ஒரு பரபர புதிய செய்தி காதில் கிட்டியுள்ளது.. அதை உங்களோடு முதலில் பகிரா விட்டால் தூக்கமே வராது..
அந்தப் பரபர செய்தியை மட்டும் அறிய நேரே சிவப்பு எழுத்துக்களால் குறிப்பிடப்பட்ட பகுதிக்கு செல்லலாம்..
முழுக்க வாசித்து ஆறுதலாக அறிய இப்படியே வாங்க..
இன்று ட்வென்டி 20 உலகக் கிண்ணப் போட்டிகளின் இரு மிக முக்கியமான போட்டிகள்..
உங்களில் யார் யார் இரவு விழித்திருந்து போட்டி பார்ப்பீர்களோ தெரியாது..
நான் இரவு 10௦.30 க்கு ஆரம்பமாகும் இந்திய-இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியைக் கட்டாயம் பார்த்து விட்டுத் தான் மறு வேலை.
அன்றும் இப்படித்தான் இலங்கை-ஆஸ்திரேலிய போட்டியை ரொம்ப எதிர்பார்த்து, இலங்கை ஆஸ்திரேலிய விக்கெட்டுக்களை சரித்த நேரம் ஓவர் உற்சாகத்தில் ஜம்பமாக சவால் விட்டு,பிட்சா ஒன்றைப் பந்தயத்தில் இழந்து விட்டேன்.
இன்று யாராவது வந்தால் துணிந்து பந்தயத்துக்கு இறங்கப் போகிறேன்.. (யாராவது இ.வா நண்பர்கள் அகப்படுவார்களா?)
கடந்த இரு வருட காலமாக இவ்விரு அணிகளும் விளையாடும் போட்டிகளை மாறி மாறிப் பார்த்து பார்த்து போரடித்துக் கொட்டாவி விட்டிருந்தாலும் கூட - எவ்வளவு தான் விறு விறுப்பான போட்டிகள் பார்த்தாலும் எத்தனை தரம் தான் இதே அணிகளே விளையாடுவதைப் பார்ப்பது - இப்படி ஒரு தீர்க்கமான,முக்கியமான போட்டி இவ்விரு அணிகளுக்கிடையிலும் விளையாடப்படும் போது ஒரு தனி கிக் தான்..
அதிலும் வேகப் பந்து வீச்சாளர்கள் ஆசிய அணிகளின் உயிரெடுத்த பவுன்சி பயங்கர பார்படோஸ் ஆடுகளம் விட்டு நம் ஆடுகளங்களின் தன்மை கோடுள்ள செயின்ட்.லூசியா வந்தது போன உயிர் திரும்பி வந்த மகிழ்ச்சியை இரு அணிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கும்.
ஆனால் இரு அணிகளிலுமே ஒரு சில துடுப்பாட்ட வீரர்களே ஓட்டங்களை இதுவரையில் குவித்துள்ளார்கள்.
இலங்கையில் மஹேல,சங்கா.. இந்தியாவில் தோனி,ரெய்னா, ரோஹித் ஷர்மா..
இரு பக்கப் பந்துவீச்சாளர்களுமே தடுமாறுகிறார்கள்.
ஆனால் இவ்விரு அணிகளுமே இன்று வென்றால் இறுதிப் போட்டியில் எந்த அணி அகப்பட்டாலும் அடித்து நொறுக்கும் வல்லமை பெற்றவை என்பதை யாருமே மறுக்க முடியாது.
இரு அணிகளுக்குமே அரை இறுதி செல்லும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் இரண்டு அணிகளும் செல்ல முடியாது;இரண்டில் ஒன்று தான்..
ஏற்கெனவே நடப்பு சாம்பியனும்,மற்றைய ஆசிய சகபாடியுமான பாகிஸ்தான் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.எப்போதுமே 'இதோ பாகிஸ்தான் அவ்வளவு தான்' என்ற நிலையிலிருந்து தப்பித்து எல்லோரையும் அசத்துவது தமிழ்ப்பட ஹீரோக்களைப் போலவே பாகிஸ்தானுக்கும் ரொம்பவே பிடிக்கும் போல..
என்னவொரு கிரேட் எஸ்கேப்.. :)
இப்போது Group F பற்றிப் பார்த்தோமென்றால்,
ஆஸ்திரேலியா ஏற்கெனவே அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது உறுதி போலத் தென்பட்டாலும், மேற்கிந்தியத் தீவுகள் ஆஸ்திரேலியாவை மிகப்பெரிய ஓட்டங்களினாலும், இந்தியாவை இலங்கை மிகப்பெரிய ஓட்டங்களினாலும் வென்றால் ஆஸ்திரேலியாவைக் கூட வீட்டுக்கு அனுப்பலாம்..
ஆனால் இப்படிப் பேசினாலேயே எங்களை யாராவது லூசுகள் என்று சொல்லக்கூடும்.. அந்தளவு ராட்சச பலத்தோடு இருக்கிறது கிளார்க்கின் அணி.இதுவரை காலமும் அவர்கள் தொடாத ஒரே கிரிக்கெட் கிண்ணமும் அவர்கள் வசமாவது உறுதி போலத் தெரிகிறது.
இப்பிரிவில் அடுத்த கூடுதல் வாய்ப்புள்ள அணி - இலங்கை.
இன்று இந்தியாவை வெல்லவேண்டும்..அவ்வளவு தான்..
காரணம் மற்ற இரு அணிகளை விட இலங்கையின் நிகர ஓட்ட சராசரி (net run rate) உயர்வானது.
இல்லாவிடின் இந்தியாவிடம் இலங்கை தோற்றாலும் இருபது ஓட்டங்களுக்கு மிகாது தோற்றாலும்,அதே நேரம் ஆஸ்திரேலிய மேற்கிந்தியத் தீவுகளை வென்றாலும் இலங்கை அரையிறுதிக்கு தெரிவாகும்.
எனினும் இலங்கை இந்தியாவை வென்றும், மேற்கிந்தியத் தீவுகள் ஆஸ்திரேலியாவை 20 ஓட்டங்களுக்கு மேற்பட்ட எண்ணிக்கையால் வென்றால் இலங்கை வாய்ப்பை இழக்கும்.
(ஆனால் ஆஸ்திரேலியாவிடம் மண்ணின் மைந்தர்களின் பாச்சா பலிக்காது என்றே நம்புகிறேன் - ஆஸ்திரேலிய கொழுப்புத் தனமாக சில முக்கிய தலைகளுக்கு ஓய்வு கொடுக்காமலிருந்தால்)
மேற்கிந்தியத் தீவுகள் உள் நுழைவதே என்னைப் பொறுத்தவரை மிக சிரமமானது.. காரணம் அவர்கள் எப்படியாவது ஆஸ்திரேலியாவை வென்றே ஆகவேண்டும்.கெய்ல் இந்தியாவை துவம்சம் செய்தது போல ஆடினால் அல்லது ஆஸ்திரேலியா டெய்ட்,வொட்சன்,ஹசி,வோர்னர் போன்றோருக்கு ஓய்வு கொடுத்தால் இதுவும் நடக்கலாம் தான்..
இந்தியா?
இந்திய அணி தகுதி பெற வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை இன்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் குறைந்தபட்சம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இரண்டாவதாக துடுப்பெடுத்தாடினால் 2.1 முதல் 3 ஓவர்கள் மீதம் இருக்கையில் வெற்றி இலக்கை எட்ட வேண்டும்.
இது தவிர இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஆஸ்திரேலிய அணியின் வெற்றியும் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகளை வென்றால்தான் இந்தியா அரையிறுதிக்குள் நுழையும். மாறாக மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்; இந்திய அணி வெளியேறிவிடும்.
இதனால் தான் இன்று பந்தயம் என்றால் துணிவதாக உள்ளேன்.. யார் வெல்வார் என்றில்லை.. அரையிறுதி அணிகள் பற்றி.. (ஒரு தடவை பட்டுட்டோமில்ல.. மறுமுறை ரொம்பவே கவனமா இருப்போம்)
ஆனால் இன்று இலங்கையின்,இலங்கை ரசிகர்களின் கனவில் மண் அள்ளிப் போடக்கூடிய ஒருவராக, இலங்கை அணிக்குள்ளே வேண்டாத ஒருவராக இருப்பவர் இலங்கை அணியின்,ரசிகர்களின் முன்னாள் ஹீரோ சனத் ஜெயசூரிய.
இந்த 40 வயது நாயகன் இலங்கைக்கு முன்பு பெற்றுக் கொடுத்த வெற்றிகள் ஏராளம்..உலகின் அதனை முன்னணி பந்துவீச்சாளர்களையும் தன் பெயரைக் கேட்டாலே ரிட்டையர் ஆக செய்தவர்.
இன்று????
நான்கு போட்டிகளிலும் இதுவரை சோபிக்கவில்லை.இலங்கை அணிக்குள் ஒரு இறக்க முடியாத பாரமாக இருக்கிறார்.
இன்று இவரை விளையாடும் அணியில் இணைப்பார்கள் என நம்புகிறேன்.காரணம் இந்தியா எப்போதுமே ஜெயசூரிய பிரித்து மேயும் ஒரு பிரியமான அணி.
ஆனால் இப்போதிருக்கும் நிலையில் முடியுமா என்பதே கேள்வி.
ஒன்று மட்டும் புரிகிறது இன்று MP சனத் ஜெயசூரியவுக்கு வாழ்வா சாவா நிலை.
நான் கேள்விப்பட்ட பர பர செய்தியும் இவர் பற்றித் தான்..
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அமைப்பினுள் உள்ள நண்பர் ஒருவர் தந்த செய்தி..
குமார் சங்கக்கார இந்தத் தொடர் முடிந்த பின் இலங்கை வந்ததும் தலைமைப் பதவியிலிருந்து விலகப் போகிறாராம்.
சனத் ஜயசூரியவை அணிக்குள் வைத்திருக்குமாறு தொடர்ந்து வருகின்ற 'பெரிய' அழுத்தங்களே இதற்கான காரணம் என அவர் சொன்னார்.
சனத் ஜெயசூரிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பின்னரும்,அந்த சலுகைகள் கிடைத்த பின்னரும், ஒப்பந்தம் செய்யப்பட தேசிய கிரிக்கெட் வீரராகவே இருக்க விரும்புகிறாராம்.
(இதற்குப் பல காரணங்கள்)
கிரிக்கெட் சபையில் அல்லது விளையாட்டு அமைச்சில் சக்திவாய்ந்த பதவி ஒன்று தருவதாக சொன்னபோதும், அதெல்லாவற்றையும் விட விளையாடுவதிலேயே குறியாக இருக்கிறாராம்.
அநேகமாக 2011 உலகக் கிண்ணம் அவர் நோக்கமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சங்கக்கார தனது அதிருப்தியைப் பல வழிகளிலும் காட்டியும் (வரிசையில் கீழிறக்கி,பந்து வீசக் கொடுக்காமல்)சனத் மனம் மாறுவதாகவும் இல்லை;தேர்வாளர்கள் கேட்பதாகவும் இல்லையாம்.
பல இளைய வீரர்களும் சங்கா பக்கமாம்..
முக்கியமானவர்களுடன் பேசியும் (அரவிந்தவும் சங்காவின் நியாயம் பற்றி வாதிட்டுள்ளார்) பலனேதும் இல்லாததால் தான் சங்கக்கார இந்த அதிரடி முடிவை எடுக்கிறாராம்..
தலைமைப் பதவி இடைக்கால அடிப்படையில் முரளியிடம் வழங்கப்படலாம் என்றும் பின்னர் நிரந்தரத் தலைவராக கபுகெடற நியமிக்கப்படலாம் என்றும் அரசால் புரசலாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டினுள் கதைகள் உலவுதாம்.
வேறு யார் சொன்னாலும் நான் வதந்தி என ஒதுக்கி விடுவேன்..
ஆனால் இவர் ஒரு முக்கிய புள்ளி.
இவர் எனக்கு சொன்ன அத்தனை விஷயங்களும் நடந்தே இருக்கின்றன.
ஆனால் இந்த விடயம் மட்டும் பொய்த்து விடவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன்..
இல்லாவிட்டால் - ஸ்ரீ லங்கா கிரிக்கெட் - வளமான எதிர்காலம்..
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் - புதிய பரபரப்பு & இன்றைய போட்டிகள்
May 11, 2010
33