June 16, 2011

கறார்க் காதலும் புறாப் பாடலும்


காதலியைப் புறா என்று வர்ணித்து அன்று முதல் வந்த பாடல்கள் எத்தனையோ..
எனக்கு மனதுக்குப் பிடித்த பல புறா பாடல்கள் மனதில் ரீங்காரமிடுகின்றன.

புதுக்கவிதை - வெள்ளைப் புறா 
ஹீரோ - புறா புறா பெண் புறா
எனக்கொரு மணிப்புறா ஜோடியொன்று இருந்தது
அன்பே சங்கீதா - சின்னப் புறா 
கண்ணால் பேசவா - சின்னப் புறாவே 
அண்ணாமலை - ஒரு பெண்புறா (மகளுக்கான பாடல் இது)
இதயக் கோயில் - கூட்டத்திலே கோயில் புறா அழகான, மனதுக்குப் பிடித்த பெண்களைப் புறாக்களாய் கற்பனை செய்வதிலும் ஒரு கிளர்வு தான். புறாக்கள் ஜோடியாக இருப்பதையும், புறாக்களின் அசைவுகளையும் பாருங்கள்.. பெண்களைப் போலவே இருக்கும்..அழாகாய் சிறகடித்து வானில் பறக்கும் புறாக்கள் மெல்லிதாய் நடைபோடும் மென்மையான பெண்களை மனசுக்குள் ஞாபகப்படுத்துவார்கள்.

அண்மையில் சேவற்கொடி திரைப்படத்தின் கம்பி மத்தாப்பூ பாடல் பற்றிய பதிவில் அதே படத்தின் 'புறாவாய் வந்து போகிறாய்' பாடல் பிடித்துள்ளது பற்றியும் சொல்லி இருந்தேன்.

வரிகள், சொற்பிரயோகங்களின் புதுமை மட்டுமல்லாமல், மனதை அப்படியே அள்ளிச் செல்லும் மெல்லிய இசையுடன் பாடகர் விஜய் பிரகாஷின் காதல் வழியும் குரலும் நெஞ்சைக் கெட்ட முதல் கணத்திலேயே கொள்ளை கொண்டுவிட்டது.

தமிழ்த் திரைப்பாடல்களை காலத்துக்குக் காலம் புதிய சொற்களை அறிமுகப்படுத்தி நவீனப்படுத்தி, இளமை இரத்தம் பாய்ச்சும் வைரமுத்து இந்த சேவற்கொடி பாடல்களில் ஒரு இளமை ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.

கதறக் கதறக் காதல் செய்வது பற்றி கபிலன் சில மாதங்களுக்கு முன் பாடியது போய், கவிப்பேரரசு கறாராய்க் காதலிக்கும் காதலி பற்றிக் காட்டுகிறார்.


புறாவாய் வந்து போகிறாய்,கறாராய் காதல் செய்கிறாய்
ஒரு மேக இடுக்கில் மழையைப் போல ஒழிந்து கொள்கிறாய்
நான் மின்னல் போல தேடிப் பார்த்தும் பதுங்கிக் கொள்கிறாய்


மழை கால வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் இப்போது இந்த வரிகள் மனதுக்குள் மீண்டும் மீண்டும் டொல்பியில் ஒலிக்கின்றன.காற்றோடு கதை பேசிக் காலைகளில் எத்தனை காதுகளையும், மனதுகளையும் குத்தகை எடுத்துக் கொள்ளை கொள்ளலாம் என்பதிலேயே குறியாக இருக்கும் எனக்கு (இது தானேய்யா சோறு போடுது எனக்கு) வைரமுத்துவின் இந்த வரிகளில் இருக்கும் நிஜம் பிடிக்கிறதில் தப்பில்லையே...

காற்று பொய் சொல்வது இல்லை இல்லை 

காற்று ஒரு மிகச் சிறந்த ஊடகம். ஊடக சுதந்திரம் இங்கே தான் தெளிவாக சொல்லப்படுகிறது.
சொல்வதை உள்ளபடி மற்றவருக்குக் கடத்துவது காற்று மட்டுமே.

வைரமுத்து வழமையாகத் தான் பாடல்களில் விளையாடும் வார்த்தை-ஓசை-சந்த விளையாட்டுக்களும் பாடல்களில் தாராளமாக உண்டு.

சாலை, சோலை, துண்டு, நண்டு என்று காதுகள் ரசிக்கின்றன.


உன்னை எண்ணி எண்ணி, ஜீவன் உலரும் போதும்
சின்ன மரணம் தோன்றத் துன்பம் கொல்லும். 

காதல் மரண வேதனை தருவது என்று கவிஞர் சொல்லக் கேட்டும் உள்ளோம், காதல் அனுபம் உள்ளவர்கள் கொஞ்சம் கண்டுணர்ந்தும் இருப்போம். ஆனால் கவிஞர் இங்கே 'சின்ன மரணம்' என்று சொல்வது அந்த வழியில் உயிர் போகவில்லை என்பதைத் தான்.. (கிட்டத்தட்ட மரணம் என்பதுவோ?)

