இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் குறித்து,வேட்புமனுக்கள் தாக்கல் செய்து, வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் வழங்கப்பட்டு விட்டன.
இப்போது இலக்கங்களுடன் தங்களுக்கு என் வாக்களிக்க வேண்டும் என ஏட்டிக்குப் போட்டியாக எல்லா வேட்பாளர்களும் கூவி,கோரி வருகின்றனர்.
வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் செய்துபார் என்று சொல்வார்கள். ஆனால் அரசியலில் இருந்துபாருங்கள்..
கூட்டணி,கட்சி அமைத்துப்பார் தேர்தலில் வாக்குக் கேட்டுப்பார் என்று சொல்வீர்கள்.
அப்படியொரு அவசரம்,தடுமாற்றம்,கூட்டல் கழித்தல் லாபக் கணக்கு..
தேசிய, ஜனநாயக,மக்கள்,பொது,ஐக்கிய,தமிழ். இப்படி ஏதாவது சொற்களை தேடி எடுத்து இட்டுக்கட்டிய ஏராளமான கட்சிகள் இம்முறை தேர்தலில்.சாதாரண வாக்காளன் ஒருவனுக்கு யார் எந்தக் கட்சியில் என்று மகா குழப்பம்.
ஒப்பீட்டளவில் தமிழர் பிரதேசங்களில் தான் வேட்பாளர்களும்,கட்சிகளும்,சுயேச்சைக் குழுக்களும் இம்முறை அதிகம் போட்டியிடுகின்றார்கள்/போட்டியிடுகின்றன.
கிடைக்கும் அற்ப சொற்ப வாக்குகளுக்காகவா இத்தனை முட்டல்,மோதல் என்று கேட்டால், இதற்குள்ளே பல மாயாஜாலங்கள் புதைந்து கிடப்பது தெளிவு.
கடந்த முறை தமிழர்களின் பூரண ஆதரவோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிடைக்கக்கூடிய அத்தனை ஆசனங்களையும் அள்ளிக் கொண்டு போனவிதம் கண்டு அன்றே அனைவருக்கும் ஒரு அரசியல் கனவு இருந்திருக்கும்.தகுந்த வேளைக்காக காத்திருந்தவர்களுக்கு இப்போது புலிகளும் இல்லை. யார்வேண்டுமானாலும் எதையாவது கொள்கை எனச் சொல்லி வாக்குக் கொள்ளை இடலாம் எனும்நிலையில் அனைவருமே குதித்துள்ளார்கள்.
எனக்குத் தெரிந்தவரை நான் அறிந்த பத்துப் பேராவது வெளிநாடுகளிலிருந்து வந்து இம்முறை பல்வேறு கட்சிகளின் பெயரிலும் சுயேச்சைக் குழுக்களிலும் யாழ்ப்பாணம்,வவுனியா,திருகோணமலை ஆகிய இடங்களில் தேர்தலில் நிற்கின்றனர்.
ஏன் எனக் கேட்டபோது இது தான் தருணமாம். குறுக்கு வழியில் சுலபமாகப் பணம் உழைத்துக்கொள்ள தேர்தலைப் பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் எல்லாம் யார் என்றே தெரியாமல் எத்தனை வாக்குகளை மக்கள் வழங்கப் போகிறார்கள்?
சின்னங்கள் போதாமல் பழங்கள்,மிருகங்கள் எல்லாம் இம்முறை தேர்தல் ஆணையகத்தால் வழங்கப்பட்டுள்ளன.
அம்பாறையில் நான்கு அடி வாக்கு சீட்டாம்.
மக்களின் வாக்குகள் சிதறி,பிரதிநிதித்துவம் குறைவதைப் பற்றியெல்லாம் இவர்கள் யாரும் கவலைப்படப் போவதில்லை. தப்பித் தவறிக் குருட்டு அதிர்ஷ்டத்தில் தமக்கு ஒரு ஆசனம் கிடைத்தால் போதும் என்பதே இந்த 'திடீர்' வேட்பாளர்களின் நோக்கமெல்லாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஐந்து வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பலருக்கு இம்முறை தேர்தலில் அந்தக் கூட்டமைப்பு சார்பாக தேர்தல் வாய்ப்புக் கிடைக்காததால் இன்று அவர்கள் தனி வழி கண்டு இறங்குகிறார்கள்.
ஆசன ஆசை தான் கரணம் என்று யாராவது சொல்லிவிடுவார்களோ என்று அதற்கு ஏராளமான கொள்கை விளக்க சப்பைக்கட்டுகள் வேறு.
இவ்வளவு காலமும் மக்களுக்காக என்று இவர்கள் செய்தவற்றைப் பட்டியல்போட சொல்லுங்கள்.ஒரு மண்ணும் இல்லை.வெளிநாட்டில் வாழும் இவர்கள் வால்கள் தவிர இலங்கையில் ஒருவரும் இவர்கள் பற்றி அக்கறைப்படப் போவதில்லை. யார்க்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ மக்கள் பத்மினி,கஜேந்திரன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற இந்த நாற்காலி நோக்கர்களை புறக்கணிக்க வேண்டும்.
அடுத்து இவ்வளவு காலமும் மக்கள் மீது எள்ளளவும் அக்கறையில்லாமல் இப்போது மக்கள் துயரம் கண்டு பொறுக்கமுடியாமல் களம் குதித்திருப்போர்.
இதில் பலர் வாரிசுகள்,இன்னும் சிலர் ஊதுகுழல்கள், சிலர் வாக்குப் பிரிக்கவென்றே களம் குதித்திருப்போர்.
இவர்களை வாக்களர் இனம் கண்டு பிரதிநிதித்துவம் சிதறிப் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.இது வரலாற்றுக் கடமை அப்படி இப்படியென்று நானும் கூறவரவில்லை.
எனினும் கள்ளர்களில் நல்ல கள்ளர் யாரென்பதே இப்போது எம்மக்கள் முன்னுள்ள கேள்வி.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது களம் இறக்கியுள்ளவர்களில் இதுவரை கறைபடாதவர்கள்,மக்களிடம் நற்பெயர் பெற்றவர்கள் பலர் உள்ளார்கள்.
தண்ணீரை ஒதுக்கி பால் பருகுவதே எம் கடமை.
இறுதியாக த.தே.கூ வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் (இதை இவ்வாறு சொல்லமுடியுமா தெரியவில்லை) தேர்தலின் பின்னரான தமது அரசியல் தீர்வுத் திட்டமாக 2002 ஆம் ஆண்டு அரசும் புலிகளும் இணங்கிய ஒஸ்லோ பிரகடனத்தை முன்னிறுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கும் ஒஸ்லோ பிரகடனத்துக்குமிடையில் எவ்வளவு தூரம் என யாராவது கேட்டல் அவர்களும் விழிப்பார்கள்.ஆனாலும் முப்பது வருடகாலத் தழும்புகள் சொல்லும் பாடம்,இப்போதைக்கு இது போதும் என்பதே.எனினும் பொறுப்பை நேரடியாகத் தலையில் சுமக்காமல் தேர்தலில் வெற்றிபெற்ற தம் கூட்டமைப்பினர் மீதி விடயங்களைத் தீர்மானிப்பர் என தலைவர் சம்பந்தன் மேலும் சொல்லியுள்ளார்.
இவ்வளவாவது தெளிவாக வந்தார்களே என நாம் கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.
இவர்கள் இணைந்த கட்சி அல்லது அவசரமாகப் பெயர் சூட்டப்பட்ட தேர்தல் கூட்டுக்கு தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி எனப் பெயர் சூடிக் களம் இறங்குகிறார்கள்.இவர்கள் என் தனியாகப் போட்டியிடுகின்றார்கள் என்ற காரணம் எம் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தாலும் இவர்கள் சொல்வது த.தே.கூ அடிப்படிக் கொள்கை,தமிழ்த் தேசியம் போன்றவற்றில் இருந்து தடம் புரண்டுவிட்டது. இதனாலேயே வட்டுக்கோட்டை தீர்மானத்தினை முன்வைத்து தாம் களம் இறங்குகிறோம்.
இவ்வளவுகாலமும் இந்த ஞானம் எங்கே போனது?
மக்களுக்காக இவர்கள் செய்தது என்ன? த.தே.கூ விலிருந்து இவர்கள் விலகியது அல்லது விலக்கப்பட்ட பிறகே இது தோன்றியதா?
இவ்வளவு காலமும் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானம், மக்கள் தந்த ஆணை என்று எம்மவரை உசுப்பேற்றி வாங்கித் தந்தவை காணாதா?
மேலும் சிலர் அரசுடன் ஐக்கியமாகி இம்முறை தேர்தல் களம் காண்கின்றனர்.
இவர்களைக் கடந்த முறை தேர்தலில் போட்டியிட வைத்தவர்கள் நல்ல காலம் இல்லை.மக்களே எமக்குத் தேவை.கொள்கைகள் கொடி கட்டிப் பறக்கின்றன.
ஜனாதிபதியாகும் கனவில் தனியாக நின்ற சிவாஜிலிங்கமோ இடதுசாரிகளுடன் ஐக்கியமாகி இம்முறை விட்டேனா பார் என நிற்கிறார்.
ஆனால் அவர் இடது சாரிகளுக்கும் ஆப்பு வைப்பார் போலத் தெரிகிறது.
அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இலங்கையில் இருநாடுகள் இருக்கின்றன. அதில் ஒன்று தமிழருக்கு சொந்தமானது என வீர கோஷம் எழுப்பியிருக்கிறார்.எல்லாம் நடந்து கடந்து போன பிறகுமா?
யாவரை இலங்கையில் சுப்பிரமணிய சுவாமி என நாம் கருதுவதில் சந்தேகமில்லையே..
மந்தைகள் போல ஆகிவிட்டது தமிழர் தம் பிரதிநிதிகளின் நிலை. இதனால் தான் புலிகள் தாம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பதை முழுமையாகத் திறந்துவிடாமல் இறுக்கி வைத்தார்களோ?
தேர்தல் முடிந்த பிறகு தமிழருக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி வெற்றி பெறும்(அதிக உறுப்பினர்களைப் பெறும்) தமிழ் தரப்போடு பேசுவதாக ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில் ஒரு பலமான தரப்பாக தமிழ்த் தரப்பு நாடாளுமன்றம் செல்ல வேண்டியது அவசியமாகிறது. கடந்த முறை 22 பேரோடேயே ஒன்றும் செய்ய முடியாத நிலை மாறி, இம்முறை சிதறிக்கிடக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு ஒன்றாகக் கோரிப் பெறப்போகின்றன என்ற கேள்வி அச்சத்தையும் எமது எதிர்காலம் குறித்த பெரியதொரு இருள் பாதையையும் காட்டி நிற்கிறது.
மேலும் சிலர் அரசுடன் ஐக்கியமாகி இம்முறை தேர்தல் களம் காண்கின்றனர்.
இவர்களைக் கடந்த முறை தேர்தலில் போட்டியிட வைத்தவர்கள் நல்ல காலம் இல்லை.மக்களே எமக்குத் தேவை.கொள்கைகள் கொடி கட்டிப் பறக்கின்றன.
ஜனாதிபதியாகும் கனவில் தனியாக நின்ற சிவாஜிலிங்கமோ இடதுசாரிகளுடன் ஐக்கியமாகி இம்முறை விட்டேனா பார் என நிற்கிறார்.
ஆனால் அவர் இடது சாரிகளுக்கும் ஆப்பு வைப்பார் போலத் தெரிகிறது.
அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இலங்கையில் இருநாடுகள் இருக்கின்றன. அதில் ஒன்று தமிழருக்கு சொந்தமானது என வீர கோஷம் எழுப்பியிருக்கிறார்.எல்லாம் நடந்து கடந்து போன பிறகுமா?
யாவரை இலங்கையில் சுப்பிரமணிய சுவாமி என நாம் கருதுவதில் சந்தேகமில்லையே..
மந்தைகள் போல ஆகிவிட்டது தமிழர் தம் பிரதிநிதிகளின் நிலை. இதனால் தான் புலிகள் தாம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பதை முழுமையாகத் திறந்துவிடாமல் இறுக்கி வைத்தார்களோ?
தேர்தல் முடிந்த பிறகு தமிழருக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி வெற்றி பெறும்(அதிக உறுப்பினர்களைப் பெறும்) தமிழ் தரப்போடு பேசுவதாக ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில் ஒரு பலமான தரப்பாக தமிழ்த் தரப்பு நாடாளுமன்றம் செல்ல வேண்டியது அவசியமாகிறது. கடந்த முறை 22 பேரோடேயே ஒன்றும் செய்ய முடியாத நிலை மாறி, இம்முறை சிதறிக்கிடக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு ஒன்றாகக் கோரிப் பெறப்போகின்றன என்ற கேள்வி அச்சத்தையும் எமது எதிர்காலம் குறித்த பெரியதொரு இருள் பாதையையும் காட்டி நிற்கிறது.
மக்கள் சரியாக யோசித்து தீர்மானிப்பார்களா?
முன்பு பரவலாகப் பேசப்பட்டது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் த.தே.கூ சேர்ந்து போட்டியிடும் என்பதை நான் எப்போதும் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.
காரணம் தர்க்க ரீதியாக நிறைய சிக்கல்கள் ஆசனப் பங்கீட்டில் இருந்திருக்கும்.அதைவிட ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.மு.கா வுக்கு முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆணை இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.
அதற்குப் போட்டியாகவும்,அதிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டதாகவும் கிளம்பிய அநேகமான முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம் வாக்காளர்கள் நிராகரித்து விட்டார்கள்.
இப்போது அரசாங்கமும் ஜனாதிபதியும் வாக்குகளைப் பிரித்தாளும் சூழ்ச்சியென்ற ஆயுதத்தைக் கையில் எடுத்திருப்பதன் முழு வெளிப்பாடே
அம்பாறையில் 66 கட்சிகள்&குழுக்கள், மட்டக்களப்பில் மொத்தமாக 45 ..இன்னொரு வழியும் உண்டு.. அதுதான் கடந்த தேர்தலின் பின் செய்தது போல அமைச்சுப் பதவி காட்டி ஆட்கள் ஒவ்வொருவராகப் பறித்தெடுத்தது..
இந்த சூழ்ச்சியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க.. அடுத்தவர் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம்.
இதனால் தான் இம்முறை தேர்தலுக்குப் பின் யாரும் கட்சி மாறிவிடக் கூடாதென ஐ.தே.க தலைவர் ரணில் தம் கட்சிக்காரரிடம் முற்கூட்டியே கடிதங்களைப் பெற்றுள்ளார். பட்டறிவல்லவோ..
எனினும் அண்மயில் வீடியோவினால் பிரபலமாகியிருக்கும் நித்தியானந்தம் போல இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 'கதவைத் திற காற்று வரட்டும்' என்கிறார்.
அதாவது யார் வேண்டுமானாலும் தம்முடன் வந்து சேரலாம்..அதுபோல தேர்தலுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் பிரிந்து,விலகி செல்லலாம்..
அருமையான கொள்கையல்லவோ?
கட்சி,கொள்கை பார்த்து வாக்களித்தவர்கள் எல்லாம் இளிச்சவாயர்களா?
இன்னும் நிறைய எழுத வேண்டி இருந்தாலும் பதிவின் நீளம் கருதிப் பிறிதொரு பகுதியாகத் தருகிறேன்.
அந்தப் பகுதியில் கொழும்பில் உள்ள தேர்தல் குழப்பங்கள், மலையக மயக்கங்கள் பற்றியும் பார்க்கலாம்.