இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆரம்பித்த ஏழரை சனி இப்போது உச்சத்தில் நிற்கிறது.
உலகக் கிண்ண இறுதி வரை வந்த திறமையான, உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக அனைவரும் கணித்த இலங்கை அணிக்கு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி இரவு ஏழு மணிக்குப் பிறகு தலையில் ஏறிக்கொண்ட உச்ச சனி இன்னும் இறங்குவதாக இல்லை.
உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்வி...
இந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன?
இது ஒரு தோல்வி அவ்வளவு தான். பலர் பல விதமாக சந்தேகப்பட்டதும் இன்னமும் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பதும் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தும் என்று இருந்த அசாத்திய நம்பிக்கை வீணாகப் போனதால் தான் என்று நான் நினைக்கிறேன்.
அது ஒரு அழகிய கனாக்காலம்..
உலகக் கிண்ணத் தோல்வியுடன் அடுத்து சங்கக்கார தலைமைப்பதவியிலிருந்து விலகல், தேர்வுக்குழு விலகல் என்று சூடு விடாமல் பரபரப்புக் கிளம்பிக் கொண்டே இருந்தது.
விலகல் செய்திகள் வரவர சந்தேக ஊகங்கள், ஐயக் கேள்விகளும் வந்துகொண்டே இருந்தன.
சங்கா, மஹேல தெளிவுபடுத்திப் பேட்டி கொடுத்தாலும் உட்கார்ந்த இடத்திலிருந்து உலகை அளப்போர் விட்டார்களா?
சங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன? ஏன்?
அந்த சந்தேகங்கள் ஆதாரம் அற்று வெறும் புரளி என்று உணர்ந்து கொள்ளும் முன்பாகவே அடுத்த பரபரப்புக் கிளம்பியது ஹஷான் திலகரத்னவிடமிருந்து..
போட்டி நிர்ணயம், கிரிக்கெட் சூதாட்டம் இலங்கை கிரிக்கெட்டுக்குப் புதுசில்லை என்று சொன்னவர் இலங்கையின் எல்லாக் கிரிக்கெட் தரப்பிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்கொண்டார்.
ஆனால் இன்று வரை ஆதாரங்களையோ, குற்றவாளிகள் என்று அவர் குறிப்பிட எண்ணியோரையோ ஹஷான் வெளியிடவில்லை என்பது அவர் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்து லசித் மாலிங்க விவகாரம். IPL போட்டிகளில் விளையாடும் நேரம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை மாலிங்க அறிவிக்க கிரிக்கெட் உலகமே இரண்டு பட்டு நின்றது எல்லாம் இப்போது எங்களுக்கு மறந்துபோனது.
மாலிங்க இப்போது இலங்கைக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாட மீண்டும் அணிக்குத் திரும்பிவிட்டார், IPL முடிந்துவிட்டது தானே.
இத்தோடு நின்றால் பரவாயில்லை..
உபுல் தரங்க உலகக்கிண்ணப் போட்டிகளின்போது ஊக்க மருந்து பாவித்த விவகாரம் இப்போது அவரை இடைக்காலத்துக்கு அணியிலிருந்து நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தும் அளவுக்குப் போயுள்ளது.
போதாக்குறைக்குப் புதிய தலைவர் டில்ஷானின் காயமும் சேர்ந்து ஏற்கெனவே பலவீனப்பட்டுப் போயுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு மேலதிகமாக ஆரம்பத் துடுப்பாட்டமும் கிழிந்து தொங்கும் அளவுக்குப் போயுள்ளது.
டில்ஷான் இரண்டாவது போட்டியில் காயப்பட்டுவிட்டார் என்று தெரிந்ததுமே அடுத்த நிமிடமே "சனத் ஜெயசூரிய மீண்டும் அணிக்குள் வருவார் பாருங்கள்" என்ற பேச்சுக்கள் பரவலாக உலவ ஆரம்பித்தது.
மீண்டுமா? அவ்வ்வ்வவ்
42 வயதாகப் போகிற ஒருவரை, ஒன்றரை வருட காலம் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாத ஒருவரை, தேர்வாளர்கள் இந்த வயதில் அணிக்குள் கொண்டு வருவது எத்தனை நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.
அதுவும் அணிக்குள் அவர் அறிவிக்கப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் முதலாவது ஒரு நாள் போட்டியுடன் தான் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக சனத் ஜெயசூரிய அறிவிக்கிறார்.
இது இவரது தெரிவுக்கான காரணத்தை மறைமுகமாக சொல்வதாகவே அமைகிறது.
எப்பிடியெல்லாம் ஐடியா பண்ணுறாங்க பாருங்க..
இலங்கைக்காகப் பல சாதனை படைத்த வீரருக்கு விடைபெறும் நேரத்தில் உரிய கௌரவம் அளித்து, அவர் தானாக விடைபெறும் வாய்ப்பை வழங்கத் தான் வேண்டும்; ஆனால் அது சனத் தான் உச்சத்தில் இருக்கும்போதே அந்த முடிவை எடுத்து இளையவர்களுக்கு விளையாடும் வாய்ப்பை வழங்கி இருந்தால்..
இப்போதும் தனக்கு இடம் வேண்டும் என்று இளைய வீரர்களின் இடத்தைத் துண்டு போட்டுப் பறிக்கப் பார்க்கும் அரசியல்வாதி ஜெயசூரியவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படக்கூடாது.
முன்பு இலங்கையின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர், சகலதுறை வீரர், match winner , சாதனையாளர்.. சிறந்த அணித் தலைவர்களில் ஒருவராக நிரூபித்தவர்.. அதெல்லாம் சரி. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறதல்லவா.
நாடாளுமன்றத்தில் கௌரவ.சனத் ஜெயசூரிய - அருகில் நாமல் ராஜபக்ச..
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
இப்பிடியே இருக்கலாமே.. யாருக்கும் தொல்லை இல்லை.
இப்போது சனத் எந்தத் திறமையாலும் அணிக்குள் வரவில்லை. தனியே அரசியல் அழுத்தங்களால் மட்டுமே அணிக்குள் வந்துள்ளார். அரவிந்த டீ சில்வா தேர்வுக் குழுவின் தலைவராக இருக்கும் அவரை MP ஜெயசூரியவினாலோ அல்லது ஜனாதிபதியினாலோ கூட யாரும் பின் பக்க வழியில் அணியில் நுழைய முடியவில்லை.
இப்போது யார் வேண்டுமானாலும் அணியில் எப்படியும் வரலாம்.. எப்படியும் அணியில் இணையலாம் என்ற நிலை.
டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.. இலங்கையில் தற்போதுள்ள மிகச் சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளர் குலசேகர அணியில் இல்லை.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நாள் அணியில் உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை சார்பாகப் பிரகாசிக்கத் தவறிய மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் மூவரும் வெளியேற்றப்பட்டுள்ளமை சந்தோசம்.
திலான் சமரவீர, சாமர சில்வா (இவ்விருவருக்கும் இனி வாய்ப்புக் கிட்டாது - தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பினராகினால் ஒழிய), சாமர கப்புகெதர ஆகியோரை வெளியே அனுப்பியுள்ளார்கள்.
ஆனால் உள்ளே வந்தவர்களில் தினேஷ் சந்திமால், ஜீவன் மென்டிஸ் ஆகியோரும் முழுத் தகுதியுள்ளவர்கள்.
புதியவரான 23 வயதான டிமுத் கருணாரத்னவும் நிச்சயம் அணிக்குள் வரவேண்டியவரே. இலங்கை A அணிக்காகவும் அண்மைக்காலத்தில் அபாரமாக ஆடி இருக்கிறார்.
ஆனால் திலின கண்டம்பி? முதல் பத்துப் பேரில் இல்லை..
இரண்டு சதங்கள் பெற்றிருந்தாலும் உப தலைவராக அவரை அறிவித்திருப்பது? அண்மைக்காலத்தில் தேசிய அணியில் விளையாடிய போதெல்லாம் சொதப்பியவர் இவர்.
அணியில் நிரந்தர இடம் கிடைப்பது உறுதியற்ற நிலையில், என்ன அடிப்படையில் இவருக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் உள்ளது.
உப தலைவராக அறிவிக்கப்படக்கூடிய அஞ்சேலோ மத்தியூசுக்கு இன்னும் பூரண உடற்தகுதி இல்லை என்பதால் தற்காலிகத் தெரிவா?
கீழே தரப்பட்டுள்ள பெறுபேறுகளைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும்.
கண்டம்பியை விட சிறப்பாக விளையாடி வரும், சனத் ஜயசூரியவை விட உள்ளூர்ர்ப் போட்டிகளில் ஆரம்ப வீரராகக் கலக்கி வரும் மஹேல உடவத்த, ரோஷேன் சில்வா, மலிந்த வர்ணபுர, மிலிந்த சிறிவர்த்தன ஆகியோருக்கோ, இல்லாவிடின் இலங்கை டெஸ்ட் அணியுடன் இங்கிலாந்தில் இருக்கும் கௌஷால் சில்வா, லஹிரு திரிமன்ன ஆகியோரை அணியில் தெரிவு செய்திருந்தால் எதிர்காலத்துக்கான முதலீடாக இருந்திருக்கும்.
புஷ்பகுமார, சச்சித் பத்திரன, சச்சித்ர சேனநாயக்க ஆகியோரும் தொடர்ச்சியாக சிறப்பாகப் பிரகாசித்தாலும், சுழல்பந்துவீச்சாளர்கள் தானே.. இம்முறையும் ரண்டீவும் , மென்டிசும் சறுக்கினால் அடுத்த தொடருக்கு உள்ளே வரலாம்.
இன்னும் இரு விஷயங்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து அறிந்தவை...
1.கண்டம்பியை உப தலைவராக அறிவித்ததன் மூலம் சனத் ஜெயசூரிய மீண்டும் அணிக்குள் தெரிவு செய்யப்பட சர்ச்சையை ஓரளவுக்கு மூட எண்ணியதாகப் பரவலாக உள்வீட்டில் பேசப்படுகிறது.
2.சனத் ஜெயசூரிய தனிப்பட்ட வீசாவில் (Personal Visa) தான் இங்கிலாந்து பயணிக்கிறார். (ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் எடுக்கப்பட்ட வீசா - SLC Team Visa அல்ல)
ஓய்வு பெறத் தான் வேண்டும் என்று முடிவு எடுத்தால் சும்மாவே அதை அறிவித்திருக்கலாம் சனத். இல்லையேல் இங்கிலாந்தில் தான் அதை அறிவிக்கவேண்டும் என்று இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினராக இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டு மைதானத்தில் வைத்து அறிவித்திருக்கலாம்.
இதையெல்லாம் விட்டுவிட்டு ......
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாத பர்வீஸ் மகறூபுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது சரி. ஆனால் உலகக் கிண்ணப் போட்டிகளில் மென்டிசை விடச் சிறப்பாகப் பந்துவீசிய ஹேரத்துக்கு அணியில் இடம் இல்லையாம்.
ஓ..சிலவேளை இளையவருக்கு ஊக்கம் கொடுக்கிறார்களோ??
அப்படி என்றால் சனத் ஜெயசூரியவே அணியில் இருக்கையில் தான் மீண்டும் அழைக்கப்பட்டால் வந்து விளையாடத் தயார் என்று அறிவித்துள்ள சமிந்த வாஸை அழைக்கக் கூடாது?
இலங்கை அணி விக்கெட்டுக்களை எடுக்கத் தடுமாறும் இந்தவேளையில் வாஸ் போன்ற ஒருவர் தானே கட்டாயத் தேவை.. குறைந்தபட்சம் அடுத்த டெஸ்ட் போட்டிக்காவது??
நல்ல காலம் முதலாவது ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சனத் அறிவித்தது..
ஆனாலும் அதன் பின் மீதி நான்கு போட்டிகளுக்கும் தேர்வாளர்கள் இன்னொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரை அனுப்புவார்களா?
இதை விட இலங்கையில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலேயே போனால் போகிறது என்று சனத் ஜெயசூரியவுக்கு ஓய்வு பெரும் வாய்ப்பை வழங்கி இருக்கலாம்.
உங்க வெளாட்டுக்கெல்லாம் நான் தானாடா கெடச்சேன்?
ஆனால் சனத் ஜெயசூரிய முன்பு படைத்த சாதனைகளையோ, இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சியில் அசுர மாற்றத்தை ஏற்படுத்தியதையோ நான் மறக்கவில்லை.. ஆனால் இந்த வயதில் அடம்பிடித்து அணிக்குள் வருவதையும், மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட பின் அந்த மாத்தறை மக்களின் பணத்தையும் வாக்குகளையும் வீணாக்கி விளையாடுவதைத் தான் கண்டிக்கிறேன்.
இப்படியே இந்த ஒருநாள் தொடரையும் இலங்கை இங்கிலாந்தில் தோற்றால் (நடக்க வாய்ப்புக்கள் குறைவு) வாஸ், முரளி, ஏன் அரவிந்த டீ சில்வா போன்றோரையும் மீண்டும் அழைப்பார்களோ???? (அர்ஜுன ரணதுங்கவை அழைக்க மாட்டார்கள் நிச்சயமாக)
ம்ம்.. இனி எல்லாம் இப்பிடித்தான்...