நாங்கள் கையாலாகாதவர்கள்
என்னால் முடியவில்லை..
எம்மால் முடியாது..
நாம் கையாலாகாதவர்கள்
இரண்டு வருடங்களுக்கு முன்னர்
ஜனவரி மாதத்தில் நாம்
என்ன செய்துகொண்டிருந்தோம்..
யார் யாருடன் மகிழ்ந்திருந்தோம்..
என்னென விஷயங்களில் இதயத்தைத் தொலைத்து
இனிமையான பொழுதுகளில் இருந்தோம்...
எமக்கு இப்போது
ஞாபமில்லை.
ஆனால் அவர்கள்????
ஒரு கையில் உயிரும்
இன்னொரு கையில்
அறுந்து தொங்கும் உடல் உறுப்புமாக
ஓடிக் கொண்டிருந்தார்களே..
நேற்று மீண்டும் அவர்கள்
காணொளிகளாக..
துண்டு துண்டாக முன்பு பார்த்த அத்தனையும்
மீண்டும் தொகுப்பாக..
குருதியும், குண்டுகள் பட்டுத்
தெறித்த உடல்களும்,கோரங்களும்,
ஒப்பாரி,அலறல்,சோகக் கூச்சல்களும்....
குரூரங்களைக் கலங்கிய கண்களுடன் மீண்டும் பார்த்தேன்..
இவை தான் எம் வரலாறு..
அடுத்த தலைமுறைக்கு
நாம் எடுத்துச் சொல்லப்போவது..
உலகுக்கே எடுத்துச் சொல்லி இரண்டு வருடங்களாக எதுவும் காணவில்லை;
இனியும் காண்போம் என்றும் நான் நம்பவில்லை
ஐ.நா அம்போ என்று விட்டு விட்டது
ஐயோ என்று நாம்
அலறினாலும், அம்மா என்று கதறினாலும்
யாரும் வரார்..
எமக்கு எல்லாம் இனி நாமே..
அரையாய் காலாய் எஞ்சிய அவர்களுக்கும்
நாம் முடிந்தால் எல்லாமாய் மாறலாம்..
அனுமதிக்கப்பட்டால்..
இன்று,
நாமெல்லோரும் இங்கே நாமாக நலமாக..
ஆனால் அவர்கள்?
எத்தனை பேர் அவர்களாக?
அவயவங்கள் இல்லாமல் எத்தனை பேர்?
ஆங்காங்கே அகதிகளாக எத்தனை பேர்?
ஆனால் நாம் மறக்கவில்லை.
எங்கள் குரல் வளைகள் இங்கே
பல விடயங்களில் சத்தம் வராத
ஊமைக் குழல்களாகவே இருக்கப் பழகிவிட்டன
விழிகள் அசைத்தாலே
விசாரிக்கப் படும் பூமியில்
குரல்கள் எழுப்பும் நிலையில்
அன்றும் நாம் இல்லை
இன்றும் நாம் இல்லை
எம்மால் முடிந்த இரக்கத்தை நாம் பட்டுக்கொண்டோம்
கோபத்தால் கொதித்துக்கொண்டோம்
கண்கள் குளமாகக் கரைந்தழுதோம்
ஏனென்றால் நாம் இயலாதவர்கள்
இறப்புக்களைப் பார்த்து
இரத்தம் பார்த்து அடுத்த நிமிடமே
அடுத்த நகர்வுக்குத் தயாராகிய அவர்களைப் போலவே,
விடுப்புக்களைக் கேட்டு அடுத்த நாளே
மனது மாறி எம்மை நாமே தேற்றும் ஒரு இயந்திர
வாழ்க்கை இங்கே எமக்கு வாடிக்கை...
அவர்களின் மரணங்கள்
மௌன சாட்சியாக மாறாதா என்று
நாமும் ஏங்கினாலும்
காட்சிகளையே ஏற்காத இடத்தில்,
சாட்சிகளாய் யார் மாறுவர்?
வேலிக்கு ஓணானாய்
சர்வதேசத்தின் அண்ணன்மாரும்
பெரிசுகளும்
குரல் எழுப்பும் ஒரு சிலரின்
குரல்கள் சத்தமாக ஒலித்தாலும்
எல்லா இடத்திலும் கேட்டாலும்
பதில்கள் இல்லை...
வேண்டிய பதில்களும்
வருவதாக இல்லை..
மரணங்கள் சத்தங்களோடு வந்தன..
நாங்கள் மனதுக்குள் அழுது
மெளனமாக இருந்தோம்..
இப்போது இந்த மௌனங்களும் பயங்கரமாகவே இருக்கின்றன..
நாங்கள் கையாலாகாதவர்கள்..
அதனால் தான் வார்த்தைகளோடும்
வருத்தங்களோடும்
பேச்சுக்களோடும் பொருமல்களோடும்
ஏக்கங்களோடும் எதிர்பார்ப்புக்களோடும்
பின் ஏமாற்றங்களோடும் மட்டும்
முடங்கிப்போனோம்...
**** இரண்டு வருடங்களாக இடையிடையே சிறு சிறு துண்டுகளாகப் பார்த்த கொடூர, சோகக் காணொளிகளை முழுமைத் தொகுப்பாக நேற்றிரவு பார்த்து, இன்று நாள் முழுவதும் தளம்பிய, ஒரு நிலையற்ற மனதுடன் புலம்பிக் கொட்டியது....
என்னால் இப்போது முடிந்தது இதுவே....
மன்னியுங்கள்....