இலங்கையின் அண்மைக்கால வானிலை போல ஆகிவிட்டது இலங்கை கிரிக்கெட் அணி..
பின்னே.. அரையிறுதிக்குத் தேர்வாக வேண்டுமென்ற நிலையில் இந்திய அணியைத் துவம்சம் செய்த அதே இலங்கை அணியா நேற்று வின்னர் பட வடிவேலு கணக்காக இங்கிலாந்து அணியிடம் 'நீங்க எவ்வளவு அடிச்சாலும்,எப்படி அடிச்சாலும் தாங்குவோம்னே' என்று வாங்கிக் கட்டியது..
இந்த ட்வென்டி 20 உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும்போது ஆஸ்திரேலிய, தென் ஆபிரிக்க, இந்திய அணிகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வெற்றி பெறும் வாய்ப்புள்ள அணியாக இலங்கை அணியே கருதப்பட்டது.
ஆனால் இந்த நான்கு அணிகளில் இப்போது ஆஸ்திரேலியா மட்டுமே எஞ்சியுள்ளது.இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா அநேகமாக ஞாயிறன்று பார்படோசில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கும் என்பது நான் உட்படப் பலரின் எதிர்பார்ப்பும்.
வழமையாக இலங்கை அணி தோற்கும்போதெல்லாம் கவலைப்பட்டு அடுத்த நாள் முழுவதும் சோகமயமாகவோ,எரிச்சலோடோ காணப்படும் என்னை நேற்றைய அரையிறுதித் தோல்வி பெரிதாகப் பாதிக்கவில்லை..
அதற்கான காரணங்கள்....
இலங்கை அணி இந்தத் தொடர் முழுவதுமே தொடர்ச்சியாக அசத்திய அணி கிடையாது.(consistency)
நேற்றுடன் சேர்த்து விளையாடிய மொத்தப் போட்டிகள் ஆறில் மூன்றிலேயே வென்றது.
வென்றவை மூன்றுமே அபாரமான வெற்றிகளாக இருந்தாலும்,தோற்றவற்றுள் இரண்டுள் மரண அடி கிடைத்தது.
ஆஸ்திரேலிய அணிக்கெதிராக, பின்னர் நேற்று இளமையும்,உத்வேகமும் கொண்ட இங்கிலாந்துக்கெதிராக..
மறுபக்கம் இங்கிலாந்து வெல்ல வேண்டிய,இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டிய அணி.
இத் தொடரில் ஒரே ஒரு போட்டியிலேயே தோல்வி கண்டுள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் வென்ற அந்தப் போட்டியில் மழை விதி விளையாடியது.. (ஆனால் அதே மழை விதி பின்னர் இங்கிலாந்தை அயர்லாந்துக்கெதிராகக் காப்பாற்றியது தனிக்கதை)
கோளிங்வூடின் இந்த உத்வேகமான 'புதிய' இங்கிலாந்து பற்றி நான் முன்பு முன்னோட்டத்தில் சொல்லி இருப்பவற்றை மீண்டும் வாசித்துப் பாருங்கள்..
இங்கிலாந்து 1992ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளுக்குப் பின் முதற்தடவையாக ஒரு சர்வதேசத் தொடரிலே சவால்விடக்கூடிய அணியாகத் தெரிகிறது.
துடிப்பான கொலிங்வூட்டின் தலைமையிலே ஆக்ரோஷமான, போராடக்கூடிய அணியாக இங்கிலாந்து தென்படுகிறது.
போபரா, மோர்கள், யார்டி, லம்ப் என்று புது இளரத்தம் பாய்ச்சப்பட்ட அணி அரையிறுதி நோக்கிய வாய்ப்புடையது என்றே கருதுகிறேன்.
http://loshan-loshan.blogspot.com/2010/05/t-20-2010.html
சனத் ஜெயசூரிய
இலங்கை அணியினதும்,ரசிகர்களினதும் முன்னாள் ஹீரோ.. எதிரணிகளின் முன்னாள் வில்லன். இப்போது சொந்த அணியிலேயே வேண்டாத நபராக,வில்லனாக மாறி நிற்கிறார்.
இவர் நேற்றும் விளையாடியதால் கிட்டத்தட்ட இலங்கை அணி 10 வீரர்களுடனேயே விளையாடி இருந்தது.
நேற்று நான்கு பந்துகளில் ஒரு ஓட்டம் பெற்ற அவர், பந்து வீசிய ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களோடு 15 ஓட்டங்களையும் வழங்கி இருந்தார்.
இத் தொடரில் ஒரு முறை தானும் ஜெயசூரிய 6 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை.
6 இன்னிங்க்சில் 15 ஓட்டங்கள். சராசரி 3.75.
சாதனை வீரர் MP ஐயா பெற்ற ஓட்டங்களைப் பாருங்களேன்..
0 not out, 3 not out, 6, 5, 0 & 1.
Strike rate 41.66.
எப்படி இருந்தவர்.. எப்படி ஆகிவிட்டார்..
இயலாவிட்டால் இளைய வீரர்களுக்கு இடம் விட்டு ஒதுங்க வேண்டியது தானே.. ஒதுக்கவும் விடாமல் ஆளும் கட்சிப் பலம் மூலம் அரசியல்(அராஜகம்) செய்கிறார்.
சங்கக்கார பாவம்.. அவரின் தலைமையில் சனத் ஜெயசூரிய விளையாடியுள்ள 18 போட்டிகளில் பெற்றுள்ள ஓட்டங்கள் 280.சராசரி 17.50.
இதற்குள் நேற்றும் நம்ம சனத் ஐய்யா அவர்கள் ஒரு பேட்டியில் "2011 உலகக் கிண்ணம் வரை நான் விளையாட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்" என்று அரிய கருத்து உதிர்த்துள்ளார்..
அவர் ஒரு வேளை தனக்கு வாக்குப் போட்ட மாத்தறை மக்களை சொன்னாரோ?
இரண்டு மூன்று வீரர்கள் மட்டும் திறமை காட்டும் ஒரு அணி இறுதிப் போட்டிக்கு செல்வதென்பது நியாயமாகாது..
இலங்கை அணியில் மஹேல ஜெயவர்த்தன, என்ஜெலோ மத்தியூஸ்,லசித் மாலிங்க, சங்கக்கார மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக செயற்பட்டு வந்தவர்கள்..
மறுபக்கம் இங்கிலாந்தில் யார் பிரகாசிக்காதவர்கள் சொல்லுங்கள்..
புதிய வீரர்கள் லம்ப்,கீஸ்வெடர்,யார்டி ஆகியோரும் ஆடுகளத் தன்மை,ஆட்ட நிலைமை அறிந்து ஆடுகிறார்கள்.
வெற்றியின் தாகமும் இதுவரை சர்வதேசத்தில் குறிப்பிடும் படியாக ஒரு கிண்ணம் வெல்லாத ஏக்கமும்,வெறியும் அவர்களில் ஒவ்வொருவரிடமும் தெரிகிறது.
ஆசிய அணிகளிடம் உள்ள இன்னொரு குறை இலங்கை அணியிடமும் நேற்று தெரிந்தது.
தோற்று விடுவோம் என்ற எண்ணம் வந்தவுடனேயே தளர்வு,தடுமாற்றம்..
களத்தடுப்பில் சிறந்த அணி என்ற பெயரெடுத்த இலங்கை அணி நேற்று தடுமாறியது.
இறுதி வரை போராடும் எண்ணமே இல்லாமல் போகும் போக்கில் ஆட்டத்தை விட்டிருந்தது.
பரிசளிப்பின் பொது சங்கா சொன்னது போல,இவ்வாறான சூழ்நிலைகளில் தான் ஒரு அணி தன அத்தனை வலிமையையும் திரட்டி எழுந்து நின்றிருக்க வேண்டும்.
ஆடுகளத் தன்மை அறிந்து தம் வியூகங்களை மாற்றக் கூடிய ஆஸ்திரேலிய பாணி அணியாக இப்பொழுது மாறி வலிமை காட்டி நிற்கும் இங்கிலாந்து அணி இம்முறை தனது முதலாவது உலகக் கிண்ணம் வென்றாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
சுழல் பந்துவீச்சாளர்களை சுழற்றி அடிக்கும் இலங்கை அணியையும் தூக்கி சாப்பிட்டுள்ளனர் இங்கிலாந்தின் ஸ்வானும்,யார்டியும்..
இலங்கை அணியினால் வேகமாகவோ,அதிரடியாகவோ ஓட்டங்கள் பெற முடியாமல் திணறியது பரிதாபம்.
கோளிங்க்வூத் காட்டிய ஈடுபாடு.. தனது பந்து வீச்சாளர்களை மாற்றி பொருத்தமாக உபயோகித்தது போல சங்கா நடந்து கொள்ளவில்லை. முரளி இல்லாமை அவரை பெருமளவில் பாதித்துள்ளது.
நேற்று டில்ஷான் முதலாவது ஓவரில் ஐந்தே ஓட்டங்கள் கொடுத்தும்,பின்னர் அவரை உபயோகிக்காததன் மர்மம்??
இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம்..
இலங்கை அணி வெல்லும்போது அவர்களை விட அசகாய சூரர்களைப் பார்ப்பது அரிது போல் தோன்றும்.. அதே நேரம் நேற்றுப் போல அவர்கள் தோற்கும் போது இவர்களை விட மோசமாக தோற்பவர்கள் வேறு யாரும் இல்லைப் போலத் தெரியும்..
அண்ணன் (இந்தியா) வழி தானே..
தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்வதே அழகு..
இனியாவது தேர்வாளர்களும்(அவர்களும் பாவம் என்ன செய்வார்கள்.. அரசியல் கத்தி தலைக்கு மேல் தொங்கும் போது) வீரர்களும் தாம் விட்ட தவறுகளை உணர்ந்து (எத்தனை தரம் தான் நீயும் இப்படியே சொல்வாய் என்று நீங்கள் முணு முணுப்பது கேட்குது மக்கள்ஸ்) சிம்பாப்வே முக்கோணத் தொடரை வெல்ல முனைவார்களா?
இந்தியாவின் இளைய அணியும்,இளைத்துப் போன சிம்பாப்வேயும் தானே வருது என்று இளக்காரமாக இருந்தால் அவ்வளவு தான்.. அப்பி அறைந்து விட்டு ஆப்படித்து விடுவார்கள்..
இதற்கிடையில் இன்று கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு பர பர தகவல் உலவுகிறது.. உறுதிப் படுத்த முடியவில்லை..
சிம்பாப்வே சுற்றுலாவிற்கு டில்ஷான் தலைவராகவும்,மத்தியூஸ் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டிருப்பதாக..
இருக்கலாம்..
சங்கா குழுவினர் நாட்டுக்கு இன்னும் வரவில்லையே.. வந்த பிறகு நான் முன்பு சொன்னது நடக்கலாம்..
இதோ ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அரை இறுதி பார்க்க நான் ரெடி..
இன்றாவது ஒரு நல்ல போட்டியைத் தாருங்கள் வீரர்களே..
ஹலோ, எங்கே போறீங்க.. கிரிக்கெட் பார்க்கப் போக முதல், மரியாதையா பின்னூட்டம்ஸ்,வாக்குகள் போட்டிட்டுப் போங்கப்பா..
இலங்கை தோற்றது சரி தான்..
May 14, 2010
16