விளிம்பு நிலை மனிதர்களை தமிழ் சினிமாவில் காட்டும் வெகு சில இயக்குனர்களில் ஒருவரான பாலா எதிர்பார்க்கவைத்துத் தந்துள்ள புதிய படம்.
வழமையாக எந்த ஒரு திரைப்படத்தினதும் கதையை நான் என் பதிவுகளில் சொல்வதில்லை. எனினும் மனதில் இருந்த எண்ணத்தினைப் பகிர்ந்துகொள்வதற்காக கதைச் சுருக்கத்தைப் பதிவாகவே இட்டுவிட்டேன்.
ஹைனசும்,அவனும் இவனும் - ஞாபக அலைகள்
(எனினும் விமர்சனப் பதிவில் கதை சொல்வதில்லை என்ற கொள்கை நீடிக்கிறது.. )
சினி சிட்டி அரங்கில் கவனித்த ஒரு விஷயம்.....
எழுத்தோட்டங்கள் காட்டப்பட்ட போது, பாலா, ஆர்யா, சூர்யா,யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்குக் கிடைத்த கரகோஷங்களுக்குக் கொஞ்சம் குறையாமல் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கும் கிடைத்தது தான்.. அது ஏன்? அல்லது எப்படி?
அவரது அடியாட்கள்,நண்பர்கள், வளர்ப்புப் பிள்ளைகள் போன்றவர்கள் - கொஞ்சம் அரவாணி போன்ற தோற்றமும் கலைஞன் ஆகின்ற கனவோடும் திரியும் வோல்டர் (விஷால்)
திருடனாகவும், வம்பிழுப்பவராகவும் திரியும் (ஆர்யா)
இருவரும் ஒரு தந்தைக்கும் இரு தாய்மாருக்கும் பிறந்தவர்கள்.
இவர்கள் மூவரும் பிரதானமாகவும், சகோதரர்களின் குடும்பங்கள், பின்னர் உருவாகும் காதலிகள், ஒரு வாயாடிப் பையன், ஒரு கோமாளிப் போலீஸ், சட்ட விரோதமாக இறைச்சிக்காக மாடுகளை அடைக்கும் முரடன் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய பாத்திரங்களால் பின்னப்பட்ட கதை.
பிதாமகனுக்குப் பிறகு மீண்டும் இரு கதாநாயகர்கள்.
நந்தாவுக்குப் பிறகு மீண்டும் பாலாவுடன் யுவன் ஷங்கர் ராஜா.
வசனத்துக்கு எழுத்தாளர் ராமகிருஷ்ணன்.சிரிக்க வைக்கும் வசனங்களிலும் சில விஷயங்கள் வைக்கிறார்.
பாலா இந்தப் படம் வர முதல் சொன்னது போல, நகைச்சுவைக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ள கதை. இதுவரை வந்த பாலாவின் படங்களிலும் வடிவேலு, விவேக் வந்து சிரிக்க வைப்பதாகக் கதை இராது. மேலோட்டமான நகைச்சுவை இருக்கும். கருணாஸ் போன்றோரைத் தொட்டுக்கொள்வார் பாலா.
இதிலோ விஷாலும் ஆர்யாவும் கோமாளிக் கூத்தே நடத்திவிடுகிறார்கள். போதாக்குறைக்கு அந்த குண்டுப் பையனும், கோமாளி இன்ஸ்பெக்டரும் வேறு..
உச்சக்கட்ட காட்சிகளில் பாலா தன்னுடைய வழக்கமான வன்முறை வேட்டையாடும் வரை திரையரங்கு அதிர அதிர சிரிப்பு..
பாலாவின் படங்களில் வழமையாக நாம் பார்த்த, எதிர்பார்க்கக்கூடிய அத்தனை அம்சங்களுமே நிறைந்துள்ளன.
கொடூரமான, கொஞ்சம் சைக்கோத்தனமான, குரூரமான கதாநாயகன் (கதாநாயகர்கள்)..
(அழகான நாயகர்களை எல்லாம் என் இப்படி குரூபிகளாக மாற்றுகிறார் பாலா? ஏன் இப்படி ஒரு வெறி? சேது மொட்டை விக்ரமில் இருந்து இது தொடர்கிறதே.. இதற்கும் ஏதாவது பின்னணி இருக்குமோ??)
ஆனால் மினுக்கி வைத்த குத்துவிளக்குப் போல அழகான, அடக்கமான, கொஞ்சம் லூசுத் தனமான, பயந்த கதாநாயகி(கள்)..
சாதாரணமாக நாம் கவனிக்கத் தவறும் சமூகத்தின் சில அதிர்ச்சியான பக்கங்கள்..
(ஆனால் இதை யதார்த்தம் - இல்லை இதைத் தான் யதார்த்தம் என்று பலர் தூக்கிப் பிடிப்பதை நான் மறுக்கிறேன். நான் கடவுள் தந்த வன்முறை அதிர்ச்சி இன்னுமே இருக்கிறது)
முன்னைய தனது படங்களின் தாக்கம்.. பாத்திரப் படைப்புக்களிலும், சம்பவங்களிலும், ஏன் சண்டைக் காட்சிகளிலும் கூட..
அதிலும் கடைசிக் காட்சியை சேறு சகதியில்/புழுதியில் இரத்தமயமாக்குவதை எப்போது தான் பாலா விடப் போகிறார்?
அவன் - இவனில் என்னைப் பொறுத்தவரை அதிகமாக ஈர்த்துக்கொள்ளும் ஒருவர் ஹைனஸ் ஜி.எம்.குமார் தான்.
அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பந்தா காட்டுவது, அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குவது, சிறு பிள்ளை போல தேம்புவது, இளையவர்களுடன் சேர்ந்து அடைக்கும் கும்மாளம், தன்னை ஊர்த் தலைவராக நிலை நிறுத்தும் காட்சிகள், இறுதியாக நிர்வாணமாக அடிவாங்கும்போது எங்கள் மனதில் ஏற்படுத்தும் பரிதாபம் என்று ஜி.எம்.குமார் தனது வாழ்நாளில் மிகச் சிறந்த பாத்திரத்தை ஏற்றுள்ளார்.
விஷால் அண்மையில் பேட்டி ஒன்றில் சொல்லி இருப்பதுபோல, இனி எப்போதுமே அவருக்கு நடிக்க வாய்ப்புள்ள இப்படியான ஒரு பாத்திரம் கிடைக்காது.
மாறு கண்ணும், கொஞ்சம் பெண் தன்மையும், நடிகனாகும் தீராத ஆசையும், போலீஸ் பெண்ணிடம் வழிந்து, உருகிக் காதலிப்பது, கோபம் வருகையில் அசுர பலம் என்று விஷால் கிடைக்கும் காட்சிகளில் எல்லாம் கலக்குகிறார்.
அதிலும் சூர்யாவுக்கு முன்னால் நவரசங்களையும் வெளிப்படுத்தும் இடத்தில் அனைவரையும் கலங்க வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில் பலம் + பெண் தன்மை கலந்த பிதாமகன் விக்ரம்
ஆர்யா - கொஞ்சம் லூசுத் தனத்தைக் கலந்த பிதாமகன் சூர்யா பாத்திரம்
ஆனால் பிதாமகன் விக்ரமின் செம்பட்டை முடியும் அண்மைக்கால ஆர்யா படங்களில் பார்க்கின்ற அதேவிதமான கலாய்த்தல்களும் தொடர்ச்சியாகப் பார்க்கையில் கொஞ்சம் அயர்ச்சி தான்.
லூசுத்தனமாக ஹெட்போனோடு கும்பிடுறேன் சாமி என்று அறிமுகமாகும் இடமும், கும்மாங்குத்து போடுவதும், விஷாலிடம் வம்பு சண்டை போட்டு வாங்கிக் கட்டுவதும் பளீர் கலகலப்பு.
அதிலும் அந்த ஆற்றங்கரையோரத்தில் மது அருந்தும் காட்சியில் ஆர்யா அடிக்கும் கூத்து வயிறு வலிக்க சிரிக்கவைக்கிறது.
அந்த குண்டுப் பையனும் இருப்பதால் இன்னும் பல இடங்கள் சிரிக்க முடிகிறது.
இன்னொரு ரகளையான சிரிப்பூ
ஊசி விழுங்கியதாக ஆர்யா அடிக்கும் கூத்து - வைத்தியசாலையில் பெண் வைத்தியர் போலீஸ் அதிகாரியைப் பார்த்து "இவன் ஊசியை விழுங்கல.. He is a liar" என்று சொல்வார்.
பதிலுக்கு போலீஸ் "என்னாது இவன் லாயரா? எப்போ படிச்சான் ? சொல்லவே இல்லை"
அந்த மொட்டைத்தலை + விபூதிப் பட்டை லூசு போலீஸ் ஒரு கோமாளி..
விஜய் டிவி யின் சூப்பர் சிங்கர் புகழ் ஆனந்த் வைத்யநாதனுக்கு ஒரு அப்பிராணிப் பாத்திரம்.
பாவமாக இருக்கிறது.. இரண்டு மனைவியரிடமும், மகன்மாரிடமும் தாறுமாறாகக் கெட்ட வார்த்தைகளால் திட்டு வாங்குகிறார். (இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே)
அம்பிகாவா அது? வாய் முழுக்க உவ்வே வார்த்தைகளும், புகையும் பீடியுமாக மேலும் ஒரு விளிம்பு நிலைப் பாத்திரம்.அம்பிகாவும் அவரது சக்களத்தியும் சண்டைபோடும் இடங்களில் தணிக்கைக் குழுவினர் தூங்கிவிட்டார்களோ?
இதுதான் யதார்த்தம் என்று பாலா நினைனைக்கிறாரா?
கதாநாயகிகள் - ம்ம்ம் அழகுப் பதுமைகள். நடிக்கப் பெரிதாக எதுவுமே இல்லை. லூசுத்தனமாக இரண்டு மோசமான பொறுக்கிகளிடம் காரணமே இல்லாமல் காதல் வயப்படுகிறார்கள்.
பாலாவின் ஆஸ்தான சிஷ்யர்களில் ஒருவரான சூர்யாவின் கௌரவ வேடம், பாலாவுக்கான விளம்பரமா அல்லது சூர்யாவுக்கான விளம்பரமா?
பார்க்கும் உங்களுக்கும் எங்களுக்கும் பட்டிமன்றத் தலைப்பாகக் கொடுக்கலாம்..
இசைத்தட்டிலும், வானொலியிலும் கேட்ட பாடல்கள் பல திரைப்படத்தில் இல்லை.
பின்னணி இசை படத்துக்கு ஓகே ரகம் தேவைக்கேற்றதை செய்துள்ளார் யுவன்.
ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன் .. சண்டைக் காட்சிகளிலும் கடைசிக் காட்சிகளிலும் லயிக்க செய்துள்ளார்.
அந்தக் கிராமப்புறத்தின் கள்வர் குடியிருப்பைக் காட்டியுள்ள விதமும் கொடுத்துள்ள ஒளிச் சேர்க்கையும் பிரமாதம்.
பாலா ஒரு யதார்த்த இயக்குனர் என்று பல்லக்குத் தூக்குபவர்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஓவர் வன்முறையும் பாத்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளும், கிராமப் புறக் காட்சிகளும், விளிம்புநிலை மாந்தரின் கவனிக்காத வாழ்க்கை முறையைப் படமாக்குவதும் தான் யதார்த்தப்படம் என்றால் இதுவும் இன்னொரு விதமான பேரரசு, வெங்கடேஷ், விஜய டி.ராஜேந்தர் ரக சினிமாத் தனமே.
சேது, நந்தா, பிதாமகன் மூன்றும் பாலாவின் இயக்கத்தில் அவரை நான் சிலாகித்து ரசித்து, ஏற்ற படங்கள்..
அதன் பின்னர் பாலா எங்கே போனார்?
எல்லாம் அதீதம்.. காதலில் புதுமை, உண்மை ஏதும் இன்மை..
மனித உணர்வுகளின் மேன்மையைக் காட்டும் பாத்திரங்களைப் படத்தில் உலவவிட்டும் அதையும் மீறியதாகத் தெரியும் வன்மம் என்று பாலா ஒரு குறித்த வட்டத்துக்குள்ளேயே உழல்கிறார்.
நேரடியாக நமது பாஷையில் கேட்பதாக இருந்தால் பாலா ஏதாவது ஒரு சம்பவத்தால் பலமாகப் பாதிக்கப்பட்ட சைக்கோவா?
ஆனால் 'அவன் - இவன்' எப்படி என்று பொதுவாகக் கேட்டால்..
என் பதில்.. பிடித்திருக்கிறது.
காரணம் அவ்வளவு தூரம் ரசித்து சிரித்தேன்..
& கடைசிக் காட்சிகளின் கொலைவெறி வழமையாக மசாலாப் படங்களில் பார்க்காததா?
விஷாலின் அரவாணித்தனமான தோற்றம், சில உருவகம் போன்ற காட்சியமைப்புக்கள்,சேற்று நிலக் கொலை, ஹைனஸ், புலி வேஷம் என்று சில விடயங்கள் என் என்ற கேள்வி எழாமல் இல்லை. இவை தற்செயலா அல்லது எனது நண்பன் ஒருத்தன் எனக்கு சொன்னது போல "மச்சான் நீ எல்லாம் சும்மா விமர்சனம் எழுதத் தான் சரி. பாலாட ஸ்டாண்டர்ட் எங்கேயோ போய்ட்டுது. இதில எல்லாம் அவர் ஏதாவது ஒரு மறைபொருள் செய்தி வச்சிருப்பார்..அதெல்லாம் உனக்கு விளங்காதடா" என்ற வகையில் பின் நவீனத்துவமா?
விளங்காதவை பின்நவீனத்துவம் என்றால் எனக்கு அவை புரியாமலேயே போகட்டும்.
பாலா தான் இயக்குனர் என்று நினைக்காதபடியால் என்றெல்லாம் இல்லை.
காரணம் 'நான் கடவுள்' படத்திலேயே யோசித்துவிட்டேன் எந்தவொரு எதிர்பார்ப்பும் வைகைக் கூடியவர் பாலா இல்லை என்று...
சரக்கு தீர்ந்தால் எந்தவொரு வியாபாரியும் கிடைப்பதை விற்க ஆரம்பித்து விடுகிறான்.
அவன் - இவன் - அவனவன் அவனவனாக இருந்தால் அதுவே நல்லது