சனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்

ARV Loshan
11

சனத் ஜெயசூரிய




இலங்கையின் மிகச் சிறந்த ஒரு நாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராயும், மிகச் சிறந்த ஒரு நாள் சகலதுறை வீராகவும் விளங்கிய சனத் ஜெயசூரியவுக்கு முதலில் எனது பிந்திய 42வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாற்பது வயதில் நாய்க்குணம் என்பது சரியாத் தான் இருக்கு என்று உதாரணம் காட்டும் அளவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு காலத்தின் Match Winner, Mater Blaster இன்று மாறிவிட்டார் என்பது மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது உண்மை தான். 

எந்தவொரு விடயத்திலும் Expiry Dtae என்பது எவ்வளவு முக்கியமோ சிலபொதுத்  துறைகளிலும் சரியான நேரத்திலும், தக்க தருணத்திலும் ஓய்வுபெறுவதும், தங்களுக்கான முடிவுரையைத் தாமே எழுதுவதும் கூட மிக அவசியமானதாகவும், தனிப்பட்டவர்களுக்கு அவமானத்தைத் தவிர்ப்பதாகவும் அமைகிறது.

அரசியலில் தள்ளாடும் வயதிலும், தனியாக நடக்க முடியாத முதுமைப் பராயத்திலும் விடாமல் பதவியை இறுகப்பற்றி ஆசனத்திலேயே அமரராகும் ஆசையில் இருந்தவருக்கும் நடந்த கதி பார்த்திருக்கிறோம்..

இன்னும் பல நாடுகளிலும் கூட வயதாகியும் ஆசை விடாததால் பதவியை இறுகப்பற்றிக் கொண்டிருந்தோருக்கு மக்களே கட்டாய ஓய்வு கொடுத்தும் இருக்கிறார்கள்.

ஆனால் கிரிக்கெட்டிலும் ஏனைய விளையாட்டுக்களிலும் பல பிரபல வீரர்களின் வரலாறுகளைப் பார்க்கையில் மிகச் சிறந்த வீரர்களாக இன்று வரை பெருமையுடன் நோக்கப்படுவோர் அத்தனை பெரும் "வேண்டாம் போய்விடு" என்று அணியும் ரசிகர்களும் வெறுப்புடன் விலக்கமுதல் தாங்களாக தங்கள் வயது, உடல் தகுதி அறிந்து ஓய்வை அறிவித்தவர்களாகவே இருக்கிறார்கள்.

அடடா இவர் ஓய்வு பெற்றுவிட்டாரே, இன்னும் சில காலம் விளையாடி இருக்கலாமே என்று எந்தவொரு வீரர் பற்றி ஆண்டுகள், தசாப்தங்கள் கடந்தபின்னர் ரசிகர்கள் ஏக்கத்துடன் பேசிக்கொண்டாலும் அது அந்த வீரருக்கான அவரது கனவான் தன்மைக்கான உச்சபட்ச பாராட்டாகவே இருக்கமுடியும்.

விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர், ரிச்சர்ட் ஹாட்லி, டென்னிஸ் லில்லீ முதலாய முன்னைய தலைமுறை நட்சத்திரங்கள் தொடக்கம்.. அண்மைக்காலத்தில் தங்கள் வயதறிந்து இளையவருக்கு இடம் கொடுத்து தாமாக, குறித்த காலத்துக்கு முன்பே ஓய்வை அறிவித்த பிரையன் லாரா, அணில் கும்ப்ளே, ஷேன் வோர்ன், மத்தியூ ஹெய்டன், க்ளென் மக்க்ரா, முத்தையா முரளிதரன், கேர்ட்லி அம்ப்ரூஸ் என்று பலர் மனதின் உச்சத்தில் ஏறி இருக்கிறார்கள்.

எவ்வளவு தான் சாதனை படைத்திருந்தும், குறித்த வயதில் ஓய்வு பெறாமல் இன்னும் சில மைல் கற்களுக்காகவும் அல்லது வேறு சில காரணங்களுக்காகவும் அணியில் விடாப்ப்பிடியாக இருந்து, வேண்டாவெறுப்பாக நோக்கப்பட்டு அணியை விட்டு எப்போது இவர் விலகுவார் என்று பலரை வெறுக்கவைத்த சில உச்ச நட்சத்திரங்களையும் பார்த்திருக்கிறோம்.

இவர்களது சாதனைகளாலும் அனுபவத்தின் கனதியாலும் அணியை விட்டு வெளியே அனுப்ப முடியாமலும் இருக்கும்; ஓய்வு பெறுமாறு சொல்ல முடியாமலும் இருக்கும்.கடனே என்று தலைவிதியை நொந்துகொண்டு அவர்களை அணியில் வைத்துக்கொண்டே இளைய, திறமையான,தகுதியான வீரர் ஒருவரின் இடத்தை இப்படிப்பட்ட ஒருவரிடம் கொடுத்து தோல்வியையும் சுவைக்கவேண்டி இருந்திருக்கும்.

இயன் பொத்தம் கடந்த இரு தசாப்தங்களின் சரியான உதாரணமாக இருந்தாலும், எழுபதுகளின் இங்கிலாந்தின் பல வீரர்கள் விடாமல் தள்ளாத வயதிலும் தேசிய அணியிலும், தத்தம் முதல் தர கிரிக்கெட் அணிகளிலும் இடத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தவர்கள்.
இவர்களை விட உலக சாதனையாளர்களாக நோக்கப்பட்ட இந்தியாவின் கபில் தேவ், அவரோடு சமகாலத்தில் விளையாடிய பாகிஸ்தானின் ஜவேட் மியண்டாட் ஆகியோரும் கூட, இறுதிக்காலத்தில் தத்தம் திறமைகளால் அல்லாமல் முன்னைய சாதனைகளால் அணியில் இடத்தைத் துண்டு விரித்து வைத்திருந்தவர்களே.
கபில் தேவ் ஹட்லீயின் சாதனையை முறியடிப்பதற்காகவும், மியண்டாட் '96 உலகக் கிண்ணத்தில் விளையாடி தனது ஆறாவது உலகக் கிண்ணம் என்ற சாதனைக்காகவும் விடாப்பிடியாக அணியைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதே போலத்தான் இலங்கைக்கு 1996 உலகக் கிண்ணம் வென்று கொடுத்த அர்ஜுன ரணதுங்கவும் உச்சத்தில் இருக்கையில் ஓய்வுபெற்று பெருமையுடன் செல்லாமல், வேகம் குறைந்து formஉம் தளர்ந்த பிறகு முன்னமே இவர் ஓய்வு பெற்றிருக்கலாமே என்ற ஆதங்கத்துடனேயே நோக்கப்பட்டார்.

இவர்களது வழியில் இப்போது கறுப்பு சிங்கம் Matara Marauder சனத் ஜெயசூரிய.
இவர் இருக்கும்வரை இலங்கை அணிக்கு டெஸ்ட் போட்டியிலோ, ஒரு நாள் போட்டியிலோ தோல்விகள் கிடையாது என்று நம்பியிருந்த இலங்கை ரசிகர்கள் எல்லாம் இறுதியாக சனத் விளையாடிய இரு சர்வதேசப் போட்டிகளிலும் இவர் விளையாடுவதால் இலங்கை தோற்றுவிடுமோ எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது தான் காலத்தின் கோலம்.




நாற்பது வயது வரை சனத் ஜெயசூரிய இருபது வயது இளைஞர்களை விடவும் துடிப்போடும், வலிமையோடும் தான் இருந்தார். எல்லாப் போட்டிகளையும் என்றில்லாவிட்டாலும் அடிக்கடி தனது அணிக்காகப் போட்டிகளை வென்று கொடுத்திருந்தார். 

ஆனால் எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு இருக்கிறது இல்லையா? (“All good things must come to an end, but all bad things can continue forever.”)
சனத் ஜெயசூரியவுக்கும் அதே நிலை கடந்த ஆண்டின் மத்திய பகுதியில் ஆரம்பித்தது.
உள்ளூர்ப் போட்டிகளில் கூட பெரிதாகப் பிரகாசிக்கவில்லை.





அப்போதே விளங்கிக்கொண்டு ஓய்வு பெறும் முடிவை எடுத்திருக்கலாம். 
அரசியலிலும் கால் பதிக்க ஆரம்பித்திருந்தார். பெருமையுடனும் சாதனைகளின் மகுடத்துடனும் விளையாட்டுத்துறையிலிருந்து விடைபெற்று அரசியலுக்குப் போயிருக்கலாம்.
பெருந்தன்மைக்காகவே கொண்டாடி இருப்பார்கள்.

ஆனால் விடாப்பிடியாக விளையாடித்தான் ஆவேன் என்றால் எப்படி?
அரவிந்த டீ சில்வா தலைமயிலான தேர்வுக்குழுவினர் இருக்கும் வரை சனத்தின் தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பாச்சா பலிக்கவில்லை.
உலகக் கிண்ண அணியிலும் எப்படியாவது பின் வாசலால் வந்துவிடுவார் என்று பலரும் அஞ்சிய வேளையில் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

ஆனால் தேர்வுக்குழுவினர் மாற, தலைமை மாற - இங்கிலாந்தின் சுற்றுலாவில் காயங்களும் ஏற்பட, தரங்கவும் தடைசெய்யப்பட சனத் ஜெயசூரியவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அல்லது வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

(form, performance இன் அடிப்படையில் வழங்கப்பட்ட வாய்ப்பு அல்ல இது என்பது சனத்துக்கும் தெரியும் சனத்துக்கும் - மக்களுக்கும் தெரியும்)

விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டால் தனது முழு உடற்தகுதியை வெளிப்படுத்தத் தயார் என்றெல்லாம் சூடாகப் பேட்டி கொடுத்தவர், அணியில் பெயர் அறிவிக்கப்பட்ட இருபத்துநான்கு மணிநேரத்தினுள் ஓய்வு பெறுவதை அறிவித்தது பற்றி முன்னரே பதிந்திருந்தேன்.



இலங்கை கிரிக்கெட் - உருப்பட்ட மாதிரித் தான்..


மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தினேஷ் சந்திமால் பெற்ற அபார சதமும், இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மஹேல ஜெயவர்த்தன பெற்ற சதமும் சனத் ஜெயசூரிய முதலாவது போட்டியில் விளையாடியதால் இலங்கை அணிக்கு நஷ்டமே ஏற்பட்டது என்பதைக் காட்டி நிற்கின்றனவே.

பின் வாசல் வழியாக அணிக்குள் வந்த மாண்புமிகு அரசியல்வாதி சனத் ஜெயசூரிய தொடர்ந்தும் இந்த ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தால்????

சந்திமால் என்ற திறமையான வீரர் தொடர்ந்தும் உதிரி வீரராக உழன்றுகொண்டே இருந்திருப்பார்.

ஏழ்மையிலிருந்து உச்சத்துக்கு வருவதன் நம்பிக்கையைக் காட்டிய உதாரணமாக விளங்கிய சனத், விடாமுயற்சி வெற்றியைப் பரிசளிக்கும் என்று நிரூபித்த சனத்,  இலங்கை கிரிக்கெட் அணியில் வெளி மாவட்டத்தில் இருந்து ஒரு ஏழைக் குடும்பத்தில், எந்தவிதமான பின்னணி, பின்புலமும் இல்லாமல் ஒரு கிரிக்கெட் வீரன் தேசிய மட்டத்தில் நிலைக்க முடியும் என்று காட்டிய உத்வேக உதாரணம்.

மிக சிரமப்பட்டு, அவமானங்கள் பல தாங்கி, ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரே சனத் ஜெயசூரிய இலங்கை அணியில் தனக்கான நிலையான இடத்தைப் பிடிக்க முடிந்தது. இலங்கை அணி அப்போது உலகக் கிண்ணத்தை வேன்றிருக்கவில்லை. இதனால் பெரிய ஊதியமும் இல்லாமல், கொழும்பில் ஒரு அறையில் தங்கியிருந்து சனத் எத்தனை சிரமங்களுக்கு ஆளாகியிருப்பார்?

பின்னர் இல் உலகக் கிண்ணம் வென்ற பின்னரும், அதன் பினர் சனத் என்ற பெயர் உலகின் அத்தனை முன்னணிப் பந்துவீச்சாளருக்கும் சிம்ம சொப்பனமாக மாறியபின்னரும் கூட சனத்தின் தலையில் முடி குறைந்ததே தவிர தலைக்கனம் ஒரு சொட்டும் ஏறவில்லை.





அண்மைக்காலம் வரை இலங்கை அணியின் வீரர்களில் மிக இலகுவாக அணுகக் கூடிய ஒரு சிம்பிளான மனிதர்களில் இவர் முக்கியமானவர். (சங்கா, மஹேல, மத்தியூஸ் போன்றவர்கள் மற்றையவர்கள்) இதனால் தான் சனத் என்ற பெயர் இன்று வரை, இத்தனை வயதில் சனத் அரசியல்வியாதியாக அணிக்குள் நுழைந்தபிறகும் கூட ஆதரவு.

எதிர்ப்பாளர்கள் என்னைப் போல பலர் இருந்தாலும் இன்னும் சனத் ஜயசூரியவை ஒரு கிரிக்கெட் வீரராக நேசிக்கும் பலரும் உள்ளார்கள் என்பதை சனத் ஜெயசூரிய புரிந்து கொண்டாலே அவர் தான் இந்த ஓராண்டு காலத்தில் விட்ட தவறுகளை உணர்ந்து எதிர்காலத்தில் ஒரு கிரிக்கெட் நிர்வாகியாகவோ, விளையாட்டுத்துறை அமைச்சராகவோ வரும் பட்சத்தில் பொறுப்பாக நடந்துகொள்வார் என எதிர்பார்க்கலாம்.


ஐபிஎல் அவமானம், உலகக்கிண்ண அவமானம், இப்பொது ஓய்வு பெற முதல் கிடைத்த அவமானங்களை அரசியலுக்கான பாடமாக எடுத்துக்கொண்டு அரசியலில் வெற்றிகரமான இடத்தை கௌரவ. நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரிய பெற்றுக் கொள்ளட்டும்.
(அமைதியான இவரால் அரசியலில் பிழைத்துக்கொள்ள முடியாது என்று நினைத்தது இந்த இரண்டுமாதங்களில் தப்பாகிவிட்டது.. இவர் அரசியலில்/அரசியலிலும் ஜெயிக்கப் பிறந்தவர் போல தெரிகிறது.. )


சனத் ஜெயசூரிய - ஜெயவேவா 



ஜெயசூரிய ஜெயவேவா! முரளி - பிறகு பார்க்கலாம்




சனத் ஜெயசூரியாவின் சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு  


ஒரு சாம்பிள்...

விபூதியுடன் சனத் ஜெயசூரிய - திருக் கோணேஸ்வரர் கோவிலில்.
அரோகரா.... 

பி.கு - லண்டன் லோர்ட்சில் நேற்று நிகழ்த்திய அற்புதமான, துணிச்சலான, தீர்க்கமான உரைக்காக என்றும் கனவானான குமார் சங்கக்காரவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.





Post a Comment

11Comments

Please Select Embedded Mode To show the Comment System.*