IPL 2010 அலசல் - பகுதி 2

ARV Loshan
10


மூன்றாவது IPL இன் முதலாவது போட்டி மிக விறுவிறுப்பாக நிறைவுக்கு வந்துள்ளது.
சௌரவ் கங்குலியின் தலைமையிலான கொல்கொத்தா அணி மிக நேர்த்தியாகவும்,நிதானமாகவும் ஆடி நடப்பு சம்பியன் டெக்கானை மண்கவ்வ வைத்துள்ளது.

முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் கொல்கொத்தாவின் மீளக் கட்டிஎழுப்பலும், பின்னர் கில்க்ரிஸ்ட்டின் அதிரடியின் பின்னர் பந்துவீச்சில் காட்டிய தீவிரமும் கொல்கொத்தாவுக்கு அபாரமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளன.

இலங்கையின் அஞ்சேலோ மத்தியூஸ் உலகத் தரமான சகலதுறை வீரராக தான் வளர்ந்துவருவதை மீண்டும் சர்வதேச அரங்கொன்றில் பிரம்மாண்டமாகக் காட்டியுள்ளார்.
டெல்லி அணியினால் சரியாகப் பயன்படுத்தப்படாத ஒவேயிஸ் ஷா இன்று கொல்கொத்தாவுக்காக ஆடிய அதிரடி ஆட்டம் அவர் எவ்வளவு பயனுள்ள ஒரு வீரர் என்பதைக் காட்டி இருக்கும்.

கில்லி,வாஸ் - வயதேறினாலும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் சிங்கங்கள் சிங்கங்களே..

இனி கடந்த பதிவின் தொடர்ச்சியாக ஏனைய நான்கு அணிகளின் பலம்,பலவீனங்களை அலசுவோம்..


கிங்க்ஸ் XI பஞ்சாப்
புதிய தலைவராக குமார் சங்கக்காரவுடன் களமிறங்கும் பஞ்சாப் அணி முகாமில் இம்முறை உற்சாகம் கொஞ்சம் குறைவு தான்.கட்டிப்பிடி வைத்தியம் செய்ய ப்ரீத்தி சிந்தாவும், காசை வாரி வழங்க கணக்கற்ற அனுசரணையாளர் இருக்கும்போதும், காயத்தின் காரணமாக முக்கியமான பல வீரர்களை இழந்து பலவீனமாகத் தான் இம்முறை பஞ்சாப் ஆரம்பிக்கிறது.

முன்னாள் தலைவரும் அதிரடி ஆணிவேருமான யுவராஜ் சிங் அண்மையில் தான் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளார்.
ஷோன் மார்ஷ்,ப்ரெட் லீ,இர்பான் பதான், ஜெரோம் டெய்லர் ஆகியோரின் உபாதைகள் அவர்களை முதல் சில வாரங்களுக்காவது விளையாட விடாது எனத் தெரிகிறது.

எனினும் அனுபவமும் ஆற்றலும் கொண்ட இலங்கை இரட்டையர் மஹேல,சங்கா இருவரில் தான் அதிக பொறுப்புக்கள் சுமத்தப்பட இருக்கின்றன.யுவராஜும் பூரண சுகத்தோடு களமிறங்கினால் அணியின் மத்திய வரிசை உறுதியாகிவிடும்.

இவர்கள் தவிர இங்கிலாந்தின் ரவி போபரா,ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோரது சகலதுறைத் திறமைகளும், ஸ்ரீசாந்த்,யூசுப் அப்துல்லா,பியுஷ் சாவ்லா, ரமேஷ் பவார், புதிதாக இம்முறை இணைந்துகொள்ளும் மேற்கிந்திய இளம் துடுப்பாட்ட வீரர் அட்ரியன் பரத், எல்லோராலும் கழற்றிவிடப்பட்டு பஞ்சாப் அடைக்கலம் கொடுத்துள்ள மொகமத் கைப் (ஞாபகமிருக்கா இவரை?) போன்றோரும் நம்பிக்கை தருகிறார்கள்.
யுவராஜ்,கைப்பின் சகா சோதி,இளம் வீரர்கள் கோயேல்,ஸ்ரீவத்சவா ஆகியோரும் பிரகாசிக்கக் கூடியவர்களே.
எனினும் எல்லா அணிகளையும் விட விஞ்சி இம்முறை பஞ்சாப் அணி நம்பிக்கையாக இல்லை.

முதலாம் சுற்றில் சில போட்டிகளை வெல்வதற்கே சங்காவும் சகாக்களும் மிக சிரத்தையோடும், மிக சிறப்பாகவும் விளையாட வேண்டி இருக்கும்.

அரையிறுதி இம்முறையும் சிரமமே.



ராஜஸ்தான் ரோயல்ஸ்

ஷேன் வோர்னின் மாயஜாலத்தாலும்,ஆஸ்திரேலியா பயன்படுத்திக்கொள்ளாத அவரது தலை சிறந்த தலைமைத்துவப் பண்புகளாலும் முதலாவது IPL இல் வெற்றிக் கனி பறித்த ராஜஸ்தான் கடந்த முறை தென் ஆபிரிக்க ஆடுகளங்களில் தடுமாறி இருந்தது.இப்போது மீண்டும் பழக்கமான களங்களில் கலக்கும் எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது.

40 வயதாகிற மந்திரவாதி வோர்ன் இம்முறையும் அதே போன்ற துடிப்புடன் இருக்கிறாரா என்பதே எல்லோரதும் ஆர்வமான கேள்வி.
வெளிநாட்டு வீரர்களை முழுமையாக நம்பாமல் உள்ளூர் 'வளங்களை' சரியாக இனம் கண்டு பயன்படுத்துவதே வோர்னின் வெற்றியின் ரகசியம்.இம்முறையும் அவர் ஊக்கப்படுத்தி இளைய இந்திய வீரர்கள் மூலமாக சாதிக்கவே நினைக்கிறார்.
வோர்னின் பிரியத்துக்குரிய அதிரடி மன்னன் யூசுப் பதான் தன கிரிக்கெட் வாழ்க்கையின் மிக சிறந்த அதிரடி form இல் இருக்கிறார்.
ஸ்வப்னில் அஸ்னோட்கர்,நாமன் ஓஜா,த்ரிவேடி,முனாப் படேல்(எனக்கென்றால் கண்ணில் காட்டமுடியாதவர் இவர்),கடந்த முறை அதிரடியைக் கலக்கி பந்துவீச்சுப் பாணியின் சர்ச்சையில் காணமல் போன கம்ரான் கான் ஆகியோர் வோர்னின் அதிரடி ஆயுதங்கள்.

ஆனால் ராஜஸ்தானின் சர்வதேச வீரர்கள் இம்முறை அனைத்து அணிகளையும் அச்சுறுத்தக் கூடியவர்களாகத் தெரிகிறது.
அனைவரும் வோர்னினால் பிரத்தியேகமாக சேர்க்கப்பட்டவர்கள்.

காயத்திலிருந்து மீண்டுகொண்டிருக்கும் தென் ஆபிரிக்கத் தலைவர் ஸ்மித், ஜொஹான் போதா,வேகப்பந்துவீச்சாளர் மோர்னி மோர்கல், ஆஸ்திரேலியாவின் form இல் இருக்கும் முன்னணி சகலதுறைவீரர் வொட்சன்,ஆஸ்திரேலியாவின் ஓய்வுபெற்ற வீரர் டேமியன் மார்டின், இங்கிலாந்தின் அதிரடி சகலதுறை வீரர் மச்கேரனாஸ், இவர்களுடன் இப்போது அண்மைக்காலமாக அதிவேகமாகப் பந்துவீசி அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் அச்சப்படுத்திவரும் ஷோன் டைட் என்று வரிசை நீளம்.

ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் சகலதுறைத் திறமைகளை ராஜஸ்தான் இம்முறை அதிகமாகவே இழக்கப் போகிறது.இரகசியமாக தன்னை உயர் விலைக்கு வேறொரு அணிக்கு தானே விர்கப்பார்த்து கையும் களவுமாக மோடியிடம் அகப்பட்டு இம்முறை தடை செய்யப்பட்டுள்ளார் ஜடேஜா.

ராஜஸ்தான் வோர்னின் முழுமையான ஆளுகையில் இருப்பது தான் அவர்கள் பலமும் பலவீனமும்.. சில நட்சத்திரங்களின் பலம் பிரம்மாண்டமாய் தெரிந்தாலும், வயதேறிச் செல்லும் வோர்னும்,மார்ட்டினும் இளைய வீரர்களின் உத்வேகத்துக்கு ஈடுகொடுப்பார்களா என்பதைப் பொறுத்தே ராஜஸ்தானின் ராஜ நடை உள்ளது.
அணிக்கு ஷில்பா ஷெட்டியின் மேலதிக பயிற்சிகள் தேவைப்படலாம்,, உற்சாகத்துக்கு..

அரையிறுதியை எட்டிப் பார்க்கும் வாய்ப்பு உள்ள அணி இது..


மும்பை இந்தியன்ஸ்

உலகின் பணக்கார இந்தியரின் சொந்த அணி..
உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் தலைமை தாங்குகிறார்.
உலகின் சிறந்த வீரர்கள் பலர் உள்ள அணி.
நல்ல form இல் உள்ள பல வீரர்கள் உலா அணி..
இப்படி மும்பை அணி இம்முறை கனவு அணிகளில் ஒன்றாக IPL களம் காண்கிறது.

சச்சின் தனது வாழ்நாளில் மிக சிறந்த ஓட்டங்கள் குவிக்கும் காலகட்டத்தில் தலைமை தாங்குகிறார்.
அவரோடு சக ஆரம்ப ஜோடியாக அதிரடி மன்னன் சனத் ஜெயசூரிய.
அர்சிகர்களுக்கு கேட்க வேண்டுமா?
கனவு அணிஎன்று சொன்னதில் என்ன தப்பு?

ஆரம்ப பந்து வீச்சு ஜோடி.. சகீர் கான்&லசித் மலிங்க.
சுழல் பந்துவீச்சுக்கு ஹர்பஜன் சிங்..
FORM இல் உள்ள அதிரடி வீரர் கீரன் பொல்லார்ட் அதிக விலைக்கு வாங்கி புயல் கிளப்பக் காத்துள்ளார்.
சகலதுறை நட்சத்திரங்கள் டுமினி,பிராவோ..
இன்னும் டில்கார பெர்னாண்டோ(எமக்கு மட்டும் தான் இவர் மீது நம்பிக்கை இல்லை அப்படியா?),நேப்பியர்,மக்ளறேன்,மற்றும் இளைய இந்திய நட்சத்திரங்கள் அபிஷேக் நாயர்,தவல் குல்கர்னி,ஷீகர் தவான்,அம்பாடி ராயுடு என அணி மிகப் பலமானது.

இவர்களோடு ICL இல் பிரகாசித்து மீண்டுள்ள தமிழக வீரர் ராஜகோபால் சதீஷையும் கவனியுங்கள்.ஒரு நேர்த்தியான அதிரடி துடுப்பாட்ட வீரரும்,சகலதுறை வீரரும்.

எனவே என்ன இல்லை இந்த அணியிடம் எனும் அளவுக்கு அபாரமான அணியாகவே மும்பை தெரிகிறது.போதாக்குறைக்கு பயிற்சியளிக்க பொல்லாக்,ஜோன்டி ரோட்ஸ்..

இத்தனையும் போதாதா இறுதிப் போட்டியிலும் வென்று IPL சாம்பியனாக?
அஆனாலும் என மனது என்னவோ மும்பை அரையிறுதி சென்றாலும் அதன் பின் சறுக்கும் என்றே சொல்கிறது.. (இது சோதிடம் அல்ல)

அதிரடிகளை மும்பை போட்டிகளில் பார்க்கலாம்..
இறுதி வரை செல்லக் கூடிய பலமான அணி இது..


கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்

கிங் கானின் அணி. கங்குலி மீண்டும் தலைவராக மாறியதை அடுத்து அணி திடம் பெற்று அணிக்குள் ஒற்றுமை வந்தாலும் கூட இன்னமும் முழு உத்வேகம் பெறவில்லை என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால் கெயில்,மக்கலம் போன்ற அதிரடி நட்சத்திரங்கள் இல்லாமலேயே இன்று பெற்ற முதல் வெற்றி கொல்கொத்தாவை இனி உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் எனக் காட்டுகிறது.

சீருடை கருப்பில் இருந்து ஊதாவாக மாறியுள்ளது.பயிற்றுவிப்பாளராக நல்ல விளைவைத் தரக்கூடிய டேவ் வாட்மோர், பந்துவீச்சாளர்களுக்கு தக்க ஆலோசனை தர வசீம் அக்ரம் என்று கொல்கொத்தா இம்முறை ஒரு கை பார்க்கலாம் என ஷா ருக் கானுடன் கிளம்பியுள்ளது.

அதிரடி,அனுபவம்,இளமை என நல்லதொரு கலவை.
உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷேன் பொன்டை அதிக விலைக்கு வாங்கியுள்ளர்கள்.ட்வென்டி 20 சர்வதேசப் போட்டிகளில் சதமடித்த இருவருமே இவர்கள் அணியில்.(கெயில்,மக்கலம்) உலகில் ட்வென்டி 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்த ஹோட்ஜும்,T 20 சர்வதேசப் போட்டிகளில் கூடுதல் ஓட்டங்கள் குவித்துள்ள மக்கலமும் இந்த அணியில்.

க்றிஸ் கெயில்,பிரெண்டன் மக்கலம்,பிராட் ஹோட்ஜ்,அஜந்த மென்டிஸ்,ஒவேயிஸ் ஷா,சார்ல் லாங்கவெல்ட்,அஞ்சேலோ மத்தியூஸ் என்று பிரபல இறக்குமதிகள்.

அனுபவமிக்க இந்திய வீரர்கள் அகர்கர்,திண்டா,முரளி கார்த்திக்,ரோகான் கவாஸ்கர்,சுக்லா,புஜாரா,மனோஜ் திவாரி,சகா, இஷாந்த் ஷர்மா என்று அணி பளிச்சென ஜொலிக்கிறது.

ஆனால் முன்னைய தொடர்களில் நைட் ரைடர்ஸ் சொதப்பக் காரணமாக அமைந்தது தேவையான சூழ்நிலைக்கேற்ற அணியை அவர்கள் தேர்வு செய்யாததே.இம்முறை நலதொரு திட்டமிடல் குழு அமைந்திருப்பது பலன் தரும் என நம்பலாம்.
அத்துடன் தேவையான நேரத்தில் உள்ளூர் வீரர்கள் பிரகாசிக்கவேயில்லை.இம்முறை பல இடங்களில் இருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட திவாரி,விக்னேஷ் போன்றவர்கள் பிரகாசிக்கவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

டெல்லியிலிருந்து வாங்கப்பட்ட ஷாவும்,இலங்கை அணிக்கு அண்மையில் சில வெற்றிகளை அனைத்து துறையிலும் காட்டிப் பெற்றுக் கொடுத்த மத்தியூசும் இன்று கொல்கொத்தாவுக்கு பெரிய வெற்றியொன்றை வழங்கியுள்ளார்கள்.

கெயில்,பொன்ட்,மக்கலம் தேசியக் கடமைகளை முடித்து வர நைட் ரைடர்ஸ் இன்னும் வேகம் எடுக்கலாம்.

அரையிறுதி வரும் குறிகள் தெரிகின்றன.


===============

ஆனால் டெஸ்ட்,ஒரு நாள் போட்டிகள் போலல்லாமல் இவ்வகை ட்வென்டி ௨௦ போட்டிகள் ஒரே ஓவரில் மாறக்கூடியவை,ஒரு தனிநபரின் சாகசம் அல்லது சொதப்பல் போட்டியை மாற்றிவிடும்..
எனவே அவசரப்பட்டு இப்போதே கிண்ணம் நிச்சயமாய் யாருக்கு என சொல்லி மூக்குடைபடாமல்,அதை சில நாட்கள் போக ஊகிப்போம்.


நாளை (இன்றாகி விட்டது) இரு போட்டிகளும் இரத்த ஓட்டங்களை எகிற வைக்கும் விறுவிறுப்பு தருபவை.

மாலையில் சச்சின்-ஷேன் வோர்ன் மோதலாக மும்பை-ராஜஸ்தான் போட்டியும், இரவில் டெல்லி-பஞ்சாப் போட்டியும் இடம் பெறுகின்றன.

இனியென்ன தினமும் IPL கூத்து தான்..

Post a Comment

10Comments

Please Select Embedded Mode To show the Comment System.*