நல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்?????

ARV Loshan
111


நல்லவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளலாம்.. ஆனால் சிலர் தங்களை 'ரொம்பவே' நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயலும்போது அவர்களின் முகமூடிகளைக் கிழித்து மூக்கில் குத்தி உடைக்க ஆத்திரம் வருகிறது. 


இப்படி நேற்று காலையில் என் மனதில் இருந்ததை ட்விட்டரில் கொட்டி இருந்தேன்..


ஆனாலும் முன்பு சில காலம் முன் இருந்ததைப் போல எனக்குக் கோபம் வருவதில்லை. இது புதுவித நோயோ எனக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.


முன்பெல்லாம் சில விஷயங்கள் மனத்தைக் கொஞ்சமாவது சலனப்படுத்துவது போல நடந்தால் சட்டென்று வரும் கோபத்தில் ஒன்றில் நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு விடுவதுண்டு.. அல்லது பதிவாகக் கொட்டித் தள்ளுவதுண்டு.
அது பக்குவப்படாத மனநிலையோ என இப்போது நினைத்தாலும் எனக்கு அந்த சுபாவம் பிடித்தே இருந்தது.


ஊடகங்கள் பற்றி முழுக்க அறியாதவர்கள் தப்பாக எல்லாம் தெரிந்தது போல எழுதினாலோ பேசினாலோ, சரியானவற்றை நிறுவ பாய்ந்து சென்று வாதாடிய நாட்களும் இருந்தன.
ஆனால் இப்போது யார் யார் எதைப் பற்றி எழுதுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிருப்பதால் விமர்சனங்களாக இல்லாமல், கட்டுக்கதைகளாக (அது வேறு யாராவதைப் பற்றியே இருந்தாலும் கூட) இருந்தாலும் "அப்படியா" என சிரித்து விட்டு இருக்கப் பழகி விட்டேன்.


இதற்கு என் வேலைப் பளுவும், நேரமின்மையும் கூடக் காரணமாக இருக்கலாம். 
மனதில் எழும் உணர்வுகளை சட்டென்று சுருக்கமாக ட்விட் செய்து விட்டு செல்வது நேரத்தையும் காக்கும் விடயமாக மாறிவிட்டது. 


பதிவுலகத்தில் அடிக்கடி சர்ச்சைகள் தோன்றுவதும் சிறு சிறு கருத்து மோதல்கள் பெரிய குழுரீதியான மோதலாக மாறுவதும் வெகு சகஜமான விடயங்களே.. 
நான் 2008இன் இறுதிப் பகுதியில் பதிவுலகத்துக்கு வந்ததில் இருந்து இதுவரை பார்க்காத சர்ச்சைகளா, சண்டைகளா, இடம்பெறாத ஹக்கிங்கா, அல்லது வராத போலிகளா, வம்பிழுக்காத அனானிகளா.. 


இதெல்லாம் இங்கே சகஜமப்பா.. என்று மனம் பழகிக் கொண்டது.. இறுதியாக கடந்த ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய ஹாக்கிங், போலி சர்ச்சைகளைத் தொடர்ந்து வம்பு இழுத்தவர்கள்.. போலிகளை உருவாக்கியவர்கள்.. அல்லது அடிக்கடி பலருடன் சர்ச்சைகளில் ஈடுபட்டுவந்த சிலர் காணாமல் போயினர்.



சில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மனம் திறக்கிறேன்




இதுவும் கடந்து போகும் என அமைதியானது பதிவுலகம்..


தமிழக மீனவர் பிரச்சினை காலத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான சர்ச்சை.. தமிழக - இலங்கை பதிவர்களுக்கிடையில்.. ஆனால் இது நேரடியான கருத்து மோதலாக உருவெடுத்து அடங்கிப் போனது.


ஆனால் நீறுபூத்த நெருப்பாக அடிக்கடி இருந்து வந்த, வரும் ஒரு விஷயம் தான் 'அதிகார மையம்', வட்டம், கொழும்புப் பதிவர், குழு நிலை மனப்பான்மை இப்படிப் பலவிதமான பெயர்களால் அழைக்கப்படும் ஒரு வித சர்ச்சை.


பதிவுலகுக்கு வந்த பிறகு நட்பாகி நெருக்கமாகி ஒரே அலைவரிசை கொண்டவர்களாக இருப்பதனால் (ஒரே ரசனை என்று இருப்பதில்லை) ஒத்தியங்கும் நாம் சிலர்...
நான், வந்தியத்தேவன், ஆதிரை, சுபாங்கன், கவ் போய் மது, கங்கோன், பவன், சதீஸ், புல்லட் என்று இருந்த எம்மில் இப்போது வந்தி, சதீஸ் வெளிநாட்டில்..
புல்லட் பதிவுகள் இடுவதையும் கும்மியில் கலப்பதையும் வேலைப்பளுவால் விட்டுவிட்டார்; மது வேலையில் பிசி..
இப்போது அண்மைக்காலமாக இன்னும் மூவரும் எம்முடன் நட்பாக இருக்கின்றார்கள்..
நிரூசா(நவீன அதிகார மையம்;)), வதீஸ், அனுத்தினன்.
நாம் மட்டும் என்று இல்லை. கலகலப்பாக வெளிப்படையாகப் பேசிப் பழகி இணங்கி இருக்கக் கூடிய யார் வேண்டுமானாலும் இந்த வட்டத்தில் இணையலாம்.
 அதற்காக நாம் தான் இலங்கைப் பதிவுலகை இயக்குகிறோம்.. நாம் தான் ஆசீர்வதிக்கிறோம் என்று யாராவது சொன்னால் நாம் என்ன செய்ய முடியும்? 
இதற்கெல்லாம் அடிக்கடி விளக்கப் பதிவு போட்டுக்கொண்டா இருக்க முடியும்?
 
 
                                         அதிகார மைய உறுப்பினர்கள் - பார்க்கவே டெரராக இல்லை? : p
பட உதவி - நன்றி- பவன் 



இது என்னைப் பொறுத்தவரை மற்ற எல்லோருக்குமே இருக்கின்ற ஒருவிதமான தாழ்வு சிக்கலா, அல்லது அதீத உயர்வு சிக்கலா தெரியவில்லை..
எனக்கு பதிவுலகத்துக்கு நான் வந்த பிறகு கிடைத்த மிகச் சிறந்த விஷயங்களாக நான் அடிக்கடி சொல்வது என் நண்பர்களைத் தான்.. சுகம், துக்கங்களில் நெருக்கமாகப் பங்கெடுக்கும் அந்த நட்பு வட்டாரங்கள் பதிவுலகில் கிடைத்து நாம் நெருக்கமாக இருப்பது வெளியே நோக்கப்படுவது ஒரு வட்டம் என்று.. அல்லது பதிவுலகை ஆட்டிப் படைப்போர் என்று.. என்ன வேடிக்கை இது.. 


எக்சார் தான் ஆரம்பத்திலே தொடக்கி விட்ட விஷம விதை இது.. 


பதிவுலக சந்திப்புக்கள் கொழும்பிலேயே இடம்பெறுவது பற்றி வழமையாகவே குதர்க்கமாகக் கேள்விகள் எழுப்பும் எக்சார் வைத்த முட்டாள் தனமான விஷம விதைகள் எங்கே பிரச்சினை வரும் என்று பார்த்திருந்தோருக்கு மெல்ல அவல் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது.

எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன, நேரத்தை செலவழித்து நாமே ஒவ்வொரு முறையும் கொழும்பிலே பதிவர் சந்திப்பை நடத்த?
வெளியூரில் நடத்த யாராவது முன்வாருங்கள் என பகிரங்க அழைப்புக் கொடுத்தும் யாரும் முன்வரவில்லை.

அதிகார மையம் என்று கிண்டல், அச்ச, குதர்க்கத் தொனியில் அழைக்கப்பட்ட நாம் யாரும் ஈடுபடாமலே பதிவர் சந்திப்பை வேறொரு குழு நடத்தியும் அதிகார மையம் என்ற விஷயம் பதிவர் சந்திப்பிலேயே பலராலும் கல கல விஷயமாக மாறிக் கலந்துரையாடப்பட்டது.
நாமும் அதை எவ்விதத்திலும் எம்மைக் குறைவுபடுத்த மற்றோர் குறிப்பிட்ட விஷயமாகக் கணக்கெடுக்கவும் இல்லை.

இப்போது எங்கள் மின்னஞ்சல் கும்மிகளில் 'அதிகார மையம்' என்பது பிரேம்ஜியின் என்ன கொடும சார் போல ஒரு காமெடி வார்த்தை..
அதிகார மையம் என்று இப்போது நாம் அழைக்கும் நிரூசா(மாலவன்) - இறுதியாக நடந்த பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்தியோரில் ஒருவர் இதனை மிக ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறார் என நினைக்கிறேன்.

ஆனால் நாங்கள் சிலர் எமக்குள்ளே மாமா, மச்சான், சித்தப்பூ என்று மிக நெருக்கமாகப் பழகிக் கொள்வதும், கும்மிகளில் இணைந்துகொள்வதும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் வேறு சிலருக்கு (பலருக்கு அல்ல என்பதைக் கவனிக்கவும்) கண்ணைக் குத்துகிறது போலும்..

எமக்குள் நாமே பின்னூட்டிக் கொள்கிறோம், வாக்குகள் இட்டுக் கொள்கிறோம் என்பதுவும் இப்படியான சிலரின் வயிற்றெரிச்சல் காரணங்கள்..
ஏழோ எட்டுப் பேரால் ஒரு சொதப்பலான பதிவு சூப்பர் ஹிட்டாகி விடுமா? என்னய்யா இவர்களின் லொஜிக்?

இதிலே வேடிக்கை என்னவென்றால் எம்மில் பலர் இப்போ ரொம்பவே பிசியாகி பதிவு இட்டே நாளாகி விட்டது. எமக்குள் நாமே பின்னூட்டியும் வாக்கிட்டும் சில நாளாகிறது மக்கள்ஸ்.

இன்னொரு செம நகைச்சுவை இப்படிக் குற்றம் சாட்டுவோரே தமக்குள் தாமே பின்னூட்டி நூறு அடிப்பதும் நூற்றைம்பது அடிப்பதும் நடக்கிறது.. நடக்கட்டுமே.. :)

மைந்தன் சிவாவின் ஒரு பதிவுடன் தான் மீண்டும் புதிய சலசலப்புத் தோன்றியது.
அண்மைக்காலத்தில் கொஞ்சம் ஓய்ந்து போயிருக்கும் இலங்கைப் பதிவர்களிடையே புயல் வேகத்தில் பதிவுகளை இட்டுவரும் இருவர் மதி சுதாவும், மைந்தன் சிவாவும் தான்..

பவன், ஜனா, கார்த்தி, நிரூபன், சின்மஜன் போன்றோர் தொடர்ச்சியாக பதிவெழுதும் ஏனைய சிலர்.

மைந்தன் சிவாவின் பதிவிலே சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் இருந்தாலும் அந்தப் பதிவின் பின்னூட்டத்திலேயே பலரும் பலவிதமாகப் பேசி அங்கேயே அவை தீர்ந்துபோனது என்று தான் நான் நினைத்தேன்.

எந்தவொரு கசப்புணர்வும் எனக்கு அங்கே சிவாவுடன் ஏற்படவில்லை.

நான் பொதுவாகவே நேரடியாகவே எல்லா விஷயங்களையும் பேசிவிடுவதால் பின்னூட்டமாகவே மனதில் நினைத்ததை சொல்லி முடித்து வந்தும் விட்டேன்.
ஆனால் இன்னும் பல நண்பர்கள் சொன்ன சில,பல விஷயங்கள் இன்னும் சிலருக்கு மீண்டும் ஒரு 'அதிகார மையம்' பற்றிய எண்ணக் கருத்துக்களை விதைத்திருக்கின்றன போலும்.
ஒரு சிலரின் விஷமப் பின்னூட்டங்களில் தெளிவாகவே அவை புரிந்தன.

தொடர்ந்து வந்த சில பதிவுகளிலும் தோணித்து ஒரு வகை நையாண்டி, குத்தல், மொட்டைத் தலை - முழங்கால் முடிச்சுக்கள் போன்றவற்றை நான் சரியாக உணராவிட்டால் நான்காவது வருடத்தில் பதிவுலகில் நான் இருப்பதில் அர்த்தம் இல்லையே..

இதில் ஓட்டை வடை நாராயணன் என்பவர் மிக முக்கியமானவர்.
வானொலி, அறிவிப்பாளர் என்ற பதங்களை அவர் பயன்படுத்திய விதங்கள் எதற்காக என்பதை நான் அறியாது போனால் நான் அறியாதவனே..

பலதரப்பட்ட விஷயங்களை அண்மைக்காலத்தில் பதிவிட்டு வரும் நிரூபன் அண்மையில் உண்மையான சம்பவம் என்று ஒரு வானொலிக் கதையை இட்டிருந்தார்.
எனக்கும் என்னைப் பற்றி அறிந்தவருக்கும் அது என் பற்றியது அல்ல என மிகத் தெளிவாகவே தெரியும். ஆனால் இந்தப் பதிவு வெளியான சமயமும், அதில் ஒ.வ.நாராயணின் குத்தலான பின்னூட்டங்களும் என் கவனத்துக்கும் வந்தன.
சிரித்துக் கொண்டேன். எதையோ நினைத்து எங்கேயோ முட்டிய கதை தான் போலும்..

இன்றும் கூட ஜனாவின் பதிவில் ஓட்டை வடை நாராயணனின் பின்னூட்டம் விஷமம்+வம்பு மற்றும் கேவலமாக இருக்கிறது.

ஆனால் எனக்குப் புரியாத விஷயம் ஏன் இது? யார், எங்கே , எதனால் ஆரம்பித்தது?

பதிவுலகம் ஒவ்வொருவருக்குமானது.. அவரவர் தங்கள் ரசனைகளைப் பதிந்து வரட்டுமே.. ஏன் மற்றவர்களின் சிந்தனைக்குள் இன்னொருவரின் தலையீடு வரவேண்டும்?

நேற்று ட்விட்டரில் தற்செயலாக நிரூபனுடன் தகவல் பரிமாறியபோது சில விஷயங்களை நேரடியாகக் கேட்டும் சொல்லியும் தெளிந்துகொண்டோம். வாழ்க்கையும் நட்புகளும் ஆரோக்கியமாகவும், சலனங்கள் இன்றியும் செல்வதற்கு இந்த நேரடிப் பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானவை.

மூன்றாம் தரப்பை நான் எங்கேயும் ஆதரிப்பதில்லை.

அதற்காகத் தான் இந்தப் பதிவும் கூட..

-----------------

அண்மையில் பதிவர் ஜனா தனது பதிவுலக மூன்றாம் ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இட்ட பதிவில் என்னைப் பற்றியும் சொல்லி இருந்தார்.

அதற்குப் பிறகு தான் சிலகாலமாக மனதில் இருந்த சில விஷயங்களைக் கொட்டலாம், கேட்கலாம் என்று நினைத்தேன்.

எனக்குப் பதிவுலகில் இந்தப் பிராந்தியப் பதிவர், இந்த நாட்டுப் பதிவர் என்றெல்லாம் தாண்டி பல நண்பர்கள் உள்ளார்கள்.
அப்படியாக நட்பாக அறிமுகமானவர்களில் ஒருவர் ஜனா.

கொழும்பில் இறுதியாக நடந்த பதிவர் கிரிக்கெட் மற்றும் சந்திப்பில் தான் ஜனாவை அறிமுகம்.அப்போது சந்தித்தது மட்டுமே.

அவரது வலைத்தளத்தை முன்பே வாசித்து வந்தாலும், அவர் இலங்கைப் பதிவர் என்று தெரிந்தது பதிவர் சந்திப்புக்கு ஒரு ஆறு மாத காலத்துக்கு முன்பே.

