புஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பயோ டேட்டா
அண்மைக்காலத்தில் இந்தப் புஸ் புல்லட்டின் அடாவடி தாங்கமுடியாமல் என் இனிய பதிவுலகப் பெருமக்கள் பலபேர் குய்யோ, முறையோ என்று என் அரண்மனை ஆராய்ச்சி மணியை அடியோ அடியென்று அடித்து என் காதுகளை செவிடாக்கி விட்டனர். என் செல்பேசியின் செவிப்பறையும் கிழிந்து தொங்குது -
மந்திரியார் மந்தியோ சாரி வந்தியோ புலம்பாத பொழுதில்லை – அலம்பாத இடமில்லை.
புல்லட்டின் பிரியமான பெண் தோழிகளுடன் கூட்டணி சேர்ந்து – அவர்களின் கடும் மொழிப் பின்னூட்டங்கள், வசைக் கவிதைகளாலும் புஸ் புல்லட்டை புறமுதுகு காண வைக்க முடியாததால் பதிவர் சந்திப்புக்கு வரமுதலிலேயே புல்லட்டின் பல்லுப்பிடுங்க வழிசெய்யுமாறு என்னிடம் மனுவொன்று கொடுக்கப்பட்டது.
ப.ச பதிவுகள் மூன்றால் பஞ்சாகிப்போய் நொந்து நூலான குடலேறி, தீப்பெட்டி, கறுப்பு நமீதா புகழ் கொஞ்சக்கோப்பி, கும் கும் குமுக்கு, மலேசிய முசோலினி, இலங்கை மாத்ருபூதம் மத்து, முதலாய பதிவர்கள் அத்தனை பேரின் வேண்டுகோள், தூண்டுகோல்களினால் இதோ உங்கள் முன்னால்
புஸ் புல்லட் புராணம்.
பதிவுலகப் புகழ்ப்பெயர் : புஸ் புல்லட் பாண்டி (காத்தில்லாத பம்பு என்பதால் 'புஸ்' என்ற காரணப்பெயர் சேர்ந்தது வரலாறு)
உண்மைப்பெயர் : பம்மாத்துபவன் (மூஞ்சிப் புத்தகத்தில் பவன் என்று தேடும்போது அதிகம் பெண்களை நண்பராகக் கொள்ளாதவர் எவரோ அவரே இவர் என அடையாளம் காண்க)
கம்பஸ் கார்ட் பெயர் : வாளி வள்ளல், குப்பிக் குமரன் (வைத்து வைத்து – கொடுத்து கொடுத்து சேர்த்துக்கொண்ட திருநாமங்கள் இவை என்கின்றன இவரது நட்பு வட்டாரங்கள்)
அங்க அடையாளங்கள் : 'புஸ்' ஹம்டன் லேனில் நின்றால் காலிவீதி வரை நீண்டு மோப்பம் பிடித்து யாரையாவது குதறியெடுக்க நீண்டுள்ள து.சுஜெயவர்த்தன மூக்கு.
சின்ன வயதிலிருந்தே செய்த குழப்படிகளுக்கு அப்பா, அம்மா, ஆசிரியர்கள் திருகித் திருகியே தலையின் இருபக்கமும் சற்றலைட்டாக வளர்ந்திருக்கும் சுளகுக்காதுகள்.
KFC, நளபாகம், சிந்து கஃபே, சைனீஸ் டிராகன் உணவுகளை சுவைத்தும், கிடைக்கும் போதெல்லாம் சளசளவென்று விடுப்புக்கதைகள் விடாமல் கதைத்துக் கதைத்துமே விரிந்து விடைத்து அப்பளமும், ஆமை வடையும் சேர்த்துப் போட்டது போலகிடக்கும் உதடுகள்.
ஆங்கிலப்படமும், அடுத்த வீட்டு ஆச்சி, முன்வீட்டு முத்தம்மாக்கிழவி புதினமும் பார்த்துப் பார்த்தே முழியாக மாறியுள்ள விழிகள்.
ஜிம்பாடி என்று தானே பில்டப் பண்ணி வண்டியையும் சேர்த்தே வன்மைப்படுத்தியுள்ள பவுசர் பாடி.
தொழில் : அமெரிக்ககாரனுக்கு ஆணி பிடுங்குவது. ஆண்டுக்கிருமுறை 'யால' காட்டுக்குக் கூட்டிப்போய் யானை காட்டுவது. அலுவலக நேரத்திலும் அலுவலோடு அலுவலாய் அரட்டையடித்தலும், அலையடித்தலும்.
பொழுதுபோக்கு : வாரத்திற்கு இருமுறை பதிவுலகில் டுமீல் வெடித்தல். பக்கத்து வீட்டு ஆச்சிகளின் கொடியில் காயும் பாவாடையில் பனர் செய்தல் ( பதிவர் சந்திப்பு அனுபவம்)
கூகிள் நண்பர்களுடன் நள்ளிரவு வரை கும்மி – அதிலும் வந்தியர் வந்தாலோ அவர் இரத்தம் காணும் வரை ஆறமாட்டார் இவர்.
கென்டக்கி கோழிப் பரம்பரையே அழிந்துபோகுமளவு KFC இலேயே குடியிருப்பு. (ஆதாரம் படம்)
மறக்க முடியாத பாடசாலை சம்பவம் - செய் நம்பு நாச்சியாரின் சரிதத்தில் 'செப்பைத் திறந்து பலகாரங்கள்' பார்ப்பதற்குப் பதில் சிப்பைத் திறந்து பார்த்ததால் வாத்தியாரிடம் வாங்கிக் கட்டியதும், பாலர் வகுப்பு பவளக்கொடி டீச்சருக்கு ஆறு வயசிலேயே லுக்கு வீடு வீட்டிலும் வகுப்பிலும் டங்குவார் கிழிய வாங்கிக் கட்டியதும் பெரிசு எண்டால்..
சின்ன சின்னதாய் இன்னும் பல்லுடைபட்ட, ட்ரவுசர் கிழிந்த பல சம்பவங்கள் உண்டு..
மறக்க முடியாத கொழும்பு சம்பவங்கள் - வில்லு பார்த்து பல்லுடைந்தது (அப்படி இருந்து வேட்டைக்காரனுக்கு முன்பதிவு செய்ய மூகுடைக்கவும் காத்திருக்கிறார்)
நளபாகம் அப்பத்துக்குள் கரப்பொத்தான் இருக்க ரால் பொரியலும் இலவசமாய்த் தாறாங்கள் எண்டு சுவைத்து சாப்பிட்டது..
தோசை திருவிழாவுக்காக வந்தியால் விடியக் காலையிலேயே எழுப்பப்பட்டது.
141ஆம் இலக்க பஸ்ஸிலே தவற விட்ட 'கேஸ்' (இப்பவும் அப்பிடி ஒரு 'மலிவு' கேஸ் தேடுராராம்)
நண்பர்கள் - பல பேர்.. ஆனால் அவர்களில் பல பேர் இந்தப் பதிவுக்குப் பினர் துரோகிகளாகவும் எதிரிகளாகவும் மாறுவார்கள் என சுவாமி பதிவானந்தா ஆரூடம் கூறுகிறார்.
எதிரிகள் - கிரிக்கெட் பதிவு எழுதுவோர் (தம்பியர் இன்னும் கிட்டிப் புள், கிளித்தட்டு, டிக்கிலோனா, கப்பிளிங்க்ஸ் விளையாட்டுக்களோடேயே இருப்பதனால் கிரிக்கெட் இன்னும் பிடிபடவில்லையாம்)
சின்னக் குழந்தைகள் (குட்டிச் சாத்தான்கள் என்று இவர் பாஷையில் சொல்லலாம்) உட்காரும் இடத்தில் குண்டூசி வைத்தும், கம்பியூட்டரை கதிர்வேலிண்டை இரும்புக் கடைக்கு அனுப்பி வைக்கிற வேலை செய்தும், புல்லட்டைப் பல நாள் தூக்கமில்லாமலும் செய்த அந்த தேவர்,தேவதைகள் வாழ்க எனப் பதிவுலகக் கோஷம் கேக்குது
பச்சிளம் பாலகர் தாம் என்று டூப்பு விடும் கிழடு தட்டிய சில மூத்த,முதிய பதிவர் கூட்டம்.
மலேசியாவிலிருந்து மங்கள வார்த்தைகள் பொழிந்து கும்மியிட்டு, குடும்பத்தையே கூட்டிவந்து புல்லட்டைக் கடுப்பாக்கும் வானத்தோடு சம்பந்தப்பட்ட பெண் பதிவர்.(இவர் தன்னைத் திட்டியது போல பக்கத்து வீட்டுப் பாக்கியம் கிழவி கூடத் தன்னை திட்டியதில்லை என்கிறார் புஸ்)
கவிதை பாடி 'புகழ்' பெற்ற தமிழச்சி .. தன்னைக் கஞ்சனாக்கி உண்மையை வெளியே போட்டதால் எண்ணெயில் போட்ட வடை போல ஆகி கடுப்பாகியுள்ளார்..
பிடித்த நடிகர் - விஜய் டி ராஜேந்தர் (ஆதாரம் படம்)
பிடிக்காத நடிகர் - எந்தப்படம் பார்க்கப் போய் பல்லுப் போனதோ அந்த ஹீரோ..
பயம் - அண்மைக்காலமாக அடித்தாடும் பதிவர்/ட்விட்டர் கருப்பு நமீதாவுடன் சாப்பிட செல்வது
ஆதிரையின் எலிக் குஞ்சு மன்னிக்க ஆதிரை வீட்டு என்று வந்திருக்க வேண்டும்
வந்தியுடன் பெண்கள் அதிகம் இருக்குமிடம் நோக்கிய பயணங்கள்
மலேசிய ஐ,பீயுடன் வரும் பின்னூட்டங்கள்
பின்நவீனத்துவப் பதிவுகள்
பாடமாக்கி சொல்லப்படும் கவி வரிகள்
அரசியல் (பேசப் பயமென்று பொதுவாக பொய் சொன்னாலும், வெளியாட்கள் எட்டிப் பார்க்காவிட்டால் அல்லது அப்படி நினைத்துக் கொண்டு குழுமத்தில் கும்மி எடுப்பார்)
ஒரே ஒரு மிகப் பெரும் சாதனை - பொறியியல் பிரிவில் யாழ் மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத் தேறியது..
இன்றுவரை இது எப்பிடி நடந்தது, தனக்கு முன்னால் இருந்து பரீட்சை எழுதிய மாணவன் யார் என்று தேடிறாராம் ஜிம்பாடி.
நீண்ட கால சாதனை - பெண்களை லுக்கே விடாதவன் என்று facebookஇலும், வலையுலகிலும் பெண்கள் பலபேருக்கு காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருப்பது (அண்டை அயலும், கம்பஸ் கன்னிகளும் மட்டும் உண்மை அறிவர்)
அண்மைக் கால சாதனை - முதலாவது பதிவர் சந்திப்புக்கு காட்டிய கணக்கு - இதன் மூலம் கணக்கு காட்டுவதிலும்(விடுவதிலும் என்று சொல்லி உங்களுக்கு விளங்கினால் நான் பொறுப்பில்லை) தான் புலி என்பதை நிரூபித்தது
அதிகமான வசவுகளைப் பின்னூட்டங்களில் காரணமில்லாமலேயே வாங்கியவர் என்ற பெருமை (மலேசியா ஜிந்தாபாத்)
மூத்த,மஜாப் பதிவறினால் அடிக்கடி பெண்களிடம் அடகு வைக்கப்படுவது
குறி வைத்துள்ள சாதனை - அமெரிக்கப் பயணம் (ஒரு தடவையாவது அந்த மொநிக்காவிடம் கிளிண்டன் அப்பிடி என்ன கண்டார் என்று அறிய ஆசையாம்)
பலம் - எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் ரிவிட் அடிக்கும், கடி கொடுக்கும் கலகலக்கும் ஆற்றல்
