November 27, 2008

மீண்டும் விடியலில், மறுபடியும் வழமை..

விடுதலையான பின் இன்று தான் மீண்டும் வானொலியில் என் காலை நிகழ்ச்சியை ஆரம்பித்தேன்..

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வழமை போலவே நிகழ்ச்சியை ஆரம்பித்துக் கொண்டு செல்லவேண்டும் என்று எண்ணினாலும் கொஞ்சம் பதற்றமாகவும்,முதல் தடவை ஒலிவாங்கிக்கு முன்னால் செல்வது போலவும் உணர்ந்தேன்.

நிறைய நண்பர்களும்,நேயர்களும் நான் இனி ஒலிபரப்புப் பக்கம் தலைவைக்க மாட்டேன் என்று எண்ணியதாலேயே எனது ஓய்வு நாட்களை சீக்கிரமாகவே முடிக்கவேண்டி வந்தது. ;)
காரணம் சனிக்கிழமை நான் வீடு வந்த பின் குடும்பத்தாரோடு பெருமளவான பொழுதைக் கழித்தபோதும் , நண்பர்கள்,தெரிந்தவர்கள் வீடு வந்து சுகம் விசாரித்து சென்றபோதும் கூட பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து வந்தேன்.பழைய மனநிலைக்குத் திரும்பக் கொஞ்ச நாள் எடுக்கும் என்பதும் எனக்குத் தெரிந்தது..

எனவே அவ்வளவு விரைவில் விடியல் நிகழ்ச்சி நடத்தவும் ,அலுவலகம் செல்லவும் நான் இஷ்டப்படவில்லை.. எனினும் அலுவலக உயரதிகாரிகளின் அழைப்பும்,வீட்டில் சும்மா இருப்பதும் பல கதைகளைத் தோற்றுவிக்கும் என்ற எண்ணமுமே இன்று சரி நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து வந்தன.

நேற்றைய தினமே அலுவலகம் வந்து சகாக்களையும்,நண்பர்களையும் நலம் விசாரித்தும், எங்கள் நிறுவன உரிமையாளரைக் கண்டு பேசி,நன்றி தெரிவித்தும் தான் இன்றைய எனது கடமைப் பொறுப்பேற்பை உறுதிப்படுத்தி சென்றேன்.

எனினும் இதுவரை நான் நிகழ்ச்சிகள் செய்தபோது இல்லாத ஒரு பதற்றம் எனக்குள்.. நான் இனிமேல் வானொலியில் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பற்பல அர்த்தம் கற்பிக்கப்படும் என்பதனால் வழமை போல் நிகழ்ச்சிகளை வேகமாக,இயல்பாக வழங்க முடியாதென்பதே அதன் காரணம்.
அதுபோல ஒவ்வொரு பாடலுக்கும் என் போக்கில் நான் அடிக்கும் commentsஐயும் கொஞ்சம் குறைக்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
நான் சொல்லும் நகைச்சுவைக் கதைகளையும் இனி என்னென்ன அர்த்தத்தில் எடுப்பரோ என்றும் யோசிக்கவேண்டியுள்ளது..

இவையெல்லாம் எனக்கான தனிப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமல்ல.. என்னை சார்ந்தவர்கள்,என் நெருங்கிய நண்பர்கள்,எனது வானொலி நிலையம் என்று ஏராளமான வர்களை யோசித்தே நான் கவனமாக இருக்க முடிவெடுத்தேன்.
என் ஒருவனால் கவலைப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று ஏழு நாட்கள் தந்த அனுபவம் எப்போதுமே மறக்காது.


எனினும் இன்று காலை ஆறு மணிக்கு வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்த போதே, நூற்றுக்கணக்கான smsகள் கலையகத் தொலைபேசியை வந்து நிரப்பின. தங்கள் மகிழ்ச்சியையும் , நான் மீண்டும் வந்ததற்கு கடவுளுக்கு நன்றிகளையும் சொல்லினர்.

இந்த ஆசிகளும்,வாழ்த்துக்களும் தான் ஊடகவியலாளர்கள் எங்களை இத்தனை அல்லல்கள்,அலைச்சல்கள் மத்தியிலும் தினந்தோறும் புத்துணர்ச்சியோடும்,நம்பிக்கையோடும் எங்கள் கடமைகளில் எங்களை இன்னமுமே வைத்திருக்கின்றன.

