வயம்ப - மீண்டும் சம்பியன்ஸ் லீக்கில்
இலங்கையின் மாகாண மட்டத்திலான அணிகளுக்கிடையிலான ட்வென்டி 20 போட்டிகளின் இறுதிப் போட்டி இன்று கொழும்பில் இடம்பெற்றது.
கடந்த வருடம் போலவே இம்முறையும் வடமேல் மாகாண அணியான வயம்ப வெற்றியீட்டியுள்ளது.
ஜெஹான் முபாரக்கின் தலைமையில் வயம்ப அணி இம்முறை ஏனைய அணிகளையெல்லாம் மிக இலகுவாக வெற்றியீட்டி இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியிலும், உபுல் தரங்கவின் தலைமையிலான தென் மாகாண (ருஹுனு)அணியை இலகுவாக வெற்றி கொண்டது.
இதற்கும் முன் இடம்பெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டியில் சங்கக்கார தலைமை தாங்கியிருந்த மத்திய மாகாண அணியான கந்துரட்ட அணி சம்பியனாகி இருந்தது.
முரளிதரன்,துஷார,கபுகேடற, சகலதுறை வீரர் கௌஷல்ய வீரரத்தின ஆகியோர் திறமையாக விளையாடியும், form இல் இருந்தும் கூட கந்துரட்ட அணி அரையிறுதியில் சறுக்கி விட்டது.
தென் மாகாண அணியின் தலைவர் தரங்க, எதிர்கால நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரிய, இலங்கை A அணிக்காக தொடர்ந்து பிரகாசித்து வரும் விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் ஆகியோர் துடுப்பாட்டத்திலும், இளம் சுழல் பந்துவீச்சாளர்கள் சசிதர சேனநாயக்க, சஜீவ வீரக்கோன் ஆஜியோரும், சகலதுறை வீரர் கோசல குலசேகரவும் பந்துவீச்சிலும் பிரகாசித்ததால் இறுதிப் போட்டிக்கு தென் மாகாண அணி தெரிவாகி இருந்தது.
பல சிரேஷ்ட வீரர்களை இந்த தொடரில் பிரகாசித்த இளைய வீரர்கள் எதிர்வரும் காலத்தில் இடங்களுக்கான அழுத்தங்களுக்கு உட்படுத்துவார்கள் என நம்பலாம்.
மீண்டும் சம்பியனாகியுள்ள வயம்ப அணி பொருத்தமான ஒரு சம்பியனே.
மிக சிறந்த சமச்சீர்த் தன்மை..ட்வென்டி 20 போட்டிகளுக்குத் தேவையான நெகிழ்வுத் தன்மை காணப்படும் அணி இது.
துடுப்பாட்ட வீரர்களாக மஹேல ஜெயவர்த்தன, ஜெஹான் முபாரக், ஜீவந்த குலதுங்க, இளம் வீரர் ஷாலிக கருணாநாயக்க, சகலதுறை வீரர்களாக பர்விஸ் மஹரூப்,கௌஷால் லொக்குஆராச்சி,திசர பெரேரா, பந்துவீச்சாளர்களாக அண்மைக்காலத்தில் தேசிய மட்டத்திலும்,சர்வதேச மட்டத்திலும் தெரியவந்துள்ள அஜந்த மென்டிஸ்,சானக வேலகேடற,இசுறு உதான என்று இந்த அணியில் மட்டும் தேசிய வீரர்களே அணியை உருவாக்கி விடலாம்.
ஆரம்ப கட்டத்திலிருந்தே 36 வயதான ஜீவந்த குலதுங்க துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வந்திருந்தார். அரையிறுதிக்கு முன்னான போட்டியில் அதிவேக சதம் ஒன்றை இவர் பெற்றது இன்னொரு சிறப்பான விடயம்.
பந்துவீச்சில் அனைத்து வயம்ப பந்துவீச்சாளர்களுமே தொடர்ந்து சிறப்பாக செயற்பட்டு வந்திருந்தார்கள்.
குறிப்பாக வேலகேடற,மென்டிஸ், திசர பெரேரா ஆகியோர் தம்மை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்கள்.
விரைவில் வரப்போகும் ட்வென்டி 20 உலகக் கிண்ணக் கதவுகளை இவர்கள் இப்போதே தட்டி வைத்துள்ளார்கள்.
தொடர்ந்து சிறப்பாகவே விளையாடிவந்த மஹேல ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்து அரையிறுதியிலும் இறுதியிலும் எடுத்தது விஸ்வரூபம்.
அரையிறுதியில் ஆட்டமிழக்காமல் 58 .இன்று இறுதியில் 49 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள்& 10 நான்கு ஓட்டங்களுடன் 91 ஓட்டங்கள்.என்ன அதிரடி இது..
மஹேல ஒரு Big match player என்று சொல்வது மீண்டும் இன்று நிரூபணமாகியுள்ளது.
இத் தொடரில் சனத் ஜயசூரியவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சிறப்பாகவே விளையாடி இருந்தாலும், இலங்கை அணியின் மற்ற ட்வென்டி 20 ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டில்ஷான் காயம் காரணமாக விளையாடாததால் மகேளவும்,ஜீவந்த குலதுங்கவுமே பிரகாசித்த இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எனலாம்.
தேர்வாளர்கள் குழம்புவார்களா?தெளிவார்களா?
மஹேல இத் தொடரில் நான்கு அரை சதங்கள்.இவரை விட கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர் ஒரே ஒருவரே. 19 வயதான தினேஷ் சந்திமால்.மூன்றாவது கூடிய ஓட்டங்கள் பெற்ற ஜீவந்த குலதுங்க தான் தொடரின் சிறப்பாட்டக்காரராகத் தேர்வானார்.
36 வயதாகும் துரதிர்ஷ்டசாலி இவர்.சிறப்பான சகலதுறை வீரராக உள்ளூரில் பிரகாசித்து வந்தாலும்,நேர்த்தியாக,நேர்மையாக விளையாடி வந்தாலும் பாவம் இவருக்கு இரண்டே இரண்டு ட்வென்டி 20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே இதுவரை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.இம்முறையும் இவ்வளவு ஓட்டங்கள் குவித்தும் வயதைக் காட்டி உலகக் கிண்ண அணியில் இவருக்கு இடம் வழங்கப்பட மாட்டாது.
பந்துவீச்சில் அதிகூடிய விக்கெட்டுக்கள் சரித்தவர் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்திர சேனாநாயக்க.ஏழு போட்டிகளில் 14 விக்கெட்டுகள். இவருக்கு அடுத்தபடியாக இன்னொரு சுழல் பந்துவீச்சாளர் ஜானக குணரட்னவும், வேகப் பந்துவீச்சாளர்கள் உதான,திசர பெரேராவும்,மற்றொரு சுழல் பந்துவீச்சாளர் சஜீவ வீரக்கோனும் இருக்கிறார்கள்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை சுழல் பந்துவீச்சாளர்கள் நிரம்பி வழிகிறார்கள்.போதாக்குறைக்கு அண்மையில் அணிக்குள் வந்த சுராஜ் ரந்தீவும் இத் தொடர்களில் கலக்கி இருந்தார்.
இனித் தேர்வாளர்கள் முன்னால் உள்ள வேலை திறமை காட்டியவர்களில் சிறந்தவர்களையும்,தொடர்ந்து திறமையைத் தக்கவைக்கக் கூடியவர்களையும், சர்வதேசத்தின் சவால்களை சமாளிக்கக் கூடியவர்களையும் தேர்ந்தெடுப்பதே.
இம்முறை இந்த உள்ளூர்ப் போட்டிகள் இரண்டு வகைக்குமே (ஐம்பது ஓவர்கள், ட்வென்டி 20 ) ரசிகர்கள் மைதானத்துக்கு பெருமளவு வந்தது மகிழ்ச்சியான ஆரோக்கியமான விடயமே.தேசிய வீரர்கள் எல்லோருமே இந்தப் போட்டிகளில் விளையாடியது காரணமாக இருக்கலாம்.