பலவீனம் - காத்துப் போன பம்பு (ஹீ ஹீ)
மறந்த விஷயங்கள் - டுமீலில் தொடர்ந்து தந்து வந்த அறிவியல் விஷயங்கள் (ஆதிரை வீட்டுக்கு வந்த எலியோடு, தன்னையும் அது போன்றவை தேடி வரலாம் என்று பயத்திலேயே நிறுத்தி விட்டாராம்)
பெற்றோர் வைத்த சொந்தப் பெயர் & பதிவுலகில் ஆரம்பத்தில் புள்ளட்டோடு சேர்ந்து ஒட்டியிருந்த 'பாண்டி' (இப்போது இவரின் அன்புக்குரிய திட்டல் திலகம் இவரை 'பண்டி',பரல் என்று அழைப்பது வேறு கதை)
மறக்காதது - கடுப்பைக் கிளப்பும் பெண்கள் எழுதி பெண்களால் இடுப்பு நொறுக்கப்பட்டது
வானொலி நுட்பம் பற்றிப் பதிவு எழுதியதைப் பாராட்டி 'என்றும் இளமைப்'பதிவர் ஒருவர் தருவதாக சொல்லி இன்னும் தராமலே இருக்கும் பரிசு
பதிவர் சந்திப்பு 1இலே சாப்பிட்ட பட்டீசும், அந்த சந்திப்புக்காக கஷ்டப்பட்டு செய்த பன்னரை மற்ற மூன்று ஏற்பாட்டாளரும் சின்னாச்சி செத்தநேரம் கட்டிய மரண வீட்டு பனர் போல இருக்கு என்று நக்கல் பண்ணி மனசை நோகடிச்சதும்
திருமணம்/காதல் - படித்த பெண்கள் வந்தால் உரசிப் பார்ப்பார்கள்;தன் பருப்பு வேகாது என்பதால் கட்டுப்பெட்டிக் கருப்பாயி ஒருவரைத் தேடுவதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். (ஆதாரம் உள்ளது)
காதல் அனுபவங்கள் - பக்கத்து வீட்டுப் பாட்டிகள், இடம்பெயர்வின் போது குளித்த பெண், கம்பஸில் என்ற பெயர் கேட்டாலே பல தூரம் ஓடும் பெண்களிடம் கேட்கவும்
இன்னும் புல்லட் ஸ்பெஷல் இருந்தால் பின்னூட்டி புஸ் புல்லட்டைப் பெருமைப் படுத்துவது உங்கள் கடமை, தார்மீகப் பொறுப்பு..
புல்லட் நம்ம சகா என்பதும், நக்கல் அடிப்பவர்கள் நக்கலைப் பொறுப்பார்கள்,மொக்கை போடுபவன் மொக்கை தாங்க வேண்டும் என்ற பதிவுலக விதிக்கமையவும் இந்தப் பதிவு புல்லட்டைக் காயப்படுத்தாது என்று நம்பி (வசவுப் பின்னூட்டங்களையே பார்த்த அவர் இதைத் தாங்க மாட்டாரா?) இந்தப் பதிவை இடுகிறேன்.
படங்கள்,தகவல்கள் ஆகியவற்றில் உடனடியாகவே உதவிய நல்ல உள்ளங்கள்((புல்லட்டுக்கு அல்ல) நால்வருக்கும் (வந்தியத்தேவன், ஆதிரை - கடலேறி, யோ வொயிஸ் யோகா, பவன்) நன்றிகள்.. :)
இனி மிச்சம்,மீதியை நாளை பிற்பகல் பதிவர் சந்திப்பில் பார்த்துக் கொள்ளலாமா?
மறக்காமல் வந்திடுங்கோ.. (புல்லட்டைப் பார்க்கவேன்றாவது வருவதென்று முடிவேடுத்திருப்பீங்க என்று நம்பிக்கை உள்ளது)
அரச ஆணை - இந்தப் பதிவு தூய மொக்கை என்பதால் கும்மி யுத்தத்துக்காக திறந்து விடப்படுகிறது