ஒரு வாரம் எந்தத் தமிழ் பாடலும் கேட்காமல் இருந்த அந்தத் தனிமையான நாட்கள் இன்று தானாகவே ஒரு உற்சாகத்தைத் தந்தன.. அடிக்கடி நான் ஒலிபரப்பும் 'என்றென்றும் புன்னகை..' பாடலின் 'இன்று நான் மீண்டும்,மீண்டும் பிறந்தேன் ' என்ற வரிகள் போலவே..

ஆனால் விதி வலியது என்பதைப் போல இன்று காலை நான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முதலிலேயே அறிந்த துயரச் செய்தி.. மும்பை தொடர் குண்டுவெடிப்பும்,தாக்குதல்களும்..
அப்பாவி மக்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதல்கள் கவலையையும் அதிர்ச்சியையும் அளித்தன.இந்தியாவின் வர்த்தகத் தலைநகருக்குள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது மேலும் அதிர்ச்சி..

தொலைக்காட்சியில் காட்சிகளைப் பார்த்தவாறே பத்து மணி வரை அவை பற்றிய தகவல்களையும் வெற்றி நேயர்களுக்கு அறியத்தந்தேன்.நாங்கள் ஆறுதலுக்கு அழைத்த நாடே இப்போது அவதிப்பட்டு ஆறுதல் தேடி நிற்கிறது..
இது தான் தீவிரவாதம்;பயங்கரவாதம்.
புரியவேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்.

இன்றைக்குப் பிறகு மீண்டும் எனது வாழ்க்கைச் சக்கரம் அதே பாதையில் மறுபடி சுழல ஆரம்பிக்கிறது.
வானொலி,வீடு,குடும்பம்,எனது செல்ல மகன்,நண்பர்கள்,கவிதைகள்,வலைப்பதிவுகள்.. எல்லாம் அப்படியே.. என்னைப் போலவே..மாற்றம் இல்லாமல்.
++++++++++++++++++++++++++++++++++++


ஒரு விஷயம் நம் நண்பர்களுக்கு..
என் வலைப்பதிவுகள் எந்த விதத்திலும் எனக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை..என் பதிவுகள் பற்றி,பின்னூட்டங்கள் பற்றி அக்கறைப் பட்டு,கவலைப்பட்ட அன்பு நெஞ்சங்களுக்கு இது ஓரளவு ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன்..
எனினும் உங்கள் அக்கறை,ஆலோசனைகள்,அறிவுரைகளை நான் இனிவரும் காலத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++

இந்தப் பதிவை போடலாம் என்று நினைத்தவேளையில் தான் இன்னுமொரு செய்தி கிடைத்தது .. நான் சிறுவயதில் மிக நேசித்த ஒரு இந்திய அரசியல்வாதியான முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் காலமானார் என்பதே அது. இந்திய அரசியல் பற்றி ஆழமான பார்வை உடையோர் இவர் பற்றி என்ன சொல்வார்களோ தெரியாது,ஆனால் என் சிறு வயதில் மனதில் பதிந்த ஒரு விஷயம் தான் வி.பி.சிங் கொள்கைக்காகப் பதவி துறந்த ஒரு நல்ல மனிதர் என்பதும்,இருந்த அரசியல்வாதிகளில் நல்ல மனிதர் என்பதும்.. உண்மையில் இவர் மரணம் என்னைக் கொஞ்சம் கவலைப் படுத்தியது.

29 comments:

Anonymous said...

//இது தான் தீவிரவாதம்;பயங்கரவாதம்.
புரியவேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்.//

இதனை யாருக்கு சொல்கிறீர்கள்?

தமிழ் விரும்பி said...

புரியவேண்டியவர்களுக்கு. தயவு செய்து யாருடைய வாயையும் கிளறாதீர்கள் இப்படி மொக்கையான பின்னூட்டம் இட்டு. நன்றி.

உங்கள் மீள்வருகை எமக்கு மகிழ்ச்சியே. தொடருங்கள். உங்களின் பின்னால் நாங்கள்.

கார்க்கிபவா said...

நீங்கள் மீண்டு வந்த விதம் பாராட்டுக்குரியது. எல்லாம் நலமாக அமைய விழைகிறேன்

கானா பிரபா said...

விபி சிங் நான் நேசித்த ஒரே இந்திய பிரதமர், அன்னாருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

Anonymous said...

Anna i sent a wishing sms to u(to Vettriyin Vidiyal program) but it couldn't reach............
V r happy anna and v understood something from ur speach/ giving program. Continue ur work but thing b4 do everything(Small request)
Sinthu
bangladesh.

Vathees Varunan said...

வணக்கம் அண்ணா இன்று காலை வானொலியில் உங்கள் குரலை கேட்டது மகிழ்ச்சி. முடிந்தவை முடிந்தவையாகவே இருக்கட்டும் இனி சற்று சுயநலமாக உங்களுடைய வாழ்க்கையை,எதிர்காலத்தை அமையுங்கள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
உங்களுடைய உறவுகளுக்கு முன்னுரிமை அளியுங்கள்.

Anonymous said...

இன்றைய நன்நாளில் மீண்டும் உங்கள் வேலையை ஆரம்பித்ததற்க்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் நாளைய விடியல் விருது யாருக்கு? அவ்ருக்குத் தானே

Anonymous said...

Good luck brother..
We appreciate your rejoining in media.
You have joined in a GREAT day..:)

Anonymous said...

//இது தான் தீவிரவாதம்;பயங்கரவாதம்.
புரியவேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்.//

பம்பாய் தாக்குதல் செப் 11 இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலைப் போன்று, மீண்டும் உலகளாவில் பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றப் போகின்றீர்களா இல்லையா என்பதை, இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

'பயங்கரவாதம்" என்று எதை நீங்கள் கருதுகின்றீர்களோ, அது எதனால் எப்படி ஏன் உருவாகின்றது என்பதை இனம் காணவும், அதற்கு காரணமானவர்களை எதிர்த்து சமூகம் போராடதவரை இது போன்ற 'பயங்கரவாதத்தை" யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. மாறாக 'பயங்கரவாதம்" செய்யும் நபர்களை, சமூக விழிப்புணர்வற்ற நீங்கள் தான் உற்பத்தி செய்கின்றீர்கள் என்ற உண்மை, உங்களையே அழிக்கும்.


இந்த 'பயங்கரவாதம்" போட்டி போட்டு நேரடி ஓளிபரப்பு ஊடாக பரபரப்பாக்கப்பட்டு, ஊடகவியல் வியாபாரம,; விளம்பரம் ஊடாக அரங்கேறுகின்றது. பெண்ணின் சதை முதல் 'பயங்கரவாத" அவலம் வரை, பணம் பண்ணுவதற்குத் தான் ஊடகவியல் சுதந்திரம் உதவுகின்றது. சமூக விழப்புணர்வுக்காக அல்ல.


கொள்ளையடித்த நாகரீக கனவான்களால் நிதிச் சந்தையைக் குப்புறக் கவிழ்த்த போது, இதே ஊடகவியல் பீதியை விளம்பரம் செய்தது போன்று, 'பயங்கரவாதமும்" மலிவான பிரச்சாரமாக்கப்படுகின்றது.


'பயங்கரவாதம்" என்பது சாதியைப் போல் மனித பிறப்புடன் வருவதில்லை. மாறாக அவை மனித விரோதத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அப்பாவிகள் 'பயங்கரவாதிகள்" ஆக்கப்படுகின்றனர்.


அரச பயங்கரவாதமும், மனித விரோதக் கூட்டத்தின் குறுகிய நலன்களும், தான் 'பயங்கரவாதத்தை" உற்பத்தி செய்கின்றது. இந்தப் ப+மியில் சக மனிதனாக வாழமுடியாத நிலைமைதான் 'பயங்கரவாதத்தின்" வெளிப்பாடு. எப்படி மனிதன் இந்த உலகில் வாழமுடியாது அதிருப்தியுற்று தற்கொலை செய்கின்றானா, அப்படித்தான் 'பயங்கரவாதம்" எதிர் தாக்குதலாகின்றது.


சட்டம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் என்பது அனைவருக்கும் மறுக்கப்பட்டு, அது சில சமூகங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் சிறப்பாக அடைபடும் போது, அதன் எதிர்வினை தான் 'பயங்கரவாதம்". மனித அவலத்தை உருவாக்கும் காரணத்தை ஒன்று சேர்ந்து தடுக்க தயாரற்ற உங்கள் சமூகப்போக்குத் தான், தனிமனித பயங்கரவாதமாக வெடிக்கின்றது. உண்மையில் 'பயங்கரவாத" நடவடிக்கையில் ஈடுபடுபவனை விட, இதற்கான சமூகக் காரணத்தை தடுக்கத் தவறுகின்ற நீங்கள் தான் முதல் குற்றவாளிகள்.


