பதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்

ARV Loshan
32

இலங்கைத் தமிழ்ப்பதிவரின் இரண்டாவது சந்திப்பு நேற்று முன்தினம் கொழும்பு – 06, தேசியகலை இலக்கிய பேரவை மண்டபத்திலேயே வெற்றிகரமாக நடைபெற்றது.

அதிலிருந்து சில முக்கிய துளிகள்-

பிற்பகல் 1.30 அளவிலேயே பெருமளவிலான பதிவர்கள் மண்டபத்திலே திரண்டிருந்தார்கள்.

ஒலியமைப்புக்கள், நேரடி ஒலிபரப்புக்களின் மும்முரங்களோடு டிப்டொப்பான ஆடையோடு கௌபோய் மது, இப்போது ஸ்டைலாக வளர்ந்துவிட்டிருந்த முடியலங்காரத்தோடு சுபாங்கனும், வியர்ந்து விறுவிறுத்து – போட்டிருந்த ஆடையோடு குளித்து வந்த மாதிரி கங்கோன் கோபி, அத்தனை ஏற்பாடுகளையும் முடித்த திருப்தியில் பெரிய மது, அண்மையில் 16வது பிறந்தநாளை தொடர்ந்து இருபதாவது வருடமாக கொண்டாடிய மு.மயூரன், தனியாக,அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்த மன்னார் அமுதன்,அப்போதே வந்தோருக்கு குளிர்பானம் கரைத்துக்கொடுக்கத் தயாராக இருந்த கீர்த்தி என்போர் ஏற்பாட்டாளருக்கே உரிய மும்முரம்,பரபரப்போடு காணப்பட்டார்கள்.

கருத்து சொல்லும் மேமன் கவி

மண்டபம் தாராளமாக நூறு பேருக்கு மேல் கொள்ளக்கூடியதாக இருந்தாலும் ஐம்பது பேரளவில் வந்தவுடன் சரியாக மணி இரண்டானவுடன் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் மது.

தொகுப்பாளர் மது - சகல 'விஷயமும்' இவர் கையிலே..

படிப்படியாக பங்குபற்றுவோர் தொகை அறுபதை எட்டியதும், இணையம் மூலமாக இணைந்திருந்தோர் முப்பதுக்கு மேல் என்பதும் மகிழ்ச்சியான விஷயங்கள்.

முதலில் அன்பாகவும், பின்னர் கொஞ்சம் உரிமையுடன் கூடிய வன்முறையாகவும் இரண்டாவது பதிவர் சந்திப்பு எப்போது என்று கேள்வி எழுப்பி குழுமத்தில் ஒரு புரட்சி ஏற்படுத்திய பெண் புயல் கீர்த்தியே ஆரம்ப உரை நிகழ்த்தி நிகழ்வை ஆரம்பித்தது மிகப்பொருத்தம்..

கடந்த சந்திப்பைப் பற்றிய விஷயம் எல்லாம் சொல்லியவர், அண்மையில் புஸ் புல்லட் பதிவில் கொஞ்சம் அவரையும் நான் 'கடி'த்ததோ என்னவோ நம்மை 'ராஜ ராஜர்' ஆக்கிப் போனார்.. :)
சும்மா முடி,கொடி தந்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்.

பதிவர் அறிமுகம் இடம்பெற்றது.. சுருக்கமாக விரைவாக அறிமுகம் இடம்பெற்ற பிறகு (இம்முறையும் பல புதியவர்கள் பதிவுலகில் தம்மை இணைத்துக் கொள்ள வந்திருந்தது மகிழ்ச்சியான விஷயம்) பெரிய மது (மதுவர்மன்) முதலாவது கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார்..

எப்படிப்பட்ட பதிவுகள் பயனுள்ளவை? எதைப் பற்றி எழுதலாம், எப்படியாக பதிவுகளை தரமாகப் பேணலாம் என்ற மதுவர்மன் எடுத்துக் கொடுத்த அடிப்படையுடன் கலந்துரையாடல் பயனாகப் போயிற்று..

அண்ணன் மது - பயனுறப் பதிவெழுதல்

அது என்னமோ என்ன மாயமோ வழமையாக எந்த சந்திப்பென்றாலும் உருட்டப்படும் வந்தியின் தலைக்குப் பதிலாக இம்முறை அதிகம் பேரால் பந்தாடப்பட்டது புல்லட்டின் தலை..

மொக்கை மன்னன் என்று முடிவே கட்டிவிட்டது போல அத்தனை பெரும் மொக்கைப் பதிவுகள் பற்றிப் பேசியபோதெல்லாம் எடுத்தாளப்பட்டவர் நம்ம புல்லட்.(நம்ம பதிவின் ராசியோ? பையன் தூங்கப் போன நேரம் எல்லாம் கடிச்சு கடிச்சே எழுபினாங்க எல்லோரும்.. போதாக் குறைக்கு இணைய வழியாக மலேசியாவிலிருந்தும் 'வான்' தாக்குதல் புல்லட்டின் மீது)

புல்லட் , தூக்கத்திலிருந்து எழுப்புறதா தூங்கிட்டே தூங்க வைக்கிறேயே ராசா


இடையே யாரோ ஒரு புண்ணியவான் நம்மையும் மொக்கையரசன் ஆகினார்.. (பரவாயில்லை எழுதக் கஷ்டமான விஷயத்தில் நான் மன்னன் என்றால் மகிழ்ச்சி தான்)


மேமன் கவி ஆரம்பித்துவைத்த எதிர்கால சந்ததியாகப் புறப்பட்டுள்ள பதிவர்கள் பயனுள்ள விதமாக கட்டுப்பாடு கொண்டமைந்த படைப்புக்களைத் தரவேண்டும் என்ற விடயம் கபனத்தில் கொள்ளப்பட்டாலும், ஊரோடி பஹி, மயூரன், நான்,வந்தியத்தேவன் சொன்ன சில விஷயங்களான பதிவுலகில் தனித்துவம் பேணல், யாரையும் யாரும் இதை எழுத்து,இதை மட்டும் எழுத்து என்று வலியுறுத்தல் போன்றவை தவிர்க்கப்படவேண்டும்,அவரவர் அவரவர்க்குப் பிடித்த விஷயங்களை எழுதவேண்டும்,முடிந்தவரை தகவல்கள் பகிருதல்,அவை அடுத்த தலைமுறையினருக்குப் பயனுள்ள விதத்தில் காவப்படல் என்பவை முடிந்த முடிபுகளாக கொள்ளப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளக் கூடியது.

எழுதும் தமிழை செம்மையாக(பிழையின்றி) எழுதவேண்டும் என்பதை நான் வலியுறுத்தி அமர்ந்தேன்.

பிரிட்ஜில் இருந்து வந்த ஊரோடும் பகீ
டி சேர்ட்டைக் கவனியுங்கள் COURAGE =COMPASSION

இடையே ஊரோடி பகீ அணிந்து வந்திருந்த ஆடை பற்றி ஒரு சுவாரஸ்ய விஷயம் நடந்தது.அவர் வெளிநாட்டிலிருந்து வந்ததால் ஒரு சேர்ட்,அதன் மேல் ஒரு டி சேர்ட் அணிந்திருந்தார்.
அது பற்றி யாரோ கேட்க

பகீ - நான் வந்த இடம் சரியான குளிர். நாலு டிகிரி அங்கே..
புல்லட் - எங்கே? பிரிட்ஜில் (fridge) இருந்தோ வாறீங்க?

சபையே கலகலத்தது

பகீயும்,மு.மயூரனும் கிரிக்கெட் பதிவுகளுக்கு என்னுடைய பதிவுகளை உதாரணம் காட்டியது நம்மளை கிரிக்கெட் பதிவராக்கிடுவாங்களோ என்று பயந்தே போய்விட்டேன்.. ;)


வெள்ளைக் கண்ணாடி வந்தியும், பிரவுன் கண்ணாடி புல்லட்டும்..
"வெப் காம்மில் வடிவாத் தெரியுதோ?? அங்கே வரை தெளிவாத் தெரியனும்"


இதைவிடக் கொடுமை நம்ம வந்தியத்தேவனைப் பற்றி பகீ சொன்னது. "வந்தியின் பதிவுகளைப் பின்னூட்டங்களுக்காகவே வாசிக்கலாம்"

வந்தி எங்கேயாவது தொங்கி சாகலாம் என்று பார்த்தால் கயிறும் கிடைக்கவில்லை;மூழ்கி சாகலாம் என்றால் சிரட்டையும் இல்லை.. (இந்த சிரட்டை வந்திக்கு மிக நெருங்கிய தொடர்புடையது)
கடைசியாக கீர்த்தி செய்துகொண்டு வந்த பயற்றம் பணியாரமும் சாப்பிட்டுப் பார்த்தும் பயனில்லை எனக் கவலைப்பட்டார் வந்தி..

என்னைக் கேட்டால் மு.மயூரன் கரைத்த குளிர் பானத்தை இன்னும் ஒரு கோப்பை வாங்கிக் குடித்திருந்தாலோ, கோபி,அஷோக்பரன்,நான் ஆகிய மூவரையும் ஒன்றாக தன மேல் உருளச் செய்திருந்தாலோ இலகுவாக முடித்திருக்கலாம்.. ;)

அடுத்து பெண்களும் பதிவுலகமும் பற்றிய கலந்துரையாடலை 'உறுபசி' நிலா தர்சாயணி ஆரம்பித்து வைத்தார்.
வழமை போலவே பெண்களின் பங்களிப்பு இம்முறை சந்திப்பிலும் குறைவாகவே இருந்தபோதும், கீர்த்தி, நிலா,மேகலா ஆகிய மூவரும் அருமையாக கருத்துக்களை சொன்னார்கள்.

வலையுலகில் பெண்களின் பங்களிப்பின் குறைவு பற்றியும் காரணங்கள் பற்றியும் பல முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
பெண்கள் மொக்கைப் பதிவு எழுதாத காரணம், பெண்கள் பதிவுகளே எழுதாத காரணம் என்று மொத்தமாகப் பின்னூட்டங்கள் மீது விழுந்தன.

அதற்கும் அனுபவமிக்க பதிவர்களால் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன..
ஆண்களுக்கு நிகராகப் பதிவுகளில் மொக்கை,சூர மொக்கை போடுகின்ற எங்கள் அன்புக்குரிய பல வலைதாரினிகள் பற்றி தங்கைகள் இன்னும் அறியவில்லை போலும்.

ஆனால் நிலா சொன்ன ஒருவிஷயம் நாம் அனைவரும் கவனிக்க வேண்டியது..
"பெண்கள் யாராவது எழுதவந்தால் பெண்ணியம்,பெண் விடுதலை பற்றியே எழுதவேண்டும் என்று பதிவுலகில் பெரும்பாலானோர் வலியுறுத்துகிறார்கள்;கருதுகிறார்கள்"

அவர்களை அவர்களாக இருக்கவிடுவோம்..

இடைவேளை வந்தது..

நாங்கள் நால்வர் அப்போது தான் ஒரு மதியவிருந்தை சீன உணவகத்தில் உண்டு களைத்து,கலைத்து வந்து கொஞ்சம் அசதியாக இருந்தாலும், கலகலப்பாலும் கடிகளாலும் அந்த உணவு சமித்து, மினி பசி எடுத்த நேரம் மது சகோதரர்களின் கைவண்ணத்தில் பருத்தித்துறை வடையும் (அதைப் பார்த்தால் பாதி வடையாகத் தான் தெரிந்தது),கீர்த்தியின் கைவண்ணத்தில் பயற்றம் பணியாரமும் பரிமாறப்பட்டது.

எங்களுக்குப் புளியைக் கரைத்த குளிர்பானம் கரைக்கும் கைகள்..
மு.மயூரன், சுபாங்கன், கங்கோன் கோபி..
மஞ்சள் நிறத் திராவகம்??


முன்னெச்சரிக்கையாக ஒவ்வொன்றோடு எல்லாரும் நிறுத்திக் கொண்டதால் இறுதியில் நிறைய மிஞ்சி சந்துருவும், வரோவும் பாத்திரங்களோடு அள்ளி சென்று உடலைத் தேற்ற முயற்சிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இடைவேளையின் பின்னர் பசுப்பையன் மது தமிழ்ப் பதிவர்களின் கூகிள் குழுமப் பாவனை, டிப்ஸ்,டெக்னிக்ஸ் பற்றியெல்லாம் மிக இலகுவாக விளங்கப்படுத்தினார்.
பல்வேறு ஆலோசனைகள், மேலதிக கருத்துக்கள் தொழிநுட்ப சிங்கங்கள் சிலரால் முன்வைக்கப்பட்டன.
எல்லோருக்கும் டக்கென்று விளங்கியதால் (ஹீ ஹீ) இந்தக் கலந்துரையாடல் தான் விரைவாக முடிந்த ஒன்று.

"பிரபலம் ஆனாலே இப்பிடித் தான் போட்டுத் தாக்குவாங்கள்.. நல்ல காலம் வெளிக்காயம் எதுவும் இல்லை "
அப்பள வாய் திறந்து அழகாய் சிரிக்கும் புல்லட்.


அடுத்து பலபேரும் மிக ஆவலோடும், ஒரு வகை வெறியோடும் எதிர்பார்த்த பின்னூட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்.

அனானிகளால் அதிகம் தாக்குதலுக்குள்ளான மூன்று முத்துக்களில் வேட்டைக்காரனின் தம்பி யாழ்ப்பாணம் போயிருந்ததால், மற்ற இருவரும் சொந்த சோகங்களை அனுபவங்களாகத் தந்தார்கள்.

அனானிகளாக வரும் பின்னூட்டங்களை அவை விஷம,துவேஷ,பிரசார,மற்றவரின் மீது சேறு பூசுவனவாக இல்லாவிட்டால் ஏற்றுக் கொள்கின்ற நானும் ,வெளிப்படையான இடி தாங்கியான மு.மயூரனும் ஏன் அனானிப் பின்னூட்டங்களை ஏற்கிறோம் என்று விளக்கமளித்தோம்.

பின்னூட்டங்களை ஏற்கவும், மறுக்கவும் பெயர் மட்டுமே அடிப்படையாகக் கூடாது என நிமல் அழகிய விளக்கம் தந்தார்.

மீண்டும் சஞ்சிகை&ஊடகப் பிரச்சினை ஒன்று அமுதனால் முன்னெடுக்கப்பட்டு ஹிஷாமும் நானும் அதை வெட்டிப் பேசியிருந்தோம் .. கலந்துரையாடல் தலைப்புக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லா விடயத்தை அமுதன் எடுத்திருந்தாலும் நானோ ஹிஷாமோ அதற்குப் பதில் சொல்லாமல் விடுவது ஊடகங்களில் வேலை செய்யும் எங்கள் மனங்களுக்கு இடம் கொடுக்கவில்லை.

எனினும் பெரிய வாக்குவாதமாகாமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது ஆறுதல்.

மீண்டும் நான் இன்னொரு உண்மை விளக்கம் சொல்ல விரும்பவில்லை.. விளங்குபவர்களுக்கு விளங்கும்;விளங்காதவர்களுக்கு எப்போதுமே விளங்காது.

இதற்கிடையிலும் மு.மயூரன் அடித்த ஒரு நச் பஞ்ச் - விஜய் ஒரு கோமாளி.. அதுக்காக விஜய் ஒரு நல்ல நடிகனில்லை என்று சொல்லவில்லை; நல்ல படங்களில் அவர் நடிக்கவேண்டும் என்று சொல்கிறேன்..

கூட்டம் மீண்டும் கலகலத்து அனைவரும் வரோவின் பக்கம் பார்த்தோம்.. சதீஸ் தப்பிவிட்டார்.

அதற்குப் பிறகு கொஞ்சம் கலகல போட்டியொன்றை மது ஆரம்பித்து வைத்தார். ஆறுபேர் கொண்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தாள் ஒன்றை துண்டாக்கி வளையங்கள் செய்யும் சுவாரசய போட்டி..
ஏற்கெனவே நான், புல்லட், வந்தி,ஆதிரை இருந்த எங்கள் குழுவில் எங்கிருந்தோ வந்து அசோக்கும் இணைந்து கொண்டால் எப்படி எம் குழு வெற்றி பெறும்?

நான் முதலிலேயே சொன்னேன் போட்டி வேண்டாம்;வெளியில் இருந்து ஆதரவை வெற்றி பெறும் ஒரு குழுவுக்குக் கொடுப்போம் என்று.
பொறியியல் மூளை, பொரிக்கிற வேலை என்று புல்லட்டும், மருதமூரானும் எதோ செய்ய முனைந்து கடைசியில் வந்திக்கு தாலி ஒன்று செய்து போட்டார்கள் ;)

அம்மா தந்த சட்டை.. அழகான சட்டை..
சிங்குச்சா சிங்குச்சா.. சிவப்புக் கலர் சிங்குச்சா..

அதற்குள் எதிர்கால அரசியல் தலைவர்களான நானும் அசோக்பரனும் நீண்டகால அரசியல் திட்டங்கள் சிலவற்றைப் பேசி,முடிவெடுத்து இன்னும் பத்தாண்டுகளில் செயற்குழு,பொதுக்குழு கூட்டுவதாக தீர்மானித்தோம்.. கட்டியணைத்துப் புகைப்படம் எடுப்பதாக இருந்தபோதும் நாங்கள் வளர்த்து வைத்த 'வளங்கள்' இடம் கொடுக்கவில்லை..


கிட்ட வந்தால் 'முட்ட'ப் பகை ..
அசோக் "யாராவது வம்பு பண்ணினா இப்படித் தான் சக்கையாக்கணும்"

மேலும் சில சுவாரஸ்ய விஷயங்கள் -

கடந்த முறை சந்திப்பை விட இம்முறை சந்திப்பு பல பயனுள்ள கலந்துரையாடல்களை தந்திருந்தது.

இணையத்தினூடு வந்து இணைந்திருந்தவர்களும் ஈடுப்பாட்டோடு இணைந்துகொண்டமை.

வந்தி தனது அம்மா தெரிவு செய்து தந்த சிவப்புக் கலர் ராமராஜன் சட்டை பற்றி யாரும் பெரிதாகப் பேசவில்லை எனக் கவலைப் பட்டது.

"ஹலோ என் சிவப்பு சட்டை தெரிஞ்சதா'லா' ?
நான் தான் வந்தி'லா'.."
இணையத்தில் வந்த பதிவர்களோடு பிசியாய் வந்தி..


தானே தூங்கி விழுந்துகொண்டிருந்தாலும், சளைக்காமல் அடிக்கடி எழும்பி கூட்டத்தை தனது கலகலப்பான பேச்சுக்களால் தூங்கவிடாமல் செய்வதாக புல்லட் விட்ட டூப்புக்கள்.

பதிவுலகின் உத்தியோகப் பூர்வ படப்பிடிப்பாளரான நிமல் வழமை போலவே படங்களை யாரும் நினைக்காத கோணத்தில், நிலத்தில் படுத்தும், சுவரில் தொற்றிக் கொண்டும், கதிரைகளுக்கு கீழே சாய்ந்துகொண்டும் சுட்டுத் தள்ளியது.

கூகிள் குழுமத்தில் அங்கத்தவர்கள் இருந்தும் பல பேர் வராமை ஆச்சரியம். அதுவும் ஞாயிறு இடம்பெற்றும்.

மொத்தத்தில் இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு நோக்கத்திலும் வெற்றி ஈட்டியது; அடுத்த கட்டத்துக்கான பயணத்துக்கும் தயாராகி உள்ளது.

இந்த சந்திப்பின் வெற்றிக்கு காரணமான அனைத்துப் பதிவர்கள்,திரட்டிகள்,வானொலிகள்,பத்திரிகைகளுக்கும் நன்றிகளோடு, ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

அடுத்த சந்திப்புக்கு கொஞ்சம் பெரிய இடைவெளி விட்டால் நல்லதென்று நினைக்கிறேன்,..
வேண்டுமானால் மது முன்வைத்த குழுமத்திநூடு இணைய சந்திப்பை இடையிடையே நடத்துவது பலனளிக்கும்..


எங்களைக் கட்டிப் போடுவதா? நடக்கிற காரியமா?எத்தனை ரீம் பேப்பர் ஓடர் பண்ணுவது?

மீண்டும் சந்திப்போம்..
"அது சரி மலேசியாவிலோ,மாலைதீவிலோ பதிவர் சந்திப்பு நடத்த மாட்டாங்களா? ;)"

படங்கள் உதவி - சுபாங்கன் & கோபி

Post a Comment

32Comments

Please Select Embedded Mode To show the Comment System.*