கிரிக்கெட் போட்டியில் ஜனாவும் நானும் எதிரெதிர் அணிகளில்.
இரு போட்டிகளிலும் ஜனாவின் விக்கெட்டை நானே எடுத்திருந்தேன். 
அந்தவேளையில் யாரோ ஒருவர் (எனக்கு யார் என்று ஞாபகமில்லை)" எதிரிக்கு எதிரி சரியாத் தான் இருக்கு" என்று கொமென்ட் அடித்தது ஞாபகம் வருகிறது.

அட என்னடா இது இப்போ தான் முதலாவது தரம் சந்திக்கிறோம்.. இது என்ன எதிரிக் கதை என்று யோசித்து அப்படியே விட்டு விட்டேன்..

நான் யாரையுமே எதிரி என்று அழைப்பதோ, மற்றவருக்கு சொல்வதோ, ஏன் என் மனதில் நினைப்பது கூடக் கிடையாது. எனக்கு எதிரிகள் கிடையாது.. அதிக நண்பர்கள் உள்ளார்கள் என்பது எனக்குப் பெருமை.
மற்றவர்கள் எனை எதிரியாக நினைத்துக் கொள்வதற்கும் கறுவிக்கொள்வதற்கும் நான் ஒன்றும் செய்ய முடியாதே.
பலருக்கு நான் எதிரி என்றால் அதுவும் என்னிடம் உள்ள ஒரு பலம் என்றே நினைக்கிறேன்.

மீண்டும் இந்த 'எதிரி' கதை வெளியே வந்தது அனுத்தினனின் பிறந்தநாள் விருந்தின் போது.

நாம் (எம் 'அதிகார மைய'க் குழுவுடன் நடுநிலையாளர் என்று நான் வேடிக்கையாக விளிக்கும் மருதமூரானும் ) அனுத்தினனின் வீட்டில் இருந்த நேரம் அனுத்தினனுக்கு ஒரு அழைப்பு வருகிறது...

"உங்கள் எதிரி தான் " என்று எம் பக்கம் பார்த்து சொல்லிவிட்டு வெளியே போய்ப் பேசுகிறார்.
எதிரியா யாரது? என்று புதிராக யோசிக்கப் பின்னர் தான் தெரியவருகிறது அது ஜனா என்று..

அடுத்த ஓரிரு நாட்களில் ஜனாவின் பேஸ்புக் பக்கத்தில் 'எதிரி' பற்றி ஒரு ஸ்டேட்டஸ்.
ஆகா என நினைத்துக் கொண்டேன்.

ஜனா பற்றி நான் நேரடியாக அவருக்கும் பலருக்கும் சொல்லவேண்டிய விஷயம் உள்ளது.
இந்தவருடமும் கொழும்பு பல்கலைக் கழகம் பதிவர்களில் ஒருவரைத் தெரிவு செய்து வழங்கப் போகிறார்கள்.

இது சம்பந்தமாக ஆக்கங்களுக்காகவும், பதிவர்களுள் யாருக்கு வழங்கலாம் என்பது குறித்த சிபாரிசுக்காகவும் பல்கலை மாணவர்கள் எம்மில் சிலரை அணுகியிருந்தார்கள்.

கடந்த வருடம் எனக்கு இந்த விருது கிடைத்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இம்முறை நான் எனது மனம் திறந்த சிபாரிசைக் கொடுத்துள்ளேன்.

ஜனாவிடம் இது பற்றிக் கேட்டபோது "கிரிக்கெட் பதிவு எழுதும் லோஷன் போன்றோருக்குத் தானே குடுக்கப் போறீங்கள். அவன் கிரிக்கெட், சினிமாப் பதிவு எழுதும் விசரன்" என்று சொல்லியுள்ளார்.
இது ஒரு சில நாட்களின் பின்னர் பெரிய தயக்கத்தின் பின்னால் என் காதுகளுக்கு வந்தபோதும் நான் அப்போது பொருட்படுத்தவே இல்லை.

இதற்கு முதலும் பலரால் பல தடவை ஜனா என்னைப் பற்றியும், என் பதிவுகள் பற்றியும் வசை பாடியதாக எனக்கு சொல்லியபோதும் நான் கணக்கெடுக்கவில்லை.
எதோ எங்கள் அலைவரிசை ஒட்டவில்லை என தட்டிவிட்டுக் கொண்டேன்.

ஜனாவுடன் நெருக்கமாகப் பழகவேண்டிய தேவையோ, இன்றில் வேறு கொடுக்கல் வாங்கலோ இல்லாத நிலையில் இதன் உண்மைத் தன்மை, காரண காரியங்கள் பற்றி அவரிடமே விசாரிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

ஆனால் ஜனாவின் பதிவில் பார்த்த என் பற்றிய இரு விஷயங்களுக்காகவும், சில பொதுவான வார்த்தைப் பிரயோகங்களுக்காக்கவுமே இதை இங்கே வெளிக்கொண்டுவருகிறேன்.

(ஜனா யாரிடம் இவ்வாறு சொன்னாரோ, அவருக்கும் ஜனாவுக்கும் இடையில் எந்தவொரு முறுகலும் வரக்கூடாது என்பதால் ஒன்றுக்கு இருமுறை அவரிடம் கேட்ட பின்னரே இதைப் பதிவிடுகிறேன். இதை ஜனா இல்லை என்று மறுத்தால்.. என்ற கேள்விக்கே இடமில்லை)

ஜனாவை முதல் தடவையாக சந்தித்த பின்னர் அவர் பற்றி என் பதிவிலே நான் குறிப்பிட்டது...


ரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு


இவ்வளவுக்கும் ஜனா பற்றி அதற்குப் பின்னரும் நான் ஒற்றை வார்த்தையால் கூட அழைத்திருக்கவில்லை. அவன். இவன் என்ற விளிப்புக் கூட என்னிடம் இருந்து வரவில்லை.

இங்கே யாரும் மிக நல்லவர்கள் இல்லை. புண்ணியாத்மாக்கள் என நாம் எல்லோரையும் நம்பிப் பழகுவதில் உள்ள சிக்கலால் தான் சில வட்டங்களை நாம் உருவாக்கி எம்முடன் ஒத்த அலை வரிசையுள்ளவர்களுடன் மட்டுமே பழகுகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் தான் இப்படியான விஷயங்கள்.

ஜனா சொன்ன இந்த விடயங்கள்...
//நான் நினைக்கின்றேன் அவர் அறிவிப்பாளராக இருப்பது பதிவுலகத்தில் அவருக்கு நன்மைகளைவிட, சாபங்களைத்தான் அதிகம் கொடுத்திருக்கின்றது என்று.//
//இப்போது எழுந்துள்ள தேவையற்ற சச்சரவுகளுக்கும் தீர்வாக லோஷன், ஜனா உட்பட அனைவரும் மீண்டும் படிக்கவேண்டிய பதிவாக அது இருக்கின்றது.//

சாபங்கள்? 
என்னைப் பொறுத்தவரை என் தொழில் எனக்கு சோறு போடுவது மட்டுமன்று; அது எனக்கான ஒரு தவம். அந்தத் தொழிலின் பாக்கியம் தான் எனக்கு வலையுலகத்திலும் வாசிப்பிலும் ஈடுபாட்டை அதிகரிக்க உதவுகிறது.
சாபங்கள் என ஜனா சொல்வது எதிரிகள் எனக்கே தெரியாமல் அதிகரிப்பதையா?

தேவையற்ற சச்சரவு - நான் எவற்றிலும் ஈடுபடாத ஒருவன்.எதையும் நான் ஆரம்பிக்கவும் இல்லை. அதிகரிக்கவுமில்லை. லோஷன், ஜனா என்ற பெயர்கள் அங்கே இருப்பதன் மூலம் ஜனா சொல்ல வருவது மறைமுகமாக இந்த சச்சரவுகள் ஆரம்பித்தது அந்த 'எதிரி' விஷயத்திலா?