தனக்கு இழைக்கும் கொடூமைக்கு தீர்வின்றியும், சமூகத்தின் செயலற்ற தன்மையாலும், 'பயங்கரவாதம்" சக மனிதனையே கொல்லத் தூண்டுகின்றது. மக்கள் சமூக கண்ணோட்டமின்றி, சக மனிதனை எதிரியாக பார்க்கின்ற உணர்வு, சமூகப் புறக்கணிப்புகள் மீதான பழிவாங்கும் வெறியாக மாறுகின்றது.


சமூகவிரோதமாக செயல்படும் அரசு, சமூக விரோத சித்தாந்தங்கள், அது உருவாக்கும் சமூக வடிவங்கள் 'பயங்கரவாத"த்தைத் தூண்டுகின்றது. இதை தடுத்து நிறுத்த, சமூகம் தயாராக இல்லாத நிலையில் தான், தனிநபர் பயங்கரவாதம் சமூகத்துக்கு எதிரானதாக மாறுகின்றது.


பம்பாய் தாக்குதல் கடந்த காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, இந்து பயங்கரவாதம் நடத்திய கொடூரத்தின் மொத்த விளைவாகும். இதை நீங்கள் உணர்வுப+ர்வமாக உணராத வரை, அதைத் தடுத்து நிறுத்தாதவரை 'பயங்கரவாத"த்தை நீங்கள் தான் உற்பத்தி செய்கின்றீர்கள். இந்துப் பயங்கரவாதத்தினை பாதுகாக்கும் அரசும், நீதிமன்றங்களும், முஸ்லீம் மக்களுக்கு அநீதியாகவே நடந்து வருகின்றது. இந்த சமூக அதிருப்தி பழிவாங்கும் உணர்வாக மாறுகின்றது.


ஏகாதிபத்திய அமெரிக்கா - ஜரோப்பா முதல் இந்து பயங்கரவாதம் வரை, முஸ்லீம் விரோத உணர்வுடன் அவர்களை ஒடுக்குகின்றது. இதன் பதிலடி தான் 'பயங்கரவாத" மாக உலகளவில் மாறுகின்றது.


இப்படி ஆளும் வர்க்கங்களால் தான் 'பயங்கரவாதம்" உற்பத்தி செய்யப்படுகின்றது. அரசுகள், நீதி மன்றங்கள், சமூக சிந்தனை முறைகள், இழிவான மனித விரோதப் போக்கின் எதிர்வினைகள் 'பயங்கரவாத" தாக்குதலாகின்றது.


மக்கள் விரோதப் போக்குகளை மக்கள் தடுத்து நிறுத்தாத வரை, 'பயங்கரவாதத்" தாக்குதல்கள் வேறு வழியின்றி ஆயிரம் ஆயிரமாகவே தொடரும். வேறு வழியில் அவர்கள் தம் நீதியைப் பெறமுடியாது என்று நம்புகின்ற தனிநபர்களின் அராஜக சிந்தனை முறையின்; எதிர்வினை, 'பயங்கரவாதத்தைத்"தான் தன் சொந்த தீர்வாக காண்கின்றது.


இதைத் தடுத்து தீர்வு வழங்கவேண்டியது நாங்கள் தான். மௌனமாக அவர்களை ஒடுக்க உதவுகின்றோம் என்ற குற்றவுணர்வுடன், இதை பொறுப்பேற்க வேண்டும். சக மனிதன் ஒடுக்கப்படமால் இருக்க, நாம் போராடுவதன் மூலம் தான் 'பயங்கரவாதத்தை" நிறுத்தமுடியும்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4504:-q-&catid=74:2008

Thamira said...

'என்றென்றும் புன்னகை..' பாடலின் 'இன்று நான் மீண்டும்,மீண்டும் பிறந்தேன் // இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். விரைந்து மீண்டு வந்தமைக்கு வாழ்த்துகள் லோஷன்.!

Anonymous said...

மீண்டும் பதிவோடு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. பாதுகாப்பாக இருங்க..

Gajen said...

வாழ்த்துக்கள் அண்ணா!விடியல் நிகழ்ச்சியை அடிக்கடி கேட்க முடியாவிட்டாலும் மீண்டும் நீங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மகிழ்ச்சியே.

kuma36 said...

///புத்துணர்ச்சியோடும்,நம்பிக்கையோடும் எங்கள் கடமைகளில் எங்களை இன்னமுமே வைத்திருக்கின்றன//
அதுபோல்
உங்களுடைய வார்த்தைகளும் தான் எங்களையும் புத்துணர்ச்சி செய்கின்றன லோஷன் அண்ணா."எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவலை அடைந்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்சியும் அடைந்தாச்சி"
(உங்கள் பிரிவும் மிள்வருகையும்)

Anonymous said...

வணக்கம் அண்ணா, நீங்கள் தொடருவது எங்களுக்கு மகிழ்ச்சியே, இங்கிருந்து விடியலை கேட்க முடியவில்லை என்றாலும் உங்கள் எழுத்துக்களை வாசிக்க முடிகின்றமை மிகவும் மகிழ்ச்சி,

RJ Dyena said...

VERY HAPPY TO SEE & HEAR U BACK.....
OUR WISHES R ALWAYS WITH U ANNA........

நிரூஜா said...

மிக்க மகிழ்ச்சி அண்ணா...
என்ட தொலைபேசியை தொலைத்துவிட்டேன்....
அதனால் விடியல் கேட்க முடியவில்லை.
நான் phoneல் தான் வானெலி கேட்பேன். நாளை மறக்காமல் உங்கள் குரலை கேட்பேன். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஒரு விஷயம் நம் நண்பர்களுக்கு..
என் வலைப்பதிவுகள் எந்த விதத்திலும் எனக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை..என் பதிவுகள் பற்றி,பின்னூட்டங்கள் பற்றி அக்கறைப் பட்டு,கவலைப்பட்ட அன்பு நெஞ்சங்களுக்கு இது ஓரளவு ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன்..
எனினும் உங்கள் அக்கறை,ஆலோசனைகள்,அறிவுரைகளை நான் இனிவரும் காலத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்.

ZIYAROOUN said...

Do ur usual work.dont afraid we always with u.forget everything ok.forgetting is the best element that gives by the god to the people.live for today. forget past&future.(Live for us also)

Anonymous said...

லோசன் இல்லாத விடியல் விடியலாகவே இல்லை
மீண்டும் வந்தமைக்கு நன்றிகள் பல

Anonymous said...

//ஆனால் விதி வலியது என்பதைப் போல இன்று காலை நான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முதலிலேயே அறிந்த துயரச் செய்தி.. மும்பை தொடர் குண்டுவெடிப்பும்,தாக்குதல்களும்..
அப்பாவி மக்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதல்கள் கவலையையும் அதிர்ச்சியையும் அளித்தன.இந்தியாவின் வர்த்தகத் தலைநகருக்குள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது மேலும் அதிர்ச்சி..//

பத்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் வாழும் கொழும்பு நகரத்தில் தீவிரவாதிகள் நுழைந்து மத்திய வங்கிக்கு குண்டு வைத்ததில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இறந்ததையும், தீவிரவாதிகள் சிலரை பணயக் கைதிகளாக வைத்திருந்ததையும் நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லையா? கொழும்பில் நடக்கும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உங்கள் உறவினர்களோ, அல்லது நீங்கள் கூட அகப்பட்டு கொல்லப்படும் சாத்தியம் உண்டு. ஒரு நிமிஷம் நினைத்தாலே பயமாக இல்லை? இலங்கை காலியில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் கடல் மார்க்கமாக வந்தது போல இன்று இந்தியா மும்பையில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் கடல் மார்க்கமாக வந்துள்ளனர். இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகின்றது? நேற்று இலங்கை, இன்று இந்தியா. இந்திய தீவிரவாதிகள் இலங்கையில் நடப்பதைப் பார்த்து கற்றுக் கொள்கிறார்கள்.
இந்த விடயத்தை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்திய அரசாங்கம் கவனித்து வருகின்றது. அதனால் தான் தீவிரவாதத்தை அடக்குவதற்காக இந்தியா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்கின்றது. இலங்கை அரசாங்கம் தனது அனுபவங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்கின்றது. நிலைமை இப்படி இருக்க நீங்கள் இந்திய அரசாங்கத்திற்கு கவலை தெரிவிப்பதைப் போல மகிந்தாவும் கவலை தெரிவித்துள்ளார். அது எப்படி? மற்ற நேரங்களில் எல்லாம் இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் நீங்கள் இந்த விஷயத்தில் ஒத்துப் போகின்றீர்கள்? இலங்கை அரசாங்கமோ இந்திய அரசாங்கமோ தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இரண்டு நாடுகளும் சிறுபான்மை இனங்களுக்கு உரிமை கொடுக்க மறுத்து இராணுவத்தை கொண்டு அடக்கப் பார்க்கின்றன. தீவிரவாதத்தை அடக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. ஆனால் நீங்கள் மட்டும் ஒரே பிரச்சினையில் இலங்கை அரசுக்கு ஒரு கதை சொல்கிறீர்கள். இந்திய அரசுக்கு வேறு கதை சொல்கிறீர்கள்.
மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீடியாவுக்கு கொடுத்த அறிக்கையை நீங்கள் படிக்கவில்லையா? குஜராத் கலவரத்தில் முஸ்லீம் மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டதையும், பல அப்பாவி முஸ்லீம் மக்கள் இந்திய சிறைகளில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்களே. கொழும்பிலே குண்டு வைக்கும் தீவிரவாதிகளும் இது போன்ற காரணங்களை தானே மீடியாவுக்கு கொடுக்கிறார்கள்? இது உங்கள் கண்களுக்கு தெரியவில்லயா? கொழும்பு கலவரத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பிறகு தான் இலங்கையில் தமிழ் தீவிரவாதம் உருவாகியது. அதே போல குஜராத் கலவரத்தில் முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்ட பிறகு தான் இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகியது. இலங்கையில் தமிழ் தீவிரவாதம் சரியென்றும், இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் பிழை என்றும் நீங்கள் சொல்ல முடியாது. அது நீதியானது அல்ல. நீங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டும் அரசாங்கத்தின் பக்கம் அல்ல. இந்திய இராணுவம் காஷ்மீரில் அப்பாவி காஷ்மீர் மக்களை பெண்களை குழந்தைகளை கொன்று குவிக்கவில்லையா? பெண்களை மானபங்கப் படுத்தவில்லையா? வீடுகளை குண்டு போட்டு அழிக்கவில்லையா? அது எப்படி இலங்கை அரசு தமிழ் மக்கள் அழிக்கிறது என்று கண்ணீர் வடிக்கும் ஒருவர் காஷ்மீர் மக்களை அழிக்கும் இந்திய அரசுக்கு அனுதாபம் தெரிவிக்கலாம்? தமிழர்கள் மட்டும் தானா உங்கள் கண்களுக்கு அப்பாவி மக்களாக தெரிகிறார்கள்?

Anonymous said...

வணக்கம் லோஷன் அண்ணா!
தாங்களின் நிலைப்பாட்டை அறிந்தேன். நலம் விசாரிக்கதான் விருப்பம் என்னசெய்வது பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்புகொள்ளமுடியவில்லை. என்றாலும் உங்கள் மீதுள்ள நம்பிக்கை என்றுமே இருக்கும்.
நேற்றைய விடியல் நிகழ்ச்சியை கேட்கும் போது ஒரு உற்சாகம் எனக்குள்ளேயே பிறந்தது என்றாலும் அண்ணா உங்கள் குரல் ஒவ்வொரு வார்த்தைகளையும் அளந்தளந்து பேசுவது மிகத்தெளிவாகத் தெரிகிறது. முன்னைய சந்தோஷ விடியல் நேற்றைய பொழுதில் காணவில்லையென்றே கூறவேண்டும்.
மீண்டும் வானொலித்துறைக்கு வருவீர்கள் என்று நினைக்கவில்லை. மீண்டும் வந்ததிற்கு இருகரங்களையும் கூப்பி வரவேற்கின்றேன்.

கே.ரி.சாரங்கன்

Anonymous said...

திரு.லோஷன் அவர்களே.. இந்த அனானி (சாரங்கனுக்கு முதலில் உள்ளவர்) உங்கள் பதிவுகள் பலவற்றிலும் தனித்துத் தெரியும் ஒரு அன்பர் என்று அவரது எழுது நடையை வைத்து நான் ஊகிக்கிறேன்.. நான்கு எழுத்துப் பெயர் உடையவர்,???

உங்கள் இலக்கு மனப்பான்மையை தனக்கு சாதகமாக்குகிறார்.இந்தியர்களாகிய எமக்கு புரிந்தது கூட இவருக்குப் புரியவில்லையே..

இந்தியாவில் ஒருபோதும் அரசு சிறுபான்மையரான முஸ்லிம்களை துன்புருத்தவில்லையே.. ஆனால் உங்கள் இலங்கையில் என்ன நடக்கிறது???

அன்பரே அனானி.. தயவு செய்து வித்தியாசங்களை உணருங்கள்..
உங்க மரமண்டையைக் கொஞ்சமாவது யூஸ் பண்ணி,இந்தப் பதிவுப் பக்கம் போய்ப் பாருங்க..

http://thamilar.blogspot.com/2008/11/blog-post_27.html

மதுரை புருஷோத்தமன்

Anonymous said...

//இது தான் தீவிரவாதம்;பயங்கரவாதம்.
புரியவேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்.//

அது உங்கள் பார்வையில். அது போல் தான் மற்றவர்கள் பார்வையில் நீங்கள் "பயங்கர வாதமாக கருதாததும்

அது எப்படி இலங்கை அரசு தமிழ் மக்கள் அழிக்கிறது என்று கண்ணீர் வடிக்கும் ஒருவர் காஷ்மீர் மக்களை அழிக்கும் இந்திய அரசுக்கு அனுதாபம் தெரிவிக்கலாம்? தமிழர்கள் மட்டும் தானா உங்கள் கண்களுக்கு அப்பாவி மக்களாக தெரிகிறார்கள்?

//இந்தியாவில் ஒருபோதும் அரசு சிறுபான்மையரான முஸ்லிம்களை துன்புருத்தவில்லையே.. //

எந்த உலகத்துல இருக்கீங்க.. மப்பிலையா?

நிரூபிக்கணுமா?

அன்பரே மதுரை புருஷோத்தமன்
.. தயவு செய்து உணருங்கள்..
உங்க மரமண்டையைக் கொஞ்சமாவது யூஸ் பண்ணி,இந்தப் பதிவுப் பக்கம் போய்ப் பாருங்க..
http://www.tntj.net/Video/Muslimgalukku_Ilaikkapadum_thodar_Anithi.asp

இந்தியர்களாகிய எமக்கு புரிந்தது...
Its great joke...

http://www.tntj.net/Mag/Unarvu/13_11/Index.htm

refer page 12

இலங்கையில் என்ன நடக்கிறதென்று எத்தனை இந்தியர்கல்க்கு தெரியும்?

ஆனந்த விகடன் இல் ஒரு துணுக்கு செய்தி
இருந்த படியே (எழுத்து, கருத்து பிழைகளுடன்..)

இலங்கையில் சப்பாத்திகள் என்றால் காலணி என்று பொருள்

Anonymous said...

//இந்தியாவில் ஒருபோதும் அரசு சிறுபான்மையரான முஸ்லிம்களை துன்புருத்தவில்லையே.. ஆனால் உங்கள் இலங்கையில் என்ன நடக்கிறது???//

இவரைப் போன்ற ஆட்களை நம்ப முடியாது. கொஞ்சம் லேட்டாக வந்து இலங்கை அரசு தமிழ் மக்களை துன்புருத்தவில்லையே என்று சொல்வார். குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட இந்து காடையர்கள் மீது இந்திய அரசு எப்போதாவது நடவடிக்கை எடுத்ததா? காஷ்மீர் மக்களை கொன்று குவிக்கும் அரசபயங்கரவாதிகள் யாராவது சட்டத்தால் தண்டிக்கப் பட்டிருக்கிறார்களா? இதைவிட அவ்வப்போது நடக்கும் குண்டுவெடிப்புகளை காரணமாக காட்டி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம் மக்களை விசாரணயின்றி வருடக்கணக்காக சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். நமது அன்புக்குரிய பதிவர் லோஷன் கூட அதுபோன்ற குற்றச் சாட்டில் தான் தடுத்து வைக்கப்பட்டதாக புதினம், லங்கா சிறி போன்ற இணையத்தளங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம். மதுரை புருஷோத்தமன் அவர்களே உங்களது கருத்து நண்பர் லோஷனையும் பாதிக்கிறது என்பதை கவனத்தில் எடுக்கவும்.

Anonymous said...

//பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்க மத்திய விசாரணை அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுவது அவசியம் என்றும் தற்போதுள்ள தேசிய பாதுகாப்புச் சட்ட விதிகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.// பிபிசி செய்தி

தலைவருக்கு நேரம் சரியில்லப் போலக் கிடக்கு. இல்லாட்டா அவர் இந்தியாவின்ர தயவைக் கேட்கிற நேரம் பார்த்து அங்க இந்தியாவில தாக்குதல் நடக்க வேணுமே?

