ஒன்றா இரண்டா எத்தனை சாதனைகள்?
825 ஓட்டங்கள் இரு அணிகளாலும் குவிக்கப்பட்ட நேற்றைய ஒரு நாள் சர்வதேசப் போட்டியில், சிக்சர்களும் பவுண்டரிகளுமாக மழையாகப் பொழிந்தன.ஒரு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அதிகமாகக் குவிக்கப்பட்ட இரண்டாவது மொத்த ஓட்டங்கள் இவை.
இந்தியாவின் 414 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இந்தியா பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை. முன்னர் பெர்முடா அணிக்கெதிராக உலகக்கிண்ணப் போட்டிகளில் பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கையை விட ஒன்று அதிகம்.அத்துடன் அதிகூடிய ஓட்ட வரிசையில் ஐந்தாவது
இலங்கையின் 411 ,இலங்கையின் இரண்டாவது கூடிய எண்ணிக்கை. (உலக சாதனையே இலங்கை வசம் தானே உள்ளது)
இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய ஒரு அணி பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவே.
இந்தியா இறுதியில் வெறும் மூன்று ஓட்டங்களால் வெற்றியீட்டினாலும் இலங்கை அணியின் விடாமுயற்சி பலத்த பாராட்டை வழங்கியுள்ளது.இறுதிப் பந்துவரை எது நடக்குமோ என்று அனைவருக்கே குழப்பமாக, விறு விறுப்பாக நேற்றைய போட்டி நடந்து முடிந்தது.
இரண்டு அணியிலும் முதல் மூன்று வீரர்கள் குவித்த பெருமளவிலான ஓட்டங்கள் தான் இத்தகைய மிகப்பெரிய மொத்த ஓட்டங்கள் குவிக்க வழிவகுத்தது.
(இந்தியாவின் 414 ஓட்டங்களில் சேவாக்,சச்சின், தோனி சேர்ந்து பெற்றவை 287 ; இலங்கை அணி பெற்ற 411 ஓட்டங்களில் டில்ஷான், தரங்க, சங்கக்கார சேர்ந்து பெற்றவை 317 )
இணைப்பாட்டங்களும் குறைவில்லாமல் நேற்று சாதனை பொழிந்தன.
இரு அணிகளின் ஆரம்ப இணைப்பாட்டமும் 150ஐத் தாண்டின.முதல் இரு விக்கேட்டுக்களுமே இரு அணிகளுக்கும் நூறைத் தாண்டிய இணைப்பாட்டத்தை வழங்கின. ஒரே போட்டியில் மூன்று 150+ இணைப்பாட்டங்கள். இதுவும் கிரிக்கெட்டில் முதல் தடவை.
பல ஒற்றுமைகள்..
இந்தியாவில் சேவாக் 146.
இலங்கையில் டில்ஷான் 160.
இருவருக்குமே இது அவர்களின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை;இந்த வருடத்தின் மூன்றாவது சதம்.இந்த வருடத்தில் இருவருமே விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு அணிகளின் தலைவர்களுமே மூன்றாம் இலக்கத்தில் வந்து புயலாகப் பேயாட்டம் ஆடிவிட்டு சென்றார்கள். (இருவருமே விக்கெட் காப்பாளர்கள் என்பது பழைய ஒற்றுமை)
தோனி 53 பந்துகளில் 72 & சங்கக்கார 43 பந்துகளில் 90 .
இரு அணிகளிலும் தலா ஒவ்வொரு சதம்& இரண்டு அரைச் சதங்கள்.
இரு அணிகளும் தலா 12 சிக்சர்களை அடித்திருந்தன. சேவாக் - 6 , சங்கா - 5 .
ஆனால் நான்கு ஓட்டங்களில் இந்தியா வென்றது..
இந்தியா 43 .இலங்கை 37 . சேவாக் 17 ,டில்ஷான் 20 ௦.
அதிக பவுண்டரிகள் பெறப்பட்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நேற்றைய போட்டி இரண்டாமிடத்தையே பெற்றது.
அதிக சிக்சர்கள் பெற்ற வரிசையில் நான்காம் இடம்.(ஞாபகமிருக்கா க்ரைச்ட்சேர்ச்சில் நடந்த இந்தியா-நியூ சீலாந்து போட்டி? 31 சிக்சர்களை மாறி மாறி இரு அணியினரும் துரத்தி துரத்தி அடித்தனர்.)
ஆறு வீரர்கள் அரை சதம் தாண்டிய நேற்றைய போட்டியில் சங்கக்கார தான் வேகமான அரைச் சதம் பெற்றார்.. 24 பந்துகளில்..
முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் சறுக்கியதால் விமர்சனங்களுக்கு உள்ளான சங்கா மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்க்சில் இருந்து வெறி வந்தவர் போல ஆடிவருகிறார்.
அதிலும் ட்வென்டி ட்வென்டி போட்டிகள், நேற்றைய ஒருநாள் என்று அவர் ஆடும் வேகமும், சிக்சர் அடிக்கும் லாவகமும் எதிரணிகளுக்கு எச்சரிக்கை சமிஞ்சை.
இரு அணிகளும் ஒரே மாதிரியாகவே பயணித்துக் கொண்டிருந்தன.. கடைசி ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சாகீர் கான், நெஹ்ரா ஆகியோரின் கடும் முயற்சி இந்தியப் பக்கம் போட்டியை திசை திருப்பியது.
என்னைப் பொறுத்தவரை சீராக,வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை அணியின் பாதை தடுமாறியது சங்காவின் ஆட்டமிழப்புக்குப் பிறகு தான்.
தொடர்ந்து வந்த இலங்கை வீரர்கள் பதற்றமடைந்துவிட்டார்கள்.
மத்தியூஸ்,கண்டாம்பி ஆகியோர் சாதுரியமாக இலக்கு நோக்கி சென்றாலும் தேவையற்ற ரன் அவுட் ஆட்டமிழப்புக்கள் இலங்கைக்கு ஏமாற்றமளித்தன.
ஆனால் சாகீர்,நெஹ்ராவின் முயற்சிக்காக இந்தியா வென்றது எனக்கு கவலையளிக்கவில்லை.
ஆயினும் இந்தியா வீரர்களோ,இந்தியா ரசிகர்களோ இந்தியா இத்தனை பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்ற பிறகு இலங்கை இவ்வளவு தூரம் நெருங்கி வந்து சவால் விடும் என்று யோசித்திருக்க மாட்டார்கள்.
ஆனால் சாகீர் கானுக்கும் ஒரு அவப்பெயர் வந்து சேர்ந்தது.ஒரே போட்டியில் அதிக ஓட்டங்களைக் கொடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் என்ற அவப் பெயரை ஜவகல் ஸ்ரீநாத்(2003 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) இடமிருந்து தனதாக்கியுள்ளார்.
பாவம் இந்தப் பந்துவீச்சாளர்கள்.
மாறி மாறி அடிவாங்கிய பந்துகளை விட இவர்களைப் பார்த்தால் பாவமாக இருந்தது.
எந்த உலக சாதனைப் பந்துவீச்சாளராக இருந்தாலும் நேற்றைய ஆடுகளத்தில் விளையாடி இருந்தால் ரணகளப் பட்டிருப்பார்கள்.
ரவி சாஸ்திரி பரிசளிப்பு நேரத்தின்போது சொன்னது "இந்த ஆடுகளம்போல எம் நாட்டின்(இந்தியா) வீதிகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் "
உண்மை தான்.. இப்படியொரு தட்டை ஆடுகளத்தில் நானூறென்ன, ஐந்நூறே அடிக்கலாம்.. சேவாக், டில்ஷான் மாதிரி அதிரடி மன்னர்களுக்குக் கொண்டாட்டம்..
ஆனால் பர்ரிதாபப் பந்துவீச்சாளர்கள்?
நேற்று ஹர்பஜனின் பந்துவீச்சு தான் சிறந்தது.. அதுவும் பத்து ஓவர்களில் 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள்.
இலங்கை வேகப் பந்து வீச்சாளர்கள் அவ்வளவு மோசமாக அடிபடவில்லை. மூன்று பேருமே சராசரியாக ஒரு ஓவருக்கு ஏழைவிடக் குறைவான ஓட்டங்களையுயே கொடுத்ததோடு தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.
ஆனால் இந்தியா வேகப் பந்துவீச்சாளர்களோ பிரித்து மேயப்பட்டார்கள். அவர்களும் என்ன செய்வார்கள்? இப்படிப்பட்ட தட்டை ஆடுகளங்களில் என்ன தான் செய்யமுடியும்?அவர்களின் களத்தடுப்பாளர்களும் கைகொடுக்கவில்லை என்பதே கொடுமை.
ஒரு நாள் போட்டிகளும் ட்வென்டி ட்வென்டி போட்டிகளும் கிரிக்கெட்டை முழுமையாக துடுப்பாட்டவீரர்களுக்கான ஆட்டங்களாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படியான ஆடுகளங்களும் சேர்ந்துகொண்டால் அவ்வளவுதான்..
ஒவ்வொரு போட்டிக்கும் புது புது பந்துவீச்சாளர்களை தேடிக் கொண்டிருக்கவேண்டியிருக்கும்..
பாவம் அவர்கள்.. சராசரிகள், எல்லாம் ரொக்கட் வேகத்தில் எகிறப் போகிறது.நாளை சரித்திரத்தில் மோசமான பந்துவீச்சாளர்களாகவே இவர்கள் அனைவரும் கருதப்படப் போகிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒரு நாள் போட்டிகளைக் காப்பாற்றுவதற்கு முன்னர், பந்துவீச்சாளர்களைக் காப்பாற்ற எதாவது நடவடிக்கையை உடனடியாக எடுக்காதா?