March 24, 2015

அசத்தும் அணிகளில் யாருக்கு முதல் இறுதி? - NZ vs SA - முதலாவது அரையிறுதி - நியூ சீலாந்து எதிர் தென் ஆபிரிக்கா - அலசல்

முதலாவது அரையிறுதி - நியூ சீலாந்து எதிர் தென் ஆபிரிக்கா  என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்கு எழுதிய கட்டுரையினை சிற்சில புதிய சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்...

எழுதும் நேரம் 24ஆம் திகதி செவ்வாய் அதிகாலை ஆகியிருப்பதால், இன்று, நாளை குழப்பத்தைத் தவிர்க்குகக..

---------------------

உலகக்கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி..

நியூ சீலாந்து, தென் ஆபிரிக்கா இந்த இரு அணிகளும் அடிக்கடி உலகக்கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், எப்போதுமே அதைத் தாண்டி இறுதிப் போட்டிக்கு சென்றது கிடையாது.

இரண்டில் ஒரு அணிக்கு அந்த வரலாற்றினை இம்முறை மாற்றிப்போடக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

மற்ற அணியோ மீண்டும் இன்னொரு மனவுடைவோடு செல்லப்போகிறது.

எனவே இது ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு அரையிறுதி.

இறுதியாக நியூ சீலாந்து உலகக்கிண்ணத்தின் அரையிறுதிகளுக்குத் தெரிவான இரு சந்தர்ப்பங்களிலும் (2007, 2011) இலங்கை அணியினாலேயே தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.

இம்முறை இலங்கை அணியை காலிறுதியில் வெளியேற்றிய தென் ஆபிரிக்க அணியை சந்திக்கிறது.


1992இல் அவுஸ்திரேலிய - நியூசீலாந்து நாடுகளில் உலகக்கிண்ணம் நடைபெற்ற வேளையிலும் முதற்சுற்றுப் போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடியிருந்த நியூ சீலாந்து, அடுத்தடுத்த இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடன் தோற்று அரையிறுதியுடன் ​வெளியேறியிருந்தது.


மிகக் கிட்டவாக வந்து இல்லாமல்போன அந்த வாய்ப்பைப்போல இல்லாமல், இம்முறை எப்படியாவது இந்த உலகக்கிண்ணத்தை தம் வசப்படுத்தியே ஆகவேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார்கள் மக்கலமும் குழுவினரும்.

அதற்கேற்ற சகல படைபலமும், சமநிலைத் தன்மையும் நியூ சீலாந்திடம் உள்ளது.


போதாதற்கு சொந்த மண்ணில் விளையாடுவதும், மைதானம் முழுவதும் வந்து திரண்டு ஆதரவை அள்ளி வழங்கும் நியூசீலாந்து ரசிகர்களும் மேலதிக பலம்.

இந்த வேளையில் தான் மிகுந்த நம்பிக்கையோடு கடந்த வருடம் மெல்பேர்ன் மைதானத்துக்கு சுற்றுலா மேற்கொண்டு, இறுதிப் போட்டிக்கு வரும்போது மனநிலை அளவில் தயாராவதற்கு துணிந்த நியூ சீலாந்தின் தன்னம்பிக்கை பற்றிப் பாராட்டத் தோன்றுகிறது.

இதுவரை தமது அத்தனை போட்டிகளையும் நியூ சீலாந்திலேயே விளையாடியுள்ள நியூ சீலாந்துக்கு மிக முக்கியமான போட்டி இதுவே.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியபோது மட்டுமே இதுவரை சவாலினை சந்தித்துள்ள நியூ சீலாந்துக்கு தென் ஆபிரிக்கா எவ்வகையான சவாலைக் கொடுக்கும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்துடனான கேள்வி.

மறுபக்கம் தென் ஆபிரிக்கா, கடந்த 2011 உலகக்கிண்ணத்தில் டாக்காவில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் இதே நியூ சீலாந்து அணியினால் தான் தோற்கடிக்கப்பட்டது.

அதிலும் வழமையாகத் தென் ஆபிரிக்க அணிக்கு ஒரு சாபமாக knock out சுற்றுப்போட்டிகளில் நடந்தததைப் போல, வெற்றிபெறக்கூடிய நிலையில் இருந்து அதிர்ச்சி தரும் விதத்தில் துரிதமாக விக்கெட்டுக்களை இழந்து தோற்றுப்போனது.
அதிலும் சர்ச்சைக்குரிய விதத்தில் மாற்றுவீரராக மைதானத்துக்குள்ளே வந்த கைல்  மில்ஸ், அப்போது துடுப்பாடிக்கொண்டிருந்த தென் ஆபிரிக்காவின் பஃப் டூ ப்ளேசிசை சலனப்படுத்தி, கோபமூட்டிவிட, தென் ஆபிரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பித்துக் கவிழ்ந்தது கப்பல்.

பெரியதொரு அதிர்ச்சித் தோல்வியாக தென் ஆபிரிக்காவுக்கு நேர்ந்ததை அப்போது அனைவருமே நோக்கினார்கள். 
அந்த மறக்கமுடியாத போட்டியில் விளையாடிய பலர் நாளைய போட்டியிலும் விளையாடவுள்ளார்கள்.

இன்னொரு ஆச்சரியமான விடயம், டாக்காவில் நடந்த காலிறுதிப் போட்டி நடைபெற்ற திகதி மார்ச் 25.
ஒருநாள் முன்னதாக இங்கே அரையிறுதி.

வெல்லும் அணி முதல் தடவையாக உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது என்பது இரு அணிகளுக்கு மிகப் பெரிய உத்வேகமாகவும் அமையும் அதேவேளை இவ்விரண்டு அணிகளையும் எப்போதுமே உலைத்தெடுக்கும் நடுக்கத்தையும் பதற்றத்தையும் கூடத் தரலாம்.

தென் ஆபிரிக்காவும் நியூ சீலாந்துக்கு இணையான சமபலன் பொருந்திய அணியே.
நிகர்க்கக்கூடிய துடுப்பாட்டம், களத்தடுப்பு, மற்றும் பந்துவீச்சு.

இரு அணிகளுக்கும் தலைமை தாங்குபவர்களும் கூட நிகர்த்த ஆற்றலுடைய ஆக்ரோஷமான, அதேவேளை சாதுரியமான இரு தலைவர்கள்.
இரண்டு தலைவர்களதும் ஆக்ரோஷமான துடுப்பாட்டமும், வழிநடத்தலும் தான் இந்த இரண்டு துணிச்சலான அணிகளின் அடையாளமும் பலமும்.
பிரெண்டன் மக்கலம் பந்துவீசுவதில்லை. டீ வில்லியர்ஸ் அண்மைக்காலத்தில் பந்தும் வீசி விக்கெட்டுக்களையும் சாய்க்கிறார்.


இந்த அணிகளின் வித்தியாசமாக விளங்கப்போவது மைதானத்தில் இரு அணிகளும் காட்டப்போகும் பெறுபேறுகள், அசத்தல்கள் மட்டுமல்லாமல், தேவையான பொழுதுகளில் உணர்ச்சிவசப்படாமல் எடுக்கவுள்ள தீர்மானங்களும் தான்.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் தென் ஆபிரிக்காவின் வரிசை மிக உறுதியானது போல் தெரிகிறது. 
7ம் இலக்கம் வரை நீண்டுள்ள வரிசையில் அனைவரும் அடித்தாடும் form இல் இருக்கின்றனர்.
5 பேர் சதங்கள் பெற்றுள்ளார்கள்.

கப்டில் மட்டுமே இரண்டு சதங்களைப் பெற்றுள்ள, நியூசீலாந்தின் துடுப்பாட்டமோ 9 வரை நீண்டது.
ஆனால் ரொஸ் டெய்லர், எலியட் போன்ற வீரர்கள் இன்னும் தடுமாறுகிறார்கள். பல போட்டிகளில் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடும் வாய்ப்புக் கிட்டவில்லை.

தென் ஆபிரிக்காவின் 4 உறுதியான பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை தந்தாலும் ஐந்தாவது பந்துவீச்சாளர் பற்றி இருந்த சந்தேகம், இலங்கைக்கு எதிராக டுமினி ஹட் ட்ரிக்குடன் வீழ்த்திய 3 விக்கேட்டுக்களுடன் தீர்ந்துள்ளது.
எனினும் ஈடன் பார்க் மைதானத்தில் ஒரு சுழல் பந்து வீச்சாளரே தேவையா என்ற நிலையில் இன்னொருவரின் பயன்பாடு அவசியமா என்ற கேள்வியும் எழுவது மீண்டும் ஐந்தாவது பந்துவீச்சாளர் பற்றிய ஐயத்தை ஏற்படுத்துகிறது.

மறுபக்கம், நியூ சீலாந்து இத்தொடர் முழுவதுமே சௌதீ, போல்ட், வெட்டோரி ஆகிய மூவருடனுமே வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது.
ஆனால் நான்காவது பந்துவீச்சாளராக முக்கியமான தருணங்களில் தேவைப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அடம் மில்ன் காயத்துடன் வெளியேறியிருப்பது நியூசீலாந்துக்கு இத்தருணத்தில் பேரிழப்பு.

ஐந்தாவது ஆறாவது பந்துவீச்சாளர்களாக இருக்கும் அண்டர்சன், வில்லியம்சன் மற்றும் எலியட் ஆகியோரோடு சேரப்போகிறவர் 2011இல் குழப்பத்தை ஏற்படுத்திய மில்சா இல்லை மக்லேனகனா , மில்னுக்குப்  பதிலாக இன்று இணைந்துகொண்ட மட் ஹென்றியா என்ற கேள்வியும் உள்ளது.

தென் ஆபிரிக்காவும் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அபோட்டை எடுக்குமா பிலாண்டரை பயன்படுத்துமா என்பதும் முக்கிய கேள்வியே.

களத்தடுப்பில் இரு அணிகளுமே மிக உயர்தரத்தைப் பேணிவரும் அணிகள்.
விறுவிறுப்பான போட்டி ஒன்று உறுதி.

உலகக்கிண்ணப் போட்டிகளில் இதுவரை 6 தடவை சந்தித்துள்ள இவ்விரு அணிகளில், 4 தரம் நியூசீலாந்து வென்றுள்ளது.
அதிலும் கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி.
ஆடுகளம், சொந்த மைதான அனுகூலம், அணிகளினது மனநிலை என்று பல்வேறு காரணிகளில் நியூசீலாந்தே முந்தி நிற்பது போலத் தெரிகிறது.


ஒன்று மட்டும் நிச்சயம், இரண்டு அணிகளின் அத்தனை வீரர்களுக்கும் தம் கிரிக்கெட் வாழ்நாளில் மிக முக்கியமான போட்டி இந்த அரையிறுதியே.

கிரிக்கெட் ரசிகர்கள் தாம் எந்த அணிக்கு ஆதரவாக நின்றாலும், நாளை விளையாடும் இவ்விரு அணிகளும் அவர்களுக்குப் பிடிக்காத அணியாக நிச்சயம் இருக்காது என்பதும் உறுதியே.

சிறப்பாக விளையாடி, தடுமாறாமல் ஆற்றலைக் காட்டும் அணி தங்களது முதலாவது இறுதிப்போட்டிக்கு செல்ல எமது வாழ்த்துக்களை சொல்வோம்.


No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner