தந்தை எவ்வழி மகன் அவ்வழி என்பது இப்படியா? அவன் வெளியே எங்காவது ஷொப்பிங் போனால் அதிகமாகக் கேட்கும் பொருட்கள் புத்தகங்கள் - வாசிக்க, dvd , cd கள் - படம் பார்ப்பதற்கும் படிப்பதற்கும்.. இவற்றுக்குப் பிறகு தான் விளையாட்டுப் பொருட்கள்.
தொலைக்காட்சியில் பார்க்கும் விளம்பரங்கள், மொண்டசூரி நண்பர்களின் அரட்டைகள் மூலம் இப்போதெல்லாம் கார்ட்டூன்கள், தனக்கான ஆங்கிலப் படங்களைத் தேடிக் கொண்டுவந்து அது வெளியிடப்படும் நாளையும் சரியாகக் குறித்துக் கூட்டிப் போகுமாறு கோரிக்கையை வைத்துவிடுகிறான்.
அவன் கெஞ்சிக் கேட்கும் விதத்துக்கு மறுக்கவும் முடியாது, தாமதப்படுத்தவும் முடியாது.
என் மகன் ஹர்ஷுவுக்காக அண்மையில் அவனுடன் சென்று பார்த்த இரண்டு ஆங்கிலப் படங்கள் பற்றி..
ஆங்கிலப்படங்கள் பற்றிப் பதிவிடுவது இதுவே முதல் தடவையும் கூட..
ரியோ
முழு நீளக் கார்ட்டூன் திரைப்படம்.
பிரேசிலில் முதலில் வெளியிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. பின்னர் அதன் வரவேற்பினால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டதாம்.
பிரேசிலில் ரியோ டீ ஜெனிரோ காட்டுப் பகுதியில் பிறக்கும் அரியவகை நீல நிற மக்காவ் (blue macaw) பறவையொன்று அமெரிக்க மிருகக் காட்சிசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் தவறுதலாக விழுந்துவிட ஒரு பெண் லிண்டா அதை எடுத்து தன் செல்லப் பிராணியாக அல்லாமல், நண்பனாகவே வளர்க்க ஆரம்பிக்கிறாள்.
அது தான் படத்தின் ஹீரோவான ப்ளூ.
அரியவகைப் பறவையினம் ஒன்று அழிந்துவிடக் கூடாது என டூலியோஸ் என்னும் பறவை ஆராய்ச்சியாளர் ப்ளூவைத் தேடிவருகிறார்.
ப்ளூவை ரியோ டீ ஜெனிரோவிலுள்ள அதே இனப் பெண் பறவையுடன் சேர்ப்பதன் மூலம் அந்த இனத்தை அழியாமல் பாதுகாக்கலாமே என்று கூறி ப்ளுவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல டூலியோஸ் முனைந்தாலும், ப்ளூவுடன் தானும் வரவேண்டும் என லிண்டா அடம்பிடிக்க, மூவரும் பிரேசில் பயணமாகிறார்கள்.
ரியோ டீ ஜெனிரோவில் நீல நிற மக்காவ் பெண் பறவையைக் கண்ட மாத்திரத்தில் காதல் பிறந்து (லவ்வுனா நம்ம தமிழ்ப்படக் காதல் தோத்துப் போயிடும்)ப்ளூ காதல் வயப்பட்டுவிடுகிறார். அந்தப் பெண்பறவை ஜுவேல் ஒரு துணிச்சலான பறவை. சுதந்திரமாகக் காட்டிலேயே வாழ விரும்புவது.
ஆனால் அங்கே தான் வில்லன் என்டர்.
அரிய பறவைகளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் ஒன்றினால் (கொக்கட்டூ பறவை ஒன்றின் துணையினால்) பளுவும் ஜுவெல்லும் கடத்தப்பட, (அங்கேயும் சொந்த இனத்தாலேயே காட்டிக் கொடுப்பு ) இன்னும் சில நல்ல பறவைகளின் துணையினாலும் துணிச்சலான ஜுவேல்லின்முயற்சியாலும் தப்பிக்க முயற்சிக்கின்றன.
ஆரம்பத்தில் சிறு பறவையாக முதலாவது பறப்பு முயற்சியே தோல்வியாக முடிந்துவிட்டதாலும், லிண்டாவின் வீட்டில் செல்லமாக வளர்ந்ததாலும் பறக்க முயற்சி செய்யாமலேயே வளர்கிற ப்ளூவை எப்படியாவது பார்க்கவைக்க அதன் காதலி ஜுவேல் முயன்றாலும்.. ம்ஹூம்.. பயந்ததாக, முயற்சியே எடுக்காததாக ப்ளூ இருக்கிறது.
அந்த ப்ளூவின் பறப்பு முயற்சி வெற்றி பெற்றதா, ப்ளூவின் காதல் என்னாச்சு, கடத்தல் காரரிடம் இருந்து எப்படித் தப்புகிறார்கள், அடுத்த கட்டம் என்ன என்று பரபர விறுவிறுப்பாக சொல்லுகிறது ரியோ.
அதெல்லாம் சரி ரியோ என்றால் யாருடைய பெயர் என்று யோசிப்பீன்களே? ரியோ டீ ஜெனிரோவில் கதை நடப்பதால், அந்த இடத்தின் அழகுக்காக ரியோ என இயக்குனர் பெயர் வைத்தாராம்.
காதல், முயற்சி, அன்பு, நட்பு போன்றவை கார்ட்டூன் பாத்திரங்கள் மூலமாக அழகாக வெளிப்படுத்தப்படுவது அழகு.
ரியோ நகரின் அழகையும் சித்திரங்களாக வெளிப்படுத்துகிறார்.
லிண்டா - டூலியோஸ் காதல் உருவாகும் ரசனையான தருணங்களும், ப்ளூ- ஜுவேல் காதல் உருவாகையில் வரும் பாடலும், படத்தோடு பயணிக்கும் இசையும் எங்களுக்கானது என்றால்,
இடையிடையே வரும் சின்ன சின்ன காமெடிகள், கடத்தல்காரருக்கு முதலில் உதவும் சிறுபையன், அந்த நாய், சிறு பறவைகள், சிறு குரங்குக் கூட்டத்தின் அடாவடி என்று சிறுவரைக் குதூகலிக்க வைக்கும் பல அம்சங்களும் இருப்பதால் ஹர்ஷுவுக்கும் செம கொண்டாட்டம்.
படம் முடியும்போது பிரேசிலுக்கு ஒரு மினி சுற்றுலா போய்வந்த சந்தோஷக் களைப்பு.
தன் சொந்த மண்ணின் காதலை பல காட்சிகளிலும், இயற்கை, பறவை மீதான பாசத்தினூடாக வெளிப்படுத்தியுள்ள இயக்குனர் கார்லோஸ் சல்தானாவுக்கு (Carlos Saldanha) பாராட்டுக்களை தாராளமாக வெளிப்படுத்தலாம்.
இந்தப் படம் எவ்வ்வளவுக்கு ஹர்ஷுவின் மனதில் இடம் பிடித்தது என்று அண்மைய மிருகக் காட்சி சாலை சென்றபோது அறிந்துகொண்டேன்.
மக்காவ் பறவைகள் இருக்கும் பக்கம் போனவுடன் "அப்பா, ரியோ படத்தில் வந்த ப்ளூ" என்றான் படு குதூகலமாக..
----------------------------
குங் பூ பன்டா 2
கடந்த வாரம் பார்த்தது குங் பூ பன்டா 2 .
நம்ம கேப்டனை வைத்து மொக்கைபோடும் குங்குமப்பூ போண்டா தான் இப்போ ஞாபகம் வருது.
மூன்றாண்டுகளுக்கு முன் வந்த பகுதி ஒன்றின் தொடர்ச்சி போலவே வந்துள்ளது இந்த இரண்டாம் பகுதி.
அதிலே குரல் கொடுத்துள்ளோர் தான் இதிலும்.
பிரபல ஹோலிவூட் - Hollywood நடிக, நடிகையர் ஏஞ்செலினா ஜோலி, ஜாக்கி சான், டஸ்டின் ஹோப்மன், வான் டம், லூசி லியூ என்று பல பழகிய குரல்கள்..
பிரம்மாண்டமான காட்சியமைப்புக்களோடு பார்க்கும்போது பரவசம் தான். ஆனால் என்ன இலங்கையில் யில் பார்க்க முடியாதது கொஞ்சம் குறை தான்.
தமிழ் சினிமாக்களில் எமக்கு ரொம்பப் பழக்கப்பட்டதும், சீன மொழிமாற்றுப்படங்களிலும் அடிக்கடி பார்ப்பதுமான பழிவாங்கும் கதை.
இதில் கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து.
தாய்-தந்தையரைக் கொன்ற வெள்ளை மயில் அரசனையும் அவனது பலம் வாய்ந்த படையையும், தன் ஐந்து நண்பர்களுடன்- Furious Five சென்று போ - Po (குங் பூ பன்டா) ஜெயிப்பதை சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.
சீன அரண்மனைகள், அழகான இயற்கைக் காட்சிகள் அத்தனையையும் கார்ட்டூனாகக் கொண்டுவந்திருப்பதில் பிரம்மாண்டமும், நேர்த்தியும் அருமை.
ஆனால் எனக்கு முதலாவது பகுதியை விட இது கொஞ்சம் போரடித்தது. அதிக எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
ஆனால் ஹர்ஷுவுக்கு இது ஒரு பெரிய த்ரில்.
வழமையை விடக் குறைவான சிப்சும், சோடாவும், ஐஸ் க்ரீமும் அவனால் எடுக்கப்பட்டதைப் பார்த்தால் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு என்று தெரிந்தது.
அதை விட வீட்டுக்கு வந்து காலை உயர்த்தி ஊ,ஆ என்று விட்ட கராத்தே கிக் ஒன்று அவனை ஒரு மினி குங் பூ பன்டா ஆக்கிவிட்டது.
ஆனாலும் அந்தப் பெண்புலி தான் தனக்குக் கூடப் பிடித்ததாம் என்கிறான்.
மிருகக் காட்சிசாலைக்கு அடுத்தநாள் கூட்டிப் போனபோது அங்கே இல்லாத பன்டாவைக் கேட்டால் நான் எங்கே காட்டுவது?