தமிழ்ப்படமும், ஒரு தர்மசங்கடமும்

ARV Loshan
17



பார்க்கவேண்டும் என்று நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்து, இலங்கையில் ஒருவாறாகத் திரையிடப்பட்ட தமிழ்ப்படத்தை இலங்கையில் திரையிட்ட முதல்நாளே பார்த்தேன். பலபேரும் cd களில் பார்த்திருப்பார்கள் போலும். பெரிதாகக் கூட்டமில்லை.

ஆனால் வந்திருந்த அனைவருமே தொடக்கத்திலிருந்து முடிவு வரை பெரிதாக சத்தமிட்டு,வாய்விட்டு ரசித்து சிரித்த ஒரு படம்.

தமிழில் எத்தனையோ நக்கல்,நையாண்டி திரைப்படங்கள் வந்திருந்தாலும் கூட, படம் முழுவதுமே வாளி வாளியாக பலரையும் பல தமிழ்த் திரைப்பட போர்முலாக்களையும் வாரி இருக்கும் ஒரு திரைப்படம் இது.

இந்தப் படத்தை நேரில் பார்க்கும் வரை எந்தவொரு விமர்சனத்தையும் வாசிக்காமல் இருந்தபோதும் ஒவ்வொருவிதமாக வந்துசேர்ந்த தகவல்கள் படம் இப்படித்தான் என்பதை உணரவே வைத்திருந்தன.

முதல் காட்சியில் கருத்தம்மாவுக்கு ஆரம்பிக்கும் கடிக்கு இடியென சிரிக்க ஆரம்பித்தவன், தொடர்ந்து வரிசையாக வந்த spoof வகைக் கடிகளை ரொம்பவே ரசித்தேன்.
ஆனால் ரொம்ப எதிர்பார்த்து விட்டேனோ என்னவோ நான் பார்த்த மிக சிறந்த நகைச்சுவை திரைப்படம் என இதை எண்ண முடியவில்லை.
ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வசனமுமே கடியாகவும் நக்கலாகவும் அமைந்தது தான் காரணமோ தெரியவில்லை.
இல்லையெனில் ஒவ்வொரு காட்சியும் எந்தெந்தப் படங்களை நக்கல் அடித்துள்ளது என யோசித்துக்கொண்டே சிரித்ததால் அப்படி இருந்ததோ தெரியவில்லை.

சிவா அலட்டலில்லாமல் கலக்கி இருக்கிறார்.
ரொம்ப சீரியசாக முன்னைய (?) ஹீரோக்களை நக்கல் செய்யும்போதும் கூட அவர் கண்களிலும்,உதட்டின் ஓரத்திலும் ஒரு நக்கல் பரவிக்கிடக்கிறது.

இயக்குனர் அமுதனின் கடிக்கும் ஆற்றல் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நாசூக்காக லொள்ளு சபா பாணியில் நக்கலடிப்பதிலேயே தெரிகிறது.

நான் யோசித்துப் பார்த்தவரை தமிழ்ப் படத்திலே நக்கலால் சிக்கி சின்னாபின்னப்படுத்தப்பட்டோர் -
சிம்பு (பேசாமல் விரல்கள் எல்லாவற்றையும் கடிச்சே துப்பிட்டு சும்மா இருக்கலாம்)
விஜய டி.ஆர்.
ரஜினி
விஜய்
விக்ரம்
பாக்கியராஜ்
இயக்குனர் ஷங்கர்
கமல்
அஜித்


கடிக்கப்பட்ட புண்ணியம் பெற்ற திரைப்படங்கள்
கருத்தம்மா,போய்ஸ்,தளபதி, காகினி,கிழக்கே போகும் ரயில்,பாட்ஷா, கந்தசாமி,அண்ணாமலை,சிவாஜி,அபூர்வ சகோதரர்கள், அந்நியன்,நாயகன்,தூள்,நாட்டாமை, மௌன ராகம்,காக்க காக்க,சின்னத்தம்பி,விருமாண்டி,ரன்,கந்தசாமி,மொழி,தசாவதாரம்,வேட்டையாடு விளையாடு, காதலன்,காதலுக்கு மரியாதை, இவை தான் நான் அவதானித்தவை..
(யாருடா அவன் கை தட்டி நக்கல் பண்றது?)

ஒரு காட்சியா இரு காட்சியா .. எத்தனை காட்சியைத் தான் சொல்வது..

நக்கலோ நக்கல் செம நக்கல்..
தமிழ் சினிமாக்களில் காலாகாலமாக இருந்துவரும் ரிப்பீட்டு அபத்தங்களை சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்கி கைதட்டல்களை வாங்கிக்கொண்டு சிரிப்பலைகளை திரையரங்கெங்கும் எழுப்புகிறார் இயக்குனர் C.S.அமுதன் .
இவரது அடுத்த திரைப்படம் எப்படி இருக்கும் என ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்.

பத்து வயதிலே சைக்கிள் பெடல் சுத்தி பெரியவனாவது, ஒரே சண்டையில் தளபதியாவது, காப்பி சமையலறையிலிருந்து வரும் முன் ஒரு பாடலிலே பணக்காரனாவது (அதிலும் சிவா சிறைச்சாலை,நீதிமன்றம், காவல் நிலையம்.. எல்லாவற்றிலும் மேலாக பிணக் கிடங்கு என்று சிரித்து சிரித்து வயிறு நொந்தே போனது),அப்பா பெயர் தெரியாதவன் என்ற அவமானம் நீங்க குடும்ப மூலம் தெரியப் புறப்படுவது, நீதிமன்றக் காட்சி என்று முன்னைய ஹீரோக்கள் எல்லோரையும் எங்கள் மனம் முன் கோமாளிகளாக்கி விடுகிறது தமிழ்ப்படம்.

இயக்குனர் சங்கரையும் பல காட்சிகளில் போட்டுப் பின்னி இருக்கிறார்.
ஆனால் ரஜினியோ,சங்கரோ,விஜயோ ஏன் சிம்புவோ கூடப் படம் பார்த்தால் கோபப் படுவதற்குப் பதில் சிரிப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
அவ்வளவும் ரசனையான கிண்டல்.

இனியும் நம் ஹீரோக்கள் பட்டங்கள் வைத்துக்கொண்டு பாட்டுக்களில் தம்மைத் தாமே புகழ்வார்கள்?
சிரிப்பு வராது எமக்கு?

தமிழ்ப்படம் - ரசித்தேன்;சிரித்தேன்.

=====================


எங்கள் அம்மா தனது நண்பிகள் சிலரின் அழைப்பினால் அடிக்கடி அம்மா பகவானின் பஜனைகளுக்கு வாராந்தம் போய் வருபவர்.எனக்கும் தம்பிமாருக்கும் இது கொஞ்சமும் பிடிக்காவிட்டாலும் (கடவுளிலேயே பெரிதாக நம்பிக்கை இல்லாதவன் நான்.. இதுக்குள்ளே) அவருக்கு எப்படியாவது போழுதுபோகட்டுமே என்று ஒன்றும் சொல்வதில்.அவரது நம்பிக்கை அதுவென நாம் எம்பாட்டில் விட்டுவிட்டோம்.
எப்போதாவது சாடை மாடையாக நக்கல் செய்தாலும், அவர் மனம் புண்பட நான் எதுவும் பேசுவதில்லை.

போலி சாமியார்கள் விவகாரம் ஏதாவது வெளிவந்தால் அதுபற்றி அவருக்கு மின்னஞ்சல்களை முன்னகர்த்திவிடுவேன்.அம்மா பகவான் பற்றிய விஷயங்களையும் தான். எனினும் அம்மாவுடன் கடவுள்,பக்தி போன்ற வாதப் பிரதிவாதங்களுக்கு நான் செல்வது கிடையாது.ஏன் தேவையில்லாமல் குடும்பத்துக்குள் குத்து வெட்டு.