தென்னாசிய பிராந்தியத்தில பயங்கரவாதத்த அடக்க இனித்தான் இந்தியா தன்ர வல்லரசு ஜாம்பவான் தனத்த காட்டப் போகுது. பொறுத்திருந்து பாருங்கோ. எல்லாம் விளங்கும்.

Anonymous said...

இலங்கைத் தமிழர்களைக் காக்க இந்தியா ராணுவத்தை அனுப்புமா?

ஏன், ஈழத்தமிழர்கள் ஒருமுறை பட்டது போதாதா?

குமுதம் 30/11/2008

இந்திய ராணுவம் பற்றி இந்திய பத்திரிகையின் வாக்கு மூலம் !!

சர்வதேச ரீதியாக அட்டவடி செய்தவர்கள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருப்பார்கள்?

Anonymous said...

NDTV, CNN IBN எல்லாம் பொறுப்பா நடக்க வேண்டிய நேரம் இது. எந்த 'ரத்தக் கொதிப்பு' அரைவேக்காடுகளையும் பேட்டி எல்லாம் எடுத்து போடக் கூடாது. ஏதோ ஒரு நடிகை, தன் வீட்டருகே இருக்கும், இஸ்லாமியர்களை குற்றம் சுமத்தினாராம். அவங்க வீட்ல எல்லாம், பாக்கிஸ்தான் கொடி பறக்க விட்டிருக்காங்களாம்.
அடக் கொடுமையே, இஸ்லாமியர்கள், தங்கள் வீடுகளிலும், மசூதியிலும், ஏற்றி வைத்துள்ள பச்சைக் கொடியை, பாக்கி கொடின்னு நெனச்சுக்கிட்டு, அந்த நடிகை லூஸ் மாதிரி பெனாத்துவதெல்லாம், டெலிகாஸ்ட் செய்யக் கூடாதோ?


அத்வானி வகையராக்கள், ஒரு மேட்டர் கிடைத்ததே என்று, வாயில் வருவதையெல்லாம் பினாத்துவதும், சகிக்கலை. பேச்சுவார்த்தை எல்லாம் பத்தாதாம். அதையும் தாண்டி ஏதாவது செய்யணுமாம். எல்லாம் ரைட்டுதான். நீங்களும் ஆட்சியில் இருந்தீங்களே சாரே, அப்பவே எல்லாத்தையும் முறி அடிச்சிருந்தீங்கன்னா இப்ப ப்ரச்சனையே இருந்திருக்காதே. தேவையில்லாம ஒரு மசூதியை இடிச்சு, ஒரு சில அல்ப ஆதாயங்களுக்காக, பல லட்சம் ப்ரச்சனைகளை, நிமிண்டி விட்ட கட்சிதான உங்களது?
இன்னொரு பக்கம், சங் பரிவாரும், இந்துத்வா தீவிரவாதமும் வளர்ந்து வருகிறது. இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியலன்னா, வருங்கால இந்தியா இன்னொரு ஆப்கானிஸ்தானாக முடியும் அபாயம் இருக்கு.
அரசியல் தலைகளே, எங்க பணத்தை கொள்ளை அடிங்க. நாட்டுக்கு ஒரு மண்ணாங்கட்டி நல்லதும் பெருசா செஞ்சு தியாகிகள் எல்லாம் ஆக வேணாம். ஆனா, இந்த விஷங்களை எல்லாம், இரு தரப்பிலும் வளர விடாமல், நசுக்கி மிதித்து பொசுக்கி விடுங்கள்.
'எதிர்கால' இந்தியா பத்தி, 'பகீர்'னு, நெஞ்சடைக்கும் பயம், அப்பப்ப வருதா உங்களுக்கும்?

Anonymous said...

கொழும்பு நகரில் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டால் அப்போதும் இப்படி சொல்ல வேண்டும்.

//இது தான் தீவிரவாதம்;பயங்கரவாதம்.
புரியவேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும்.//

SurveySan said...

வானொலியில் பாட்டை ஒலிபரப்ப, ஏதாவது ஸ்பெஷல் லைஸென்ஸ் வாங்கணுமா?
இதை விளக்கி ஒரு பதிவு போடுங்களேன். நன்னி!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner