சங்காவின் கிண்ணமாக மாறும் சாதனை உலகக்கிண்ணம் !!! - புதிய தகவல்களுடன் #cwc15

ARV Loshan
4
'​சாதனைகளின் புதிய பெயர் சங்கா' என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்கு எழுதிய கட்டுரையை இன்னும் கொஞ்சம் புதிய மேலதிக சேர்க்கைகளுடன் இங்கே தருகிறேன்.

---------------------



நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம் சங்கா கிண்ணம் என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம்.

கிறிஸ் கெயில் பெற்ற இரட்டைச்சதம், டீ வில்லியர்சின் அபார சதம் என்று ஆரம்பத்தில் கலக்கியவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் சங்கக்காரவின் கலக்கல் என்று முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தேன்.

இந்த வாரம் இன்னொரு புதியவரா என்று கேட்ட வினாவுக்கு சங்கக்காரவின் பதிலாக "இல்லை நான் தான் இந்த வாரமும், இனியும் " என்று சொல்வதைப்போல, தொடர்ந்து அவர் குவித்துவரும் சதங்களும், சாதனைகளும் அமைந்திருக்கின்றன.

4வது தொடர்ச்சியான சதத்தை ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக 
நேற்று பெற்ற குமார் சங்கக்கார உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமன்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே யாரும் நிகழ்த்தாத ஒரு சாதனையை முழு கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் அளவுக்குப் படைத்திருக்கிறார்.

சச்சின் டென்டுல்கரின் வாழ்த்து 


3 சதங்களை சங்கக்கார பெற்றிருந்த போதே, அதற்கு முதல் பலர் அவ்வாறு 3 சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றிருந்தாலும், உலகக்கிண்ணத்தில் மூன்று சதங்களை அடுத்தடுத்துப் பெற்ற முதல்வராக சங்கா பெருமை பெற்றார்.

நேற்று நான்காவது.

இதில் அவுஸ்திரேலியா தவிர மற்ற அணிகளின் பந்துவீச்சு சரியில்லை அப்படி, இப்படி என்று நொட்டை, நொள்ளை சொல்வோர், மற்ற பிரபல வீரர்கள்,அசகாய சூரர்கள் இப்படியான வாய்ப்புக்கள் கிடைத்தும் பயன்படுத்தாது என்ன வகை?

அதிக சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்ற வீரர்களின் வரிசையைப் பார்த்தீர்களென்றால் எந்த அணிகளுக்கு எதிராக இந்த சதங்களைப் பெற்றார்கள், அந்த அணிகளின் பந்துவீச்சு எப்படி இருந்திருக்கின்றன எனத் தெரியும்.


அத்துடன் ஒரே உலகக்கிண்ணத் தொடரில் 3 சதங்களைப் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது.

மத்தியூ ஹெய்டன் (2007), சௌரவ் கங்குலி (2003) & மார்க் வோ (1996) - 3


அதையும் நேற்று சங்கக்கார முறியடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் வசமுள்ள இன்னும் இரு உலகக்கிண்ண சாதனைகளும், சங்கக்காரவின் இந்த அபார ஓட்டக்குவிப்பால் உடையக்கூடிய அபாயத்தில் உள்ளன.

1.உலகக்கிண்ணங்களில் பெறப்பட்ட கூடிய சதங்கள்.
சச்சின் பெற்றது 6.

சங்கக்கார இப்போது ரிக்கி பொன்டிங்கை சமன் செய்து 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

2. ஒரு உலகக்கிண்ணத் தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள்.

சச்சின் 2003 தொடரில் ​11 போட்டிகள், 11 இன்னிங்க்சில் 673 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இவருக்கு அடுத்தபடியாக 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவின் மத்தியூ ஹெய்டன் 11 போட்டிகள், 10 இன்னிங்க்சில் 659 ஓட்டங்கள்.

இலங்கை சார்பாக இதுவரை ஒரு உலகக்கிண்ணத் தொடரில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்றவர் மஹேல ஜெயவர்த்தன - 
2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில்
​ 548 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

குமார் சங்கக்கார இப்போதைக்கு இந்த உலகக்கிண்ணத்தில் 6 போட்டிகள், 6 இன்னிங்க்சில் 4 சதங்களோடு ​496 ஓட்டங்கள்.


இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்காவின் ஏபி டீ வில்லியர்ஸ் 417 ஓட்டங்கள்.
இவ்விருவரது அணிகளும் தான் காலிறுதியில் மோதவுள்ளன.
இதில் மேலதிக சுவாரஸ்யமாக சங்கக்கார இலங்கை அணிக்கு விக்கெட் காப்பது போல, டீ வில்லியர்சும் தென் ஆபிரிக்காவுக்கு விக்கெட் காப்பில் ஈடுபடவேண்டி வரலாம்.
குயின்டன் டீகொக்கின் மோசமான form அவரை அணியிலிருந்து தூக்கவேண்டி வரலாம்.

இலங்கை இறுதிப் போட்டி வரை பயணித்தால், (இன்னும் மூன்று போட்டிகள் இருக்கும்) சங்கக்காரவின் ஏனைய சாதனைகள் சாத்தியமாகும் வாய்ப்பு இருக்கிறது.

சங்கக்காரவும் மஹெலவும் உலக T20 வெற்றிகளோடு T20
​ போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றதைப் போல, உலகக்கிண்ண வெற்றியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுவதையும், ​சங்கக்கார சாதனைகளுடன் விடைபெறுவதையும் சாத்தியமாக்க இலங்கை அணி இன்னும் கடுமையாக போராடவேண்டும்.

எனினும் சச்சின் டெண்டுல்கரின் 96 அரைச் சதங்கள்  என்ற சாதனை, சங்காவின் சதங்கள் குவிக்கும் அபார ஓட்டங்களால் முறியடிக்கப்பட முடியாமலே போகலாம்.

இப்போது சங்கக்கார பெற்றுள்ள 25 ஒருநாள் சதங்களுடன், இந்த வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்துவகைப் போட்டிகளிலும்
(ஒருநாள்+டெஸ்ட்+T20​) ​

1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையயும் சங்கக்கார பெற்றுக்கொண்டார்.


நியூ சீலாந்தின் கேன் வில்லியம்சன் 900 ஓட்டங்களுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்.


விக்கெட் காப்பிலும் நேற்று சங்கா புதிய சாதனைகளைப் படைத்திருந்தார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 500 ஆட்டமிழப்புக்களை செய்த முதல் வீரர் என்பதுடன், உலகக்கிண்ணத்தில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்திருந்த (52) அடம் கில்க்ரிஸ்ட்டின் சாதனையையும் தாண்டினார் சங்கா.



இந்த சாதனை இப்போதைக்கு யாராலும் முறியடிக்கப்பட இயலாத ஒன்று என்பது உறுதி.

பட்டியலைப் பாருங்கள் புரியும்.



உலகக்கிண்ணத்தில் இந்த முன்னணி விக்கெட் காப்பாளர்களில் மக்கலம் இப்போது தனியே துடுப்பாட்டவீரர்.

தோனிக்கும் இது தான் இறுதி உலகக்கிண்ணமாக இருக்கும்.

அடம் கில்க்ரிஸ்ட்டின் வாழ்த்து


நேற்றும் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதைத் தனதாக்கிய சங்கா, சர்வதேசப் போட்டிகளில் பெற்ற 50வது போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதாகும்.

அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலும் கூடுதலான போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதுகளைப் பெற்ற வீரர்கள்.


​அதேபோல அவு​ஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா 2038 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.வெளிநாட்டு வீரர் ஒருவர் 
​அவுஸ்திரேலியாவில் 
​பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இவையாகும்.
மேற்கிந்திய தீவுகளின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 3067 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், விவ் ரிச்சர்ட்ஸ் 2769 ஓட்டங்களுடனும் 2ஆம் இடத்தில் உள்ள நிலையில் சங்கா ​இப்போது ​3 ம் இடத்தை​ப்  பெற்றுள்ளார்.

​இலங்கை அணியின் மூன்றாம் இலக்கம் என்றால் துடுப்பாட்ட முதுகெலும்பாகவே மாறி நிற்கும் சங்கா, இந்த உலகக்கிண்ணம் முழுவதுமே ​2வது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக ஓட்ட மழையைப் பொழிவதன் முக்கிய காரணமாக நிற்கிறார்.

டில்ஷானுடன் 210, 195 மற்றும் 130, திரிமன்னேயுடன் 212 என்று இணைப்பாட்டங்களும் சங்காவின் சாதனைகள் பேசும்.


​நாடுகள் தாண்டி, வயது வரம்பு தாண்டி எல்லா கிரிக்கெட் ரசிகர் மட்டுமன்றி, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களுமே 'சங்கா, சங்கா' என்று ஒரு புதிய கிரிக்கெட் கடவுளாகவே சங்கக்காரவை ​ஏற்றி உயர்த்தி வழிபட்டாலும், சங்கா அதே பணிவோடு அணி உலகக்கிண்ணம் கைப்பற்றவேண்டும், அது தான் முதல் நோக்கம் என்கிறார்.

ஆனால், ரசிகர்களின் ஆதங்கம் எல்லாம், இந்தத் தொடரே தனது இறுதி ஒருநாள் தொடர் என்று அறிவித்துள்ள சங்கக்கார ஏன் அந்த முடிவை மட்டும் மீள் பரிசீலனை செய்யக்கூடாது என்பதே..

ரசிகர்கள் மட்டுமன்றி இலங்கை அணித் தலைவர் மத்தியூசின் நிலையம் அதே...
"காலில் விழாக்குறையாக சங்காவை ஒய்வு பெறவேண்டாம் என்று கேட்டுவிட்டேன்" என்று சொல்கிறார் அஞ்செலோ .

ஆனால் சங்கக்கார, தன்னுடைய நண்பர் மஹேல ஜெயவர்த்தன போலவே ஒரு முடிவை எடுத்தால் அதிலிருந்து பின்வாங்குபவரோ, மாற்றுபவரோ அல்ல.
எனினும் ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று சிறிது காலம் இன்னும் விளையாடமாட்டாரா என்று நான் உட்பட அனைவருக்குமே ஒரு நப்பாசை தான்.

இத்தகைய சிறப்பான தொடர் ஊட்டக்குவிப்பு இலங்கைக்கு மேலும் ஏற்றமும், இளையவர்களுக்கு நம்பிக்கையும் கொடுக்கும் என்பதே அநேகரின் எதிர்பார்ப்பு.

ஆனால், உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெற்றுச்சென்று, இளையோருக்கு வழிவிடவேண்டும் என்று சங்கா உறுதியாக இருக்கிறார்.

இன்னும் சங்கா குவிக்கவுள்ள ஓட்ட மழை, சதங்களின் குவியல், சாதனைகளின் பட்டியல்கள் என்பவற்றுக்காகவும் வாழ்த்துக்களோடு காத்திருப்போம்.

கூடவே 29ஆம் திகதி இறுதிப்போட்டியில் இலங்கை விளையாடுமா என்று பார்க்கவும், சங்கக்கார தனது ஓய்வு முடிவை இத்தனை ஆயிரம் ரசிகர்களுக்காகவும் தனது சக வீரர்களுக்காகவும் மறு பரிசீலனை செய்வாரா என்று அறிந்துகொள்ளவும்.

-----------------

அத்தோடு பலரும் கவனித்த விடயம், சிலர் இன்னும் அவதானிக்காத விடயம், குமார் சங்கக்கார இப்போது அணிந்து விளையாடும் புதிய தலைக்கவசம்.
பிலிப் ஹியூஸின் துரதிர்ஷ்ட சாவுக்குப் பின்னர் பல்வேறு மட்டங்களிலும் தலைக்கவசம் பற்றியும், வீரர்களின் காப்புக்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டு வரும் நேரம், சங்கா பின்னங் கழுத்து, பிடரி போன்ற நுண்ணிய இடங்களையும் எகிறிவரும் பந்துகளில் இருந்து பாதுகாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய தலைக்கவசத்தை அணிந்து விளையாடியுள்ளார்.


துடுப்பாட்டத்தில் மட்டும் முன்னோடியாக இருக்காமல், கனவான் தன்மையிலும் முன்னோடியாக இருக்கும் சங்கா, காப்பிலும் முன்னோடியாக பலருக்கு இருக்கிறார் என்பது பெருமையே...

இப்போது இதன் பின்னர் அவுஸ்திரேலிய வீரர்கள் தாங்களும் இதை முயலப்போவதாக கூறியிருக்கிறார்கள்.

------------------

இந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 'விக்கி' விளையாட்டாக மாறி சங்காவுக்கு திருஷ்டியாக அமையாமல் இருக்கட்டும்.
இன்னும் சாதனைகள் உடையட்டும்.

படங்கள் : ESPN Cricinfo, BBC, ICC Cricket, Cricket Tracker & Facebook
தரவுகள் : ESPN Cricinfo

Post a Comment

4Comments

Please Select Embedded Mode To show the Comment System.*