம் தேடிக்கொண்டிருக்கும் ஜனுஸ் போன்றோர் இருக்கத்தானே செய்கிறார்கள். ஊடகங்களே ஊடகங்களைச் சாறும் இந்திக் கலாச்சாரம் எமக்கு வேண்டாம். ஜனுஸ் அவர்களே உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை பொதுப்பிரச்சினை ஆக்க வேண்டாம். தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
நான் சித்தன்

Vathees Varunan said...

ஒரு சிலர் பிழைவிட்டால் அந்த பழியினை எல்லோர்மீதும் திருப்புவது தவறு.

ஒலி, ஒளிபரப்பு துறைக்கே சேறுபூசும் இந்த ஆக்கத்தினை ஒரு பொதுவான பத்திரிகையான இருக்கிறமில் பிரசுரித்தது மிகவும் தவறென்றே என்னால் கூறமுடியும்.எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை திருத்திகொள்வது இருக்கிறம் சஞ்சிகைக்கு நல்லது.

Vathees Varunan said...

ஒரு சிலர் பிழைவிட்டால் அந்த பழியினை எல்லோர்மீதும் திருப்புவது தவறு.

ஒலி, ஒளிபரப்பு துறைக்கே சேறுபூசும் இந்த ஆக்கத்தினை ஒரு பொதுவான பத்திரிகையான இருக்கிறமில் பிரசுரித்தது மிகவும் தவறென்றே என்னால் கூறமுடியும்.எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை திருத்திகொள்வது இருக்கிறம் சஞ்சிகைக்கு நல்லது.

Nimal said...

@சந்ரு:
//இவர் ஒரு சிலர் என்ற சொல்லை பயன் படுத்தியிருக்கலாம்.//

அவர் பொதுவில் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் குறிப்பிட்டது தவறு தான்.

ஆனாலும் தவறான 'முறையில்' கூறப்பட்டதற்காகவே, அந்த கருத்தும் எப்போதும் தவறானதாக இருப்பதில்லை.

Anonymous said...

//என்ன கொடும சார் said...

இவ்வளவு ஆத்திரப்பட்டிருக்கவேண்டியதில்லை. //

உண்மை கசப்பானவை. உண்மையைச் சொல்லும் போது யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். உங்களுக்கு கோபம் வந்ததும் நியாயமே.

ஒருவருக்கும் தெரியாத ஜனூசை பிரபலப்படுத்தி விட்டீர்கள். உங்கள் சேவை இலைமறை காயாக இருக்கும் ஏனையோருக்கும் தேவை.

வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் பணி

Admin said...

சம்பளம் என்பது சில துறைகளிலே ஆரம்பத்தில் குறைவாக இருக்கலாம் தங்கள் திறமை மூலம் இத்துறையில் நிறையவே உழைக்க முடியும் பலர் உழைக்கின்றார்கள். திறமையின்றி முயட்சியின்றி சம்பளத்தைப் பற்றி பேசுவது தவறானது.


//வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா? இந்தக் கேள்வியை முக்கியத்துவமாகப் பார்க்கவேண்டும்.//

இதனை எந்தளவில் ஏற்றுக்கொள்வது. இன்று எத்தனை அறிவிப்பாளர்கள் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். எத்தனை சாதனைகள் படைத்திருக்கின்றனர். நிறையவே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் வாழ்க்கையை வினாக்கிக் கொண்டிருக்கின்றனரா? இவரைப் போன்ற சிலர் திறமையின்றியோ அல்லது வேண்டுமென்று சிலவேளை பளிவாங்கப்பட்டிருக்கலாம். அதற்காக எல்லோரையும் தவறானவர்களாக சொல்வது தவறானது.


//காலம் காலமாக இன்றைய ஒளி, ஒலி ஊடகங்களில் அரங்கேறும் அசிங்கங்களை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. இப்போதெல்லாம் மழை பெய்யாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். //

இந்த உவமானம் எதற்கு.

மொத்தத்தில் இன்று அறிவிப்புத்துறை என்பது ஒரு போட்டி நிறைந்த ஒன்றாகிவிட்டது. அறிவிப்புத் துறையிலே நம்மை தக்க வைத்துக் கொள்வதென்பது எமது திறமையிலேதான் இருக்கிறது. நம்மில் திறமை இருந்தால் ஒரு இடத்தில் பளிவாங்கப்பட்டால் இன்னும் ஒரு இடம் தேடிவரும் அதனை விடுத்து எல்லா ஊடகவியலாளர்கள் மீதும் குற்றம் சொல்வது தவறானது.தவறுகளும் இருக்கின்றன அவற்றை ஒட்டுமொத்தத்தில் அனைத்து . ஊடகவியலாளர்கள் மீதும் குற்றம் சொல்வது தவறானது. விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் ஆனால் ஒருவர் செய்யும் தவறை எல்லோர் மீதும் சுமத்தும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது>

Admin said...

//Anonymous said...
//என்ன கொடும சார் said...

இவ்வளவு ஆத்திரப்பட்டிருக்கவேண்டியதில்லை. //

உண்மை கசப்பானவை. உண்மையைச் சொல்லும் போது யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். உங்களுக்கு கோபம் வந்ததும் நியாயமே.//

உண்மைகள் இருக்கலாம். சிலர் தவறு செய்யலாம். சுட்டிக்காட்டத்தான் வேண்டும் அதற்காக ஒட்டு மொத்தத்தில் எல்லோரையும் குற்றம் சொல்வது தவறானது. ஒரு சிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் தவறானவர்களாகப் பார்ப்பதுதான் கோபத்தை ஏற்படுத்துகிறது? தவறுகளை சுட்டிக்காட்டும் விதம் இங்கே தவறாக இருக்கிறது. எந்தத் தொழிலில் தவறு நடக்கவில்லை என்று சொல்லுங்கள்?

Anonymous said...

பொதுவாக ஊடகங்களில் அடிப்படைச் சம்பளம் குறைவு. ஆனால் இருக்கிறம் ஊழியர்களுக்கு மட்டும் தாராளமாகக் கிடைக்கின்றது. அதுதான் அவர்களின் இந்த அசமந்தப் போக்குக்குக் காரணம். இருக்கிறம் வெளியிடுவதற்கான பணமும் தங்கு தடையின்றி கிடைப்பதால் மாதம் இருமுறை புத்தகத்தை வெளியிடுவதோடு அவர்களின் பணி முடிந்து விடுகின்றது. இருக்கிறத்தின் வளர்ச்சியிலோ அல்லது அதன் விற்பனையிலோ எந்த கவனத்தையும் அவர்கள் செலுத்துவதில்லை.

இருக்கிறத்திற்கு இருக்கும் ஆள் மற்றும் பண பலத்தைக் கொண்டு அது இப்பொழுது எங்கேயோ பெரிய இடத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனாலும் கொழும்பிலும் பலர் அதனைத் தெரிந்திருக்கவில்லை.

அண்மைக்கால சர்ச்சைகளாலும் சில நலன்விரும்பிகளின் செயற்பாட்டாலுமே இருக்கிறம் வெளித்தெரிகின்றது.

இருக்கிறமில் இருக்கும் அரைவாசிப்பேர் ஊடக அறிமுகம் இல்லாதவர்கள். இருக்கிறமில் இணைந்த பின் தான் ஊடக அங்கீகாரம் பெற்றவர்கள். அவர்கள் கறிக்கடை நடத்துவதைப்போல் ஊடகத்தை நடாத்துகிறார்கள்.

சாந்தி சச்சிதானந்தம் இதனைக்கவனிப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டில் இருக்கும் இளையதம்பி தயானந்தா இதற்கொரு நல்ல முடிவு எடுக்கவேண்டும். இல்லையேல் ‘இலங்கையில் பல சஞ்சிகைகள் தொடங்கியபோதும் அவை படுத்துவிட்டன. இருக்கிறம் இரண்டு வருடத்துக்கு மேலாக வருகின்றது’ என்று மார்தட்ட முடியாது.
அருமையான ஒரு சஞ்சிகையை உங்கள் அறியாமையால் கெடப்பண்ண வேண்டாம்.


முன்னால் ஊழியன் + நலன்விரும்பி

என்.கே.அஷோக்பரன் said...

அந்த நபர் சொன்ன விஷயம் சரியாக இருக்கலாம் ஆனால் சொன்ன விதம் பிழை - பொதுமைப்படுத்தாது சொல்லியிருக்கலாம் - ஆனால் சிலவேளைகளில் உணர்வுகள் பொங்கும் போது எழுத்தாளர்களால் கட்டுப்படுத்த முடியாது தான் - அதை சஞ்சிகை ஆசிரியர்கள்தான் செய்ய வேண்டும். அந்தக் கட்டுரை திருத்தப்பட்டு வெளியிடப்பட்டிருக்கலாம்.

Firows said...

ஜனூஸ் சொல்லி இருப்பததில் நியாயம் இருந்தாலும் ஊடகத்துறையில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும் எந்த ஊடகத்தில் இப்படியான தவறுகள் நடக்கிறது என்று... அதிகமான ஊடகம்களில் இந்த தவறுகள் நடப்பதால், இந்த கட்டுரையில் தவறு இருப்பதாக தெரியவில்லையே... அனால், குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்குத்தான் இலத்திரனியல் ஊடகம்கள் இந்தக் கட்டுரையை விட்டு அப்பால் இருக்கின்றன.. அதில் வெற்றி எப்.எம். அறிவிப்பாளர்களும் யாவரும் தரம் கூடவே நிகழ்ச்சிகளும்...

balavasakan said...

அண்ணா..! தயானந்தா அண்ணனின் அத்தனை வரிகளும் அப்பட்டமான உணமை ....
//யாரும் வடை தந்தா சாப்பிட நாங்கள் தயார். உழுந்தாட்டினவன் யார்? ஓட்டை போட்டவன் யார்? எண்டெல்லாம் இனி யோசிக்க முடியாது.//

அதுவும் யாழப்பாணத்திற்கு ரொம்பவும் பொருந்தும் மனதை நெருடும் பல சம்பவங்களுக்கு விடை...

அண்ணனின் ஆக்கங்கள் வாசிக்க இருக்கிறம் வேண்டலாமோ எண்டு யோசிக்கிறன்...

இருக்கிறத்தில் தொடர்ந்து இருக்கும் பிரச்சனைகளை அங்கு இருக்கிறவர்கள் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.ஹா..ஹா... இது சும்மா எழுதினேன் நீங்கள் கண்டு கொள்ளாதீரகள்

Midas said...

நாம் நாமாக இருக்காததன் பயன்

வந்தியத்தேவன் said...

லோஷன் அந்தக் கட்டுரை நான் இன்னமும் வாசிக்கவில்லை. ஆனாலும் சில ஊடகங்களில் (இலத்திரனியல், பத்திரிகை) முளையும் பயிர்களை முளையில் கிள்ளிவிட்டவர்களும் அடிவேருடன் சாய்த்தவர்களும் இருக்கின்றார்கள். ஆனாலும் அவர் எல்லோரையும் ஒரே வகையில் வகைப்படுத்தியது கண்டிக்கத் தக்கதுதான்.

எத்தனையோ பிரபலங்களின் ஒலி/ஒளித் தொகுப்புகளை மறைத்த அல்லது இல்லாமல் பண்ணிய ஜாம்பவான்களும் இந்த ஊடகங்களில் இன்னமும் இருக்கின்றார்கள்.

//இலங்கையிலே மிகவும் குறைவாக சம்பளம் பெறுவோரின் பட்டியலில் இவர்களின் பெயர்தான் முதன்மை வகிக்கும். //

இல்லையே ஆரம்ப சம்பளமே அதிகம் என அறிந்தேன்.

மயில்வாகனம் செந்தூரன். said...

முதலில் மதிப்புக்குரிய இளையதம்பி தயானந்தா அவர்களின் ஆசிரியர் தலையங்கதிற்காக அவருக்கு நன்றி சொல்ல கடமைப்படுள்ளோம். சொல்லாமல் சொல்லப்பட்ட விடயங்கள் நெஞ்சைத் தொடுகின்றன.

இனி அடுத்த விடயத்துக்கு வரலாம். அண்ணா ஊடகத் துறைக்கு பொருத்தமற்றவரான மேற்படி எஸ்.ஜனூஸ் என்பவரைத் தெரிவு செய்த ஊடகத்தை கண்டிக்க வேண்டும்.

என்னிடம் கேட்டால் நான் இதுவரை பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ஊடகங்கள் திறைமைக்கேற்ற கெளரம், உழைப்பிற்ககேற்ற ஊதியம் என்பவற்றை வழங்கியிருக்கின்றன, வழங்கிவருகின்றன. நான் அறிந்த வரையில் பெரும்பாலான ஊடகங்களும் அவ்வாறுதான் செய்கின்றன. ஆனாலும் விதி விலக்குகளும் இருக்கலாம். அதற்காக அவற்றை அடிப்படையாக வைத்து ஒட்டுமொத்த ஊடகங்களையும் சாடுவது கண்டிக்கத்தக்கது.


ஊடகத் துறையில் இருந்து ஒதுக்கப்பட்ட, அதாவது இந்தத் துறையில் நிலைத்து நிற்கத் தெரியாத ஒருவர் எழுதியதை பிரசுரித்தமைக்காக இருக்கிறம் சஞ்சிகையினர் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும். அதற்காக நான் அதன் நிறுவுன ஆசிரியர் மதிப்புக்குரிய இளையதம்பி தயானந்தா அவர்களை மன்னிப்பு கோர வேண்டும் என்று சொல்லவதாக அர்த்தம் கொள்ள வேண்டாம். இந்தக் கட்டுரையை பிரசுரிக்க அனுமதித்தவர் மன்னிப்புகோர வேண்டும். இது தவறான மனப்பாங்கினை வருங்கால ஊடகக் கனவில் வாழும் உள்ளங்களிடம் விதைக்கும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்...

இலத்திரனியல் ஊடகம் ஒன்றில் கடமை புரிபவன் என்ற வகையில் நானும் எனது வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்துகிறேன்.

ரஜனிகாந்த் said...

“உண்மையை உண்மையாக சொல்வதுதான் மென்மை - அதுவே மனிதத் தன்மை” அதில் என்ன தப்பு இருக்கிறது. ஊடகங்களின் ஆரம்ப காலத்;தினை பாருங்கள், அங்கு திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டதாக அறிகிறேன் - ஆனால் இப்ப திறமையுடன் (திறமை இல்லாவிட்டாலும்) சதைக்கு முன்னுரிமை உண்டாம். ‘சதைகள் வதைகள் ஆவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை’ – ஆனால் திறமைசாலிகள் வீனடிக்கப்படுகிறார்கள் என்ற ஆதங்கம் மட்டுமே எனக்கு!

Admin said...

//ரஜனிகாந்த் said...
“உண்மையை உண்மையாக சொல்வதுதான் மென்மை - அதுவே மனிதத் தன்மை” அதில் என்ன தப்பு இருக்கிறது. ஊடகங்களின் ஆரம்ப காலத்;தினை பாருங்கள், அங்கு திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டதாக அறிகிறேன் - ஆனால் இப்ப திறமையுடன் (திறமை இல்லாவிட்டாலும்) சதைக்கு முன்னுரிமை உண்டாம். ‘சதைகள் வதைகள் ஆவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை’ – ஆனால் திறமைசாலிகள் வீனடிக்கப்படுகிறார்கள் என்ற ஆதங்கம் மட்டுமே எனக்கு!//

உண்மையை உண்மையாக சொல்லத்தான் வேண்டும். அதனையும் சொல்வதற்கு ஒரு விதம் இருக்கிறது. ஒரு சிலர் விடும் தவறை வைத்து எல்லோரையும் குற்றம் சொல்வதல்ல விமர்சனம்.

சதைக்கு முன்னுரிமை கொடுப்பதாக சொல்கின்றிர்களே. இது உங்கள் அறியாமை என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு சிலர் தவறு செய்யலாம் எல்லோர் மீதும் குற்றம் சொல்லாதிர்கள். இது போன்ற நிகழ்வுகள் எந்த தொழில் துறையை எடுத்துக் கொண்டாலும் சில இடங்களில் நடந்தேறுகின்றன. அது சிலர் விடும் தவறுகள் அதற்காக எல்லோரையும் குற்றம் சொல்ல வேண்டாம்.

