March 23, 2015

கலக்கியவை நான்கும் உள்ளே, தடுமாறிய நான்கும் வெளியே - உலகக்கிண்ணம் 2015 - காலிறுதிப் போட்டிகளின் கதை

ஆதிக்கம் செலுத்தி அரையிறுதி வாய்ப்புப் பெற்ற நான்கு அணிகள் - உலகக்கிண்ணம் 2015 என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்காக எழுதிய காலிறுதிப் போட்டிகள் பற்றிய அலசலை மேலும் சில சிறப்புத் தகவல்கள், இணைப்புக்கள் + புகைப்படங்களுடன் இங்கே பதிகிறேன்.

-------------------

நாளைய முதலாவது அரையிறுதிப் போட்டி பற்றிய பதிவையும் இன்னும் சில நிமிடங்களில் எதிர்பார்க்கலாம்.
----------------------

மூன்றே மூன்று போட்டிகள் மீதமாக இருக்க, 11வது உலகக்கிண்ணத்தின் வெற்றியாளர் யார் என்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

பரபரப்பான முதற்சுற்று போட்டிகள் - 42.


முதற்சுற்றுப் போட்டிகளில் இருந்த பரபரப்பு, போட்டித் தன்மை ஆகியன முற்றுமுழுதாக வடிந்தது போல, வென்ற அணிகள் மிக இலகுவாக வென்றதாக அமைந்து ரசிகர்களை ஓரளவு ஏமாற்றியிருந்தன நான்கு காலிறுதிப் போட்டிகளும்.

முன்னைய கட்டுரையில் நான் எதிர்வு கூறியதைப் போல, கிரிக்கெட் விற்பன்னர்கள் பலரும் எதிர்பார்த்ததைப் போல, தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் சர்வதேசத் தரப்படுத்தலில் முதல் நான்கு இடத்திலும் உள்ள நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளன.

இன்னொரு முக்கியமான விடயம், இந்த உலகக்கிண்ணத் தொடரில் இரு பிரிவுகளிலும் முதலாவது சுற்றில் முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் தான் அரையிறுதிப் போட்டிகளில் ஒன்றையொன்று சந்திக்கவுள்ளன.

இவற்றில் அவுஸ்திரேலியா இதற்கு முன்னர் நான்கு தடவைகள் உலகக்கிண்ணம் வென்றுள்ளது. நடப்புச் சாம்பியனான இந்தியா இரண்டு தடவைகள்.
மற்ற இரு அணிகளான தென் ஆபிரிக்காவும், நியூ சீலாந்தும் சேர்ந்து இதுவரை 9 தடவைகள் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடியபோதும், ஒரு தரமேனும் இறுதிப் போட்டியை எட்டிப் பார்க்காத துரதிர்ஷ்ட அணிகள்.
எனவே நான்கு அணிகளுமே வெறியோடும் உத்வேகத்தோடும் இந்த உலகக்கிண்ணத்தைக் கைப்பற்ற எத்தனிக்கும்.

எனவே காலிறுதியைப் போல ஒரு பக்க சார்பான போட்டிகளாக இல்லாமல், விட்டுக்கொடுக்காமல் இரு அணிகளும் விளையாடும் விறுவிறுப்பான போட்டிகளாக அமையும் என எதிர்பார்ப்பு உள்ளது.

உலகக்கிண்ணம் 2015 பற்றிய எனது முதல் கட்டுரையில் சொல்லியிருந்த அணிகளில் இன்னும் இந்தியா மட்டுமே உள்ளே.
"இதே போல மூன்று முக்கியமான டெஸ்ட் விளையாடும் அணிகள் இம்முறை நிச்சயமாக உலகக்கிண்ணத்தை வெல்லாது என்று அடித்துச் சொல்லி வைக்கிறேன்.
இந்தியா 
பாகிஸ்தான் 
இங்கிலாந்து "

வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவை சந்திக்கிறது, வாழ்வா சாவா போட்டியில்.

இரண்டு அரையிறுதிகளையும் பற்றி பார்ப்பதற்கு முதல் இந்தக் கட்டுரையில் நான்கு காலிறுதிப் போட்டிகளையும் அலசலாம்.

மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சில நட்சத்திர வீரர்களின் தனிப்பட்ட சாகசங்களை காலாகாலத்துக்கும் ஞாபகப்படுத்தும் இந்த நான்கு போட்டிகளும்.

முதலாவது போட்டி - தென் ஆபிரிக்க சுழல்பந்து வீச்சாளர்கள் தாஹிர் & டுமினி, பின்னர் குயிண்டன் டீ கொக்கின் அதிரடி 
இரண்டாவது போட்டி - ரோஹித் ஷர்மாவின் சதம், உமேஷ் யாதவின் பந்துவீச்சு 
மூன்றாவது போட்டி - முன்னதாக ஹேசில்வூடின் பந்துவீச்சு, பின்னர் வொட்சன், ஸ்மித் ஆகியோரின் துடுப்பாட்டத்தையும் தாண்டி வெளிப்பட்ட வஹாப் ரியாஸின் போராட்ட குணம்மிக்க பந்துவீச்சு.
நான்காவது போட்டி - மார்ட்டின் கப்டில்லின் அபார உலகக்கிண்ண சாதனை இரட்டைச் சதம்

-------------

இலங்கை - தென் ஆபிரிக்கா 

(எனது முன்னைய பதிவை நீங்கள் வாசித்திருந்தால் கொஞ்சம் கீழே சென்று இரண்டாவது காலிறுதி பற்றி வாசிக்கலாம்)
அண்மைக்காலத்தில் இலங்கை விளையாடிய மிக மோசமான போட்டியாகக் கருதப்படக்கூடிய போட்டி.
தென் ஆபிரிக்காவின் knock out சுற்று சாபம் அரையிறுதியில் எங்கே ஆரம்பித்ததோ அங்கே, அதே சிட்னியிலேயே  இலங்கை அணிக்கு எதிராகப் பெற்ற அபாரமான வெற்றியுடன் முடிந்தது குறிப்பிடக்கூடிய ஒரு முக்கியமான விடயமாகும்.
1992இல் மிகக் கொடுமையாகத் தென் ஆபிரிக்கா மிகக் கொடுமையான, கோமாளித் தனமான மழை விதியால் தோற்கடிக்கப்பட்டபோது, பெய்த அதே அடை மழை அன்றும் எட்டிப் பார்த்தபோதும், நீட நேரம் பெய்து மீண்டும் தென் ஆபிரிக்காவை வதைத்து பலியெடுக்காமல், அப்போது ஆட்டமிழந்த சங்கக்காரவுக்காக கொஞ்சம் அழுதுவிட்டு போய்விட்டது.


சிட்னி போட்டியில் நாணய சுழற்சி முக்கியமானது என்று கருதப்பட்டு, இலங்கை அணித் தலைவர் அதையெல்லாம் சரியாக செய்திருந்தாலும், முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியில் (தலைமைத் தேர்வாளர் சனத் ஜெயசூரியவின் தலையீட்டில்) செய்யப்பட்ட வேண்டாத மாற்றம் எல்லாவற்றையும் மாற்றிப்போட இலங்கை அணிக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை.

சில மாற்றங்கள் வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகள், காயங்களினால் செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை இருந்தாலும், ஆரம்ப ஜோடி மாற்றம் தேவையற்றதும், இலங்கை அணியை ஆபத்தில் தள்ளியதுமாக அமைந்தது.
போதாக்குறைக்கு அமைதியான சுபாவம் கொண்ட ஆடுகளமாகத் தென்பட்ட சிட்னியில் தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்கள் தொட்டதெல்லாம் துலங்கியது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எகிறும் பந்துகளும் வேகமும், அதை விட பேரதிர்ச்சியாக சுழல் பந்து வீச்சாளர்களுக்கு பந்து சொன்னதெல்லாம் செய்ததும் அமைந்தது.
ஸ்டெய்ன், மோர்க்கல், அபோட் ஆகியோரையே சமாளிக்கத் திணறிய இலங்கை, சுழல் பந்துவீச்சாளர்கள் தாஹிர், டுமினியிடம் மாட்டி விக்கெட்டுக்களை இழந்தது மிகப்பெரும் கொடுமை.

அதிலும் தாஹிர், டுமினி ஆகியோர் தமக்கிடையே 7 விக்கெட்டுக்களை பகிர்ந்துகொண்டதும், டுமினி ஹட் ட்ரிக்கை (உலகக்கிண்ணத்தில் தென் ஆபிரிக்கர் ஒருவர் பெற்ற முதல் ஹட் ட்ரிக்) எடுத்ததும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல அமைந்தது.

சுழல்பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டாடும் இலங்கை அணி, பெரிதாக ஆபத்தான சுழலாகக் கருதப்படாத தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சுழன்று விழுந்தது எல்லோருக்குமே பேரதிர்ச்சி.

4 சதங்களை அடுத்தடுத்து அடித்து அபார ஓட்ட ஆற்றலுடன் இருந்த சங்காவே ஓட்டங்களை எடுப்பதில் சிரமப்பட்டுப்போனார்.
இறுதியாக அவர் மிகத் தடுமாறிப் பெற்ற 45 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறியபோது தான், பலர் தங்கள் சமூக வலைத்தளப் பதிவுகளில் ஏற்றியது போல இயற்கையும் அழுதது.

திரிமன்னே மற்றைய எல்லாரையும் விட லாவகமாக அடித்தாடி 48 பந்துகளில் 41 ஓட்டங்களை எடுத்தது நிச்சயம் குசல் ஜனித் பெரேராவை ஆரம்ப வீரராக எடுத்த முட்டாள்தனமான முடிவை நிச்சயம் மீண்டும் யோசிக்க வைத்திருக்கும்.

சிறிய ஓட்ட எண்ணிக்கைகள் பெற்றாலும் போராடி முடிவுகளை மாற்றிய சரித்திரம் இருக்கிறது. எனினும் இலங்கை அணியில் ஏற்பட்ட காயங்கள், உபாதைகளினால் பலவீனப்பட்ட பந்துவீச்சினால் 133 ஓட்டங்களை வைத்துக்கொண்டு chokers என்ற அவப்பெயரை உடைக்க உத்வேகத்தோடு களமிறங்கிய தென் ஆபிரிக்காவை எதிர்த்து நிற்கப் போதவில்லை.

முதல் 6 போட்டிகளிலும் தடுமாறியிருந்த குயிண்டன் டீ கொக்கும் formக்குத் திரும்ப தென் ஆபிரிக்கா அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் புகுந்துள்ளது.

உலகக்கிண்ணத்தோடு விடைபெறுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த இலங்கையின் இரு சாதனைச் சிகரங்களும் அவமானகரமான தோல்வியுடன் ஒய்வு பெற்றுள்ளார்கள்.

இதனால் தான் இலங்கை ரசிகர்களுக்கு இந்தத் தோல்வி அதிகமாக வலிக்கிறது.
இலங்கை அணியின் மூன்றாம், நான்காம் இலக்கங்களில் இலங்கையின் துடுப்பாட்டத்தின் முதுகெலும்பாக விளங்கிய இருவரும் இறுதியாக விளையாடிய ஒருநாள் போட்டி இலங்கைக்கு மறக்கமுடியாத தோல்வி.
மஹேல , சங்கா இருவரதும் ஒன்று சேர்ந்த சாதனைகள்
26835 ODI runs
170 half centuries 
44 centuries

சங்கக்காரவே இதுவரை இந்த உலகக்கிண்ணத் தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவராக விளங்குகிறார்.  541  ஓட்டங்கள்.

இதுவரை கூடிய ஓட்டங்களைப் பெற்றுள்ளவர்கள்.

கூடுதலான விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் 


ஆனால் தங்கள் உலகக்கிண்ண சாபங்களில் இருந்து இந்த வெற்றியுடன் புத்துணர்வு பெற்றுள்ள தென் ஆபிரிக்க அணி முதல் தடவையாக இறுதிப்போட்டிக்கு செல்லக் கூடிய அளவுக்கு திடமான விளையாட்டுத் திறமையுடனும், உறுதியான மனநிலையுடனும் இருக்கிறது.
ஆனால் அணியில் சமநிலையோ, போராட்ட குணத்தைப் பெரியளவில் வெளிப்படுத்தவோ முடியாமல் போன இலங்கை அணியை விட வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணி அரையிறுதிக்குப் பொருத்தமான ஒரு அணிதான் என்பதை எல்லா இலங்கை ரசிகர்களுமே ஏற்றுக்கொள்வர்.

-------------------------
இந்தியா - பங்களாதேஷ் 

ரோஹித் ஷர்மாவின் பிடி ஒன்றைப் பற்றிய சர்ச்சையும், ஷீக்கார் தவான் எடுத்த பிடியோன்றைப் பற்றிய சர்ச்சையும் அதிகமாகப் பரவி சூழ்ந்திருக்கும் இந்தக் காலிறுதி, மற்றும்படி பங்களாதேஷின் வழக்கமான போராட்ட குணத்தைக் காட்டாத ஒரு போட்டி என்றே சொல்லவேண்டியிருக்கிறது.
ஆனால்,  6 வெற்றிகளை அபாரமாகத் தொடர்ந்து பெற்றிருந்த இந்திய அணி, ஏனைய பெரிய அணிகளுக்கு எதிராகக் காட்டிய அளவு தன்னுடைய அசுர பலத்தை பங்களாதேஷுக்கு எதிராகக் காட்டவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

மெல்பேர்ன் மைதானத்தில் துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மாவும், சுரேஷ் ரெய்னாவும் மட்டுமே சோபித்த ஒரு போட்டியாக இந்த காலிறுதிப் போட்டி அமைந்தது.
இந்திய துடுப்பாட்ட வரிசையில் ரோஹித் ஷர்மா மட்டுமே சோபிக்காத ஒருவராகத் தெரிந்த நிலையில் அவரும் சதமொன்றைப் பெற்று,இந்திய அணிக்கு பால் வார்த்திருக்கிறார்.

இந்திய அணி மட்டுமே தான் விளையாடிய அத்தனை போட்டியிலும் எதிரணியின் விக்கெட்டுக்களை எடுத்திருக்கும் அளவுக்கு அதன் பந்துவீச்சு மிக உறுதியானதாகத் தெரிகிறது.
தொடர்ச்சியாக ஷமியும் மோஹித் ஷர்மாவும் பந்துவீசி வந்த நிலையில், பங்களாதேஷ் அணியை தன்னுடைய எகிறும் பந்துகளால் உடைத்துப்போட்டவர் உமேஷ் யாதவ் தான்.
இந்திய அணிக்கு இது இன்னும் தெம்பு கொடுத்திருக்கிறது.

அந்தப் போட்டியில் ஜடேஜாவும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுக்களை எடுத்திருப்பதால், ஐந்து உறுதியான பந்துவீச்சாளர்களோடுஅரையிறுதியில் நம்பிக்கையோடு இறங்கலாம்.

பங்களாதேஷ் தோல்வியின் பின்னர் எழுந்த இரு சர்ச்சைகளும் நியாயமானவையே.

ரோஹித் ஷர்மாவுக்கு வீசப்பட்ட பந்து அவர் நின்ற துடுப்பாடும் கிரீஸ் கோட்டுக்கு முன்னரேயே பதிய ஆரம்பித்திருந்தது.
நடுவர் இடுப்புக்கு மேலே பந்து செல்லும் என்று தவறாகக் கணித்திருந்தாலும், மைதானமே பார்த்த, அதேவேளை உலகமே பார்த்த மீள் காட்சிப் பதிவைப் பார்த்தாவது அந்தப் பந்தை ஆட்டமிழப்பு என்று வழங்கியிருக்கலாம்.
அதில் தப்பிய ரோஹித் ஷர்மா அதன் பிறகு ஆடிய ஆட்டம், போட்டியின் திருப்புமுனை என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அதேபோல தான், அடுத்தடுத்து இரு சதங்கள் பெற்றிருந்த மஹ்முதுல்லாவின் பிடி..

தவான் எல்லைக்கோட்டருகே வைத்து எடுத்த பிடி இன்னொரு சர்ச்சை. நிச்சயமாக தவான் எல்லைக்கோட்டில் கால் பதித்ததாகவே தெரிகிறது.
அப்படியிருந்தும் அயர்லாந்து - சிம்பாப்வே போட்டியில் மூனி எடுத்த சர்ச்சைக்குரிய பிடியைப் போலவே இந்தப் போட்டியில் தவான் எடுத்த பிடியும் ஆட்டமிழப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சந்தர்ப்பங்களிலுமே துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆறு ஓட்டம் வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

நடுவர்களின் இப்படியான கவனயீனங்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இனியாவது இப்படியான முக்கியமான போட்டிகளில் களையப்பட வேண்டும்.

BIG 3யில் வரத்தக ரீதியிலான பெரிய அணியும், தனது பண பலத்தினால் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையை இயக்குவதாக தெரிவதுமான இந்தியாவின் வெற்றியும், முதல் தடவையாக இப்படியொரு காலிறுதி வாய்ப்பைப் பெற்ற பங்களாதேஷ் அணி மீண்டும் இப்படியொரு வாய்ப்பைப் பெறுவது அரிது என்ற காரணிகளும் சேர்ந்தே இந்த விவகாரத்தை அதிக கொதிப்புடையதாக மாற்றியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவைத் தலைவராகவுள்ள பங்களாதேஷ் அமைச்சரும், பங்களாதேஷின் பிரதமரும் கூடத் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருப்பது, இரு தரப்பு ரசிகர்களதும் கருத்து மோதல்கள் உலகக்கிண்ணம் முடிந்தும் தொடரும் என்றே தெரிகிறது.


இந்தப்போட்டியின் வெற்றி மகேந்திரசிங் தோனியின் தலைமையில் பெறப்பட்ட 100வது வெற்றி என்பது இன்னொரு மகுடம். 
ஆசிய நாடுகளின் தலைவர்களில் அதிகூடிய ஒருநாள் சர்வதேச வெற்றிகளைப் பெற்றுள்ளவர் தோனியே.

---------------------
அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 

அதிக வாய்ப்புக்களை உடைய அணியும் அசுர பலம் கொண்டதுமான அவுஸ்திரேலியா வெல்லும், ஆனாலும் முதல் தோல்விகளுக்குப் பிறகு எழுச்சி பெற்று வந்த பாகிஸ்தான் சவால் விடும் என்று முன்னைய கட்டுரையில் சொல்லியதில் கொஞ்சமும் பிசகாமல் பாகிஸ்தான் அணி, தனது பந்துவீச்சின் மூலமாக அவுஸ்திரேலியாவை கொஞ்சமாவது திணறடித்த போட்டி.

காலிறுதிப் போட்டிகளில் கொஞ்சமாவது போட்டித் தன்மை கொண்ட போட்டியாக இதுவே அமைந்தது.

தொடரின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக, அதிகூடிய விக்கெட்டுக்களுடன் வலம் வந்த மிட்செல் ஸ்டார்க்கும், இந்தப் போட்டிக்கென மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்ட ஜோஷ் ஹேசில்வூடும் பாகிஸ்தானிய அணியை உடைத்து நொறுக்க பாகிஸ்தான் 213 ஓட்டங்களையே எடுத்தது.
யார் ஒருவரும் அரைச்சதம் கூடப் பெறவில்லை.

இதிலே க்லென் மக்ஸ்வெல் தக்க தருணத்தில் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுக்கள் (மிஸ்பா, உமர் அக்மல்) மிக முக்கியமானவை.
250ஆக ஓட்ட எண்ணிக்கை மாறாமல் தடுத்தவை இப்படியான தருணங்கள் தான்.

எனினும் இறுதி வாய்ப்பு என்பதாலும், வஹாப் ரியாஸ் என்ற ஒரு போராட்ட குணம் கொண்ட சிறந்த இடது கை பந்துவீச்சாளர் இருந்ததனாலும் இந்த இலக்கு கூட சிரமம் தரலாம் என்று சொல்லி வைத்திருந்தேன்.
சொன்னது போலவே ரியாசின் ஆவேசமான பந்துவீச்சு அவுஸ்திரேலியாவை சிற்சில தருணங்களில் தொல்லைப் படுத்தினாலும், ஸ்டீவ் ஸ்மித், க்லென் மக்ஸ்வெல் ஆகிய இளையவர்களின் பதறாத துடுப்பாட்ட அணுகுமுறையும், என்ன தான் கவன சிதைப்பான்கள் இடையூறு கொடுத்தாலும் விக்கெட்டை இழக்காமல் பொறுமை காத்த வொட்சனும் சேர்ந்து அவுஸ்திரேலியாவைக் கரை சேர்த்திருந்தனர்.

இவர்களை விட இன்னொரு முக்கியமான காரணி - எப்போதுமே பாகிஸ்தானை கை விடும், பாகிஸ்தானின் வெற்றிகளை எல்லாம் தோல்விகளாக மாற்றிவிடும் அவர்களது மோசமான களத்தடுப்பு. 
ஓட்டங்கள் பல இலகுவாகக் கொடுக்கப்பட்டன, பிடிகள் அதில் மிக முக்கியமாக ஷேன் வொட்சன் வஹாப் ரியாசின் சிறப்பான பந்துவீச்சினால் வதைக்கப்பட்டுக் கொண்டு, தடுமாறிக்கொண்டிருந்தபோது, ரஹாத் அலி அவரது பிடியைத் தவறவிட்டது மிக முக்கியமாக அமைந்தது.

அதன் பின் அப்படியே போட்டி அவுஸ்திரேலியாவின் பக்கம் போய்விட்டது.
தனது இறுதிப் போட்டியாக மாறியிருந்த போட்டியில் ஷஹிட் அப்ரிடி (துடுப்பாட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 10 ஓட்டங்களைத் தாண்டினாலும்) பந்துவீச்சில் படுமோசமாக பாகிஸ்தானை ஏமாற்றியிருந்தார். 4 ஓவர்களில் 30 ஓட்டங்கள்.

வஹாப் ரியாஸ் காட்டிய ஆக்ரோஷத்தில் பாதியை இன்னொரு பந்துவீச்சாளராவது காட்டியிருந்தால் கூட, பாகிஸ்தான் இன்னும் போராடியிருக்கலாம்.

துடுப்பாடும்போது மிட்செல் ஸ்டார்க்கினால் சீண்டிவிடப்பட்ட வஹாப், அதே  அவுஸ்திரேலிய பாணி சீண்டலை ஷேன் வொட்சன் மேல் தன்னுடைய வேகமான, எகிறும் பந்துகளால் செலுத்தியது இந்த உலகக்கிண்ணத் தொடரின் இன்னொரு மறக்கமுடியாத தருணமாக மாறும் என்பது உறுதி.

ஆனால், போட்டி முடிந்த பிறகு இரு வீரர்களும் மைதான சண்டையை மறந்து சிநேகம் பாராட்டினாலும், சர்வதேச கிரிகெட் பேரவை விதித்திருக்கும் தண்டம் கொடுமையான நகைச்சுவை.

வஹாப் ரியாசின் மேல் சுமத்தப்பட்டுள்ள தண்டப்பணத்தை தானே செலுத்தவுள்ளதாக முன்னாள் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர் பிரையன் லாரா தானே செலுத்துவதாக அறிவித்துள்ளமை எல்லா அணிகளின் ரசிகர்களின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வஹாப் ரியாசின் பந்துவீச்சு மூலம் அவுஸ்திரேலியாவையும் நிலைகுலையச் செய்யலாம் என்பது அரையிறுதியில் இந்தியாவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தாலும்,
ஸ்டீவ் ஸ்மித் - வொட்சன் - 89 ஓட்ட இணைப்பாட்டமும், பின்னர் மக்ஸ்வெல் அதிகம் ஜொலித்த உடைக்கப்படாத 78 ஓட்ட இணைப்பாட்டமும் அவுஸ்திரேலியாவுக்கு தெம்பு அளித்திருக்கிறது என்பதுவும் உண்மை.

இலங்கையின் தோல்வியோடு மஹேல, சங்கா விடைபெற்றதைப் போல, பாகிஸ்தானின் இந்தத் தோல்வியுடன் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் மற்றும் ஷஹிட் அப்ரிடி ஆகியோர் ஒருநாள் சர்வதேசப்போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுகின்றனர்.

----------------------------

நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் 

ஏறியும் இறங்கியும் ஆர்ப்பரித்தும் அவஸ்தைப்பட்டும் ஒரு நிலையில் இல்லாத மேற்கிந்தியத் தீவுகள் அணி, மெல்பேர்னில் இறுதிப்போட்டியில் விளையாடுவதே ஒரே இலக்கு என்ற உத்வேகத்தோடு ஒற்றுமைப்பட்டு விளையாடிவரும் அசுர பலம் கொண்ட நியூசீலாந்தினால் வதைக்கப்பட்ட காலிறுதி.

இதற்கு முந்தைய 6 போட்டிகளிலும் நியூ சீலாந்தின் ஒவ்வொரு வீரராகப் பிரகாசித்து,அணியாக அத்தனை பேரும் சிறப்பான பெறுபெறுகளுடன், நம்பிக்கை கொண்டு களமிறங்க, நியூ சீலாந்தின் முதற்சுற்றின் இறுதிப்போட்டியில் சதமடித்த மார்ட்டின் கப்டில் (இதுவே இந்த உலகக்கிண்ணத் தொடரில் நியூ சீலாந்தின் முதல் சதம்) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதை இரட்டைச் சதமாக இன்னும் பெரிதாக மாற்றிக்கொண்டார்.

தனது சக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், தலைவருமான பிரெண்டன் மக்கலமுடன் துடுப்பாடும்போது அடக்கி வாசிக்கும் கப்டில், சனிக்கிழமையை தனது நாள் ஆக்கியிருந்தார்.

237 என்ற மைல்கல் ஓட்ட எண்ணிக்கை - நியூ சீலாந்தின் முதலாவது ஒருநாள் சர்வதேச இரட்டைச் சதம் மட்டுமல்லாமல் உலகக்கிண்ணப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாகவும் சாதனை படைத்தது.

இதே உலகக்கிண்ணத் தொடரில் கிறிஸ் கெயில் பெற்ற 215 ஓட்டங்களை அவர் களத்தடுப்பில் ஈடுபட்ட நேரமே முறியடித்தார்.
நிதானமாக ஆரம்பித்த கப்டில் இறுதி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்து சாதனைகளை உடைத்துத் தள்ளியிருந்தார்.
11 ஆறு ஓட்டங்கள், 24 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 163 பந்துகளில் கப்டில் விளாசிய  237, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய சாதனை எண்ணிக்கைக்கு அடுத்தாக உருமாறியுள்ளது.

போட்டியின் முதல் ஓவரிலேயே சாமுவேல்சினால் பிடி தவறவிடப்பட்ட கப்டில் அந்த வாய்ப்பை இப்படிப் பெரியதொரு சாதனையாக மாற்றியிருந்தார். முதலாவது உலகக்கிண்ணத்தில் நியூ சீலாந்து சார்பாக கிளென் டேர்னர் பெற்றிருந்த 171 ஓட்டங்களே இதுவரை நியூ சீலாந்தினால் உலகக்கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட கூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.
நாற்பது வருடங்களின் பின் நியூ சீலாந்தில் வைத்து அது உடைக்கப்பட்டுள்ளது.

நியூ சீலாந்து வீரர் ஒருவர் உலகக்கிண்ணப் போட்டிகளில் அடுத்தடுத்து சதங்கள் பெற்ற முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
அத்துடன் நியூ சீலாந்து அணி பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கையான 393 ஓட்டங்கள் இன்னும் சில சாதனைகள் படைத்தது.
நியூ சீலாந்து உலகக்கிண்ணப் போட்டிகளில் பெற்ற கூடுதலான ஓட்ட எண்ணிக்கை.
(முன்னையது - கனடாவுக்கு எதிராகப் பெறப்பட்ட 363/5 - 2007இல்)
நியூ சீலாந்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை.
உலகக்கிண்ணப் போட்டிகளில் ஆறாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை.

Martin Guptill's 237 not out from 163 balls is the ...
 
  • Highest score in a World Cup match – previous record held by Chris Gayle, 215 v Zimbabwe, 2015
  • Highest score by a New Zealand batsman in ODI cricket – previous record held by Martin Guptill, 189 not out v England, 2013
  • Second-highest score in ODI cricket – record held by Rohit Sharma, 264 v Sri Lanka, 2014
  • Highest score by a New Zealand batsman in a World Cup match – previous record held by Glenn Turner, 171 not out v East Africa, 1975
  • Highest score in a World Cup knockout match – previous record held by Adam Gilchrist, 149 v Sri Lanka, 2007
  • First instance of a New Zealand batsman scoring back-to-back hundreds in a World Cup (following 105 v Bangladesh)
------------------------------
New Zealand's 6-393 is the ...
 
  • Highest total in a World Cup knockout match – previous record held by Australia, 2-359 v India, 2003
  • New Zealand's highest total in a World Cup match – previous record 5-363 v Canada, 2007
  • Third-highest total by New Zealand – record 2-402 v Ireland, 2008
  • Sixth-highest total in a World Cup match – record held by Australia, 6-417 v Afghanistan, 2015

from : cricket.com.au

இதுவரை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 300 ஓட்டங்களை ஒருபோதுமே துரத்தியடித்து வென்றிராத மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இது ஒரு பாரிய சவால் மட்டுமல்ல, அவர்களால் நியூ சீலாந்தின் மிகச் சிறப்பான பந்துவீச்சிற்கு எதிராக அடிக்க முடியாததாக இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்தே இருந்தது.

வந்தவரை அடிப்போம் என்ற கணக்கில் வெளுத்து வாங்க ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், வேகமாக அடித்தது; அதே வேகத்தில் விக்கெட்டுக்களையும் இழந்தது.

கெயில் எட்டு ஆறு ஓட்டங்களுடன் 33 பந்துகளில் 61.
தலைவர் ஜேசன் ஹோல்டர் (இந்தத் தொடர் மூலம் தன்னை ஒரு சகலதுறை வீரராக நிலைநிறுத்த முனைந்துள்ளார்) 26 பந்துகளில் 42 என்று ரசிகர்களுக்குக் கொஞ்சம் உற்சாகம் ஊட்டினாலும், 31வது ஓவரில் போட்டி முடிந்துபோனது.

இதில் சாமுவேல்ஸ் அடித்த ஒரு அபார அடியை நியூ சீலாந்து அணியின் வயதுமுதிர்ந்த, கொஞ்சம் வேகம் குறைவான களத்தடுப்பாளரான டானியேல் வெட்டோரி பிடிஎடுத்த விதம் இன்னொரு சாகச தருணம்.
கெயில் ஆட்டமிழந்து செல்லும்போது, ரசிகர்களுக்கு தன்னுடைய கையுறைகள், கால் காப்புக்கள், தொப்பி என்பவற்றை நினைவுச் சின்னங்களாக வீசிவிட்டு சென்றது அவரது ஓய்வைக் குறிப்பால் உணர்த்த என்று பலர் நினைத்தாலும், இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று கெயில் பின்னர் அறிவித்திருந்தார்.

இந்தப் போட்டியிலும் வழமை போலவே சிறப்பாக பந்து வீசியிருந்த டிரென்ட் போல்ட் நான்கு விக்கெட்டுக்களைப் பெற்று, தொடரின் கூடுதல் விக்கெட் பெற்றோர் வரிசையில் ஸ்டார்க்கை முந்தியுள்ளார்.
--------------
நியூ சீலாந்தும், இந்தியாவும் தாம் விளையாடிய எல்லாப் போட்டிகளையும் வென்று நம்பிக்கையோடும், அவுஸ்திரேலியாவும் தென் ஆபிரிக்காவும் இறுதியாகப் பெற்றுள்ள சிறப்பான வெற்றிப் பெறுபேறுகளுடனும் நம்பிக்கையுடன் கடைசி நான்கு அணிகளாக உலகக்கிண்ணத்தைக் குறிவைத்துள்ளன.
இன்னும் ஒரு மணி நேரத்தினுள், நாளை அதிகாலை ஒக்லந்து - ஈடன் பார்க் மைதானத்தில்  நியூசீலாந்து - தென் ஆபிரிக்க அணிகள் மோதவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டி பற்றிய பார்வையுடன் சந்திக்கிறேன்.
No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner