சுவாமியின் லீலையும், சுழற்றிய சிம்பாப்வேயும்

ARV Loshan
22

இந்த மூன்று நாட்களாக உடல்நலக் குறைவினால் அலுவலகம் போகாமல் இருந்த நேரம் கொஞ்சம் பதிவுகள்,பழைய நூல்கள், தொலைகாட்சி,பங்கு சந்தை வர்த்தகம் என்று ஏதோ பொழுதைப் போக்காட்ட முயன்று கொண்டிருக்கிறேன்.

நித்தியானந்தா வீடியோ பரபரப்பு சுவாரஸ்யங்கள் நல்லாத் தானிருக்கு.. எப்போது தான் எம் சமூகம் திருந்துமோ?
இனிவரும் சில நாட்களுக்கும் நித்தியானந்தா - ரஞ்சிதா பரபரப்பு ஓயப்போவதில்லை.. ஏதோ நடக்கட்டும்..
எதுவேண்டுமானாலும் செய்ய எல்லோருக்கும் உரிமையுண்டு தான்.ஆனால் முகமூடி போட்டு அப்பாவிகளை ஏமாற்றாமல், செய்வதை யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்.

இந்த காம சுவாமியை குமுதம் கட்டுரைகளிலும், பல்வேறு இணையங்களிலும் பார்த்தபோதே இவர் உத்தமராக,சுத்தமானவராக இருக்க முடியாது என மனம் சொல்லியது.கண்களிலும்,உதடுகளிலும் நேர்மையில்லை.

இப்போது கதவு திறந்து சகலமும் விளங்கிப் போச்சு.

கடவுள்களும்,சமயங்களுமே உண்மையா இல்லையா என்று நிரூபிக்கப்படாத நிலையில் கடவுளகளை அடைய வழிகாட்டுகிறோம் என்று சப்பைக்கட்டு கட்டும் இந்தப் போலி ஆசாமிகளை எப்படித்தான் நம்பி நாம் இளிச்சவாயர் ஆகிறோம் என்று கொஞ்சமாவது சிந்திப்பதுண்டா?

இதற்கு ஊடகங்கள் வேறு விளக்குப்பிடித்து ஆலவட்டம் ஆட்டுகின்றன.
வெட்கித் தலைகுனிந்து தாம் தவறாக விளம்பரப்படுத்தி ஏமாற்றிய அப்பாவிகளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

இன்று இலங்கைப் பத்திரிகையொன்றில் நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை செய்தியாக்கியுள்ள எதிர்ப் பக்கத்திலேயே இன்னொரு யாரோவொரு ஆனந்தா இலங்கை வந்து அருளாசி வழங்கவுள்ளதாக விளம்பரம்.
இன்னொரு தேசியப் பத்திரிகையில் கிட்டத்தட்ட முழுபக்கத்தில் மற்றொரு பகவான் பற்றிய ஜன்மதினக் கட்டுரை..

ம்ஹூம்.. திருந்த மாட்டோமே..


இதற்கிடையில் நேற்று இரவு மேற்கிந்தியத் தீவுகள்-சிம்பாப்வே விளையாடிய ஒருநாள் சர்வதேசப் போட்டி பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வழமையாக என்றால் உப்பு சப்பற்ற போட்டிகளில் ஒன்று என்று நான் இதை ஒதுக்கிவிட்டு வேறு வேலை பார்த்திருப்பேன்.
எனினும் வேறு வேலை இல்லாததாலும்,போழுதுபோகாததாலும் மட்டுமல்லாமல் இந்தப் போட்டியை நான் சுவாரஸ்யமாகப் பார்த்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

கோலியாத்தை தாவீது வீழ்த்தியது போல மேற்கிந்தியத் தீவுகளை சிம்பாப்வே ட்வென்டி 20 போட்டியிலே மண்கவ்வ வைத்தது தான் அது.

மிகக் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தும் சுழல்பந்து வீச்சாளர்களை வைத்து வியூகம் அமைத்து சிம்பாப்வே மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியமை அபாரம்.

நேற்றைய போட்டியில் தலைவர் கெயில் வந்தும், சந்தர்போல் இருந்தும் மேற்கிந்தியத் தீவுகளை சிம்பாப்வே இரண்டு ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் சரிவில் மேலும் ஒரு குழி இது.
புதிய பயிற்றுவிப்பாளராக ஒடிஸ் ஜிப்சன் வந்தபின் அடுத்தடுத்த இரு தோல்விகள்.. இரண்டும் கடைநிலை அணியாகக் கருதப்படும் சிம்பாப்வேக்கு எதிராக.

நிதானமாக சிம்பாப்வே பெற்ற சராசரி 254 என்ற இலக்கை அடைவதில் மேற்கிந்தியத்தீவுகள் சிரமப்பட்டது என்பது எவ்வளவு கேவலம்.
அதிலும் முதல் மூவரைத் தவிர வேறு யாரும் 20 ஓட்டங்கள் தாண்டவில்லை.
தனது முதல் போட்டியில் விளையாடிய அட்ரியன் பரத்,தலைவர் கிறிஸ் கெயில் ஆகியோரின் அரைச் சத்தங்களும், இறுதிக்கட்டம் வரை போராடி சந்தர்போல் பெற்ற 70 ஓட்டங்களும் இல்லாவிட்டால் இன்னும் அவமானமாகியிருக்கும்.

முன்னதாக சிம்பாப்வே சார்பில் சிபாண்டா நிதானமாக ஆடிப் பெற்ற 95 ஓட்டங்கள் அருமையான ஒரு கிரிக்கெட் விருந்து.சதம் பெறுவார் என்று எதிர்பார்த்திருக்க கெமர் ரோச்சின் அதிவேகப் பந்தொன்றில் தனது துடுப்பும் முறிந்து ஆட்டமிழந்தார் சிபாண்டா.
தைபுவின் அதிரடி அரைச் சதமும் கலக்கல்.

ஆனால் இந்தப் போட்டியில் என்னைக் கவர்ந்த விடயமும், இலங்கை,இந்திய அணிகள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயமும் ஒன்றுள்ளது.

சிம்பாப்வே அணித்தலைவர் ப்ரோஸ்பேர் உட்செயா தனது சுழல் பந்துவீச்சாலர்களைக் கையாண்டு எதிரணிகளை மடக்கும் யுக்தி.

தனது நான்கு சுழல் பந்துவீச்சாளர்களின் நாற்பது ஓவர்களையும் (உட்செயாவும் ஒரு சுழல்பந்துவீச்சாளரே) பூரணமாக சுழற்சி முறையில் பயன்படுத்தியவர், இவர்களில் மூவரைக் கொண்டே தமது பந்துவீச்சை ஆரம்பித்து துடுப்பாட்ட வீரர்களைக் குழப்பியடித்தார்.

கெயில் அதிரடியாடினாலும், மத்தியவரிசை வீரர்கள் பேய்,பிசாசுகளைக் கண்டது போல ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியாக தனது இளைய,துடிப்பான வேகப்பந்து வீச்சாளர் முதல்போட்டியில் விளையாடிய மட்சிகினஎரி மூலமும்,பகுதிநேர மிதவேகப் பந்துவீச்சாளர் சிகும்பரா மூலமும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சமாதி எழுப்பினார்.

சிம்பாப்வே அணியினால் தம் பலம் என்று நினைக்கும் சுழல் பந்துவீச்சாளர்களைக் கொண்டு இவ்வாறு அடுத்தடுத்து அதிரடித் துடுப்பாட்ட வரிசை கொண்ட அணியொன்றை அலறியடித்து தோற்கடிக்க முடியுமென்றால் சுழல் பந்துவீச்சையே பிரதான பலமாகக் கொண்டுள்ள இலங்கை,இந்திய அணிகளால் ஏன் இது முடியாது?

அசாருதீன் காலத்தில் இந்தியாவும், அர்ஜுன ரணதுங்கவின் காலத்தில் இலங்கையும் சுழல் பந்து வீச்சாளர்களைக் கொண்டு எதிரணிகளை உருட்டியது இப்போது மறந்து போனதா?

இப்படியே போனால் உபகண்ட ஆடுகளங்களில் நடக்கும் அடுத்த உலகக் கிண்ணத்தில் சிம்பாப்வே பல பெரிய தலைகளை உருட்டித் தள்ளிவிடும்.

துடுப்பாட்ட வீரர்களை மையமாக வைத்து இவ்விரு அணிகளும் இயங்குவது சரி தான். ஆனால் மற்றவர்கள் இன்னும் பூரணமாகக் கற்றறியாத சுழல்பந்து வீச்சுக் கலையை எம் மர்மக் கலையாக வளர்த்திருக்கலாம்.

இந்திய அணியிலும் இலங்கை அணியிலும் முரளி,ஹர்பஜன் தவிர இன்னும் எத்தனை நல்ல,திறமையான சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்?

பகுதிநேரமாகப் பந்துவீசக் கூடிய திறமையான சச்சின், சேவாக், யுவராஜ்,ரெய்னா,டில்ஷான்,சமரவீர,சனத் ஜெயசூரிய, ஜடேஜா இவர்களிடமிருந்து முழுமையான பயன்பாட்டை இன்னமும் பெறலாம் என்பதே என் கருத்து.

சிம்பாப்வேயைப் பார்த்து இனிவரும் காலத்தில் இதைக் கருத்தில் எடுப்பார்களா பார்க்கலாம்.

முன்பிருந்து எனக்கிருக்கும் கேள்வி இதுவே.. எமது பலத்தை நாம் சரியாகப் பிரயோகிக்கின்றோம் இல்லை.
ஆசிய நாடுகள் எல்லாவற்றிற்கும் எல்லாத் துறைகளிலும் உள்ள பிரச்சினை இது. மற்றவர்களைப் பார்த்து எம்மை வடிவமைக்கிறோம்.
எங்கள் பலம் என்னவென அடையாளம் கண்டு அதன் அடிப்படையிலேயே எம்மைக் கட்டியெழுப்பவேண்டும்,இது எல்லாவற்றுக்குமே பொருந்தும்..
ஆசியாவில் வளர்ந்து நிற்கும் ஜப்பானைப் பார்த்து ஏனைய எல்லாத் துறைகளிலும் நாம் இதைக் கற்று உட்புகுத்தவேண்டும்.

Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*