June 13, 2011

மீண்டும்??? அம்மையாரின் அதிரடியும் இலங்கையும் இந்தியாவும்


இலங்கை - இந்தியா அண்மைக்காலத்தில் சேர்ந்தும் பிரிந்தும், வெளிப்படையாகவும் ரகசியமாகவும் நடத்திவரும் அரசியல் நாடகங்கள் பெரிய பெரிய ராஜதந்திரிகளுக்கே குழப்பம் தரக்கூடியவை.

இந்த உறவுகளுக்கான மிக நெருக்கமான அடிப்படை தமிழும் தமிழரும் என்பது அனைவருக்குமே வெளிப்படை.

காலாகாலத்துக்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வந்த முரண்பட்ட, சில இடங்களில் முட்டிக்கொண்ட உறவுகளில் கடந்த ஆறு வருடத்தில் முக்கியமான மாற்றங்களும், நம்பமுடியாத அலைவரிசைக் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்திய மத்திய அரசை காங்கிரசும், இலங்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஆண்டுவரும் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் பெரிதாக எந்தவொரு விஷயத்திலும் நேரடியாக அதிருப்திப்பட்டதோ மோதுண்டதோ கிடையாது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், தமிழக மீனவர் மீதான துப்பாக்கிப் பிரயோகங்கள், யுத்தத்தின் கடைசிக் காலகட்டத்தில் இடம்பெற்ற மனித அவலங்கள் இப்படி எந்த விஷயத்திலும் இந்த இரு அரசுகளும் ஒன்றையொன்று பகைத்தது கிடையாது.

இருநாடுகளிலும் ஒன்றையொன்று எதிர்த்து ஊடக, பொதுஜன, மனித உரிமைக் குரல்கள் எழுந்தும் அரசுகள் நட்பு பாராட்டி அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் நடந்துகொண்டமை சர்வதேசத்துக்கே ஒரு வித்தியாசமான அரசியல் பாடம்.

யார் உத்தரவை யார் கேட்கிறார்கள் , யாருக்கு யார் பயப்படுகிறார் என்றும் ஒரு குழப்பம்.. இந்தியா தான் வல்லரசாக இருந்தும் இலங்கை தன் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி இந்தியாவைத் தன் சொல்லைக் கேட்கவைக்கிறதோ என்ற சந்தேகம் இன்றுவரை உள்ளது.

கலைஞர் கருணாநிதி இந்த சிக்கலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலைமைச்சராக இருந்தது தமிழரின் (குறிப்பாக ஈழத் தமிழரின்) துரதிர்ஷ்டம் என்று நாம் நினைத்திருந்தாலும் மறுபக்கம் பார்த்தல் கருணாநிதி கூட சிலவேளைகளில் துரதிர்ஷ்டசாலி தான். அவர் சிலவேளைகளில் மனம் வைத்து ஈழத் தமிழரின் பிரச்சினையில் தலையிட, இந்திய மத்திய அரசைத் தலையிட அழுத்தம் கொடுக்க வைக்க எண்ணியிருந்தாலும் கூட இந்திய அரசு சிலவேளை தயங்கி இருக்கலாம்.

தலையிட என்ன, மூச்சு விடக் கூட முடிந்திராது.

இந்தியாவுக்கு நேரடியாக அக்கறையில்லாத முள்ளிவாய்க்கால் முடிவு யுத்தத்தில் மட்டுமல்ல, தமிழக மீனவர் பிரச்சினையிலும் இந்தியா இலங்கையை வேண்டிக் கேட்டதே தவிர தடுத்து நிறுத்தவுமில்லை;தட்டிக் கேட்கவுமில்லை.

ஆனாலும் இப்போது தமிழக ஆட்சிமாற்றமும் ஜெயலலிதாவின் அண்மைய அதிரடி ஸ்டன்ட்களும் இந்திய அரசி ஏதாவது செய்யவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இப்போதும் பாருங்கள்.. அவசர அவசரமாக அனுப்பப்பட்டுள்ள நிருபமா ராவ் மற்றும் இதர இருவரும் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியவர்களல்லர். இலங்கை ஜனாதிபதியுடன் சிரித்த முகத்துடன் இவர்கள் நிற்கும் புகைப்படங்களையும், போலீஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானமாகத் தெரிவித்த செய்திகளையும் நேற்றைய பத்திரிகைகளில் நாம் பார்த்திருப்போம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கான ஆலோசகர் ஷிவ் ஷங்கர் மேனன் நிரந்தரத் தீர்வுக்காக இலங்கை அரசை இந்தியா வலியுறுத்துவதாக சொல்லியபோதும் கூட, பிடிகொடுக்காமலேயே நாடாளுமன்றக் குழு அமைத்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதாக இலங்கை சொல்லியிருப்பதானது 'எங்கள் விஷயத்தை நாமே பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்வது போல இல்லை?

இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடனடியாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இந்தியத் தூதுக் குழுவுடன் பேசிய பிறகு) இது பற்றி "பயனில்லாதது+ காலம் கடத்தும் ஒரு செயல்" என்று சொல்லியுள்ளது.

தமிழக முதலமைச்சர் சட்டசபையில் அதிரடியாக நிறைவேற்றிய தீர்மானங்கள் இந்திய மத்திய அரசை சிக்கலுக்கு உட்படுத்துமே தவிர, சர்வதேசரீதியில் தாக்கத்தையோ, இலங்கையின் மீது பெரிய அழுத்தங்களையோ தராது என்பது உறுதி.

இலங்கை மீதான பொருளாதாரத் தடை என்பது நிச்சயம் ஒரு பெரிய விஷயம் தான். ஆனால் இவ்வளவு காலம் இலங்கையை சிறிதளவாவது கண்டிக்க முன்வராத இந்தியா இதைப் பற்றி சிந்திக்கவாவது செய்யும் என்று யாராவது நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இருக்க முடியாது.

கருணாநிதி செய்யாத விஷயங்களைத் தான் செய்வதாக ஜெயலலிதா காட்டுவதற்கு இந்தத் தீர்மானங்களும் அறிக்கைகளும் பயன்படும். எனினும் தமிழர்களாகிய எமக்கு ஞாபக மறதி என்ற ஒரு விஷயம் இருப்பதை மிக சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் இந்த அரசியல்வாதிகள் தான்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொலைநகல் அனுப்பும் போராட்டம் நடத்தியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த நேரத்தில் இப்போது இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று கோரித் தீர்மானம் நிறைவேற்றியுள்ள இதே ஜெயலலிதா சொன்னது "யுத்தம் என்றால் உயிர்ப்பலிகள் சகஜம் தானே. புலிகளைத் தான் இலங்கை ராணுவம் கொல்கிறது"

இதையெல்லாம் எம்மில் சிலர் இன்னும் மறக்கவில்லை என்பதைத் தான் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

யார் குற்றியும் அரிசி வந்தால் சரி என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் எப்போது எவர் குற்றினாலும் அரிசி எமக்குக் கிடைக்காது.. மாறாக உமி தான் வரப் போகிறது போலும்..

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியத் தூதுக் குழு அரசுடன் பேசுகையிலேயே நேரடியாக ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் ஒரு பக்கம்; அமைச்சர்கள் சில பேர் சொன்ன "சர்வதேச அழுத்தங்களை நாம் ஏற்க மாட்டோம்; உள்நாட்டுப் பிரச்சினை இது; அனைத்துத் தரப்போடும் பேசித் தீர்க்கப்படும்-மூன்றாம் தரப்புத் தேவையில்லை " கருத்துக்களையும் கவனிக்க வேண்டும்.

ஆனால் வழமையாக இந்தியா என்ற பேச்சு வந்தாலே துள்ளிக் குதிக்கும் சில அமைச்சர்கள் அமைதியாக இருப்பது தான் சிறு ஆச்சரியமான விஷயம். ஒரு விதமான இருபக்க அண்டர்ஸ்டாண்டிங்கோ?

அடுத்து வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையைத் தனிமைப்படுத்தவும் , பொருளாதாரத் தடை விதிக்கவும் கோருவோர் (ஜெயலலிதா உட்பட) ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். பொருளாதாரத் தடை விதித்தால் என்ன, தள்ளிவைத்தால் என்ன தண்டனை இலங்கைக்கு மட்டுமா? அடிவயிற்றில் அடி விழப்போவது பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் வாழும் தமிழருக்கும் தானே?

இனி என்ன இன்று ஜெயலலிதா அம்மையார் மனோகன் சிங்குடன் என்ன பேசுவார் என்று நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.. இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியும் பேசப் போகிறாராம். இந்த நடவடிக்கைகள் பற்றி மகிந்த அரசு கொஞ்சம் அலட்டிக்கொள்ளாது..
காரணம் சிம்பிளானது..

ஜெனீவாவிலேயே முதல் சுற்றில் தப்பிப் பிழைத்துள்ள இலங்கை எப்போதும் சேராத இந்தியாவையும் சீனவையுமே தன விவகாரத்தில் சேர்த்து வைத்து ரஷ்யாவையும் கூட்டுக்குள்ளே கொண்டு வந்து உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியதைப் போல, ஜெயலலிதா கொண்டுவரும் எந்தவொரு சிக்கலையும் மன்மோகன் சிங்கை வைத்து முறியடிக்கலாம் என்று இலங்கைக்குத் தெரியும்.

ஜெயா அம்மையார் விரும்பினால் இந்த அழுத்தங்களை வைத்து ஏற்கெனவே ஊழல், தோல்வி, புலம்பெயர் ஈழத் தமிழர் எதிர்ப்பால் சுருண்டு போயுள்ள கருணாநிதியை மேலும் சுருட்டி, இந்திய மத்திய அரசின் கூட்டணியில் இருந்தும் அவரைக் கழற்றிவிடும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் அவ்வளவே.

சர்வதேச ரீதியில் இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுப்போர் இப்போது முக்கியமாகக் கவனத்தில் எடுக்கவேண்டிய விஷயங்கள்...

இலங்கையைத் தனிமைப்படுத்துவதை, பொருளாதாரத் தடை விதிப்பதை விட முதலில் மக்களை மீளக் குடியமர்த்துவதைத் துரித்தப்படுத்த அழுத்தம் கொடுக்கவேண்டும்.(தமிழக அரசுத் தீர்மானத்தில் இதுவும் குறிப்பிடப்பட்டது)
யுத்தக் குற்றவாளிகளைத் தண்டிப்பது வேறு முழு இலங்கையையே தண்டிப்பது வேறு என்று விபரம் புரியவேண்டும்

இந்தியாவின் அழுத்தம் தமிழ்பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமைவதை உறுதிப்படுத்தவேண்டும்.

இலங்கையின் அரசியற்பிரச்சினைகளுக்கு 13வது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு என்று வெறும் பேச்சளவில் சொல்வது போல இருக்காமல் அரசு அதை உறுதிப்படுத்துவதை மேலும் உறுதிப்படுத்தல்.

எது எப்படி இருந்தாலும் நான் எந்த எதிர்பார்ப்போடும் இருக்கப்போவதில்லை.. எப்போதும் போலவே..30 comments:

SShathiesh-சதீஷ். said...

ஐயோ அம்மா அரசியலா எனக்கு தெரியாது.

வந்தியத்தேவன் said...

அரசியல் பதிவா? வாழ்த்துக்கள். வழக்கம்போல் நைட் கொமெண்ட் அடிக்கின்றேன்.

Mohamed Faaique said...

////தமிழர்களாகிய எமக்கு ஞாபக மறதி என்ற ஒரு விஷயம் இருப்பதை மிக சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் இந்த அரசியல்வாதிகள் தான்.///

உண்மைதான்...

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

அரசியல் என்றால் அலர்ஜி.. ஆனாலும் கிரிக்கெட் பற்றிய பதிவு என்று சொடுக்கி பார்த்ததில் கிரிக்கட் இல்லாமல் போனதில் கொஞ்சம் வருத்தமும், கொஞ்சம் ஆச்சரியமும் :p

Mohamed Faaique said...

///எது எப்படி இருந்தாலும் நான் எந்த எதிர்பார்ப்போடும் இருக்கப்போவதில்லை.. எப்போதும் போலவே..//

இதுதான் எல்லோர் நிலமையும்.....

சுரேஷ் said...

சொல்லுவாங்கள்,, புதுசுக்கு ................... வெளுப்பான் எண்டு அது தான் நடக்குது.. மிக விரைவில் அடங்கி விடும்..

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

அரசியல் என்றல் கொஞ்சம் அலர்ஜி.. உண்மையா சொன்ன எனக்கு அதெல்லாம் தெரியாதுங்கோ.. ஆனாலும் கிரிக்கெட் பதிவென்று சொடுக்கி பார்த்து இந்த பதிவை பார்த்து கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி..

JAK said...

ஜெயலலிதாவுக்கு ஈழத்தமிழர் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும், தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்படுகின்ற எந்த ஒரு தீர்மானமும் இலங்கையை பாதிக்க போவதில்லை, ஜெயலலிதா இப்பொது போடுகின்ற நாடகம் இன்னும் சில காலத்திற்கு மாத்திரமே, பின்னர் தமிழன் அவர் என்ன சொன்னார் என்பதை மறந்துவிடுவான்.

ஜெயலலிதாவின் இப்போதைய இலக்கு எப்படியாவது மத்திய அரசில் இடம் பிடிப்பதே அதற்கு முதலில் கருணாநிதியை அடிக்க வேண்டும், அது தான் இப்போது நடக்கிறது. ஜெயலலிதா & கருணாநிதி இருவருமே தமிழர்களை ஏமாற்ற தேர்ந்தவர்கள். இருவரும் தனிப்பட்ட & கட்சிக்கு சாதகமா எப்போதும் எதையும் பேசுபவர்கள்.

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை அ தி மு க & தி மு க நம்மை ஏமாற்றி கொண்டே தான் இருக்கும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

whats the meaning for night comment? is that 18+????

Unknown said...

நீண்ட நாளைக்கு பின் அரசியல் பதிவு. தொடர வேண்டும் என வாழ்துகிறேன். அய்யா ஆண்டால் என்ன? அம்மா ஆண்டால் என்ன?

Anonymous said...

//கருணாநிதி செய்யாத விஷயங்களைத் தான் செய்வதாக ஜெயலலிதா காட்டுவதற்கு இந்தத் தீர்மானங்களும் அறிக்கைகளும் பயன்படும். எனினும் தமிழர்களாகிய எமக்கு ஞாபக மறதி என்ற ஒரு விஷயம் இருப்பதை மிக சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் இந்த அரசியல்வாதிகள் தான்./// இது தான் உண்மை ..((

Anonymous said...

பொருளாதார தடை என்று பேச்செடுக்கும் போதே சர்வதேசத்துக்கு மசியிற நிலையில் இலங்கை அரசு இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு ஆறு மாசம் பொருளாதார தடை விதித்தால் அதால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு மோசமானதாக இருக்கும் , இதில் பாதிக்கப்படப்போவது தமிழர்கள் தான் அதிகம்...

Anonymous said...

///இலங்கையின் அரசியற்பிரச்சினைகளுக்கு 13வது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு என்று வெறும் பேச்சளவில் சொல்வது போல இருக்காமல் அரசு அதை உறுதிப்படுத்துவதை மேலும் உறுதிப்படுத்தல்.
// பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் உள்ள அளவில் வழங்குவதே சந்தேகம்...)

Ashwin-WIN said...

அய் அரசியல் பாடம்.. என்னாமா பாடம் எடுக்குறார். புரியுது ஆனா புரியல.. ஆனா ஒன்றைமட்டும் ஆவலோட எதிர்பாக்குறன் பொருளாதார தடை வந்தா இந்திய திரைப்படங்கள் நம்ம தியேட்டர்ல ஓடுமா? நம்ம டிவி ல இந்திய சீரியல் தொல்லை இருக்காதா?

அஷ்வின் அரங்கம்

sarujan said...

உலகில் இப்படி நாடகங்களுக்கு பலியாகும் இனம் தமிழ் இனமாகத்தான் இருக்கும்

anuthinan said...

அவ்வ்வ்வ் இப்படி திடிரெண்டு சீரியஸ் ஆவிங்க எண்டு எதிர்பார்க்கவே இல்ல...!!!

இதுக்கு எல்லாம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும்....! அது.....

நீங்க நீங்கதான் (இலங்கை) நாங்க நாங்கதான் (இந்தியா) நாங்க நாங்கதான் (இலங்கை) நீங்க நீங்கதான் (இந்தியா)

வந்தியத்தேவன் said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
whats the meaning for night comment? is that 18+????//

ஹிஹிஹி அப்படியில்லை நைட்டில்தான் நான் ப்ரியாக கொமெண்ட் அடிக்கமுடியும் நான் பச்சிளம் பாலகன் ஐயா.

Shafna said...

மாற்றங்களை அதிரடியாகவும் அவசரமாகவும் விரும்பிய மக்கள்,அள்ளி அள்ளி ஓட்ட போட்டு கருணாநிதிய கொண்டு வந்தாங்க நோ யூஸ்.அடுத்து அம்மா மாற்றம் கொண்டு வருவாங்கண்டு அள்ளி அள்ளி ஓட்ட போட்டு கூட்டியாந்தாங்க, இங்கேயும் நோ யூஸ். 3 எறும்புல கடைசியா வந்த எறம்பு எனக்கு பின்னால 2 எறும்பு வருதுன்னு பொய் சொன்ன கதை தெரியுமா? அத மாரித்தாங்க இங்க மாரி மாரி 2 பேரும் பொய் சொல்லி வந்து உட்கார்ராங்க...இதுங்க 2ம் இருக்கும் வரை எப்பவுமே வடை போச்சே தான். எண்ணிக்கி புதுசா ஒன்று வந்து சுடச்சுட வடை சுட்டுத்தரப் போகுதோ? அது வரைக்கும் காத்திருப்பு....

சுதர்ஷன் said...

நல்ல பார்வை .. எப்போதும் மக்கள் எழுச்சி மீது மட்டுமே நம்பிக்கை கொண்டவன் .. யார் தூண்டி விடுகிறார்கள் என்பது அதில் முக்கியம் இல்லை :)

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

நிதானமா அரசியல் பார்வை, புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டிய இலங்கையின் யதார்த்த அரசியலை ஊடகவியலாளராக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் .( இதுவரை சிறிமுருகனின் உரையை கேட்கவில்லைஎன்றான் நேரமிருந்தால் கேட்டுவிடுங்கள் தணிக்கை செய்தால் பலதகவல்கள் பிரயோசனமானவை என கருதுகிறேன் .. இணைப்பு :-
http://www.youtube.com/watch?v=NGE3yTKWMuo&feature=player_embedded

lalithsmash said...

''இலங்கை மீதான பொருளாதாரத் தடை என்பது நிச்சயம் ஒரு பெரிய விஷயம் தான். ஆனால் இவ்வளவு காலம் இலங்கையை சிறிதளவாவது கண்டிக்க முன்வராத இந்தியா இதைப் பற்றி சிந்திக்கவாவது செய்யும் என்று யாராவது நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இருக்க முடியாது.''


சரியாக சொன்னீர்கள் லோஷன்.
ஆனால் இங்கு இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகளும் பொருளாதார தடைக்கு ஆதரவளிப்பது ஆச்சரியம் தருகிறது. அவ்வாறு பொருளாதாரத்தடை விதிக்கபடுமேயானால் பெரும்பான்மை இனத்தவர் புதிய பல மானியங்களினால் காக்கப்படுவர், ஆனால் தமிழர்?

JesusJoseph said...

பயன்னுள்ள தகவல்!.

நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

சூர்யகதிர் said...

"எது எப்படி இருந்தாலும் நான் எந்த எதிர்பார்ப்போடும் இருக்கப்போவதில்லை.. எப்போதும் போலவே.."

ஒட்டுமொத்த ஈழ தமிழர்களின் சிந்தனையும் இப்டடியாக தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

sinmajan said...

பதிவில் நீங்கள் நிறத்தை மாற்றி மாற்றி உபயோகித்த நுண் அரசியல் புரியவில்லை லோசன் அண்ணா ;-)

நிருஜன் said...

அரசியல் ஒரு சாக்கடை அதில் ஓடுகின்ற கழிவுநீர் தான் இந்த நடிப்பு கூட்டங்கள், அக மொத்தத்தில: அரசியல் + தமிழ் சினிமா = தமிழரின் அழிவு!

கார்த்தி said...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!! ஒருதரிலயும் தமிழருக்கு இப்போ நம்பிக்கை இல்லை. அவ்வளவும்தான்

ஷஹன்ஷா said...

தமிழக அரசியல் நாடக அரசியல் என்று சொல்வார்களே..அது இப்போது உண்மையாகின்றது..

நீண்ட நாட்களின் பின் நிதானமான அரசியல் பதிவு.

நன்றி அண்ணா.

நிரூஜா said...

:)

தனிமரம் said...

எல்லாரும் எமக்கு ஒன்று உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாது இருந்தால் போதும் நல்ல அலசல் லோசன் அண்ணா!

Anonymous said...

மறுபடியும் இந்தியாவை நம்பினால் எம்மைப் போன்ற முட்டாள்கள் உலகில் இல்லை. ஜெ அம்மையார் ஏதோ தமிழருக்காய் செய்யப்போகின்றேன் என்று காட்ட முயல்கின்றார். ஆனால் இவைகளின் கடைசி முடிவு ஈழத்தமிழருக்கு சார்பாக இருக்காது. மேலும் அழிவுகளே மிஞ்சும் இனிமேலும் நம்பி மோசம் போகதிருப்போமாக.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner