T 20 உலகக் கிண்ணம் 2010- என் பார்வை
May 03, 2010
22
54 போட்டிகள் பார்த்துக் களித்த/களைத்த பிறகு மீண்டுமொரு இருபது ஓவர் கிரிக்கெட் திருவிழா கரீபியன் தீவுகளில் ஆரம்பமாகியுள்ளது.
நேரவித்தியாசம் இந்தப்போட்டிகளை எம்மை சுவாரசியமாக ரசிக்கவிடாமல் செய்கிறது. அநேக போட்டிகள் இரவு 11 மணிக்கு ஆரம்பமாகின்றன. அதிகாலை 2.30க்கும் ஆரம்பமாகின்றன.
3வது உலகக்கிண்ணப் போட்டியில் 6 போட்டிகள் இப்போது நிறைவடைந்திருக்கின்றன.
எனினும் கடந்த இரு உலகக்கிண்ணங்கள் போலல்லாமல் இம்முறை இரண்டாம் சுற்றுக்கு முன்னதாகவே முதற்சுற்றிலும் கூட விறுவிறுப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டிகள் பல அமைந்திருக்கின்றன.
காரணம் கடைநிலை அணிகள் (Minnows) கூட இம்முறை மிக மோசமான, பலவீனமான அணிகள் எனக்கருதப்பட முடியாதவை.
பங்களாதேஷ் அணி இவ்வகையான குறுகிய ஓவர்கள் போட்டிகளில் ஜாம்பவான்களையும் மண்கவ்வச் செய்யும் வல்லமை கொண்டது.
நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் கூட அஷ்ரபுல், ஷகீப் அல் ஹசன் ஆகியோர் ஆடுகளத்தில் இருந்தவரை போட்டியைத் தன் வசம் வைத்திருந்ததும், கடைசி இரு ஓவர்களிலேயே போட்டியை இழந்ததையும் நாம் ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்.
அதுபோல இந்தப்பிரிவு Aயில் கடந்த முறை பெறுபேறுகளுக்கமைய, அவுஸ்திரேலியாவே இறுதி அணியாக வகுக்கப்பட்டுள்ளது.(Seeded)
சிம்பாப்வே அணி இப்போது அசுரப்பசியோடும், அபார formஇலும் இருக்கிறது.
3 வாரங்களுக்கு முன்னரே மேற்கிந்தியத்தீவுகள் சென்று ஆடுகளங்கள், காலநிலை என்பவற்றைப் பரிச்சயப்படுத்திக்கொண்டு பெரிய அணிகளைக் காலை வாரிவிடக் காத்திருக்கிறது.
ஏற்கனவே இடம்பெற்ற இருபயிற்சி ஓட்டங்களிலும் பெருந்தலைகளான அவுஸ்திரேலியா, நடப்புச் சம்பியன் பாகிஸ்தான் ஆகியவற்றைத் தோற்கடித்து தம் வலிமையைக் காட்டியுள்ளது.
எனக்கென்னவோ இன்று இரவு இடம்பெறும் போட்டியில் இலங்கை அணியையும் சிம்பாப்வே தோற்கடித்தாலும் ஆச்சரியமில்லை என மனம் சொல்கிறது. காரணம் கரீபியன் களங்களுக்கேற்ற அணி வியூகம் இவர்களிடம் இருக்கிறது.
புதிய அணியான ஆப்கானிஸ்தானும், அயர்லாந்தும் கூட சளைத்தவையல்ல. பெரிய அணிகள் சற்றும் கவனக்குறைவாக இருந்தாலும் கவிழ்த்துவிடும் வல்லமையுடையவை.
இந்த நான்கு அணிகளுமே களத்தடுப்பில் சில பெரிய அணிகளை விடப் பல மடங்கு சிறந்தவை என்பது இன்னொரு முக்கிய விடயம்.
இப்போது வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவின்படி இந்தியா மட்டுமே உறுதியாக அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.
இம்முறை கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள (favourites) அணிகளாக முறையே அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை என்பன வரிசைப்படுத்தப்பட்டன.
அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் சரி – நிரூபித்திருக்கின்றன.
தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகியன அரையிறுதியை அண்மிக்க மட்டுமல்ல, அடுத்த சுற்றுக்குத் தெரிவாகவும் தம் அணிகளில் சில பல டிங்கரிங் வேலைகளைச் செய்யவேண்டி இருக்கும்.
மேற்கிந்தியத்தீவுகளுக்கும் தமது ஆடுகளங்களில் போட்டிகளில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் சாதகங்களாக இருந்தாலும் இவற்றை எப்படி முழுமையாகத் தமக்கு பலமாக்கிக்கொள்ளப் போகின்றார்கள் என்பது இன்றைய இங்கிலாந்துக்கெதிரான போட்டிகளிலேயே நிச்சயமாகத் தெரியும்.
பொல்லார்ட், பிராவோ, சமி, கெயில் போன்ற சகலதுறை வீரர்கள் தான் இவர்களின் துரும்புகள். ஆனாலும் மும்பை இன்டியன்ஸில் சச்சின் பொல்லார்டை நம்பிய அளவுக்கு, கெயில் நம்புகிறாரில்லை.
நியூசிலாந்து இலங்கையை வென்றிருந்தாலும் கூட, அந்த நெருக்கமான வெற்றி அவர்கள் மேல் நம்பிக்கையேற்படுத்துவதாக இல்லை.
இங்கிலாந்து 1992ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளுக்குப் பின் முதற்தடவையாக ஒரு சர்வதேசத் தொடரிலே சவால்விடக்கூடிய அணியாகத் தெரிகிறது.
துடிப்பான கொலிங்வூட்டின் தலைமையிலே ஆக்ரோஷமான, போராடக்கூடிய அணியாக இங்கிலாந்து தென்படுகிறது.
போபரா, மோர்கள், யார்டி, லம்ப் என்று புது இளரத்தம் பாய்ச்சப்பட்ட அணி அரையிறுதி நோக்கிய வாய்ப்புடையது என்றே கருதுகிறேன்.
இதுவரை நடைபெற்ற ஆறு போட்டிகளில் நான் வியந்த, ரசித்த விஷயங்கள்
சுரேஷ் ரெய்னாவின் அபார, அதிரடி சதம்.
சர்வதேச T 20 போட்டிகளில் மூன்றாவது - இந்தியர்/ஆசியர் ஒருவர் பெற்ற முதல் சதம். உலக்கிண்ணத்தில் இரண்டாவது சதம்.
ஷேன் வொட்சன், டேவிட் ஹசி, மஹேல ஜெயவர்த்தன, சல்மான் பட், இம்ரன் அக்மல், அஷ்ரபுல், ஷகிப் அல் ஹசனின் அதிரடிகள்.
ஆப்கானிஸ்தானின் நூர் அலியின் அரைச்சதம் & இந்தியப் பந்துவீச்சாளருக்கு ஸ்டனிக்சாயின் சிக்ஸர்கள்.
நேஹ்ரா, ராம்போல், அயர்லாந்தின் டொக்ரல் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு.
முதல் நாள் இரு போட்டிகளையும் தத்தம் அணிகளுக்கு வென்று கொடுத்த சகலதுறைவீரர்கள் டரன் சமி & நேதன் மக்கலம்.
மக்கலம் : 1 விக்கெட், 16 ஓட்டங்கள் & 3 பிடிகள்
சமி : 3 விக்கெட்டுகள், 30 ஓட்டங்கள & 4 பிடிகள்
இன்னும் முக்கிய சுவாரஸ்ய விடயங்கள் பல இருந்தாலும், பதிவு நீளம் கருதி பகுதி 2 இல் (இன்று மாலையே) அவை பற்றித் தருகிறேன்.
பகுதி 2 இல் - ஆசிய அணிகள் - இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் பற்றியும் அவுஸ்திரேலியா பற்றியும்-
IPLஇலிருந்து இந்த உலகக்கிண்ணம் வேறுபடுவது பற்றியும் இதன் முக்கியத்துவம் பற்றியும் பார்க்கலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் பதிவு போட்டிருக்கேன்ல-
ஒவ்வொரு வாக்கு எல்லாத் தளங்களிலும் குத்துறது-
குறைஞ்சா போயிடும்!