அங்காடித் தெரு பற்றிய என் பதிவுக்குள் செல்ல முன் திரைப்பட ரசிகர்களே, தயவுசெய்து இப்படியான நல்ல திரைப்படங்களை நம் எல்லோரும் சேர்ந்து ஊக்கம் வழங்கி வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
இல்லாவிடின் தரமான,புதிய முயற்சிகளைத் தருகின்ற படைப்பாளிகள் ஊக்கமிழந்து விடுவர்.
'வெயில்' மூலம் ஆச்சரியபடுத்தி, உருகவைத்த வசந்தபாலனின் மூன்றாவது படைப்பு.(அல்பம் தான் முதல் படம் 2003- ஞாபகப் படுத்தியமைக்கு நன்றிDream girl)
வெயிலில் மனித மனங்களின் சலனங்கள்,பாசம்,உறவுக் கட்டமைப்பின் உணர்ச்சிகளைக் காட்டிய வசந்தபாலன், 'அங்காடித் தெரு'வில் எங்களுக்குள்ளே இருந்து கதாமாந்தரை எடுத்து, வாழ்க்கையில் தினமும் நாம் சந்திக்கின்ற ஆனால் கவனிக்கத் தவறுகிற சில மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
பெரு நகரங்களின் பல்பொருள் அங்காடிகள்,பெரிய ஆடையகங்கள் இன்னும் தொழிற்சாலைகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கொத்தடிமைகளாக கிடந்தது தம் குடும்பங்களுக்காக உழலும் எத்தனையோ இளைய சமுதாயத்தினர் பற்றி எம்முள் எத்தனை பேருக்குத் தெரியும்?
கிராமத்திலிருந்து பசுமையான உலகம் காணப் பட்டணம் புறப்பட்டு வந்து படும்பாடுகளை செய்ரகியாக அல்லாமல் படு யதார்த்தமாக சொல்வதே அங்காடித் தெரு.
அடிக்கடி இந்தியா செல்லும் எனக்கு இனி ரங்கநாதன் தெருப் பக்கம் ஷொப்பிங் செல்லும் போதெல்லாம் கடை ஊழியர்கள்,சிப்பம்ந்திகளைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவிதப் பரிதாப உணர்வு ஏற்படுவது நிச்சயம்.
இறுதியாக கடந்தவருடம் போயிருந்தபோதும் கூட, அந்தத் தெருவின் நெரிசலில் பலவித முகங்களை,பலவித தொழில் செய்வோரைப் பார்த்தபோது அவர்களின் வாழ்க்கைக் கதைகள் எத்தனைவிதமாக இருக்கும் என தற்செயலாக யோசித்தது இப்போது மனதுக்குள் மீள ஓடுகிறது.
இயல்பு மாறாமல்,எளிமையாக, யதார்த்த வாழ்க்கையில் இப்படியும் எங்களை சுற்றி நடக்கின்றன என்று முகத்தில் அறையும் கதை.
புதுமுகம் மகேஷ் கதாநாயகன். கிராமங்களில் நாம் காணும் திறமையான,ஆனால் உயர்கல்வி கற்க முடியாத குடும்ப சூழ்நிலையில் வாடும் இளைஞனாக அச்சொட்டாகப் பொருந்துகிறார்.
வெகு இயல்பான நடிப்பு.துடிப்பான வெகுளியான ஒரு அச்சு அசல் கிராமத்து இளைஞன்.
கதாநாயகி அஞ்சலி- கற்றது தமிழில் பார்த்த அந்தப் பிஞ்சு முகத்தில் இந்தப்படத்தில் தான் எத்தனை முகபாவங்கள்?
அஞ்சலி தான் அங்காடித் தெருவின் அச்சாணி.
கனி என்ற இவர் பாத்திரப் பெயர் மனதிலே ஒட்டிக்கொண்டு விட்டது.
கண்களும் உதடுகளும் உணர்ச்சிகளைக் காட்டும் விதம் அபாரம்.இயக்குனர்கள் பொருத்தமான பாத்திரங்களை இவருக்கு வழங்கும் பட்சத்தில் தமிழில் இன்னொரு சிறந்த நடிகையை நாம் காணலாம்.
கதாநாயகனின் நண்பனாகப் படம் முழுவதும் வரும் முக்கிய பாத்திரம் கனாக் காணும் காலங்கள் - விஜய் டிவி புகழ் பாண்டிக்கு.
சிரிக்கவைக்கும் பல காட்சிகளில் அசத்துகிறார். அப்பாவியான தோற்றத்துடன் பல இடங்களில் குணச்சித்திர நடிப்பையும் காட்டுகிறார்.
கடையின் மேற்பார்வையாளராக கருங்காலி என்ற பட்டப் பெயரோடு வில்லனாக வரும் பாத்திரம் பிரபல இயக்குனர் வெங்கடேஷுக்கு.கடையில் வேலை செய்யும் அப்பாவி பையன்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமல்லாமல் பார்க்கும் எங்களுக்கும் எரிச்சல் தரும் பாத்திரத்தில் மனிதர் அசத்துகிறார்.
சில காட்சிகளில் நேரில் கண்டால் கொலை செய்யும் அளவுக்கு கோபமும் வருகிறது.
பேசாமல் சரத்குமார்,சிம்பு,அர்ஜுன் இவர்களை வைத்துக் கொலைவெறி,மொக்கை,மசாலாக்களை எடுப்பதை விட்டுவிட்டு (அடுத்தபடம் மாஞ்சாவேலுவாம்..கடவுளே) வில்லனாகவே வெங்கடேஷ் நடித்தால் எமக்கும் நல்லது;அவருக்கும் நல்லது.
அது சரி சினேகாவுக்கு என்னாச்சு? பாவம்.. இப்போதெல்லாம் இப்படி துண்டு,துக்கடா பாத்திரங்கள் தான்..
ஆனால் அவர் வரும் இடமென்னவோ ரசிக்கலாம்.. முக்கியமாகப் பாண்டியினதும்,கடை முதலாளியினதும் குசும்புகள்.
படத்தின் அநேகமான பாத்திரங்கள் புதியவர்களாகவே இருப்பதால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு தோன்றாமல் வாழ்க்கையில் நடப்பவற்றை நாம் நேரே பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.
அந்தந்த தொழில் செய்வோரை அப்படியே பயன்படுத்தினாரா வசந்தபாலன்?
அவ்வளவு நேர்த்தி,இயல்பு,மிகைபடா நடிப்பு.
சிறு சிறு பாத்திரங்களும் மிகக் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டுக் கையாளப் பட்டிருப்பதும், அவர்கள் படத்தின் முக்கிய கட்டங்களைத் தீர்மானிப்பதும் அருமை.
தற்கொலை செய்துகொள்ளும் பெண்,அவளது கோழைத்தனமான காதலன், வீதியோரத்தில் வியாபாரம் செய்யும் விழிப்புலனற்ற முதியவர்,கழிவறையை தன் வியாபார முதலீடாக்கும் இளைஞன், வீதியோரக் குள்ள மனிதர், அவரின் விபசார மனைவி, ஆறுதல் சொல்லும் இஸ்லாமியப் பெரியவர், கதாநாயகனினதும் கதாநாயகியினதும் தங்கைமார், முதல் காதலி அஷ்வினி (வாயுக் கோளாற்றால் காதல் பிரிந்த முதல் சரித்திரம்) என்று மனதில் நிற்கிறார்கள்.
இவர்களோடு இடங்களும் படத்தில் முக்கியமாகின்றன.
பனி புரியும் அங்காடி,அந்தத் தெரு, ஆண்களும் பெண்களும் தங்கும் இடங்கள்,சாப்பிடும் மெஸ் .. இவற்றைக் காட்டியிருக்கும் படு யதார்த்தம் வசனங்களால் கூட ஏற்படுத்த முடியாத தாக்கத்தைத் தருகிறது.
வசனம் ஜெயமோகன். தனது மேதாவித்தனத்தையோ,புலமையையோ காட்டாமல் இந்தையல்பான படத்துக்கு எப்படி வசனங்கள் தேவையோ அளந்து அழகாகத் தந்திருக்கிறார்.
சின்ன சின்ன வசனங்களில் மனதின் மெல்லிய இடங்களைத் தொட்டுவிடுகிறார்.பாராட்டுக்கள்.
வசனகர்த்தா என்றால் இப்படித் தான் இருக்கவேண்டும்.
அவரது மீதிப் பணியை நேர்த்தியாக செய்கிறது ரிச்சர்ட் மரிய நாதனின் கமெரா.
குலுக்காமல் கண்களை அலுக்க விடாமல் இயற்கை வெளிச்சத்துடன் நேர்த்தியான கோணங்களில் காட்சிகளைத் தந்துள்ளார்.
கடைக் காட்சிகளும், வீதியைப் படம் பிடித்திருக்கும் விதமும் எம்மையும் உள்ளே இருப்பவர்களாக எண்ண வைக்கிறது.
மேலதிக வெளிச்சமின்றி தங்குமிடக் காட்சிகளில் அவர்கள் படும் துன்பங்களையும் அந்த இடங்களின் இட நெருக்கடியையும் அவலத்தையும் நுட்பமாகக் கமெரா பதிவு செய்கிறது.
பாடல் காட்சிகளிலும் இயல்பை மீறாத இயக்குனர்,ஒளிப்பதிவாளரை பாராட்டலாம்.
பாடல்கள் எல்லாவற்றிலும் (யானைக்காது தவிர) ஒரு மென் சோகம் இழையோடுகிறது.
இரு பாடல்கள் விஜய் அண்டனியின் இசையிலும், நான்கு பாடல்கள் ஜி.வீ.பிரகாஷின் இசையிலும் இனிக்கின்றன.
கண்ணில் தெரியும் வானம், மைக்கேல் ஜாக்சன்,ரஹ்மானின் இசையில் கலவை.
ஆனால் காட்சிகளின் சோகமும், வரிகளின் ஆழமும் கண்கலங்க வைக்கின்றன.
அவள் அப்படியொன்றும் அழகில்லை சுவாரஸ்யம்.. சிரிக்கவும் வைக்கிறது.
உன் பேரை சொன்னாலே - சினிமா நட்சத்திரங்களாக தம்மை எண்ணி ஆடும் அந்த அப்பாவிகளின் உணர்வைத் தொனிக்கவிடுகிறது.ரசிக்கலாம்.
பாடல்களின் இடையூறு படத்தைப் பெரிதாகத் தொய்யவிடாது இருப்பதற்கு கதை ஓட்டம் ஒரு காரணமாக இருக்கலாம்.
எனினும் பின்னணி இசையில் விஜய் அன்டனி சொதப்பி இருக்கிறார். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். அங்காடித் தெருவை இன்னும் அது மெருகேற்றி இருக்கும்.
படத்தின் ஆரம்பத்திலேயே இந்தப் படக் கதையோ, சம்பவங்களோ, பாத்திரங்களோ யாரையும் குறிப்பிடுவன அல்ல.. என்ற வழமையான வசனங்கள்.. ஆனால் அடிக்கடி காட்டப்படும் சில காட்சிகள்,சீருடைகள், பின்னணியில் இடையிடையே வேண்டுமென்று காட்டப்படும் இன்னொரு பிரபல ஆடையகம்/பல்பொருள் அங்காடி, ஸ்னேஹாவின் சேலை விளம்பரம், செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்ற பெயர், முதலாளியாக வருபவரின் நடை,உடை,பாவனைகள் என்று பல விஷயங்கள் எங்கேயோ,யாரையோ சாடை மாடையாக அடிப்பது போலிருக்கே..
(சென்னைவாசிகள் தான் உண்மை சொல்லவேண்டும்)
இவ்வளவு இயல்பான ஒரு துன்பியல் கோர்வைக்கிடையிலும் இடையிடையே இயல்பான, படத்தின் பாதையை விட்டு விலகாத நகைச்சுவைகளையும் லாவகமாகப் புகுத்தியது இயக்குனரின் திறமை தான்.
பல காட்சிகளில் கண் கலங்கி விட்டேன்.
மேற்பார்வையாளரின் பாலியல் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு குடும்பத்துக்காக உழைக்கும் நாயகி ஒரு கட்டத்தில் பொங்கி வெடிப்பது, வேலை போய்விடும் என்ற அச்சத்தில் காதலன் கோழையாவது கண்டு மனம் வெதும்பி காதலி தற்கொலை செய்துகொள்ளும் அந்த இடம் (என்ன ஒரு உருக்கமான நடிப்பு - அந்தப் பெண் பாராட்டுக்குரியவள்) - அந்தக் கோழைப் பயல் மீது கொலை வெறியே வந்தது,வயதுக்கு வந்த தங்கை இருக்கும் நாய்க் கூடு, அவளுக்கு சடங்கு செய்ய முடியாத இயலாநிலைக்கு வருந்துவது, கடைசிக் காட்சிகளில் தொனிக்கும் இயலாமை,அன்பின் வெளிப்பாடு,பரிதாபம் என்று எதைத் தான் விடுவது?
குருவிகள் இரண்டின் தலையில் பனங்காயை அல்ல பலாப்பழத்தை வைத்து த்நிச்சலாக அந்த இனிய பழத்தை எங்களுக்கு கனியக் கனிய தந்திருக்கும் இயக்குனரின் துணிச்சல்+திறமைக்கு வாழ்த்துக்கள்.
பல காட்சிகளில் முக்கியமாக தானாகத் தொழில் தேடும் இளைஞன், இறுதிக் காட்சி என்று இயக்குனர் இளைஞர்களுக்கு நம்பிக்கை விதைகளை ஊன்றவும் தவறவில்லை. அதற்கும் வாழ்த்துக்கள்.
இயக்குனர் வசந்தபாலன் மீண்டும் ஜெயித்துள்ளார்.ஈரமுள்ள இதயங்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள்.
பலர் திருந்துவதற்கும் இடமுள்ளது.
இயக்குனர் இந்தப் படத்தை எடுப்பதற்கு ரங்கநாதன் தெரு, சென்னையின் ஷாப்பிங் தலை நகர் T நகரில் எத்தனை நாள் தன உதவி இயக்குனர்களோடு தகவல் திரட்டில் ஈடுபட்டிருந்தாரோ .. அசத்தல். விளம்பரப் படம் முதல் வியாபார யுக்தி வரை அத்தனை விஷயங்களையும் விலாவாரியாகத் தந்துள்ளார்.
இப்படியான நல்ல படங்களை வெற்றி பெற வைக்காவிட்டால் தொடர்ந்தும் தமிழ்படம் சாட்டையடி கொடுத்த அதே சகதிக்குள் கிடந்தது உழலும் சாபக்கேட்டுக்குள் அகப்படவேண்டியது தான்.