ஆபிரிக்கப் பின்னணியுடன் சாதாரண நடுத்தர வாழ்வு வாழ்ந்த ஒரு வழக்கறிஞர் இன்று உலகின் மிகப் பெரும் வல்லரசின் முதல் குடிமகன்.
முன்னொரு காலத்தில் அடிமைகளாகக் கருதி சிறுமைப்படுத்தி, கொடுமைப்படுத்திய இனத்திலிருந்து (இன்று வரை கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காகப் போராடும் ஜெஸி ஜக்ஸன் போன்றவர்கள் இருக்கின்றார்கள்) பெரும்பான்மையினரான வெள்ளையர் பலபேரின் வாக்குகளோடும் அமெரிக்கத் தலைவனாகியுள்ளார்.
சர்வதேச பொலிஸ்காரன் என்று சகலநாடுகளின் விடயங்களிலும் மூக்கை நுழைத்து அடாவடி அமெரிக்கா ஒபாமாவின் வெற்றி மூலம் நல்ல பெயரை சம்பாதித்துள்ளது.
விளையாட்டுக்களில் வெற்றிகளையும் பதக்கங்களையும் குவிக்க மட்டுமல்ல; வேலைத்தளங்களில் கடினவேலை செய்யமட்டுமல்ல ; போர்க்களங்களில் இரத்தம் சிந்த மட்டுமல்ல ; தமது நாட்டை வழிநடத்த தலைவனாகவும் சிறுபான்மையினரில் ஒருவரான கறுப்பர் ஒருவரைத் தம்மால் தெரிவுசெய்ய முடியும் என்பதைப் பறைசாற்றியுள்ளனர்.
உண்மையிலேயே ஜனநாயகம் மீது பற்றுக்கொண்ட நாடு அமெரிக்கா என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சிவேண்டும்?
அதுசரி இந்தியா என்ற மிகப் பெரியநாட்டில் ஒரு சீக்கியர்,ஒரு ஆந்திரர்,ஒரு வடநாட்டவர் என்று யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம்...(வெளிநாட்டுப் பெண் என்றால் மட்டும் கொஞ்சம் சிக்கல்!!!) எந்த இனத்தவரானாலும் இந்தியாவின் முதல் குடிமகனாகலாம் (ஒரு தமிழர் - இஸ்லாமியர் கூட )
அமெரிக்காவிலே ஒரு கறுப்பினத்தவரால் முடிந்திருக்கிறது.
ஆனால்
இலங்கையில் மட்டும் சிங்கள பௌத்தராக இருந்தால் மட்டுமே ஜனாதிபதியாகலாம். ஜே ஆர் ஜயவர்த்தனா முதல் இன்றுள்ளவர் வரை பலபேர் உண்மையில் கிறிஸ்துவ மதத்தினராக இருந்தாலும் அவையெல்லாவற்றையும் மறைத்து பூந்தட்டு ஏந்தி, போதி (அரசமரம்) வழிபாடு செய்து ஜனாதிபதி ஆனது தனிக்கதை.
எனினும்,எந்த அரசினதும் அரசு கட்டில்களைத் தாங்கி நிற்கும் சிறுபான்மையினர் யாருக்கும் (தமிழரோ, முஸ்லிமோ) பிரதமர் பதவி கூடக் கிடையாது இலங்கையிலே!
1977இல் தமிழ்பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கின் அமோக வாக்குகளோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும், எதிர்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டதும் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தனாவின் கண்களை உறுத்தின.
அதன்பின்னர் உருவாக்கப்பட்ட யாப்பின் பிரகாரம் தான் இந்த சிங்கள பௌத்தரல்லாதோர் ஜனாதிபதியாக மாற முடியாத நிலை விகிதாச்சாரத் தேர்தல் முறை மூலமும் சிறுபான்மைக்கட்சி எதுவுமே எதிர்க்கட்சி ஆகவும் முடியாது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வந்தாலே யாப்பு மாற்றப்படலாம். எந்தப் பேரினவாதி தான் சிறுபான்மையை ஸ்ரீலங்காவில் தலை தூக்கி விடுவான்? இதேவேளை நேற்று அமெரிக்காவில் ஒபாமா வென்றது கொழும்பில் பல சிங்கள நண்பர்களுக்கு பிடிக்கவில்லை.
ஏதோ தமிழ்ப்புலியொன்று வெற்றி பெற்று விட்டதாகவோ அல்லது பராக் ஹூசைன் ஒபாமா என்ற முஸ்லீம் தமது உரிமைகளை எடுத்துவிட்டார் என்ற எரிவு!
மக்கெயின் வென்றிருந்தால் மகிந்தவே அமெரிக்கா ஜனாதிபதி ஆனது போல ஆடியிருப்பார்கள்...