Anonymous said...

சந்த்ரூவின் பின்னூட்டங்களை பார்க்கும்போது எரிச்சலாய் இரூகிறது. இந்த மனிஷன் தன்ட பதிவில இதையெல்லாம் எழுதுறதுதானே? இது என்னடா என்டால் பெரியவருக்கு கடைக்குப்போற விமல் சம்பிக்க அஸ்வர் மாதிரி? அது போதாதெண்டு ஒரு பந்தியையும் சொப்பி பண்ணி போட்டுத்தான் பதிலெழுதுது.. ஒவ்வொண்டும் ஒண்டும் இல்லாமலே ஒரு கிலோமீட்டர் நீட்டம்..

முடியல.. அழுதுதிடுவேன்.

சியா உல் ஹசன் - Zia said...

ஊடகத் துறை பற்றிக் குறை சொல்ல இந்த ஜநூசுக்கு என்ன அருகதை,தகுதி இருக்கு?
திரு.அப்துல் ஹமீத், திரு.எழில்வேந்தன், திரு.தயானந்தா சொல்லியிருந்தாலும், ஆக மிஞ்சிப் போனால் திரு.லோஷன், திரு.அபர்ணா, நவநீதன் சொன்னாலாவது ஏற்றுக் கொள்ளலாம்.அனுபவப்பட்டவர்கள்;தகுதியுள்ளவர்கள்.

யாரென்றே தெரியாத ஒருவர் செய்த விமர்சனங்களை லோஷன்,ஹிஷாம் மட்டுமல்ல,ஊடகத்துரையாளர்கள் எல்லோருமே கண்டிக்கவேண்டும்.

சியா உல் ஹசன்

Admin said...

//Anonymous said...
சந்த்ரூவின் பின்னூட்டங்களை பார்க்கும்போது எரிச்சலாய் இரூகிறது. இந்த மனிஷன் தன்ட பதிவில இதையெல்லாம் எழுதுறதுதானே? இது என்னடா என்டால் பெரியவருக்கு கடைக்குப்போற விமல் சம்பிக்க அஸ்வர் மாதிரி? அது போதாதெண்டு ஒரு பந்தியையும் சொப்பி பண்ணி போட்டுத்தான் பதிலெழுதுது.. ஒவ்வொண்டும் ஒண்டும் இல்லாமலே ஒரு கிலோமீட்டர் நீட்டம்..

முடியல.. அழுதுதிடுவேன்.//

முதலில் உங்கள் கண்கள் கண்களை கசக்கிவிட்டு என் பதிவுகளைப் பாருங்கள். என் பதிவுகள் அநேகமானவை சிலர் விடுகின்ற தவறுகளை விமர்சிப்பதாகவே இருக்கின்றன. நான் ஊடகங்களில் சிலர் விடுகின்ற தவறுகளை

சுட்டிக்காட்டி இருக்கிறேன்.குறிப்பாக தமிழ் மொழியை கொலை செய்யும் அரிவிப்பாளற்களது தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறேன். நான் தமிழையும், ஊடகத்தையும் நேசிப்பவன். ஒருவர் விடும் தவறினால் எல்லோருக்கும் கெட்ட பெயர் வருவது சரியானதா?.

நான் ஜனுஸ் போன்று எங்கேயும் என் பதிவிலே முற்று முழுதாக முழு ஊடகத்தையும் குறை சொல்லி இருக்கிறேனா? ஒரு சிலர் விடும் தவறுகளால் மற்றவரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது என்றுதான் சுட்டிக் காட்டி இருக்கிறேன். நான் தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு காரணம் ஜனுஸ் போன்றவர்கள் இருப்பார்கள் அவர்கள் ஒரு சிலர் விடும் தவறை எல்லோர் மீதும் குற்றம் சொல்வார்கள் என்பதனால்தான்.

என் பதிவுகளில் நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

ARV Loshan said...

பின்னூட்டங்கள் அனைத்துக்கும் பதில் அளிக்கலாம் என்று புறப்பட்டால் அது பத்தி பத்தியாக நீண்டு கொண்டே போகிறது..
எனவே உங்கள் அனைத்துப் பின்நூட்டங்களுக்குமான பதிலையும் புதிய பதிவாகவே தருகிறேன்..

என் துறை பற்றி பேசுவதில் எப்போதுமே பெருமை தானே?

Anonymous said...

சந்த்ரூ அண்ணைக்கு நான் சொன்னது வெளங்கேல்ல போல. அண்ணை உங்களுக்கு பெரியவர் தெரியும்தானே.. அவருக்கு என்னயாலும் சொன்னா அவர் பதில் சொல்ல முந்தி கடைக்குபோறவையள் (விமல் சம்பிக்க அஸ்வர் மாதிரி) பாஞ்சு விழுந்து பதில் சொல்லுவினம்.

அதுமாதிரித்தான் நீங்கோளும் நாங்க லோஷன் அண்ணாவுக்கு சொல்றதுக்கெல்லாம் இங்க பதில் எழுதுறியள். அது சுருக்குமா இருந்தாக்கூட பரவாயில்ல. நீட்டமா மேற்கோள் எல்லாம் போட்டு எழுதுறியள். உங்களுக்கு இது பத்தி எதுவும் சொல்லணும் எண்டா உங்க பதிவில சொல்லுங்கோ எண்டுதான் சொன்னனான்.

யார் பதிவில எண்டாலும் ஒரு பின்னட்டத்த மொத்தமா கொப்பி பண்ணி
மேற்கோள் காட்றத நிறுத்துங்கோ, அப்பிடி ஒரு 10 பின்னூட்டம் போடேக்க எங்களுக்கு எரிச்சல் வராதா? கொஞ்சம் மனுசத்தன்மயா யோசிச்சு
செய்யுங்கோ.. நாங்க பாவம்தானே.. எங்கள கஷ்டப்படுத்தாதேயுங்கோ... பிளீஸ்

ரஜனிகாந்த் said...

சந்த்ரூ, உங்களுக்கு தெரியுமா? “நக்கினார் நா இழந்தார்” என்ற பழமொழி – அது போலத்தான் இதுவும் “மடியிலே கனம் இல்லை என்றால் பயம் எதற்கு” தானுண்டு தன் பாடுண்டு என்று இருக்க வேண்டியது தானே - அதற்காக நடப்பதை நடக்கவில்லை என்று பொய் மொழி கூறமுடியுமா, என்ன?

Anonymous said...

சந்ருவும் லோஷனைப் போல் ஒரு வானொலி அறிவிப்பாளரே.. அவர் கோபப்படுவது நியாயம் தானே... ஒரு பெண் பிழை விட்டால் ஒத்துமொத்த பெண்களும் பிழை விடுவது மாதிரி எழுதினாள் எப்படி ஒரு பெண்ணுக்கு கோவம் வருமோ அப்படித்தான் தான் இதுவும்... கோவம் நியாயமாக இருக்கையில் ஏன் இந்த அனானினாய் விளங்காமல் குதிக்குது.. குதிக்க தெரிந்தவர்களுக்கு பெயரைப் போட தைரியம் இல்லையே.. ???

Admin said...

தம்பி... பெயரில்லாதவரே. உங்களை விட நான் நன்றாகவே எல்லா விடயங்களையும் புரிந்து கொள்கிறேன். முதலில் நீங்கள் வலைப்பதிவு என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வலைப்பதிவு எழுதுபவர் மட்டும்தான் கருத்து சொல்லவேண்டும் என்று இல்லையே. வலைப்பதிவுகளை பாருங்கள் எல்லோரும் கருத்துரை சொல்ல முடியும். லோஷன் அவர்களுக்கு மட்டுமல்ல.எல்லா பல வலைப்பதிவுகளுக்கும் கருத்து சொல்கின்றேன்.

என்னை கருத்து சொல்ல வேண்டாம் எனும் உரிமை வலைப் பதிவருக்கே உண்டு. எனது துறையைப் பற்றி ஒட்டு மொத்தத்தில் தவறு சொல்லும்போது நான் பார்த்துக்கொண்டிருக்க மடையன் அல்ல.

மனிதாபிமானத்தைப் பற்றி சொல்ல உங்களுக்கு அருகதை இல்லை என்று நினைக்கிறேன். உங்களாலேயே உண்மையான பெயரில் வரமுடியாத நீங்கள் மனிதாபிமானம் பற்றி பேசுகிறிர்கள். ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டு மொத்த ஊடகவியலாளரையும் குற்றம் சொல்லும் ஒருவருக்கு துணை போகும் உங்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?

முதலில் எங்களை நீங்கள் கஸ்ரப் படுத்துவதை நிறுத்தி நல்ல மனிதர்களாக நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்.

Admin said...

@ ரஜனிகாந்த் said...

ரஜனிகாந்த் நான் என்ன சொல்கிறேன் என்பதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள். தவறு நடக்கவில்லை என்று சொல்லவில்லை. ஒரு சிலர் செய்யலாம் ஆனாலும் எல்லோரையும் ஒட்டு மொத்தத்தில் குற்றம் சொல்லவேண்டாம் என்றுதான் சொல்கின்றேன்.

//“மடியிலே கனம் இல்லை என்றால் பயம் எதற்கு” தானுண்டு தன் பாடுண்டு என்று இருக்க வேண்டியது//

இது எனக்கல்ல ஜனுசிக்கு சொல்லவேண்டியது. ஒலிபரப்பு துறையில் ஜனுஸ் சொன்ன குற்ற சாட்டுக்களுக்கு இதுவரை நான் ஆளாகவில்லை. ஆளாகப் போபவனுமில்லை. என் தமிழ் உச்சரிப்பிலே ஒரு பிழை பிடித்தாலே நான் ஒலிபரப்புத் துறையை விட்டு விலகவும் தயார். என் அறிவிப்பு என் நேயர்களுக்கு தெரியும். இந்தக் கதை எனக்கு சொல்லவேண்டாம் ஜனுஸ் போன்ற அரை குறை அறிவிப்பாளர்களுக்கு சொல்லுங்கள்.

உங்களிடமும் சொல்கிறேன் நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று பாருங்கள். தவறு ஒரு சிலர் செய்கின்றனர். அதற்காக ஒட்டு மொத்தத்தில் எல்லோரையும் குறை சொல்லவேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

Anonymous said...

ஐயா ராசா சந்ரூ, தமிழ் உச்சரிப்புடன் தமிழை விழங்க முயற்சிக்கவும். நான் சொன்னதை விளங்க
முடியாததற்குப்பின்னும் நீங்கள் தமிழ் அறிவிப்புத்துறையில் இருக்கத்தான் போகிறீர்களா?

நான் கருத்துக்கு எதிராக வரவில்லை. நான் சொல்வது உங்கள் பின்னூட்டங்களை கொஞ்சம் trim பண்ணுங்கோ எண்டுதான். ஒன்றை பத்தாக பிரித்து போடுவது, மேற்கோள் காட்டுகிறேன் பேர்வழி என்று ஒருவரது
பின்னூட்டத்தை மொத்தமாக கொப்பி பண்ணிப்போடுவது
இவைதான் வேண்டாம் என்கிறேன். உங்களை மாதிரி வேறுயாராவது
பின்னூட்டம் இடுவதிலேயே கத்துக்குட்டித்தனமாக நடக்கிறார்களா? இதை நிறுத்துங்கள் என்று சொல்லும் வரைக்கும் இப்பதிவிலேயே இவ்வாறான கிலோமீட்டர் நீளமான பின்னூட்டங்களை இட்டுள்ளீர்கள் அல்லவா?

அடுத்தது இங்கு லோசன் எழுதியதற்குத்தான் நாங்கள் பின்னூட்டம் போடுகிறோம். நீர் என்னடா என்றால் இங்குவந்து பதில் எழுதுகிறீர்கள். உங்கட எழுத்த வாசிக்கவா லோஷன் என்ற வலைப்பூவுக்கு வந்தோம்.?

“நக்கினார் நா இழந்தார்”

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner