A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு

ARV Loshan
32
எனது யாழ்ப்பாணப் பயணத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்..
சில முக்கிய அடையாளங்களைப் பதிவு செய்து படப் பதிவாகத் தருகிறேன்..

எண்ணங்களை எழுத்துக்கள் சொல்வதை விடப் படங்கள் தெளிவாக சொல்லும் என நம்புகிறேன்.

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படங்களை கிளிக்குக.. 


A9 வீதி வவுனியா - பயணத்தின் ஒரு வித தொடக்கப் புள்ளி..
இலங்கையின் தற்போதைய பரபரப்பான சந்திப்புப் புள்ளி.


யுத்தம் முடிந்ததன் அடையாளம்..
ஷெல் கோதினுள் மலர்ச் செடி..
வன்னியில் இராணுவத்தினரால் நடத்தப்படும் உணவகம் ஒன்றின் வாயிலில் எடுத்தது.
எத்தனை பேரின் உயிரை இதிலிருந்து புறப்பட்ட குண்டு குடித்ததோ?



துணுக்காய் சந்தியில் காணப்படும் இடங்கள் குறித்த அடையாளப்பலகை.
பின்னால் இடிந்த கட்டடம்..

நீண்ட நெடும் வீதி.. 
எத்தனை வாகனங்கள் அங்கும் இங்கும் பயணித்தாலும் இந்த வீதியின் ஆழ்ந்த மௌனமும்,தனிமையும் எங்களுக்கும் ஆழ்ந்த ஏக்கத்தையும் பெரு மூச்சையும் தரக் கூடியவை.


இரு புறமும் குவிக்கப்பட்டுள்ள சீன,ஜப்பானிய,கொரிய உதவிகள்..???
தற்காலிக இருப்பிடங்கள் அமைப்பதற்கான கூரைகள்,சுவர்கள் என்று சொல்லப்பட்டன.
தேவையில்லாமல் இந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட முடியாது என்ற அறிவித்தல் பலகைகளையும் கண்டேன்.

மழையில் நனைந்து வெயிலில் காய்கின்றன.. இலவச உதவிகள்..



பிள்ளையாருக்கு அரோகரா.. 
முறிகண்டி ..
கோவில் சுவர்களிலும் துப்பாக்கி ரவைகள்,ஷெல்லடி அடையாளங்கள்..
பாவம்.. எல்லோரையும் காப்பாற்ற இங்கே இருக்கும் இவரை யார் அந்த வேளையில் காப்பாற்றினரோ?



யுத்தத்தின்,தாக்குதல்களின் கோரத்தை சொல்லும் குண்டும் குழியுமான வீதி..
நீண்ட வீதியின் இரு மருங்கிலும் இன்னமும் பல இடங்களில் கண்ணி வெடி அபாயமும் உள்ளது.



கிளிநொச்சி..
வீழ்ந்து கிடக்கும் பாரிய நீர்த் தாங்கி.
அழிவுகளின் அடையாளங்கள் இப்போது சுற்றுலா மையங்களாகி படங்களில் பரிதாபங்கள் தேடுகின்றன.

முல்லைத் தீவில் குண்டுகளால் கொத்துக் கொத்தாக சிதறிப்போன,சேதமுற்ற வாகனங்கள் குவியலாகக் குவிக்கப்பட்டுள்ள ஒரு வளவு..

தெளிவாகத் தெரியும் தமிழ்ப் பெயர்ப் பலகைகள்..
'த' வாகன இலக்கத் தகடுகள்..
அனைத்து வாகனங்களிலும் முக்கிய,பாவிக்கக்கூடிய பாகங்கள் இல்லை..

அநாதை வாகனங்கள்..
எம்மவர் எத்தனை சிரமப்பட்டு இந்த வாகன சொத்துக்களை வாங்கினாரோ?
உரிமையாளர்கள் எத்தனை பேர் இன்னும் உயிருடன் எஞ்சியுள்ளனரோ?



ஆனையிறவு படும் பாடு..
மாடி வீடாகிப் போன வாடி வீடு.. 


பின்னணியில் கைப்பற்றப்பட்டதன் அடையாளத்துக்காக இராணுவ வெற்றி சின்னம்..
இராணுவ பராமரிப்பில் ஆனையிறவின் உப்பளப் பகுதிகள்..


ஆனையிறவில் சூரியன் மறையும் காட்சி..
வழமையாக இரசிக்கும் உவப்பான காட்சி கூட மனதில் இறுக்கத்தையும் ஏதோ ஒரு கவலையையும் இந்த இடத்திலே தந்தது..
இரத்த சிவப்பாக வானமும்,கரு நிழல் படிந்து பூமியும்..
இருள் சூழ்கிறது..


அந்தி மறைந்து இரவு வருகிறது..
ஆனையிறவின் உப்பளப் பகுதி..
தனியாகக் கிடக்கிறது..



யாழ்ப்பாண நூலகம்.. 
எரிந்தும் மீண்டு எழுந்து நிற்கிறது..


மத்திய கல்லூரி மைதானத்திலிருந்து வெற்றி வானொலியினூடாகத்  தகவல்கள் பரிமாறும் நேரம்...


இசை நிகழ்ச்சிக்கான மேடை அமைப்பு வேலைகள் நடக்கின்றன..
யாழ்ப்பாணத்துக்கு வெற்றி..





தந்தை செல்வா நினைவுத் தூபி..
(*திருத்தத்துக்கு நன்றி சகோதரர்களே,நண்பர்களே)
இன்னும் வெண்மை மாறாமல்..
இத்தனை யுத்தங்களிலும் இது மட்டும் சேதமில்லாமல்..
உயரமாய் இன்னும் எத்தனை தூபிகளோ?


மத்திய கல்லூரி மைதானத்திலிருந்து மணிக்கூண்டு கோபுரம்..
ஒற்றையாய் தனித்து..


பிராமணாகட்டுக்குளப் புனரமைப்புக்கான நினைவுக் கல்..
புனரமைப்பு ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளாம்.. 
கீழே உள்ள படத்தில் குளத்தின் நிலை பாருங்கள்.. 
வடக்கின் வசந்தமேல்லாம் இப்படித் தான் போகப் போகுதோ?





வெற்றி Tshirt உடன் நாம் தங்கியிருந்த வீட்டின்(இப்போது விடுதி) மாமரத்தின் கீழே..
நாம் போயிருந்த நேரம் மாம்பழங்களாக இல்லாமல் காய்ப் பதத்திலேயே இருந்தபடியால்,
பழங்கள் சுவைக்கக் கிடைக்கவில்லை.
படம் மட்டுமே.. 


ஐவரில் நால்வர்.. கண்காட்சித் திடலில்.


எவ்வளவு நடந்தும் ஒன்றும் தெரியாதது போலிருக்க நல்லூர்க் கந்தனால் மட்டுமே முடிகிறது...
நல்லூர் ஆலய முன்றல்..


பண்ணைப் பாலம்..
இருபுறமும் அலை கடல்.. நடுவே ஒடுங்கிய பாதையில் தீவகம் நோக்கிய பயணம்.


யாழ் கோட்டைக்கு முன்னால்..


ஊர்காவற்றுறை நோக்கிய வழியில்..தமிழில் றையையும் யாரோ கடத்தி விட்டார்களோ?


மாலை ஐந்து மணிக்கே வெறிச்சோடியிருக்கும் ஊர்காவற்றுறை..
இங்கே தான் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் இருக்கிறார்களாமே..


இடிந்த ஒரு மிகப் பழைய கட்டடத்துக்கு முன்னால்..1800 களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட கட்டடமாம்..
சிதைவுகளின் சின்னங்கள்.

நாகதீபயவாக ஆங்கில நயினாதீவு மாறுகிறது..
படையெடுக்கிறார்கள் எம் சிங்கள சோதரர்கள்.
அங்கு சைவ ஆலயம் ஒன்றும் இன்று வரை இருக்கிறதாம்..



திரும்பி வரும் வழியில் இராணுவ நினைவு சின்னம் ஒன்று..
புலிகளின் தாங்கி ஒன்றைத் தடுத்துப் பாய்ந்து இராணுவ சிப்பாய் ஒருவர் உயிர்ப்பலி செய்த இடமாம் இது.




Post a Comment

32Comments

Please Select Embedded Mode To show the Comment System.*