அப்படியானால் மைந்தன் சிவாவின் பதிவுக்கு முன்னதாகவே ஒரு ரகசிய பூகம்பம் தயாராகிக் கொண்டிருந்ததா? இப்படியெல்லாம் நான் யோசிக்கவேண்டியுள்ளது.

(நான் எல்லோர் பதிவிலும் பின்னூட்டம் இடாததும், பலருக்கு வாக்குகள் இடாததும், என் இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதில் இடாததும், எனக்குப் பின்னூட்டம் இடுவோரின் இடுகைகளுக்கு நான் பின்னூட்டம் இடாததும் என்னைத் தலைக்கனம் பிடித்தவனாகக் காட்டுவதாக யாராவது எண்ணினால் அவர்கள் என்னை சரியாக அறியாதோரே.. 
அப்படி சிலர் நினைப்பதற்காக என்னை மாற்றிக் கொள்வதற்கும் நான் விரும்பவில்லை.. அல்லது விரும்பினாலும் இயலவில்லை. நேரமின்மை காரணமாக.
நான் நினைக்கின்ற பல விஷயங்களை பதிவாகக் கொண்டுவரவே நேரம் இன்றி இருக்கிறேன் மக்கள்ஸ்.
அப்படியிருந்தும் கிடைக்கின்ற நேரத்தில் வாசிக்கும் பதிவுகளில் பிடித்தவற்றுக்குப் பதில்+வாக்கு இடுகிறேன் )

நான் பரந்துபட்ட வாசிப்பாளன் என்பதால் ட்விட்டர், பேஸ்புக், பலரின் பதிவுகள் (பின்னூட்டாவிட்டாலும், என் ரசனைக்குள் அடங்காததால் வாக்கிடாவிட்டாலும் கூட) என்ன நடக்கிறது.. யார் யார் யாருடன் கூடுதலாக ஒத்து நடக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது அவ்வளவு சிரமமான விடயம் அல்லவே..
சிலரது பாஷையில் சொல்லப் போனால் வேறு சில வட்டங்கள்.. :)

இதில் மருதமூரான் பற்றியும் நான் சொல்ல வேண்டும்..அவரை நான் நடுநிலையாளன் என அழைப்பது சிலருக்குக் கிண்டலாக தொனிக்கலாம்.. மருதமூரானுக்கே அது எரிச்சலூட்டலாம்.
ஆனால் முன்னைய சில சர்ச்சைகளில் (யாழ்தேவி திரட்டி குறிப்பாக) பலரது பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து தனித்தனியாகப் பலருடனும் பேசிப் பழகித் தனித்தனியான உறவுகளைப் பேணி வந்தவர், வருபவர் மருதமூரான்.. 

இதனால் தான் நான் இட்ட அந்தக் காரணப் பெயர்.

எல்லா வட்டங்களிலும் இடைவெட்டாக வரக்கூடிய வெகு சிலரில் ஒருவர். இவருக்கு இங்கு நடக்கும் பலது புரியும்.. இதனால் தான் அண்மையில் பேஸ்புக்கிலும் புலம்பியிருந்தார்.

மருதமூரான் மனம் திறந்தால் இன்னும் பலது வெளிவரலாம்..
இவரது பேஸ்புக் பக்கமே அண்மையில் ஹக் செய்யப்பட்டது இன்னொரு அசிங்கத்தின் உச்சம்.

இந்தப் பதிவு சர்ச்சைகளைப் புதிதாக ஏற்படுத்தலாம்.. எனக்கு நான் உருவாக்காத எனக்கே தெரியாத பல புதிய எதிரிகளைத் தரலாம்.. அல்லது எனக்கு இருக்கும் நண்பர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம்.

ஆனாலும் எதற்கும் தயாராக மனதைத் திறந்து வைத்துவிட்டேன்.. 

ஜனாவின் பதிவில் பின்னூட்டியது போல...

மனதைத் திறந்து வைத்தால் வேறு பிரச்சினைகள் எழாது என்ற எனது அசையாத நம்பிக்கையால்..


Post a Comment

111Comments

Please Select Embedded Mode To show the Comment System.*