நித்தியானந்தாவின் விவகாரம் சூடு கிளப்பியிருந்த கடந்தவாரத்தில் ஒருநாள் அம்மா வீடு போயிருந்தோம்.

அம்மாவின் நண்பியோருவரும் அவர் கணவரும் (இருவரும் அம்மா பகவான் பக்தர்கள்- கொழும்பின் கிளையொன்றின் அமைப்பாளர்கள்)
ஞாயிறு அம்மா பகவானின் ஜன்ம தின நிகழ்ச்சி இருப்பதாகவும் என்னையும் கலந்துகொள்வதொடு அறிவிப்பு செய்யுமாறும் அல்லது பேசுமாறும் கேட்டார்கள்.

எனினும் நான் அவர்களுக்கு மிகத் தன்மையாக அம்மா பகவானோ இல்லாவிடின் எவருமோ யார் மீதுமோ எனக்கு நம்பிக்கை இல்லை என்பதையும், சும்மா நன் அங்கு வருவதை விரும்பவில்லை எனவும் எடுத்துக் கூறி மறுத்துவிட்டேன்.

எனினும் அவர்களை சிறுவயது முதலே தெரியுமென்பதாலும் வீடு தேடி வந்திருந்தார்கள் என்பதாலும் அன்று வெளியிடப்படவுள்ள இறுவட்டையாவது நான் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் அழைத்தபோது மறுக்கமுடியவில்லை.
எனக்கு அப்போதிருந்த உடல் நலக்குறைவு வேறு காப்பாற்றி விட்டது.

அப்படியிருந்தும் ஐந்து மணித்தியாலங்கள் இருந்த அந்த நிகழ்ச்சியில் சரியாக இறுவட்டு வெளியிடும் நேரத்துக்கு மண்டபத்துக்குள் போய் கவரைக் கொடுத்து இறுவட்டை வாங்கியவுடன் அம்மாவிடமும், அங்கிருந்த அழைத்தவர்களிடமும் சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

ஆனால் மரியாதை நிமித்தம் நான் உள்ளே நுழைந்ததைக் கண்ட அன்புத் தம்பியொருவர் இன்னாரும் வந்திருக்கிறார் என்று 'பெருமை'யுடன் அறிவிக்க நானும் 'சாரு'வாகிப் போனேனே.. ;)

அடுத்த நாள் வேறு சும்மா இருக்க முடியாமல் ட்விட்டரில் TBCD யின் ட்விட்டை (அதன் ஒரிஜினல் சொந்தக்காரர் கமல்) எடுத்து நான் ட்விட்ட,சும்மா கிடந்த சங்குக் கதையாகிக் கந்தலானது..

" சாமி இருக்குங்கிறவனை நம்பு.., சாமி இல்லைங்கிறவனையும் நம்பு.., ஆனா.. நான் தான் சாமின்னு சொல்லுறவனை மட்டும் நம்பாதே"

யாரோ ஒரு புண்ணியவதி அம்மா பகவான் நிகழ்விலே நான் இறுவட்டு வாங்குவதைப் படம் பிடித்து அதை மூஞ்சிப் புத்தகத்தில் ஏற்றி எனக்கு மூஞ்சியில் கரி பூசி இருந்தார்..
என்ன கொடுமை இது பகவானே..

எனவே இத்தால் சொல்லுவது யாதெனில்.. நான் பக்தனில்லை.. பகவானுமில்லை.. இறுவட்டு வாங்கச் சென்ற ஒரு ஜஸ்ட் விசிட்டர் மட்டுமே..
எனவே என்னைப் பின்பற்றி யாரும் பின்னர் என்னைத் திட்டவேண்டாம்..

அப்பாடா.. ஐந்து நாளாக இருந்த மன சங்கடத்தை இங்கே கொட்டிப் பாரம் இறக்கியாச்சு.. :)



இன்று IPL திருவிழா ஆரம்பிக்குது.. நேரத்தைப் பொறுத்து சிறப்புப் பதிவு வரும்.

Post a Comment

17Comments

Please Select Embedded Mode To show the Comment System.*