வென்ற தென் ஆபிரிக்கா, வெளியேறிய இலங்கை & இனி வரும் 3 விறுவிறு காலிறுதிப் போட்டிகள்...

ARV Loshan
0
இலங்கை அணி காலிறுதியில் தோற்று வெளியேற, தென் ஆபிரிக்கா 23 ஆண்டுகளாக இருந்த knock out தோல்வி சாபத்திலிருந்து மீண்டு அரையிறுதிக்கு மிக உற்சாகமாக செல்கிறது.

தென் ஆபிரிக்காவின் knock out சுற்று சாபம் அரையிறுதியில் எங்கே ஆரம்பித்ததோ அங்கே, அதே சிட்னியிலேயே இன்றைய தினம் இலங்கை அணிக்கு எதிராகப் பெற்ற அபாரமான வெற்றியுடன் முடிந்தது குறிப்பிடக்கூடிய ஒரு முக்கியமான விடயமாகும்.
1992இல் மிகக் கொடுமையாகத் தென் ஆபிரிக்கா மிகக் கொடுமையான, கோமாளித் தனமான மழை விதியால் தோற்கடிக்கப்பட்டபோது, பெய்த அதே அடை மழை இன்றும் எட்டிப் பார்த்தபோதும், நீட நேரம் பெய்து மீண்டும் தென் ஆபிரிக்காவை வதைத்து பலியெடுக்காமல், அப்போது ஆட்டமிழந்த சங்கக்காரவுக்காக கொஞ்சம் அழுதுவிட்டு போய்விட்டது.

சிட்னி போட்டியில் நாணய சுழற்சி முக்கியமானது என்று கருதப்பட்டு, இலங்கை அணித் தலைவர் அதையெல்லாம் சரியாக செய்திருந்தாலும், முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியில் (தலைமைத் தேர்வாளர் சனத் ஜெயசூரியவின் தலையீட்டில்) செய்யப்பட்ட வேண்டாத மாற்றம் எல்லாவற்றையும் மாற்றிப்போட இலங்கை அணிக்கு எதுவுமே இன்று சரியாக நடக்கவில்லை.


போதாக்குறைக்கு அமைதியான சுபாவம் கொண்ட ஆடுகளமாகத் தென்பட்ட சிட்னியில் இன்று தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்கள் தொட்டதெல்லாம் துலங்கியது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எகிறும் பந்துகளும் வேகமும், அதை விட பேரதிர்ச்சியாக சுழல் பந்து வீச்சாளர்களுக்கு பந்து சொன்னதெல்லாம் செய்ததும் அமைந்தது.
ஸ்டெய்ன், மோர்க்கல், அபோட் ஆகியோரையே சமாளிக்கத் திணறிய இலங்கை, சுழல் பந்துவீச்சாளர்கள் தாஹிர், டுமினியிடம் மாட்டி விக்கெட்டுக்களை இழந்தது மிகப்பெரும் கொடுமை.

அதிலும் தாஹிர், டுமினி ஆகியோர் தமக்கிடையே 7 விக்கெட்டுக்களை பகிர்ந்துகொண்டதும், டுமினி ஹட் ட்ரிக்கை (உலகக்கிண்ணத்தில் தென் ஆபிரிக்கர் ஒருவர் பெற்ற முதல் ஹட் ட்ரிக்) எடுத்ததும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல.

4 சதங்களை அடுத்தடுத்து அடித்து அபார ஓட்ட ஆற்றலுடன் இருந்த சங்காவே ஓட்டங்களை எடுப்பதில் சிரமப்பட்டுப்போனார்.
இறுதியாக அவர் மிகத் தடுமாறிப் பெற்ற 45 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறியபோது தான், பலர் தங்கள் சமூக வலைத்தளப் பதிவுகளில் ஏற்றியது போல இயற்கையும் அழுதது.

திரிமன்னே மற்றைய எல்லாரையும் விட லாவகமாக அடித்தாடி 48 பந்துகளில் 41 ஓட்டங்களை எடுத்தது நிச்சயம் குசல் ஜனித் பெரேராவை ஆரம்ப வீரராக எடுத்த முட்டாள்தனமான முடிவை நிச்சயம் மீண்டும் யோசிக்க வைத்திருக்கும்.

சிறிய ஓட்ட எண்ணிக்கைகள் பெற்றாலும் போராடி முடிவுகளை மாற்றிய சரித்திரம் இருக்கிறது. எனினும் இலங்கை அணியில் ஏற்பட்ட காயங்கள், உபாதைகளினால் பலவீனப்பட்ட பந்துவீச்சினால் 133 ஓட்டங்களை வைத்துக்கொண்டு chokers என்ற அவப்பெயரை உடைக்க உத்வேகத்தோடு களமிறங்கிய தென் ஆபிரிக்காவை எதிர்த்து நிற்கப் போதவில்லை.

முதல் 6 போட்டிகளிலும் தடுமாறியிருந்த குயிண்டன் டீ கொக்கும் formக்குத் திரும்ப தென் ஆபிரிக்கா அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் புகுந்துள்ளது.

உலகக்கிண்ணத்தோடு விடைபெறுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த இலங்கையின் இரு சாதனைச் சிகரங்களும் அவமானகரமான தோல்வியுடன் ஒய்வு பெற்றுள்ளார்கள்.

இதனால் தான் இலங்கை ரசிகர்களுக்கு இந்தத் தோல்வி அதிகமாக வலிக்கிறது.

இதை உடனடியாக கீழ்வருமாறு Facebookஇல் பதிந்திருந்தேன்.

கிரிக்கெட்டில் தோற்பது பெரிய விஷயமே இல்லை.
இதை விட இரு பெரிய கிரிக்கெட் தோல்விகள் மனதை இன்று வரை நொறுக்கிக் கொண்டிருக்கின்றன.
2011 - உலகக்கிண்ண இறுதி
2012 - WT20 இறுதி
இரண்டும் மைதானத்தில் இருந்து பார்த்த சோகமும் தோல்வியின் அழுத்தமும் மிகக் கொடுமையானது.
ஆனால், இந்தத் தோல்வி கொடுமையானது.
காரணம் இத்துடன் முடியப்போவது இலங்கையின் உலகக்கிண்ணப் பயணம் மட்டுமில்லை, இலங்கை கிரிக்கெட்டையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியும் பெருமையும் படுத்திய இரு பெரும் கிரிக்கெட் சிகரங்களின் சர்வதேச கிரிக்கெட் பயணமும் தான்.
2007, 2011 இரு தடவை மஹேல, சங்கா இருவரது தலைமையிலும் இறுதி வரை வந்து கிண்ணம் தவறிப்போனது இப்பொழுது மேலும் மனதில் சோகத்தைத் தருகிறது.
சென்று வாருங்கள் சிகரங்களே...
எங்களுக்கு வாய்த்த பாக்கியம் அவ்வளவே.
சங்கக்கார இந்த உலகக்கிண்ணத்தில் இன்றோடு 500 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். 541.

இலங்கை அணியின் மூன்றாம், நான்காம் இலக்கங்களில் இலங்கையின் துடுப்பாட்டத்தின் முதுகெலும்பாக விளங்கிய இருவரும் இறுதியாக விளையாடிய ஒருநாள் போட்டி இலங்கைக்கு மறக்கமுடியாத தோல்வி.
மஹேல , சங்கா இருவரதும் ஒன்று சேர்ந்த சாதனைகள்
26835 ODI runs
170 half centuries 
44 centuries

இலங்கை அணியின் பெயரை கிரிக்கெட் உலகில் அழுத்தமாகப் பதித்த இரு கனவான்கள், சாதனையாளர்கள் ஒரு உலகக்கிண்ணமும் வெல்லாமல் செல்கிறார்கள் என்பது இலங்கை கிரிக்கெட்டுக்குமெ வேதனை தான்.

மஹேல, சங்கா இருவரும் கிரிக்கெட்டையும், உலகக்கிண்ணத்தையும் விட எவ்வளவு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்கள் என்பதை இன்று ட்விட்டரை வந்து நிரப்பிய முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் மட்டுமன்றி, தென் ஆபிரிக்க  வீரர்களும் தங்கள் வெற்றியைக் கொண்டாடாமல் மஹேல, சங்காவுக்கு பிரியாவிடையை கௌரவமாக வழங்கியதும் காட்டிநிற்கிறது.







ஆனால் சமநிலையோ, போராட்ட குணத்தைப் பெரியளவில் வெளிப்படுத்தவோ முடியாமல் போன இலங்கை அணியை விட இன்று வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணி அரையிறுதிக்குப் பொருத்தமான ஒரு அணிதான் என்பதை எல்லா இலங்கை ரசிகர்களுமே ஏற்றுக்கொள்வர்.

சங்கா, மஹேல ஆகியோருக்கு மட்டுமன்றி டில்ஷான், ஹேரத்,மாலிங்க, குலசேகர போன்ற மூத்த வீரர்களுக்கும் இதுவே இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியாக அமைந்துவிடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

இலங்கை அணி போராடித் தோற்றிருந்தால் கூட பெருமையோடு இருந்திருக்கலாம், ஆனால் இன்றைய தோல்வி ஜீரணிக்க முடியாத ஒரு சோகமான தோல்வி மட்டுமல்ல, சரணடைவு.
இனி மஹேல, சங்கா போன்றோரும் இல்லாத இலங்கை அணி, சரியான பிரதியீட்டு வீரர்களில்லாமல் படப்போகும் சிக்கல்களைக் கொடு காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு சிகரம் ஓய்வுபெறும் நேரத்திலும் 'இனி கிரிக்கெட்டை எப்படி ரசிப்பேன், இவர்கள் இல்லாத கிரிக்கெட்டை பார்ப்பதில் என்ன அர்த்தம்'என்று புலம்பும் மனது பின்னர் சில நாளில் தேறிவிடும்.
எனினும் நீண்ட காலமாக எங்கள் கிரிக்கெட்டை பெருமைப்படுத்திய இந்த இருவரின் ஒய்வு தரும் தாக்கம் அதையெல்லாம் தாண்டியது.
வெறுமையாக உணர்கிறேன்.

இப்போதிருக்கும் நிலையில் ஜூலைக்குப் பின்னரே தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள சங்கக்காரவின் துடுப்பாட்டம் இனியும் கொஞ்சம் காண்போம் என்பது மட்டுமே சிறு ஆறுதல்.

விடைபெற்ற ஜாம்பவான்கள் 
------------------
இன்றோடு இலங்கைக்கான உலகக்கிண்ணம் முடிந்தாலும், யாருக்காகவும் நிற்காது காலமென்பது போல மற்றைய 7 அணிகளோடு உலகக்கிண்ணம் 29ஆம் திகதி வரை பயணிக்கத் தான் போகிறது.

விருந்து படைக்கும் விறுவிறுப்பான மூன்று காலிறுதிப் போட்டிகள் என்ற தலைப்பில் இன்னும் எஞ்சியிருக்கும் மூன்று காலிறுதிப் போட்டிகள் பற்றி ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு எழுதிய கட்டுரையினை சிற்சில மாற்றங்களுடன் தருகிறேன்.


நேற்றைய நாள் இலங்கை ரசிகர்களுக்கு மிகக் கொண்டாட்டமான கோலாகலமான நாளாக - 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண வெற்றியைக் கொண்டாடும் நாளாக இருக்க, ​பாகிஸ்தான், இந்திய அணிகளின் ரசிகர்களுக்கு உலகக்கிண்ண வரலாற்றிலேயே மிக வேதனை தரும் ஒரு கறுப்பு நாளாக நேற்றைய தினம் மனதில் பதிந்திருக்கும்.

ஆமாம், 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ணத் தொடரில் இந்த இரண்டு ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களும் ஒரே நாளில் மாபெரும் அதிர்ச்சியை கிரிக்கெட் உலகத்துக்கு வழங்கிய நாள் இந்த மார்ச் 17.

The Greatest Upsets என்று உலகக்கிண்ணத்தின் வரலாற்றில் குறிப்பிடக்கூடிய விதமாக பாகிஸ்தான் அயர்லாந்தினாலும், இந்தியா பங்களாதேஷினாலும் தோற்கடிக்கப்பட்டு முதல் சுற்றோடு மூட்டை கட்டப்பட்ட நாள்.

அதே பங்களாதேஷ் அணியை கடந்த உலகக்கிண்ணத்தின் முதலாவது போட்டியில் இந்தியா சேவாக்கின் அபாரமான சதத்தின் உதவியுடன் வீழ்த்தியது.

இந்தியா எதிர் பங்களாதேஷ்

மீண்டும் இவ்விரு அணிகளும் இம்முறை மிக முக்கியமான காலிறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.
எனினும் கடந்த உலகக்கிண்ணத்தில் சொந்த மண்ணில் இருந்த பலத்தை விட, அவுஸ்திரேலிய மண்ணில் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இம்முறை ஒரு கட்டுக்கோப்பாகவும், முதற்சுற்றின் 6 போட்டிகளையும் வென்று தம்மிடம் உள்ள கிண்ணத்தை மீண்டும் தாமே தக்கவைக்கும் எண்ணத்தோடு உத்வேகமாகக் களம் கண்டுள்ளது.

யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவின் பந்துவீச்சு மிக நேரத்தியாக அமைந்துள்ளது.
ஷமியுடன்​ உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா அடங்கிய வேகப்பந்துவீச்சாளர்களும் கூடவே அஷ்வினின் சுழல்பந்தும் சேர்ந்து கலக்கி வருகிறது.

இது​ இந்தியாவின் களத்தடுப்பில் இருக்கும் சிறிய ஓட்டைகளையும் சீர் செய்துவிடுகிறது. ஆனால் இம்முறை இந்தியாவின் களத்தடுப்பு ஏனைய பல அணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சிறப்பாகவே இருக்கிறது என்று சொல்லவேண்டும்.

​தவானின் இரண்டு சதங்களுடன் ரெய்னா, கோளி ஆகியோரின் சதங்களும்  நம்பிக்கை தரக்கூடிய ரஹானே, ரோஹித் ஷர்மா, முக்கியமாக போட்டிகளை சிறப்பாக முடித்து வைக்கும் தோனி என்று இந்தியாவின் துடுப்பாட்ட பலமும் எந்த அணிக்கும் குறைவான ஒன்று அல்ல.
ஒவ்வொரு வெற்றியும் நடப்பு சம்பியன்கள் இந்தியாவுக்கு நம்பிக்கையை ஏற்றி இருக்கின்றன.

மறுபக்கம் பங்களாதேஷ், அதிர்ச்சிகளைத் தரக்கூடிய அணியாகத் தெரிகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவேண்டிய போட்டியில் மழையின் வரத்தால் ஒரு அதிர்ஷ்டப் புள்ளி கிடைத்தாலும், இலங்கைக்கு எதிராகக் கண்ட மோசமான தோல்வி பங்களாதேஷ் அணியை வெகு சாதாரணமாகக் காட்டியிருந்தது.

எனினும் இங்கிலாந்தை வீழ்த்தியதும், நியூ சீலாந்து அணியுடன் போராடியதும் உத்வேகமும் அனுபவமும் சேர்ந்த இந்த பங்களாதேஷ் அணி பெரிய அணிகளைக் கவிழ்க்கக்கூடிய ஆற்றலுடையது என்று காட்டியுள்ளது.

வழமையான நான்கு பெரிய தலைகளான  மஷ்ராஃபே மொர்த்தசா, உலகின் முதல் நிலை சகலதுறை வீரர்களில் ஒருவரான ஷக்கிப் அல் ஹசன், நம்பகமான விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரரான முஷ்பிக்குர் ரஹீம் மற்றும் அதிரடி ஆரம்ப வீரர் தமீம் இக்பால் ஆகியோர் எப்போதுமே எதிரணிகளால் மதிப்புடன் நோக்கப்படுபவர்கள்.

இவர்களுடன் இப்போது இரண்டு சதங்களை அடுத்தடுத்துப் பெற்று சிறப்பான formஇல் இருக்கும் மஹ்முதுல்லாவும், வேகப்பந்தில் விக்கெட்டுக்கள் சரிக்கும் ருபெல் ஹொசெய்னும் சேர்ந்துகொள்ள பங்களாதேஷ் அணி இன்னும் சில சாதிக்கும் ஆற்றலுள்ள இளையவர்களுடன் அடுத்த கட்டத்துக்குத் தயாரான அணி போலவே தெரிகிறது.
இளையவர்கள் சபீர் ரஹ்மான், சௌம்ய சர்க்கார் மற்றும் நாசிர் ஹொசெய்ன் ஆகியோரும் கவனிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாகத் தெரிகிறார்கள்.

இந்தக் காலிறுதிப் போட்டி இடம்பெறும் மெல்பேர்ன் மைதானத்திலேயே இறுதிப்போட்டி இடம்பெறப்போகிறதும், இவ்விரு அணிகளுமே இங்கே விளையாடியிருப்பதும் குறிப்பிடக்கூடிய விடயங்கள்.

இந்திய அணியின் பலம் அதிகமாகத் தெரிகிறது.
ஆனால் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி உட்பட யாருமே பங்களாதேஷை குறைத்து மதிப்பிடத் தயாரில்லை.

தொடர்ந்து வென்று வரும் இந்திய அணிக்கு ஒரேயொரு தோல்வி உலகக்கிண்ணத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்பதனால் சிறு கவனயீனமும் இன்றி சிரத்தையோடு விளையாட எண்ணம் கொள்ளும்.

முன்னாள் இலங்கை வீரர் ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் நம்பிக்கையோடு நடைபோடும் பங்களாதேஷ், இந்தியாவை முன்பு வீழ்த்திய நம்பிக்கையுடன், 1996 இலங்கையின் வரலாற்றை மனதுக்குள் நினைந்து கொள்ளும்.


----------------------

 அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான்


ஒரு அணி உலகின் மிகப் பலம் வாய்ந்த அணி.சொந்த மண்ணில் இன்னும் பலம் கூடிவிடும். இம்முறை உலகக்கிண்ணம் வெல்லும் அதிக வாய்ப்புடைய அணியாகக் கருதப்படும் அணி.

அடுத்தது இதே அவுஸ்திரேலிய - நியூ சீலாந்து மண்ணில் இதற்கு முன்னர் நடந்த உலகக்கிண்ணத்தை வென்ற அணி.
அதே பாணியில் ஆரம்ப சறுக்கல், படு மோசமான தோல்விகளுக்குப் பிறகு நான்கு தொடர்ச்சியான வெற்றிகள்.
எப்போதுமே திடீர் வெற்றி அல்லது திடுமென்ற அதிர்ச்சித் தோல்வி மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் பாகிஸ்தான்.

 இவ்விரண்டு அணிகளும் கடந்த 2011 உலகக்கிண்ணப் போட்டியில் சந்தித்த நாள் 2011 மார்ச் 19, கொழும்பில்.
குறைவான ஓட்டங்கள் பெற்ற அந்தப்போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்களால் வென்றிருந்தது.
இம்முறை அடிலெய்ட்டில் சந்திக்கவிருப்பது மார்ச் 20.

ஆனால், இரு அணிகளிலும் பல மாற்றங்கள் இப்போது.
கிளார்க், வொட்சன், ஹடின், ஸ்மித் என்று அவுஸ்திரேலிய பக்கமும்,
அப்ரிடி, மிஸ்பா, யூனிஸ் கான், உமர் அக்மல், வஹாப் ரியாஸ் என்று பாகிஸ்தான் பக்கமும் எஞ்சியிருக்கும் வீரர்களிலும் பல மாற்றங்கள்.

ஸ்டார்க், ஜோன்சன் என்று அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு இடது கைகளில் எதிரணிகளை மிரட்டுவது போலவே, பாகிஸ்தானிலும் ரியாஸ், ரஹாத் அலி என்று இரு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள்.
மூன்றாவதும் முக்கியமானவருமான மொஹமட் இர்ஃபான் காயத்துடன் இனி விளையாடமுடியாது உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேறியிருப்பது இப்போது பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதை எழுதும் நேரத்தில் பாகிஸ்தான் யாரை இர்பானுக்கு பதிலாக பிரதியீடு செய்யப்போகிறார்கள் என்பதை அறிவிக்காத நிலையில், பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் மட்டுமே இன்னொரு வீரரைப் பயரிடவுள்ளதாக அறிவித்திருப்பது பாகிஸ்தான் முகாம் எவ்வளவு நம்பிக்கையீனமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.


எனினும் பாகிஸ்தானை விட அவுஸ்திரேலியா அதிக அசுர பலத்துடன் தெரிவது தொடர்ச்சியான, நம்பகமான துடுப்பாட்டம் மற்றும் உறுதியான களத்தடுப்பு.

வஹாப் ரியாஸ் தனியே போராடி பந்துவீச்சில் நிலைப்பது போல, துடுப்பாட்டத்தில் தலைவர் மிஸ்பா உல் ஹக் போராடிக்கொண்டிருந்தார்.
கடைசி மூன்று போட்டிகளில் சப்ராஸ் அஹமட் அணிக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு பாகிஸ்தானுக்கு ஒரு புது உத்வேகம் கிடைத்துள்ளது.
எனினும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள், குறிப்பாக மிக எதிர்பார்த்த அஹ்மட் ஷெசாட், உமர் அக்மல் ஆகியோரின் பெரியளவு ஓட்டப் பங்களிப்பின்மை அணியைப் பாதிக்கிறது.
அதேபோல 'சகலதுறை' வீரராக அணிக்குள் இருக்கும் அப்ரிடி இதுவரை தனது பந்துவீச்சினாலோ, துடுப்பாட்டத்தாலோ எந்தவொரு சிறப்பான பெறுபேற்றையும் வழங்காதது பாகிஸ்தானை மிகவும் சோதிக்கிறது.

மறுபக்கம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்கெனவே சதங்கள் குவித்துள்ள வோர்னர், ஃபின்ச்ச், மக்ஸ்வெல் அசுர ஓட்டப் பசியுடன் இருக்க, தலைவர் கிளார்க், வொட்சன் ஆகியோரும் இப்போது form பெற்றுள்ளார்கள்.
ஸ்மித்தும் போல்க்னரும் இந்தக் கச்சேரியில் சேர்ந்துகொண்டால் ஓட்டங்கள் மலையாகக்குவியும்.

பந்துவீச்சு உறுதியாகத் தெரிந்தாலும் மிட்செல் ஸ்டார்க் தான் தனியே பாரம் தாங்குவது போல தெரிகிறது.

ஜோன்சன்,கமின்ஸ் அல்லது ஹேசில்வூட்,மற்றும் போல்க்னர் ஆகியோரும் விக்கெட்டுக்களை வீழ்த்தினாலே அணியின் வெற்றிகள் தொடரும்.

பாகிஸ்தானைப் போலவே அவுஸ்திரேலியாவுக்கும் சுழல்பந்து சிக்கல் இருக்கிறது.

எதிரணிகள் சரியான புள்ளியில் தாக்கம் செலுத்தினால், அவுஸ்திரேலியாவும் கூட சிதறிவிடும் என்பதை நியூ சீலாந்து நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
ஆனால் தாங்களாகவே திடீரென பதறி,சிதறிவிடும் பாகிஸ்தானால் முடியுமா என்பதே பெரிய கேள்வி.

ஆடுகள சாதகம், அணியின் கட்டமைப்பு, உறுதியான துடுப்பாட்ட வரிசை, மிகத் துல்லியமான, தொடர்ச்சியாக சிறப்பாக செய்து வரும் களத்தடுப்பு, பாகிஸ்தானின் தடுமாறும் துடுப்பாட்டம் (சப்ராஸ், மிஸ்பா தவிர)இவை போன்ற காரணிகளை வைத்து பார்த்தால் அடிலெய்டில் அவுஸ்திரேலிய வெற்றி உறுதி எனத் தெரிகிறது.

---------------------

நியூ சீலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்.


1992ஐப் போலவே சொந்த மைதான அனுகூலங்கள், ரசிகர்களின் உற்சாகப் பின்னணி என்பவற்றுடன் மட்டுமல்லாமல், ஆக்ரோஷமாக அணியை முன்னின்று வழிநடத்தும் பிரெண்டன் மக்கலத்தின் உத்வேகத்தில் அசைக்கமுடியாத அணியாக வலம்வரும் நியூ சீலாந்து எல்லா அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாக விளங்குகிறது.

இந்தியாவைப் போலவே எந்தவொரு போட்டியிலும் தோற்காத நியூ சீலாந்துக்கு சதம் பெற்றுள்ள கப்டில், மக்கலம் வழங்கும் ஆரம்பம் போலவே, பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த சௌதீயும், அதிக வேகத்துடன் துல்லியமும் காட்டிவரும் டிரென்ட் போல்ட்டும் சேர்ந்து எதிரணிகளை சுருட்டி வருகிறார்கள்.

சுழல்பந்துவீச்சில் வெட்டோரியின் அனுபவம் எதிரணி வீரர்களை ஆட்டம் காண வைத்து வருகிறது.

வில்லியம்சன், டெய்லர், எலியட், அண்டர்சன், ரொங்கி என்ற நீண்ட துடுப்பாட்ட வரிசை பெரிதாக இதுவரை சோதிக்கப்பட்டாதது  நியூ சீலாந்துக்கு ஒரு வகையில் பலமாக இருந்தாலும், இனி பாதிப்பாகவும் அமையலாம்.

அவுஸ்திரேலியா 9 விக்கெட்டுக்களை வீழ்த்தி நியூ சீலாந்தை ஆட்டம் காண வைத்தது போல, ஸ்கொட்லாந்து அணியும் ஆச்சரியப்படும் வகையில் அசைத்துப் பார்த்தது.
பங்களாதேஷ் அணியோ பந்துவீச்சையும் பதம் பார்த்தது.

இவற்றை மேற்கிந்தியத் தீவுகள் உன்னிப்பாக அவதானித்தால், ஓரிரண்டு தனி நபர்களின் அசுர பலத்தின் உத்வேகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் நியூ சீலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.

அயர்லாந்தினால் சுருட்டப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், பின்னர் தென் ஆபிரிக்காவினால் வதைக்கப்பட்டது.
எனினும் பெறப்பட்ட மூன்று வெற்றிகள், துரதிர்ஷ்டம் வாய்ந்த அயர்லாந்தை வெளியே அனுப்பி,ஹோல்டரின் தலைமையிலான இந்த அணிக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

வேகப்பந்துவீச்சாளர் ஜெரோம் டெய்லர் தவிர வேறு எந்த மேற்கிந்தியத் தீவுகளின் வீரருமே தொடர்ச்சியாக சிறப்பாக சோபிக்கவில்லை.
கெய்லின் உலகக்கிண்ண சாதனை இரட்டைச் சதம், சாமுவேல்ஸ், லென்டில் சிமன்ஸ் ஆகியோரின் சதங்கள், ஹோல்டர், ரசல், சமி போன்றோரின் சிறு சிறு பிரகாசிப்புக்கள் ஆங்காங்கே எழுவதும் வீழ்வதுமாக மேற்கிந்தியத் தீவுகளைக் கொண்டு செல்கின்றன.

அசுர வேகத்தில் செல்லும் நியூ சீலாந்தை அவர்களது சொந்த ஆடுகளங்களில் வீழ்த்த இது போதாது தான்..
எனினும் (கெயிலின் உபாதையும் பூரண குணமாகி) மேற்கிந்தியத் தீவுகள் ஒற்றுமையாக ஒன்றாகச் சேர்ந்து ஒருமித்து உற்சாகமாக முயன்றால், உலகக்கிண்ணத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி விருந்தைப் படைக்கலாம்.

கெயிலைப் போலவே மேற்கிந்தியத் தீவுகளும் ஒரு தூங்கும் ராட்சதர் தான்.
எனினும் அசுர பலத்துடனும், இதுவரை துரதிர்ஷ்டத்தால் தவறவிட்ட உலகக்கிண்ண வாய்ப்பை இம்முறை நிச்சயம் வென்றாகவேண்டும் என்று உத்வேகத்துடனும் பயணிக்கும் நியூ சீலாந்துப் புயல்களை வீழ்த்துமா என்பதற்கு சனிக்கிழமை தான் பதில் சொல்லவேண்டும்.

--------------------

எதிர்பார்க்க வைத்துள்ள நான்கு காலிறுதிகளில் இருந்தும் எந்த நான்கு வெற்றியாளர்கள் தடை கடந்து வருகிறார்கள் என்பதை இந்த நான்கு நாட்களும் சொல்லும்.

எந்தவொரு அதிர்ச்சியும் இல்லாவிட்டால் இன்று வென்ற தென் ஆபிரிக்காவுடன் நியூ சீலாந்து மோதும், இந்தியாவுடன் அவுஸ்திரேலியா மோதும்.

எனினும் நினைப்பதெல்லாம் வாழ்க்கையில் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் நடந்துவிடுவதில்லையே...

ஆர்வத்துடன் அவதானிப்போம்.

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*