குறி வைக்கப்படுகிறார் டிராவிட் ???

ARV Loshan
5


அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் தரையிறங்கிய போதே இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை விடவும் போர்டர் - கவாஸ்கர் கிண்ணம் யாரிடம் செல்லும் என்பதை விடவும் இந்தத் தொடரின் போதோ தொடரின் பிறகோ இந்திய அணியிலிருந்து யார் யார் ஒய்வு பெறுவார்கள் என்பதே அநேகரின் கேள்வியாக இருந்தது.

இந்த ஐந்து வயது மூத்த வீரர்களாலும் இந்திய அணி வயது முதிர்ந்த தோற்றம் உள்ளது போல காணப் படுவதாகவும், களத் தடுப்பு சோர்ந்து போனதாகவும் பல விமர்சனங்கள் எழுந்தது. இந்தக் குற்றச் சாட்டுக்கள் உண்மையாக இருந்த போதிலும் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக இவர்களின் (ஒரு சிலரை விட) அனுபவம் அதிகமாகவே கை கொடுத்து என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 Fab 5 என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்திய அணியின் பஞ்சபாண்டவர்களில் யார் முதலில் என்ற கேள்வி ஊடகங்களாலும் விமர்கர்களாலும் மீண்டும் மீண்டும் முன் வைக்கப்பட்டபோது இதற்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற தொடரில் பெரிதாக பிரகாசிக்காத டிராவிட்,சச்சின் இருவரின் மீதே அதிக அழுத்தங்கள் இருந்தன.

எனினும் தெரிவாளர்கள் (வெங்சர்க்கர் தலைமையிலான பழைய குழு)முதலில் கை வைத்தது சௌரவ் கங்குலியில். தலைமைப் பதவி போன பிறகு அடிக்கடி அணியிலிருந்து தூக்கப்பட்ட அனுபவம் உடையவர் வங்காளச் சிங்கம்! பொறுத்தது போதும் என்று முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முதல் நாளே தனது ஒய்வு பற்றி அறிவித்தார்.

'பின் தலையில் வைக்கப்படும் துப்பாக்கியுடன் எவ்வளவு நாள் தான் விளையாட முடியும்'- கங்குலி.

டெஸ்ட் தொடர் ஆரம்பித்தது! 
அணித்தலைவர் கும்ப்ளே தடுமாறினார். இலங்கையில் கண்ட டெஸ்ட் தொடர் தோல்வி;; விக்கட் எதுவுமேயற்ற முதலாவது டெஸ்ட் போட்டி (பெங்களுரில் கும்ப்ளேயின் சொந்த ஊரில்) தொடர்ந்து காயம் காரணமாக கும்ப்ளே விலகல்;; தோனியின் ஆக்ரோஷமான தலைமையில் இந்தியா அபாரவெற்றி!அதிலும் கும்ப்ளேக்குப் பதிலாக இந்திய அணியில் இணைந்த சுழல்பந்து வீச்சாளர் மிஷ்ரா கைப்பற்றிய ஏழு விக்கட்டுக்களுடன் கும்ப்ளே தனது ஒய்வு பற்றித் தீர்மானித்திருக்க வேண்டும்.

மிக நாகரிகமாக தனது ஓய்வைக் கும்ப்ளே அறிவித்தார்.
இந்தியக் கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல டோனி இருக்கிறார் என்று அறிவித்து கும்ப்ளே விடை பெற்றார். 
 
எனது வலைத் தளத்திலே நான் கேட்டது போல அடுத்து யார் என்ற கேள்விக்கு (இந்தக் கருத்துக் கணிப்புப் படியே கும்ப்ளே ஏனையோருக்கு முதலில் ஓய்வு பெற்றார்)நமது அன்பர்கள் சரியாகவே சொல்லி இருக்கிறார்கள்.

எஞ்சியுள்ள மூவரில் யார் அடுத்தது என்ற கேள்வி தான் இப்போது எல்லா கிரிக்கெட் ரசிகருக்கும் உள்ள முக்கிய கேள்வி..

இளைய வீரர்கள் பல பேரும் கதவு தட்டிக் கொண்டிருக்கும் வேளையில், தம்மீதான விமர்சனங்களை துடுப்பின் மூலம் பதில் சொல்லி இப்போதைக்கு தாம் விலகவும் தேவையில்லை;தம்மை யாரும் விலக்கவும் முடியாது என்று சொல்லி காட்டியிருக்கிறார்கள் சச்சின் டெண்டுல்கரும், V.V.S.லக்ஸ்மணும்.

சச்சினின் உலக சாதனையும்,இந்தத் தொடரில் இதுவரை அவர் பெற்றுள்ள ஓட்டங்களும் சச்சின் இப்போதைக்கு ஓய்வு பெறத் தேவையில்லை என வலியுறுத்துகின்றன. 
(55.00 என்ற சராசரியில் 275 ஓட்டங்கள்; இரு அரைச் சதங்கள்)

லக்ஸ்மன் இன்னும் ஒரு படி மேலே .. சச்சினை விட முழுமையான formஇல் இருக்கிறார்.டெல்லி டெஸ்டில் முதல் இன்னிங்க்சில் இரட்டை சதம்;இரண்டாவது இன்னிங்க்சில் அரைச் சதம்.  
தொடரில் 156.50என்ற அபார சராசரியில் 313ஓட்டங்கள்;கம்பீருக்கு அடுத்தபடியாக கூடுதல் ஓட்டங்களைக் குவித்துள்ளவர் இவரே. மிக லாவகமாக விளையாடிவரும் லக்ஸ்மன் இப்போதிருக்கும் நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு அத்தியாவசியத் தேவை.


எனவே அடுத்தவர் இந்தியாவின் பெரும் சுவர் (The Wall) என்று அழைக்கப்படும் டிராவிட். எப்போதும் இதியாவின் துடுப்பாட்ட முதுகெலும்பாகக் கருதப்படும் டிராவிட் இப்போது இறங்குமுகத்தில்.
                     
இலங்கையில் வைத்து ஒரே அரைச் சதத்துடன் என்ற 24.66சராசரியில் 6 இன்னிங்க்சில் 148 ஓட்டங்களைப் பெற்றவர்,இந்தத் தொடரிலும் பிரகாசிக்கவில்லை.இதுவரை 5 இன்னிங்க்சில் 117 ஓட்டங்களையே பெற்றிருக்கிறார். அதுவும் மிகத் தடுமாறியே ஆடி வருகிறார்.
களத் தடுப்பிலும் முன்னைய உற்சாகம் இல்லை. 
 ஏற்கெனவே இளம் வீரர்கள் பல பேர் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நேரம் ஒவ்வொரு சொதப்புகிற போட்டியுமே கழுத்தில் தேடிக் கொள்கிற மரண முடிச்சுகளாக மாறிவிடும் அபாயம் உண்டு. 
பத்ரிநாத்,ரோகித் ஷர்மா,யுவராஜ்,கைப் ஆகியோரில் எல்லோருமே மத்திய வரிசை துடுப்பாட்ட வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.கிடைத்த போட்டிகளிலெல்லாம் வெளுத்து வாங்கி இருக்கின்றார்கள்.

ஒரு பக்கம் கங்குலி,கும்ப்ளே ஆகியோரின் ஓய்வு கொடுத்திருக்கும் அழுத்தம்;மறு பக்கம் தொடர்ந்துவரும் மோசமான பெறுபேறுகள்.
தேர்வாளர்கள் இன்னுமெவ்வளவு காலம் பொறுமை வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. 

எனவே டிராவிட் ஓய்வு பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

ஒன்றில் தானாக கௌரவமாக அவர் தனது ஓய்வை அறிவிப்பார்.அல்லது ஸ்ரீக்காந்த் உள்ளிட்ட தேர்வாளர்களின் ஆலோசனையின் பேரில் (நிர்பந்தம் என்றும் சொல்லலாம்) இந்தத் தொடரின் முடிவில் அறிவிக்கலாம் என்று கருதுகிறேன்.

நாளை நாக்பூரில் ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டியில் டிராவிட் விளையாடுவது உறுதி.இந்தப் போட்டியில் டிராவிட் தனது திறமையைக் காட்டாவிட்டால் எதிர்வரும் பத்தாம் திகதி அல்லது பதினோராம் திகதி மற்றொரு இந்திய வீரர் ஓய்வு பெறுகிறார் என்ற அறிவிப்பை நாம் கேட்கலாம்.(அறியலாம்)

Post a Comment

5Comments

Please Select Embedded Mode To show the Comment System.*