அடுத்த வரிகள் அது ஏன் சின்ன மரணமாக அமைகின்றது என்பதை மேலும் விளக்குகின்றன..

நீயும் என்னைப் போலத் துடித்த துடிப்பைக் கேட்டு,
நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் இன்பம் கொள்ளும் 

காதல் எப்படியும் சுயநலத்தையும், மற்றவர்களின் வலிகளை நாம் உணர்ந்து கொள்வதையும் மட்டுமன்றி, மற்றவர்களின் வலிகளில் நாம் இன்பம் காணும் ஒரு சிறு சைக்கோத்தனமும் உருவாகிறது என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்.
காதலியின் துடிப்பில் இன்பம் காணும் காதலன்.. காரணம் தன் மீதான அவள் காதல்..

என் துன்பம் கொண்டாடும் ரசிகை நீயா..
துன்பம் கொண்டாடும் ரசிகை.. என்ன ஒரு ஹைக்கூத் தனமான காதலி பற்றிய வர்ணனை.

பக்தன் தேடி தேடி,நிதம் அலையும் போதும்
கடவுள் நேரில் வந்து நின்றதும் இல்லை 

நம்மைப் போலவே கடவுளை நம்பாத கவிஞரும் காணும் வரை கடவுள் இல்லை என்கிறாரோ? ;)
ஆனால் காதலுடன் கடவுளைக் கவிதையில் கொண்டுவருவதால் கடவுள் மறுப்பை விடக் காதல் விருப்புத் தான் தெரிகிறது.
காதலிக்கு முன் கடவுள் வந்தாலும் பக்தன் நாஸ்திகன் ஆகிவிடுகிறான்... (சொன்னது நானே தானுங்க)

பாடகர் - விஜய் பிரகாஷ் 
பாடலாசிரியர் - வைரமுத்து
இசை - சத்யா
திரைப்படம் - சேவற்கொடி


புறாவாய் வந்து போகிறாய்,கறாராய் காதல் செய்கிறாய்
ஒரு மேக இடுக்கில் மழையைப் போல ஒழிந்து கொள்கிறாய்
நான் மின்னல் போல தேடிப் பார்த்தும் பதுங்கிக் கொள்கிறாய்
இன்றே தான் மண்ணில் வந்தாய்.. 
அன்பே உன்னை.. கண்டேனடி, ஆசை வலி.. கொண்டேனடி..
உன்னைத் தேடாத சாலை இல்லை
தேடி ஓடாத சோலை இல்லை
காற்று பொய் சொல்வது இல்லை இல்லை 
காதில் என் காதில் தகவல் இல்லை 
உன்னை எண்ணி எண்ணி, ஜீவன் உலரும் போதும்
சின்ன மரணம் தோன்றத் துன்பம் கொல்லும். 
நீயும் என்னைப் போலத் துடித்த துடிப்பைக் கேட்டு,
நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் இன்பம் கொள்ளும் 
என் பூவே உனக்குப் புன்னகையா,
என் துன்பம் கொண்டாடும் ரசிகை நீயா..


நீ இல்லையேல் சூறாவளி, 
நீ வந்ததால் தீபாவளி..
புறாவாய் வந்து போகிறாய்,கறாராய் காதல் செய்கிறாய்
நீயும் என்போல ஆசை கொண்டும்,
நெஞ்சை துண்டாக தூக்கி வைத்தாய்..
நானும் நண்டாக ஊர்ந்து வந்து,
நெஞ்சைத் துண்டாக தூக்கி சென்றேன்
பக்தன் தேடி தேடி,நிதம் அலையும் போதும்
கடவுள் நேரில் வந்து நின்றதும் இல்லை 
உன்னைத் தேடி தேடி, இன்று கண்டு கொண்டேன்
உண்மைக் காதல் போல கடவுள் இல்லை 
உன் கண்ணில் எனது கண்மணியா,
என் வாழ்வின் மறுபாதி நீயே நீயா.. 


நீ இல்லையேல் சூறாவளி, 
நீ வந்ததால் தீபாவளி..
புறாவாய் வந்து போகிறாய்,கறாராய் காதல் செய்கிறாய்

பாடலைக் கேட்டு அனுபவிக்க....


மதன் கார்க்கி எழுதிய 180 திரைப்படப் பாடல்..
நீ கோரினால்
வானம் மாறாதா! - தினம்
தீராமலே
மேகம் தூறாதா!


மனத்தைக் கவரும் மற்றொரு பாடல்.. வரிகளும் இசையும் கேட்கும்போதெல்லாம் மனதை அள்ளியெடுத்து ஆகாயத்தில் மிதக்கச் செய்துவிடுகிறது.
ட்விட்டரில் மதன் இதைப் பார்த்தால் என் சார்பில் உங்களுக்கு நீங்களே கை கொடுத்துக் கொள்ளுங்கள்.

வரிகளை ஆழ்ந்து ரசிக்க மதன் கார்க்கியின் தளம்...

தந்தையாரின் கற்பனையுடன் மகனின் நவீன போட்டி ரசிக்க வைக்கிறது.

தந்தையாரின் தென் மேற்குப் பருவக்காற்றுப் பாடல்களும் மனதை சொக்க வைப்பன..

யேடி கள்ளச்சி மட்டுமல்ல.. அதைவிட கள்ளிக்காட்டில் பிறந்த தாயே இப்போது தினம் இரவுகளில் என் தாலாட்டு..


11 comments:

Unknown said...

கம்பி மத்தாப்பை மேட்படி பாடல் நிறைய கவர்திருக்கிறது. பின்னணி இசையும். அப்பா மகன் ஆரோக்கியமான போட்டி எங்களுக்கு கொண்டாட்டம் தோழியை கவர statutsக்கு. ஆனாலும் அப்பா இந்த வயதிலும் இளமையாகவே வரிகளில் மின்னுகிறார்

Ashwin-WIN said...

நாங்க வந்திட்டோம். கொஞ்சம் பொறுங்க......

Ashwin-WIN said...

கொஞ்ச நாளாவே வைரமுத்து அராஜகமாவே இருக்கு.. பாடல்களின் அர்த்தங்களை புரிந்து படிக்க உதவுது உங்கள் பதிவு...

யோ வொய்ஸ் (யோகா) said...

பாடலை கேட்டு விட்டு பின்னூட்டுகிறேன்

anuthinan said...

பாஸ் நான் எதிர்பார்த்து வந்த பதிவே வேற பாஸ்!!!

நீங்கள் சொல்லும் பாடல்கள் இப்போது என்னை மனதை கவர்ந்த பாடல்களாக மெல்ல மெல்ல மனதில் இடம் பிடிக்க தொடங்கி இருக்கிறது!!!!!

//மதன் கார்க்கி//

எங்கள் காலத்தில் வைரமுத்தும் ஒரு நவீன வைரமுத்துவும் இருந்தார்கள் என்று பெருமையாக சொல்லலாம்....

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

///வரிகளும் இசையும் கேட்கும்போதெல்லாம் மனதை அள்ளியெடுத்து ஆகாயத்தில் மிதக்கச் செய்துவிடுகிறது.///

இடைக்கிடை கவித்துவமாய் கருத்துகள் வருகிறது.
அடிக்கடி வைரமுத்து பற்றிய பேச்சு வருகிறது
என்ன சகோ, இன்னொரு புத்துக்கவிதை புரட்சி தொடங்கப் போகிறதோ?

Anonymous said...

அது சின்ன மரணமா அண்ணா? மரணம் என்பது நொடியில் நிகழ்வது. காதல் மரணப்படுக்கையில் உள்ளவர் அனுபவிக்கும் வேதனை போல் என்று சொல்லலாம் என்பது என் கருத்து.உங்கள் அனுபவம் என்ன லோசன் அண்ணா?

Shafna said...

புறாவாய் வந்து போகிறாய் கறாராய் காதல் செய்கிறாய்... கேட்ட முதல் நாளே மனதை கறாராய் கவர்ந்து கொண்ட பாடல்.. உங்கள் ரசனை தந்த விபரத்தோடு மனதும் ஒன்றிப்போகிறது...இதன் ரசனையின் ஈரம் வற்றுமுன் இன்னுமோர் அற்புதமான பாடல் மழையை மகனோ அப்பாவோ தந்துவிடுவார்கள்.. வாழ்க மதன்! வாழ்க முத்து!

வந்தியத்தேவன் said...

புறா விடு தூதோ? நானும் அனுவைப் போல இன்னொரு பதிவைப் பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன்.

ஷஹன்ஷா said...

வந்தி அண்ணா சொன்னது போல புறாவிடு துாதுவின் மறுவடிவம் எனலாம்...


////உண்மைக் காதல் போல கடவுள் இல்லை
உன் கண்ணில் எனது கண்மணியா,
என் வாழ்வின் மறுபாதி நீயே நீயா.. ///

ரொம்ப பிடித்திருக்கு இவ்வரிகள்..

ம.தி.சுதா said...

////வைரமுத்து வழமையாகத் தான் பாடல்களில் விளையாடும் வார்த்தை-ஓசை-சந்த விளையாட்டுக்களும் பாடல்களில் தாராளமாக உண்டு.////

ஓம் அண்ணா ரசித்தேன் மீண்டும் வார்த்தைகளில் ஒரு ஜாலம் காட்டியிருக்கிறார்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner