March 03, 2015

கெயில், டீவில்லியர்ஸ், சங்கக்கார... இனி? - உலகக்கிண்ணம் 2015இன் முதல் 16 நாட்கள் #cwc15

உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு ஓய்வு நாளான நேற்று இந்த உலகக்கிண்ணம் ஆரம்பித்து 15 நாட்கள் பூர்த்தியானதுடன், சாதனைகள், தரவுகள் மற்றும் புள்ளி விபரங்களுடன் ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு நேற்று எழுதிய கட்டுரை..

சில மாற்றங்கள், சில சேர்க்கைகளுடன் இங்கே எனது பக்கத்தில் தரலாம் என்று பார்த்தால் 'நிறைய' மாற்றங்களை இன்றைய அயர்லாந்துடனான போட்டியில் தென் ஆபிரிக்க அதிரடி மன்னர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.
எனவே 'சில' மாற்றங்கள் என்றில்லாமல் 'ஏராளமான' மாற்றங்களுடன் இந்த கட்டுரை..

நேற்றைய ஸ்ரீலங்கா விஸ்டன் கட்டுரையை வாசித்தவர்களும் மீண்டும் இதை வாசித்தேயாக வேண்டும்.

தென் ஆபிரிக்கா பெற்ற 411/4 இந்தியா பெர்முடா அணிக்கு எதிராகப் பெற்றிருந்த உலகக்கிண்ண சாதனையான 413 ஓட்டங்கள் என்ற இலக்கை மீண்டும் சொற்ப ஓட்டங்களால் தவறவிட்டது.

அடுத்தடுத்த போட்டிகளில் 400 + ஓட்டங்களைப் பெற்ற ஒரே அணி என்ற பெருமையையும் சேர்த்துக்கொண்டது.

போகிற போக்கில் 413 உடைக்கப்படலாம் என்று நான் சொல்லிவைத்தது தென் ஆபிரிக்காவால் விரைவில் சாத்தியமாகும் போல தெரிகிறது.

அடுத்த இரண்டு போட்டிகளும் தென் ஆபிரிக்காவுக்கு பாகிஸ்தானுடனும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துடனும் என்பது இன்னும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விடயமாகும்.

இன்று ஹாஷிம் அம்லா பெற்ற 159 ஓட்டங்கள் இந்த உலகக்கிண்ணத் தொடரின் 4வது கூடிய ஓட்ட எண்ணிக்கையாக மாறியுள்ளது.

இப்போது அதிக ஓட்டங்கள் குவித்தோரின் பட்டியலிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், இன்னமும் சங்கக்கார முதலிடத்தில்.

-------

உலகக்கிண்ணத்தின் 16 நாட்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன.
24 போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

கணித கணக்குகளின்படி, எந்தவொரு அணியுமே காலிறுதி வாய்ப்பை இதுவரை முற்றாக இழக்கவில்லை.
எனினும் A பிரிவின் நியூ சீலாந்து, இலங்கை ஆகிய அணிகள் இப்போதைக்கு தங்கள் காலிறுதியை உறுதி செய்துள்ள அதேவேளை, இந்தியாவுக்கு இன்னொரு வெற்றி உறுதி செய்யும். தென் ஆபிரிக்காவுக்கும் அவ்வாறே.

நியூ சீலாந்தின் தொடர்ச்சியான வெற்றிகளும், இலங்கை அணியின் இறுதி மூன்று போட்டிகளின் எழுச்சியும், இந்தியாவின் மூன்று வெற்றிகளின் ஆதிக்கமும், தென் ஆபிரிக்கா இந்தியாவுக்கு எதிராகக் கண்ட தோல்விக்குப் பிறகு விஸ்வரூபம் எடுத்திருப்பதும்  ஏனைய அணிகளை விட இவற்றை முன்னிலையில் நிறுத்தியுள்ளன.

அயர்லாந்து இன்று கண்ட தோல்விக்குப் பின்னர், எந்தவொரு போட்டியிலும் இதுவரை தோற்காத அணிகள் இரண்டு மட்டுமே  - நியூ சீலாந்து, இந்தியா

பாகிஸ்தான் அணி சிம்பாப்வேயை மிகப் போராடி வென்ற பின்னர், இப்போது ஸ்கொட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஆகிய அணிகள் மட்டுமே இன்னும் ஒரு வெற்றியையேனும் பெறாத அணிகள்.

மிக நெருக்கமான சில போட்டிகள் ரசிகர்களின் மனோதைரியத்தை மிகவும் சோதித்து , மயிரிழையில் முடிவைத் தந்திருந்தன.

23 போட்டிகளில்,
2 ஒரு விக்கெட் வெற்றிகள்,
ஒரு கடைசி ஓவர் வெற்றி, அதுவும் 2 விக்கெட்டுக்களால்

இன்னும் இலங்கை - ஆப்கானிஸ்தான் போட்டியும், பாகிஸ்தான் - சிம்பாப்வே போட்டியும், UAE சிம்பாப்வே போட்டியும் கூட விறுவிறுப்பை வழங்கத் தவறவில்லை.

அதே நேரம், மிகப் பெரிய வெற்றிகள். மிகப் பாரிய ஓட்ட, விக்கெட் வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றிகளும் இந்த உலகக்கிண்ணத் தொடரில் பல இதுவரை இருக்கின்றன.

இலங்கை இங்கிலாந்தையும், இந்தியா UAEஐயும் 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றிகண்டன.

நியூ சீலாந்து இங்கிலாந்தை 8 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது.

257 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டது இந்த உலகக்கிண்ணத்தில் மட்டுமல்லாமல் உலகக்கிண்ண வரலாற்றிலேயே பெறப்பட்ட மிகப்பெரிய ஓட்ட வித்தியாச வெற்றியை சமப்படுத்தியது.

இன்று தென் ஆபிரிக்கா 201 ஓட்டங்களால் இன்னொரு பெரிய வெற்றியைப் பதிந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் 150 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டிருந்தது.
இது தவிர இன்னும் 100 ஓட்டங்களுக்கு மேலான 4 வெற்றிகள்.

இதுவரை அயர்லாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை வென்றது மட்டுமே பெரிய அதிர்ச்சியான முடிவாக இருந்தாலும், ஸ்கொட்லாந்து நியூ சீலாந்தையும், சிம்பாப்வே தென் ஆபிரிக்காவையும், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் சிம்பாப்வேயையும் எல்லாவற்றையும் விட ஆச்சரியமானதாக ஆப்கானிஸ்தான் இலங்கையையும்  இறுதிவரை நடுங்க வைத்து, திணற வைத்து Associates என்று அழைக்கப்படும் 'சிறிய' அணிகளை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ளன.

அதேபோல இந்த அணிகள் விளையாடும் போட்டிகள் தான் மிக விறுவிறுப்பானதாக அமைந்துள்ளன.

அவுஸ்திரேலிய - பங்களாதேஷ் போட்டி மட்டுமே மழையினால் கைவிடப்பட்ட ஒரே போட்டி.

இன்னும் சில போட்டிகளின் இடையிடையே மழை வந்தாலும் வில்லனாக மாறவில்லை.

ஆனால் காயங்கள், உபாதைகள் பல முக்கிய வீரர்களை எவ்வாறு உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆரம்பமாக முன்னர் விலகச் செய்ததோ, அவ்வாறே ஜீவன் மென்டிஸ், டரன் ப்ராவோ, போன்ற வீரர்களை முற்றாக விளையாடவிடாமல் செய்ததோடு, இன்னும் ஹேரத், பிலாண்டர், போல்க்னர் போன்ற வீரர்களை ஓய்விலேயே வைத்துள்ளன.
ஏற்கெனவே ரங்கன ஹேரத்துக்கு பதிலாக சீக்குகே பிரசன்ன தயார் நிலையில் உள்ளார்.

ஆனாலும் சாதிக்கும் வீரர்களும், புதிய சாதனை படைத்த வீரர்களும் பலர்.

24 போட்டிகளில் 19 சதங்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் இலங்கை வீரர் குமார் சங்கக்கார மட்டுமே இரு சதங்களைப் பெற்ற ஒரே வீரர்.
இவர் தவிர இன்னும் மூன்று இலங்கை வீரர்கள் சதங்கள் பெற்றுள்ளனர்.
இலங்கையே இதில் முன்னிலையில்.
இன்று தென் ஆபிரிக்கா இதனை சமப்படுத்தியது.

தென் ஆபிரிக்காவின் ஐந்து வீரர்கள் ஆளுக்கு ஒரு சதம்.

மேற்கிந்தியத் தீவுகள்  மூன்று சதங்கள்.
இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா இரு சதங்களைப் பெற்றுள்ளன.

டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகள் சார்பாக ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணியின் ஷைமன் அன்வர் சதமடித்து பெருமை பெற்றுள்ளார்.

எனினும் நியூ சீலாந்து மற்றும் பாகிஸ்தானிய அணியின் வீரர்கள் எவரும் இன்னும் சதம் ஒன்றையும் பெறவில்லை.

ஆனாலும் நியூ சீலாந்து அணியின் வெற்றிகள் அவர்களது மிகத் துல்லியமான, அச்சுறுத்தும் பந்துவீச்சை அடிப்படையாக வைத்துப் பெறப்பட்டுள்ளன.

அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள இருவருமே நியூ சீலாந்து வீரர்கள்.
சௌதீயும் போல்ட்டும் இணைந்த இந்த ஜோடி தான் நியூ சீலாந்தின் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆரம்பப் பந்துவீச்சாளர்கள் என்ற வாழ்த்தை வழங்கியிருப்பவர் நியூ சீலாந்தின் முன்னாள் மிகச்சிறந்த வீரரான ரிச்சர்ட் ஹட்லீ.

அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களின் பட்டியல்.

அதேபோல மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதிகளில் முதல் நான்கும் நியூசீலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களின் வசமுள்ளன.

முதல் பத்து நாட்களில் கிறிஸ் கெய்ல் கதாநாயகன் என்றால் அடுத்த சில நாளில் அனைவரும் தென் ஆபிரிக்காவின் அணித் தலைவர் ஏபி டி வில்லியர்ஸின் 66 பந்து ஆட்டமிழக்காத 162 ஓட்டங்களைக் கொண்டாட, இப்போது அடுத்தடுத்து இரு சதங்களை ஆட்டமிழக்காமல் வேகமாக அடித்தாடிப் பெற்றுள்ள குமார் சங்கக்கார பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன் அணியாக தென் ஆபிரிக்கா அச்சுறுத்தும் அணியாக மாறி வருகிறது.

அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர்களின் பட்டியல்..


கிறிஸ் கெயிலின் சாதனை

கிறிஸ் கெயில் சிக்ஸர் மழை பொழிந்து ஓட்டங்களை மலையாகக் குவித்து சாதனைகளை உடைத்து பெற்ற215 ஓட்டங்கள் இந்த உலகக்கிண்ணத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது.

ஒரே இரட்டைச் சதம், ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளது.


உலகக்கிண்ணத்தின் அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை.
முன்னைய கரி கேர்ஸ்டனின் 188 ஓட்டங்களை முறியடித்தார்.

உலகக்கிண்ணத்தின் முதலாவது இரட்டைச் சதம்.
(இதைப் பற்றி முன்பே எதிர்வுகூறியிருந்தேன்
//அதேபோல இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளிலும் இரட்டைச் சதம் மிக இலகுவாகப் பெறப்படுவதால், இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் சிலவேளை முதலாவது உலகக்கிண்ண இரட்டைச் சதத்தைத் தரலாம்.//


ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3வது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வேகமான இரட்டைச் சதம்.
- 138 பந்துகள்
முன்னைய சாதனை 140 பந்துகள் சேவாக்.

அத்துடன் *இந்தியாவுக்கு வெளியே பெறப்பட்ட முதலாவது ஒருநாள் இரட்டைச் சதம் & இந்தியர் அல்லாத ஒருவர் பெற்றுள்ள முதலாவது ஒருநாள் இரட்டைச் சதம்.

ஒரு நாள் போட்டியொன்றில் பெறப்பட்ட அதி கூடிய இணைப்பாட்டம் :

கிறிஸ் கெய்ல்- சமுவெல்ஸ் 372

உலகக் கிண்ணப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய 6 ஓட்டங்கள்:
கெய்ல் 16

ஒருநாள் போட்டியொன்றில் அதிகூடிய 6 ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் ஏ.பி. டீ விலியர்ஸ் , ரோஹித் சர்மா ஆகியோரோடு இன்று கிறிஸ் கெய்ல் இணைந்துகொண்டார்.

அத்துடன் ஒருநாள் சர்வதேசப் போட்டி வரலாற்றில் அதிகூடிய ஒருநாள் இணைப்பாட்ட சாதனையும் கெயில் - சாமுவேல்ஸ் ஆகியோரால் முறியடிக்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட் ஆகியோர் நியூ சீலாந்துக்கு எதிராக பெற்ற 331 ஓட்டங்களை
இவர்கள் முறியடித்தனர்.

-------------------

ஏபி டி வில்லியர்சின் வேகமான 150 ஓட்டங்கள் இன்னும் சில புதிய சாதனைகளைப் படைத்தது.

 ஏபி டி வில்லியர்ஸ் 66 பந்துகளில் 162 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
இதில் 17 நான்கு ஓட்டங்களும் , 8 ஆறு ஓட்டங்களும் அடங்கியிருந்தன.

ஒருநாள் போட்டியொன்றில் பெறப்பட்ட வேகமான 150 ஓட்டங்கள். (64 பந்துகள்)
இதன் மூலம் தற்போது ஒருநாள் போட்டிகளில் வேகமான
 50, 100 மற்றும் 150 ஓட்டங்களைப் பெற்ற வீரராக ஏ.பி டி வில்லியர்ஸ் திகழ்கிறார்.
அத்தோடு மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவர் ஹோல்டரை அவர் போட்டுத் தாக்கிய விதத்தில் 100 ஓட்டங்களைக் கடந்த பிறகு வெறும் 12 பந்துகளில் 50 ஓட்டங்களைக் கடந்தார்.


தென்னாபிரிக்க அணி பெற்ற 408 ஓட்டமானது ஒருநாள் போட்டியொன்றில் அவுஸ்திரேலியாவில் அணியொன்று பெற்ற அதி கூடிய ஓட்டமாகும்.

52 பந்துகளில் ஏ.பி டி விலியர்ஸ் பெற்ற சதமானது அவுஸ்திரேலிய மண்ணில் பெறப்பட்ட அதிவேக சதமாக பதிவாகியது.
உலகக்கிண்ண வேகமான சதங்களில் கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் அயர்லாந்தின் கெவின் ஓபிரையன் பெற்ற சாதனையை 2 பந்துகளில் தவறவிட்டிருந்தார்.
உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டம்.
டில்ஷானும் இன்று அம்லாவும் இதை நெருங்கியிருந்தார்கள்.

ஹோல்டரின் ஒரு ஓவரில் அவர் கொடுத்த 34 ஓட்டங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளில் ஒரு ஓவரில் கொடுக்கப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள்.
தனது 10 ஓவர்களில் 104 ஓட்டங்களைக் கொடுத்து பரிதாபகரமானார்.
------------------

இந்த சாதனைகளின் பட்டியலில் ஆரம்பத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை அணி அடுத்தடுத்த அபார ஓட்டக்குவிப்புக்களுடன் சேர்ந்து கொண்டுள்ளது.

அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டாவது விக்கெட்டுக்காக இரட்டைச் சத இணைப்பாட்டங்கள்.

இலங்கையின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களுமே சதங்களைப் பெற்றுள்ளனர்.

சங்கக்கார இன்னும் பல்வேறு பட்டியல்களில் முன்னிலை பெற்று சோர்ந்திருந்த இலங்கை ரசிகர்களுக்கு தெம்பு சேர்த்திருக்கிறார்.

இன்று Facebookஇல் கண்ட சுவாரஸ்யமான 'சங்கா' படம்


இறுதி இரண்டு போட்டிகளில் 2 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 644 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பந்துவீச்சின் குறைகளை இலங்கை தனது மெருகு பெற்றுள்ள துடுப்பாட்டம் மூலமாக நிவர்த்தி செய்துள்ளது.

இதே சிறப்பான ஆட்டத்தை பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு சென்றால் அவுஸ்திரேலிய அணிக்கும் சவால் விடலாம்.
களத்தடுப்பும் பந்துவீச்சும் இலங்கையின் பலமாக இருந்த காலம் முற்றுமுழுதாக மாறி இப்போது துடுப்பாட்டத்திலேயே தங்கியிருக்கவேண்டிய நிலை பரிதாபம்.

பந்துவீச்சு மோசமாகி இருப்பதையாவது திருத்திக்கொள்ளலாம் என்று பார்த்தால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் இலங்கை தவறவிட்ட பிடிகளும், களத்தடுப்பு தவறுகளும் உடனடியாக சீர்செய்யப்படவேண்டும்.

எனினும் திரிமான்னே மீது இருந்த விமர்சனங்கள், சந்தேகங்களுக்கு அவரது அபாரமான, ஆட்டமிழக்காத 139 முற்றுப்புள்ளி வைத்திருப்பதோடு, அவரை 'சின்ன சங்கக்கார' ஆக்கியிருக்கிறது.


இதுவரைக்கும் 15 தடவைகள் 300 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்டுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளில் நான் முன்பே எதிர்வு கூறியது போல பேர்முடா அணிக்கு எதிராக பெற்றுள்ள 413 ஓட்டங்கள் என்ற உலககிண்ண சாதனைக்கு சவால் விடப்படலாம்.
(தென் ஆபிரிக்கா மிக நெருக்கமாக இன்றும் வந்திருந்தது)

ஆப்கானிஸ்தான் அணிக்கு அவர்களுடைய சரித்திரபூர்வமான முதலாவது உலகக்கிண்ண வெற்றியும் கிடைத்துள்ளது.
மிகவும் திறமையான போராட்ட குணம் மிக்க அணிக்கு அவர்களது கடுமையான முயற்சிக்கும், 7 ஆண்டு கால தவத்துக்கும் கிடைத்த பலனாகவே இதைக் கொள்ளவேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணி பற்றி நீண்ட நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதிச் சேர்த்த ஒரு இடுகை விரைவில் வரும்.

பாகிஸ்தான் அணி மிகத் தடுமாற்றத்தின் மத்தியில் சிம்பாப்வே அணியை வென்றிருப்பது, அப்பாடா என்று அந்த அணியின் ரசிகர்களை மட்டுமன்றி அணியையும் ஆறுதலடைய வைத்திருக்கும்.
இனி வரும் மூன்று போட்டிகளில் நாளை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தை சந்திப்பதில் சிக்கல் இல்லை.
எனினும் பாகிஸ்தான் இப்போது இருக்கும் நிலையில் தென் ஆபிரிக்காவும், ஏன் அயர்லாந்தும் கூட பாகிஸ்தானை உருட்டித் தள்ளிவிடும் போல தெரிகிறது.

அயர்லாந்து - பாகிஸ்தான் போட்டி தான் பிரிவு Bயில் இருந்து காலிறுதிக்குச் செல்லும் 4வது அணியைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.


துடுப்பாட்டத்தில் மிகப் பலவீனமாகத் தெரியும் பாகிதான் அணிக்கு மிஸ்பா உல் ஹக்கைத் தவிர ஓட்டங்கள் வேறு யாரிடமும் இருந்து வருவதாக இல்லை.
யூனிஸ் கானை மூத்த வீரர் என்றெல்லாம் பார்க்காமல் வெளியே அனுப்பி, பந்துவீச்சாளர்களை அதிகமாக சேர்த்து அதன் மூலம் ஒரு வெற்றியை சுவைத்து இருக்கிறார்கள்.
இது நாளையும் பயன் தரலாம்.
ஆனால் அடுத்த போட்டிகள்?

என்னைப் பொறுத்தவரை, கடந்த போட்டியில் பாகிஸ்தானின் மூன்று இடது கை பந்துவீச்சாளர்களும் மிகத் துல்லியமாக பந்துவீசி இருந்தார்கள்.
உயரமான இர்பான், துடிப்பான வஹாப் ரியாஸ் (சகலதுறை பெறுபேறு கலக்கியிருந்தது), வேகமான ரஹாத் அலி என்று ரசிக்க வைத்திருந்தனர்.
இந்த இணைப்பு தென் ஆபிரிக்காவின் அச்சுறுத்தும் துடுப்பாட்டத்தைக் கூட தடுமாற வைக்கலாம்.

அதிலும் மிட்செல் ஸ்டார்க், டிரென்ட் போல்ட் என்று வேறு இரு இடது கை பந்துவீச்சாளர்கள் கலக்கி வரும் நிலையில் இது தான் பாகிஸ்தானின் திருப்பு முனையாகப் போகிறதோ?

நாளைய இரு போட்டிகளும் பலமான பெரிய அணிகளுக்கு பெரியளவில் சவாலாக இருக்காது என்று பலர் எதிர்பார்த்தாலும்,
ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியா தங்கள் அணிக்கட்டமைப்பை நாளை உறுதி செய்துகொள்ள மிகவும் கவனமாக விளையாடும்.
அதிலும் நியூ சீலாந்துடன் பெற்ற அதிர்ச்சித் தோல்வி அவுஸ்திரேலியாவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிக ஆபத்தான ஆப்கானிஸ்தான் அணியுடன் கொஞ்சம் கவனயீனமாக இருந்தாலும் இலங்கை தடுமாறியதைப் போல ஆகிவிடும் என்னது கிளார்க்கின் அணிக்குத் தெரிந்தே இருக்கும்.

வொட்சனின் மோசமான form மற்றும் சிலபல உபாதைகள் சில மாற்றங்களை நாளைய அவுஸ்திரேலிய அணியில் ஏற்படுத்தலாம்.

இனி வரும் போட்டிகளில் பல விறுவிறுப்பான போட்டிகள் காத்திருப்பதோடு, இந்த முடிவுகள் தான் காலிறுதி அணிகளை முடிவு செய்யப் போகின்றன.


படங்கள் நன்றி : ESPN Cricinfo

No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner