March 25, 2015

சிட்னி அரையிறுதி - சூடு பறக்கவுள்ள அவுஸ்திரேலிய - இந்திய மோதல் #cwc15

அனல் பறக்கவுள்ள அவுஸ்திரேலியா - இந்தியா அரையிறுதி என்ற தலைப்பில் இன்று ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு ஒரு கட்டுரையை விளையாட்டு விமர்சகனாக எழுதியிருந்தேன்.
அதிலிருந்து சில, பல மாற்றங்கள் மற்றும் புதிய சேர்க்கைகள், தனிப்பட்ட கருத்துக்களுடன் எனது வலைப்பதிவாக...

"சிட்னி அரையிறுதி - சூடு பறக்கவுள்ள அவுஸ்திரேலிய - இந்திய மோதல் #cwc15"

A.R.V.லோஷன்



இரண்டு தரம் உலகக்கிண்ணம் வென்றுள்ள தற்போதைய நடப்பு சம்பியன்கள், அதிக உலகக்கிண்ணங்கள் வென்று உலகின் முதற்தர ஒருநாள் அணியை சந்திக்கும் விறுவிறுப்பான, பெரும் பரபரப்பான இரண்டாவது அரையிறுதி நாளை.

அவுஸ்திரேலியா அணி தற்போது தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கும் அணி மட்டுமல்ல, தொடர்ச்சியாக தன்னுடைய சிறப்பான வெற்றிகளைப் பதவு செய்து வரும் அணி. அத்துடன் சொந்த மண்ணில் விளையாடும்போது மேலும் பலம் சேர்ந்து எதிரணிகளை ஓடஓட விரட்டக்கூடிய ஆற்றலும் சேர்ந்துவிடும்.

அண்மைய உதாரணம், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடர்.

 ஆனால்,இந்திய அணி அந்த முக்கோண ஒருநாள் தொடரில் கண்ட படுதோல்விகளுக்குப்  பிறகு,இந்த உலகக்கிண்ணத்தில் இதுவரை எடுத்துள்ள உத்வேகமான வெறித்தனமான வெற்றி ஓட்டம், அவர்கள் வைத்துள்ள உலகக்கிண்ணத்தை மீண்டும் அவர்களே வசப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு ஆற்றலுடையதாகத் தெரிகிறது.

இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியாவும், நேற்று வெற்றி பெற்ற நியூ சீலாந்தும் மட்டுமே இந்த உலகக்கிண்ணத் தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோற்காத இரு அணிகள்.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் இருக்கும் மோதல்களும், மைதானத்துக்கு வெளியேயும் நீடிக்கும் பகைமை கலந்த நீண்ட கால பழி தீர்க்கும் உணர்வுக்கு மேலதிகமாக மிக நீண்ட காலமாகவே இருந்து வரும் போட்டி கலந்த பகைமை உணர்வும் இந்த அரையிறுதிப் போட்டியை மேலும் முக்கியமானதொரு போட்டியாக மாற்றுகிறது.

என்னதான் கிரிக்கெட் உலகத்தை நடத்தும் BIG 3 எனப்படும் மூன்று கிரிக்கெட் சபைகளில் இவ்விரண்டும் முக்கியமானவையாக இருந்தாலும், அதிகார விஷயங்களிலும், பணபலத் தீர்மானங்களிலும் இந்திய கிரிக்கெட் சபையும், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும் சிரித்துக்கொண்டே அறுத்துக்கொள்ளும் நட்புடன் கூடிய எதிரிகள்.

அவுஸ்திரேலியா ஆட்டத்திலும், கிரிக்கெட் ஆட்சியிலும் முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்திய தசாப்தத்தைத் தாண்டிய காலம் இருந்தது.
எனினும் IPL காலத்தின் பின்னர் கூடியுள்ள இந்திய ஆதிக்கமும், அண்மைக்கால இந்திய கிரிக்கெட் அணியின் பரவலான வெற்றிகளும் இந்தியாவையும் சில விடயங்களில் முந்த வைத்திருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், இந்த உலகக்கிண்ணத் தொடரை சரியாக பார்த்து வந்திருந்தால், போட்டிகளை பார்க்க வந்திருந்த சொந்த நாட்டு ரசிகர்களுக்கு இணையாக, அல்லது சிலவேளைகளில் அதிகமாக இந்திய மற்றும் இலங்கை ரசிகர்கள் தமது நாட்டு அணிகள் விளையாடும் போட்டியைப் பார்க்க வந்திருந்தார்கள்.

நாளை சிட்னியிலும் இதே போல நடக்கலாம்.
எனவே, ஆடுகளத்தைத் தவிர மீதி எல்லாக் காரணிகளுமே இரண்டு அணிகளுக்கும் சமமானதாக மாறுவதற்கு இடமுண்டு.

இரண்டு அணிகளுமே சர்ச்சைகளினதும் மோதல்களினதும் மைய அணிகள்.
அதிலும் இந்திய அணி மீதும், இந்தியாவின் பல்வேறுவிதமான ஆதிக்கம் மீதும் எதிரணிகளின் ரசிகர்கள் மிகக்கடுமையான அதிருப்தியையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருவது வழக்கமானது.

இலங்கைக்கு அடுத்தபடியாக நான் ரசிக்கும், ஆதரவு தெரிவிக்கும் (அது அலன் போர்டர் காலம் முதல்) அணியாக இருக்கும் அவுஸ்திரேலியா ஐந்தாவது கிண்ணத்தை வெல்லவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

1996 முதல் இலங்கை அணியே உலகக்கிண்ணம் வெல்லவேண்டும் என்று எதிர்பார்த்து, அது தோல்வியில் முடிந்தால் அடுத்து மஞ்சள் சட்டை அவுஸ்திரேலியர்களுக்கான எனது ஆதரவாக இருந்து வருகிறது.

அதிலும் இலங்கை அணி மிக மோசமாகத் தோற்று வெளியேறிய பிறகு அவுஸ்திரேலிய வெற்றியே எனக்கு ஆறுதலாக அமையும்.

அணித் தலைவர் மைக்கேல் கிளார்க்கின் இறுதி ஒருநாள் சர்வதேசத் தொடராக அமையலாம் என்று கருதப்படும் இந்த உலகக்கிண்ணம் அவருக்கு வெற்றியுடன் போகட்டுமே.
அவருடைய சகோதரன் பிலிப் ஹியூஸின் கிரிக்கெட் ஆன்மாவுக்கும் அர்ப்பணமாக இருக்கும்.


----------------------

இப்போது, அதிகமாக பேசப்பட்டு வரும் சிட்னி ஆடுகளம் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.

பரவலாக (அதிகமாக இந்திய ஊடகங்கள்) நாளை விளையாடப்படவுள்ள சிட்னி ஆடுகளம் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத் தன்மை உடையது என்றும், அதனால் இந்தியாவுக்கு கூடுதலான வாய்ப்புடையதாகவும் பேசப்பட்டு வருகிறது.

அதிலும் நாளை விளையாடப்படவுள்ள ஆடுகளமானது தென் ஆபிரிக்க - இலங்கை அணிகள் விளையாடிய காலிறுதி விளையாடப்பட்ட ஆடுகளம் என்பது தான் அதற்கான முக்கிய காரணம்.

டுமினியும், தாஹிரும் இலங்கை அணியை சுருட்டிய அந்தப் போட்டியில் ஆடுகளத்தினால் இலங்கை அணி தடுமாறியதை விட, இலங்கையின் வீரர்கள் மோசமான, ஒரு விதமான பயந்த நிலையில் நின்று ஆடியே விக்கெட்டுக்களை தென் ஆபிரிக்காவின் அதிகம் 'ஆபத்தில்லாத' சுழல்பந்து வீச்சாளர்களுக்கு வழங்கியிருந்தனர்.

சிட்னி ஆடுகளம் அவுஸ்திரேலியாவின் ஆடுகளங்கள் எல்லாவற்றிலும் சுழல்பந்து வீச்சுக்கு அதிக சாதகத் தன்மை தர்த்க்கூடிய மைதானம் எனினும், இந்திய ஆதரவளார்கள் நினைப்பது போல, ஆசிய உப கண்ட ஆடுகளங்கள் போல ஒரேயடியாக சுழல்பந்துவீச்சை ஆதரித்துவிடக்கூடிய ஆடுகளமாக சிட்னி இருக்கப்போவதில்லை.

இதற்கு உதாரணமாக இந்த உலகக்கிண்ணத்தில் சிட்னியில் நடைபெற்ற போட்டிகளில் தான், தென் ஆபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 408 ஓட்டங்களையும், இதே அவுஸ்திரேலியா இலங்கைக்கு எதிராக 376 ஓட்டங்களையும் குவித்தது,
மற்ற இரு போட்டிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து, அடுத்தது இலங்கை சுருண்ட காலிறுதி.

எனினும் எதற்கும் ஆயத்தமாக அவுஸ்திரேலியா தங்கள் சுழல்பந்து சக்கரவர்த்தி ஷேன் வோர்னை இன்றைய பயிற்சிக்கு அழைத்து சில நுட்பங்களையும், சுழல் பந்தை எதிர்கொண்டு ஆடும் சவாலுக்கு முகம் கொடுக்கும் ஆலோசனைகளையும் பெற்றிருந்தது.

ஷேன் வோர்னோடு, முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்கள் மார்க் வோ மற்றும் கிரேக் பிலுவெட் ஆகியோரும் சேர்ந்துகொண்டார்கள்.

எனினும் சுழல்பந்துக்கு சாதகம் தரும் என்று கணித்தோருக்கு பாதகமான விடயமாக கடந்த இரு நாட்களாக சிட்னியில் பெய்து வரும் மழை அமைந்துள்ளது.
இது ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக மாற்றிவிடும்.
ஆடுகளத்தில் எகிறும் தன்மை இருந்தால் இந்தியர்களை விட ஒப்பீட்டளவில் வேகம் உடைய அவுஸ்திரேலியர்களுக்கு அது வாய்ப்பாக அமையும் அதேவேளை, ஸ்விங் இருந்தால் இந்தியாவின் தற்போதைய கட்டுக்கோப்பான வேகப்பந்துவீச்சு வரிசைக்கு சாதகமாக அமையும்.

ஆனால், ஆடுகளம் துடுப்பாட்ட சாதகமானதாக மாறினால், இரு அணிகளிலும் நிரம்பியிருக்கும் மலைபோல ஓட்டங்களைக் குவிக்கும் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் யாருக்கு வாய்ப்பு இருக்கும் என்பது ஊகிக்கக் கடினமானதே.

அதற்குள் அவுஸ்திரேலியா ஆடுகளப் பராமரிப்பாளரிடம் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக மாற்றித் தருமாறு கோரியிருப்பதாகவும், அதை ஆடுகளப் பராமரிப்பாளர் டொம் பார்க்கர் மறுத்ததாகவும் சில செய்திகள் இந்தியப் பக்கம் இருந்து வெளிவந்திருந்தன.

கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்த உறுதியான முடிவின்படி ஆடுகளப் பராமரிப்பாளர் எந்தவொரு பகிரங்கக் கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்கமுடியாது . எனவே எங்கிருந்து இந்த செய்திகள் புறப்படுகின்றன என்பது ஆராயவேண்டிய விடயமே.

-------------------

இந்த உலகக்கிண்ணத்தைப் பொறுத்தவரை இந்தியா சார்பாக 5 சதங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஷீக்கார் தவான் மட்டும் இரண்டு சதங்களைப் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியா இதுவரை 3 சதங்களையே பெற்றுள்ளது.

ஆனால், பலம் வாய்ந்த இந்தியத் துடுப்பாட்ட வரிசை ஒப்பீட்டளவில் 300 - 330 ஓட்டங்களைக் குறிவைத்து, பின்னர் இந்தத் தொடர் முழுதும் விளையாடிய போட்டிகளில் எல்லாமே எதிரணிகளின் அத்தனை விக்கெட்டுக்களையும் வீழ்த்திய பந்துவீச்சாளர்களைக் கொண்டு கட்டுப்படுத்தி, வெற்றிகளை சுவைத்து வந்திருக்கிறது.

அவுஸ்திரேலியா தனது வழமையான முழுமையான தாக்குதல் பாணியையே கையாண்டு வந்துள்ளது.
400+ ஓட்ட எண்ணிக்கையைக் குறிவைத்து ஆரம்பம் முதல் அடித்து நொறுக்குவது, பின்னர் அசுர வேகப்பந்து மூலம் எதிரணிகளை நிர்மூலமாக்குவது.
நியூ சீலாந்திடம் கண்ட மயிரிழையிலான தோல்வியைத் தவிர, (பாகிஸ்தானின் வஹாப் ரியாஸின் தனியொரு போராட்டம் இன்னொன்று) அவுஸ்திரேலியாவின் பயணமும் நிதானமானதே.

-----------------
சிட்னியில் அவுஸ்திரேலிய - இந்திய மோதல்கள்.

சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலியா இந்தியாவை எப்போதுமே துவம்சம் செய்து வந்திருக்கிறது.
இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் அவுஸ்திரேலியா இந்தியாவிடம் ஒரே ஒரு தடவை தோற்றிருக்கிறது.
அது 7 ஆண்டுகளுக்கு முன்னர், 2008இல்.

அதேபோல, இறுதியாக சிட்னியில் அவுஸ்திரேலியா விளையாடியுள்ள பத்து போட்டிகளில் 8 வெற்றி.
தோல்வியுற்ற இரண்டு போட்டிகளும் நம் இலங்கை அணிக்கு எதிராக விளையாடியவை.

நாணய சுழற்சியின் முக்கியத்துவம் இங்கே அதிகம் தான். ஆனால் அவுஸ்திரேலிய வெற்றிகள் இவற்றையெல்லாம் தாண்டியவையாகவே இருக்கின்றன.

இந்திய அவுஸ்திரேலிய அணிகள் இதற்கு முதல் கடந்த உலகக்கிண்ணத்தில் மோதியபோது, அந்தக் காலிறுதிப் போட்டியில் இந்திய அணியின் அபாரமான வெற்றியுடன் 1999 முதல் இருந்து வந்த அவுஸ்திரேலிய உலகக்கிண்ண சாம்ராஜ்யமும் உடைந்து, ரிக்கி பொன்டிங் என்ற அற்புதத் தலைவரின் மணி மகுடமும் போனது.

அதேபோல, 1992ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக அவுஸ்திரேலியா அரையிறுதியை எட்டிப் பார்க்காமல் வெளியேறியது.

இம்முறை அரையிறுதியில் இவ்விரு அணிகளும் சந்திக்கின்றன.
அவுஸ்திரேலியா இதுவரை விளையாடியுள்ள 6 உலகக்கிண்ண அரையிறுதிகளிலும் தோல்வி கண்டதில்லை.
(1999 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுடன் சமநிலை முடிவைப் பெற்றது)

இந்தியா விளையாடியுள்ள 5 உலகக்கிண்ண அரையிறுதிகளில் 3இல் வென்று இறுதிப் போட்டிகளுக்கு சென்றுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 10 உலகக்கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலியா 7இலும், இந்தியா மூன்றிலும் வென்றிருக்கின்றன.

-----------------
பச்சை சட்டை போட்டு எவன் வந்தாலும் அடிப்போம் என்பது இந்திய ரசிகர்கள் படு உற்சாகமாக இந்த உலகக்கிண்ணம் முழுவதும் சொல்லி வரும் வாசகம்.
அவுஸ்திரேலியாவின் சீருடையிலும் பச்சை ஒட்டியிருப்பதால் மௌக்கா மௌக்கா இப்போதே பாட ஆரம்பித்துள்ளவர்களுக்கு ஒரு நினைவுபடுத்தல்.

அவுஸ்திரேலியா இந்த பச்சை ராசியெல்லாம் தாண்டிய ஒரு பயங்கர அணி.

இந்தியாவை அவுஸ்திரேலிய அணி ஒரு வெற்றிக்காக தேட வைத்த (மக்ஸ்வெல்லின் வார்த்தைகள்) முக்கோணத் தொடரில் அவுஸ்திரேலியாவின் சீருடை பச்சை :)

---------------

இரண்டு அணிகளும் ஒப்பீட்டளவில் சமபலமுடையதாகத் தெரிந்தாலும், இந்தியாவின் களத்தடுப்பு அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு துடிப்பானதாகத் தெரிந்தாலும், அவுஸ்திரேலியாவின் களத்தடுப்பு ஒப்பீட்டளவில் ஒரு படி மேலே தான். 

ஆனால், அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சு பலவீனம் இந்தியாவுக்கான சிறிய வாய்ப்பாக அமையும்.
அநேகமாக அவுஸ்திரேலியா மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், போல்க்னர் ஆகியோரோடு தான் விளையாடும் என்று கருதினால், மக்ஸ்வெல் தான் அவர்களது பிரதான சுழல்பந்து வீச்சாளராக இருப்பார்.
இந்தியத் துடுப்பாட்டவீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இடமுண்டு.
ஆனால், மிட்செல் ஸ்டார்க் இந்த உலகக்கிண்ணத்தின் முக்கியமான பந்துவீச்சாளராக எதிரணிகளை அச்சுறுத்தி விக்கெட்டுக்களை அள்ளுகிறார்.
அவரது யோர்க்கரும் பவுன்சரும் எந்த துடுப்பாட்ட வீரரையும் தடுமாற வைக்கும்.

இந்திய அணி என்றாலே மிரட்டி எடுக்கும் ஜோன்சனும் கூட சேர்கையில், இன்னும் உறுதி பெறும் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சில், ஹேசில்வூட்டும் நம்பிக்கை தருகிறார்.

போல்க்னர், வொட்சன் ஆகியோர் மித வேகப்பந்து வீச்சில் முக்கிய விக்கெட்டுக்களை எடுக்க உதவக்கூடும்.
பாகிஸ்தானின் முக்கிய விக்கெட்டுக்களை சரித்தது போல, மக்ஸ்வெல் தனது பங்களிப்பை, ஓட்டங்களைக் குறைவாகக் கொடுத்து வழங்கினால் அவுஸ்திரேலியாவுக்கு வாய்ப்புத் தான்.

மறுபக்கம், இந்தியாவின் ஷமி, மோஹித் ஷர்மாவின் தடுமாறாத கட்டுப்பாடான பந்துவீச்சும், ஸ்விங்கும் இந்தியாவின் ஒரு பலம் ; எகிறும் பந்துகளை வீசும் இந்திய அணியின் வேகமான பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அச்சுறுத்தக்கூடிய ஒருவர்.

இந்தத் தொடர் முழுதும் சிறப்பாகப் பந்துவீசும் அஷ்வினுடன், ஜடேஜா, ரெய்னா ஆகியோரும் தக்க நேரத்தில் சேர்ந்தால் இந்தியாவின் பந்துவீச்சு உலகத் தரமானது.


அவுஸ்திரேலியாவுக்கு இருக்கும் நம்பிக்கை, இதே பந்துவீச்சை முன்பு முக்கோணத் தொடரில் வதைத்ததும், இதுவரை உலகக்கிண்ணத் தொடரில் இணையாக சேர்ந்து பெரிதாக சோபிக்காத (ஒரேயொரு அரைச்சத இணைப்பாட்டம்) முக்கியமான நாளைய போட்டியில் கலக்கும் என்பதுமே.

பின்ச், வோர்னர் என்ற அதிரடிகளின் பின், நம்பிக்கை தரும் உறுதியான ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார்.
தலைவர் மைக்கேல் கிளார்க்  இலங்கைக்கு எதிராக அரைச்சதம் பெற்றிருந்தாலும், இன்னும் முன்னைய 'ஓட்டக்குவிப்பு' கிளார்க்காக அவர் தெரியவில்லை.

அடுத்து வரும் மக்ஸ்வெல் ஒரு அவுஸ்திரேலிய ஏபி டீ வில்லியர்ஸ்.
அசுரவேகத்தில் ஓட்டங்கள் குவிக்கும் மக்ஸ்வெல் எந்தப் பந்துவீச்சுக்குமே ஒரு சிம்ம சொப்பனம்.
இவர் தான் இந்தத் தொடரில் அவுஸ்திரேலியாவின் அதிகூடிய ஓட்டக் குவிப்பாளர்.

தடுமாறிக்கொண்டு இருந்த வொட்சன், பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடியதன் பலனாக ஓட்டங்கள் பெறும் மனோநிலைக்குத் திரும்பியுள்ளார் போல தெரிகிறது.
வேகமாக ஓட்டங்கள் பெற ஹடின் மற்றும் போல்க்னர், ஜோன்சன் ஆகியோரும் இருக்கிறார்கள்.

இதற்கு சற்றும் குறையாத இந்தியாவின் வரிசை.
ரோஹித் ஷர்மாவும் இறுதியாக formக்குத் திரும்பியிருப்பது இந்தியாவுக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம்.

என்ன தான் இந்தியாவின் ஆரம்ப இணைப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகத் தடுமாறினாலும், தவானும் ரோஹித்தும் இருக்கும் சிறப்பான துடுப்பான form இந்தியாவுக்கு சாதகமானதே.

அதேபோல, ரோஹித் ஷர்மா கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இரண்டு இன்னிங்க்சில் பெற்றுள்ள ஓட்டங்கள், 138 , 209.
ரோஹித் ஷர்மா மற்ற ஒருநாள் வீரர்கள் போல ஆரம்பம் முதல் அடித்தாடுபவர் அல்ல. அவர் நின்று நிலைத்து நிதானமாக ஆடத் தொடங்கினால் அது எதிரணிகளுக்கு ஆபத்து மணி.
அவரது இரண்டு இரட்டைச் சதங்களும், பெரிய ஓட்டங்களும் அவ்வாறானவை தான்.

கோளி எப்போதும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், தொடர்ந்து ரஹானே.. மோசமாக ஆடக்கூடியவர் அல்ல. 
சுரேஷ் ரெய்னா நம்பியிருக்கக்கூடிய ஒரு ஓட்ட இயந்திரம். தேவையானபோது மத்திய வரிசையைத் தாங்கி, வேகமாகவும் ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்.
தோனியை இந்திய அணி ரசிகர்கள் ஒரு காவல் தெய்வமாகப் பார்க்கிறார்கள். முடித்துவைக்கும் ஆற்றலுடைய ஒரு கூலான மனிதர்.

தேவையேற்படின் ஜடேஜா, அஷ்வின் ஆகியோரும் ஓட்டங்களில் உதவக்கூடியவர்கள்.

எனினும் இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வரிசைகளின் பலவீனங்களை இரு அணிகளும் குறிவைக்கும்.

அவுஸ்திரேலியா சூழலுக்கும், ரிவேர்ஸ் ஸ்விங்குக்கும் தடுமாறக்கூடியது. அத்தோடு வஹாப் ரியாஸ் அன்று காட்டிய உதாரணத்தை நாளை உமேஷ் யாதவ் பயன்படுத்தலாம்.

எதிர்ப்பக்கத்தில் இந்தியர்கள் எகிறும் பந்துகளுக்கும், ஸ்விங்கும் பந்துகளுக்கும் இலகுவாக ஆட்டமிழக்கக் கூடியவர்கள்.
எனவே ஸ்டார்க், ஜோன்சனின் தாக்குதல்கள் பயங்கரமாக இருக்கும்.
--------------------

இன்னொன்று, நேற்றைய நியூ சீலாந்து, தென் ஆபிரிக்க போட்டி கிரிக்கெட்டின் உன்னதத்தோடு இரு அணிகளும் அர்ப்பணிப்பான, பொறுப்புணர்வான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன என்றால், நாளைய போட்டி மைதானத்துக்குள்ளே வார்த்தை மோதல்களும், வலியக்கொழுவல்களும் வம்புச் சண்டைகளும் நடக்கக்கூடிய உணர்ச்சி மிகுந்த ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கோணத் தொடரில் விட்ட குறை நாளை தொடருமோ?

குறிப்பாக அவுஸ்திரேலிய வீரர்கள் தங்களது வழமையான பகிரங்க சவால்களை கடந்த சில நாட்களாகவே இந்திய வீரர்களை நோக்கி அனுப்பி வருகின்றனர்.
அவுஸ்திரேலிய 'குழப்படி' பையன்களான போல்க்னர், ஜோன்சன், மக்ஸ்வெல் ஆகியோர் சண்டைக்குத் தயார் என்னும் ரீதியில் கருத்துக்களை வெளியிட்டுவிட்டார்கள்.
வோர்னர், வொட்சன் ஆகியோர் அடக்கி வாசிப்பது ஆச்சரியமாக இருந்தாலும், அவரும் மிட்செல் ஸ்டார்க்கும் நாளைய போட்டிக்காக வார்த்தைகளை சேமித்து வைத்துள்ளார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

இவர்களுக்கான பதிலடியாக இதுவரை ரோஹித் ஷர்மா மிக அமைதியான முறையில் "முன்னைய தோல்விகளின் காயங்கள் எவையும் எங்கள் மனதில் இல்லை" என்று மட்டும் சொல்லியிருப்பது, "பயப்படுறியா ரோஹித்" என்று கேட்க வைக்கிறது.

இந்திய அணியில் இலகுவாக சீண்டப்படக்கூடிய கோளி மற்றும் தவான் ஆகியோரை நாளை அவுஸ்திரேலிய வீரர்கள் குறி வைக்கக்கூடும்.

-----------------


இரண்டு அணிகளும் உலகக்கிண்ணத்தைக் குறிவைத்து இருக்கின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு இந்தியாவிடம் கடந்த உலகக்கிண்ணத்தில் இழந்த பெருமையை, சொந்த மண்ணில் மீண்டும் பெறும் உத்வேகமும், நடப்பு சாம்பியன்கள் இந்தியா தம்மிடம் உள்ள கிண்ணத்தை எந்த வகையிலும் இழந்துவிடக்கூடாது என்ற வெறியும் இருக்கிறது.

இதனால் தோல்வி என்பதை யோசிக்கவே தயங்குகிறார்கள்.
நாளைய தோல்வியின் தாக்கம் மிகப் பெரிதாக இரு அணிகளுக்குமே இருக்கும்.

நாளை இந்தியா தோற்றால், 1987க்குப் பிறகு முதல் தடவையாக ஆசிய அணி ஒன்று இல்லாத உலகக்கிண்ண இறுதிப்போட்டியாக ஞாயிறு போட்டி அமையும்.

அத்துடன் அவுஸ்திரேலியா இத்தொடர் முழுவதும், அண்மையில் காலமான தங்கள் சக வீரர் பிலிப் ஹியூசை நினைவு கூர்ந்து கறுப்புப் பட்டியுடன் ஆடி வருவதால், ஹியூசுக்காக இந்த உலகக்கிண்ணத்தை வென்று அர்ப்பணிக்க ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் காத்திருக்கிறது.

தலைவர்களாக தோனி, கிளார்க் இருவருக்குமே இந்த உலகக்கிண்ணம் ஒரு தனிப்பட்ட சவால்.

 அவுஸ்திரேலிய ஒருநாள் அணியில் மைக்கேல் கிளார்க்கின் இருப்பே சந்தேகத்துடன் நோக்கப்படும் இடத்தில், (ஜோர்ஜ் பெய்லி கிளார்க் காயமுற்றிருந்தபோது முக்கோணத் தொடரையும் வென்று, தனிப்பட்ட முறையிலும் கலக்கியவர்; இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது போட்டியிலும் அரைச்சதம் பெற்றவர்) தன்னை ஒரு துடுப்பாட்ட வீரராகவும், தலைவராகவும் நிரூபித்து உலகக்கிண்ண வெற்றியை வைத்து விமர்சனங்களை மூடத் தேவைப்படுகிறது.

தோனியோ டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றபிறகு, உலகின் சிறந்த ஒருநாள் தலைவர் என்று கருதப்படும் தன்னுடைய பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதோடு, சிலவேளைகளில் இத்துடன் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் விடைபெற எண்ணினால் அதை வெற்றியுடன் முடிக்கும் தேவைப்பாடு இருக்கிறது.

இந்த விடயங்கள் வேறு மேலதிக அழுத்தங்களைத் தரலாம்.

ஆனால், அணியின் பலம், பலவீனம் கடந்து தலைவராக கிளார்க்கை விட தோனி சிக்கலான தருணங்களில் சிறப்பாக செயற்பட்டு அதை நிரூபித்து வந்திருக்கிறார்.
ஆனால், கிளார்க்கின் அணியின் பதினொருவருமோ இறுதிப் பந்துவரை போராட்ட குணத்துக்கு பெயர்பெற்றவர்கள்.


அவுஸ்திரேலியாவுக்கு சொந்த மண், அண்மைக்கால ஆதிக்கப் பலாபலன்களின் அடிப்படையில் கூடுதல் வாய்ப்புக்கள் இருப்பது போல தெரிந்தாலும், இந்திய அணி தோனியின் தலைமையில் முன்னைய இயலாமைகளை உடைத்து வரும் அணி.

ஆனால். நாளைய போட்டி வாழ்வா சாவா தீர்மானமிக்க போட்டி.
எனவே உயிரைக் கொடுத்த, பதறாமல், இறுதி வரை போராடக்கூடிய அணி மெல்பேர்னில் நியூ சீலாந்தை சந்திக்கும்.

நடுவர்களாக நாளை அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையின் குமார தர்மசேன பற்றி இப்போதே சில முணுமுணுப்புக்கள் இரு தரப்பு ரசிகரிடமிருந்தும் ஆரம்பித்துள்ளது.
இந்திய ரசிகர்கள் "தர்மசேன இந்திய வீரர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்குபவர்" என்றும் 
இந்தியாவுக்கு எதிரானவர்கள் "ஐ.பி.எல் மூலம் தர்மசேன இந்தியாவுக்கு நெருக்கமானவர்" என்று சொல்கின்றார்கள்.

எனினும் 'நடுவராக' நேர்மையும் துணிச்சலும் உடையவராக தர்மசேன தனக்குக் கிடைத்த 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவர் விருதை உலகுக்கு நிரூபிப்பதோடு மட்டுமன்றி, மற்ற நடுவர் கெட்டில்போரோ, தொலைக்காட்சி நடுவர் எரஸ்மஸ் ஆகியோரும் சர்ச்சைகளில்லாமல் நாளைய போட்டியை நடத்தித் தரவேண்டும்.

-------------
 நாளை வேலை நாளாக இருப்பதால், போட்டியை தொடர்ந்து பார்ப்பதில் இருக்கும் சிக்கலினால், ஞாயிறு வீட்டில் இருந்து ருசித்து இறுதிப் போட்டியை ரசித்துப் பார்க்க நாளை அவுஸ்திரேலியா வெற்றிபெறவேண்டி இருக்கிறது.

அத்துடன், ஏற்கெனவே நியூ சீலாந்திடம் 151க்கு எதிராக சுருண்டு, பின்னர் போராடி 9 விக்கெட்டுக்களை பறித்தும் மயிரிழையில் தோற்ற போட்டிக்கும் பழி தீர்க்கவேண்டுமே...

முதலில் நாளைய போட்டியை அபாரமாக ஆடி வென்று இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளியையும் வைத்து, அதன் பின்னர் அவுஸ்திரேலியாவின் முதற்தர இடத்தையும் மீண்டும் அழுத்தமாக நிரூபிக்கவும் வாழ்த்துக்கள்.

(இலங்கை விளையாடும்போது தான் விக்கிரமாதித்தனுக்கு எல்லாம் பயப்படவேண்டி இருக்கும்; இது அசத்தல் அவுஸ்திரேலியா )

*அவுஸ்திரேலிய ஆதரவாளனாக அவுஸ்திரேலிய வெற்றியை நாளை விரும்பும் எனது இந்தப் பதிவை இந்தியாவுக்கு எதிரான பதிவாக நோக்கினால் அது பார்ப்பவர், படிப்பவரின் பார்வையே.

No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner