March 25, 2015

வரலாற்று வெற்றி பெற்ற நியூ சீலாந்து, மீண்டும் சோகத்தில் தென் ஆபிரிக்கா - நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தந்த முதலாவது அரையிறுதி

அற்புதமான முதலாவது அரையிறுதி  என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு நேற்று எழுதிய முதலாவது அரையிறுதி பற்றிய விரிவான அலசலை இன்னும் சில புதிய சேர்ப்புக்கள், இன்றுவரை கிடைத்துள்ள புதிய தகவல்கள், சுவாரஸ்யமான புகைப்படங்களுடன் இங்கே 'புதிதாக' பதிகிறேன்.

படம் நன்றி - Cricket  Tracker 
-----------------------------------

என்னா ஒரு போட்டி !!!

வெற்றி - தோல்வி, அளவு கடந்த ஆனந்தம் - அடக்க முடியா சோகம், பெருமிதமான சாதனை - மனமுடைந்து போகவைக்கும் சோகம், அத்தனையையும் ஒரே போட்டியில் தரமுடியும் என்றால் அது தான் நேற்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டி.

நியூ சீலாந்து அணி தனது தொடர்ச்சியான 10வது ஒருநாள் சர்வதேசப் போட்டியை வென்று, வரலாற்றில் முதல் தடவையாக உலகக்கிண்ண இறுதிப் போட்டியொன்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
அத்துடன் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள இரண்டாவது அணியாக இன்னும் திகழ்கிறது.
(அவுஸ்திரேலியா 60 வெற்றிகள், நியூ சீலாந்து 48, இந்தியா 46)
ஆறு அரையிறுதி மனவுடைவுகளுக்குப் பிறகு ஒரு மாபெரும் இறுதி.

முன்னைய இடுகையில் சுட்டிக்காட்டி வியந்த விடயத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
"இந்த வேளையில் தான் மிகுந்த நம்பிக்கையோடு கடந்த வருடம் மெல்பேர்ன் மைதானத்துக்கு சுற்றுலா மேற்கொண்டு, இறுதிப் போட்டிக்கு வரும்போது மனநிலை அளவில் தயாராவதற்கு துணிந்த நியூ சீலாந்தின் தன்னம்பிக்கை பற்றிப் பாராட்டத் தோன்றுகிறது."


ஒரு ஒருநாள் சர்வதேச  கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும்போது, ஏதாவது ஒரு அணி வென்றேயாக வேண்டும்.
ஆனால், இரு அணிகளும் தோற்றுவிடக் கூடாதே, இரண்டுமே ரசிகர்களின் அன்பையும் அபிமானத்தையும், தோற்கின்ற வேளையில் அனுதாபங்களையும் பெற்ற அணிகள் என்பதே நேற்றைய அரையிறுதியின் சிறப்பு.

யார் வென்றது, யார் தோற்றது என்பதையெல்லாம் விட நேற்று கிரிக்கெட் வென்றது.

இப்படியான ஒரு ஒருநாள் சர்வதேசப்போட்டி தான் ரசிகர்களுக்கான விருந்து..

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரையிறுதிப் போட்டி, இரண்டு அணியினதும் 22 வீரர்களுக்குமே அவர்களது வாழ்க்கையின் மிக முக்கியமான போட்டியை நேற்று விளையாடி இருந்தார்கள்.

இரண்டு அணிகளுமே அபாரமான ஆற்றல் கொண்ட அணிகள்.
ஆக்ரோஷமான தலைவர்கள்.
தங்கள் இரண்டு தகுதியான அணிகளுக்கும் மிக நீண்ட தேடுதலாக இருக்கும் கிண்ணத்தை இந்த முறையாவது வென்றாகவேண்டும் என்ற வெறியோடு களம் புகுந்திருந்தன.

ஆனால், நேற்றைய போட்டி பற்றிய என்னுடைய கட்டுரையில் சொல்லியிருந்ததைப் போல, ரசிகர்களின் ஆதரவு என்ற மாபெரும் சக்தியும், சொந்த மைதான ஆடுகளத்தின் சாதக பலாபலன்களும் மட்டுமன்றி, பதறாமல் முக்கியமான தருணங்களைக் கடக்கின்ற பொறுப்புணர்வும் சேர்ந்து நியூ சீலாந்தை அதிக வாய்ப்புடைய அணியாக மாற்றிக் காட்டியிருந்தது.


அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்ததைப் போல 
//இரு அணிகளுக்கும் தலைமை தாங்குபவர்களும் கூட நிகர்த்த ஆற்றலுடைய ஆக்ரோஷமான, அதேவேளை சாதுரியமான இரு தலைவர்கள்.
இந்த அணிகளின் வித்தியாசமாக விளங்கப்போவது மைதானத்தில் இரு அணிகளும் காட்டப்போகும் பெறுபேறுகள், அசத்தல்கள் மட்டுமல்லாமல், தேவையான பொழுதுகளில் உணர்ச்சிவசப்படாமல் எடுக்கவுள்ள தீர்மானங்களும் தான்.
​//


தலைவர்களின் வழிநடத்தலும் அவர்களது பெறுபேறுகளும் நேற்றைய போட்டியில் தீர்மானமிக்க முடிவை எடுத்திருந்தன.


இரு அணிகளினதும் தலைவர்கள் தொடர்ச்சியாக பிரகாசித்து வருவதைப்போல, நேற்றும் தங்கள் அணிகளுக்கு வேகமான, உறுதியான அரைச் சதங்களை அடித்து அணிகளின் வெற்றிக்கு உறுதியான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

​ஏபி டீ வில்லியர்ஸ் 45 பந்துகளில் 65.
பிரெண்டன் மக்கலம் அவரை விட வேகமாக வெறும் 26 பந்துகளில் 59.

துடுப்பாட்டத்தில் டீ வில்லியர்சை முந்திய மக்கலம், சாதுரியமான பந்துவீச்சு மாற்றத்திலும் தென் ஆபிரிக்க தலைவரை விஞ்சியிருந்தார்.

 தென் ஆபிரிக்காவின் ஐந்தாவது பந்துவீச்சாளர் சிக்கலே, எதிர்வுகூறியதைப் போல நேற்று காலை வாரிவிட்டது.
"தென் ஆபிரிக்காவின் 4 உறுதியான பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை தந்தாலும் ஐந்தாவது பந்துவீச்சாளர் பற்றி இருந்த சந்தேகம், இலங்கைக்கு எதிராக டுமினி ஹட் ட்ரிக்குடன் வீழ்த்திய 3 விக்கேட்டுக்களுடன் தீர்ந்துள்ளது.
எனினும் ஈடன் பார்க் மைதானத்தில் ஒரு சுழல் பந்து வீச்சாளரே தேவையா என்ற நிலையில் இன்னொருவரின் பயன்பாடு அவசியமா என்ற கேள்வியும் எழுவது மீண்டும் ஐந்தாவது பந்துவீச்சாளர் பற்றிய ஐயத்தை ஏற்படுத்துகிறது."

இலங்கைக்கு எதிராக டுமினி வீழ்த்தியிருந்த ஹட் ட்ரிக் ஒரு மாயமான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

நேற்றும் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் அவரும், அவருடன் மீதி ஓவர்களை வீசிய அணித் தலைவர் டீ வில்லியர்சும் சறுக்கியிருந்தார்கள்.

இதைவிட இன்னும் பெரிய சறுக்கல், இனி அதிகம் பேசப்பட, படமாகப் பகிரப்படவிருக்கும் டீ வில்லியர்ஸ் தவறவிட்ட ரன் அவுட்.தென் ஆபிரிக்காவுக்கு 23 வருடங்களாக இருந்துவந்த உலகக்கிண்ண knock out சாபம், இலங்கைக்கு எதிரான வெற்றியுடன் முடிந்தது என்று பலரும் எண்ணியிருக்க, விதியின் விளையாட்டாக நேற்றும் அரையிறுதியில் நான்காவது தடவையாக மழை விளையாடியிருந்தது.​மழையுடன் மழை விதியும் பிரயோகிக்கப்பட்டது 1992 அரையிறுதியையும் 22 ஓட்டங்களை 1 பந்தில் எடுக்கவேண்டும் என்று காட்டிய மறக்கமுடியாத புகைப்படத்தையும் மனதுக்குள் கொண்டுவந்தது.

எனினும் இங்கே  பலர் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல, 

தென் ஆபிரிக்காவின் முதலாவது மழையுடனான துரதிர்ஷ்டத் தோல்வி - 1992இல் டக்வேர்த் லூயிஸ் மழை விதியினால் அமைந்தது அல்ல.
அது தென் ஆபிரிக்காவுக்கு எழுதப்பட்ட தலைவிதியாக அமைந்த வேறொரு 'மழை விதி'
டக்வேர்த் லூயிஸ் மழை விதி பிரயோகிக்கப்பட ஆரம்பித்ததே 1997இல் தான்.

எனவே தென் ஆபிரிக்கா இது வரை மழைவிதியால் சறுக்கிய உலகக்கிண்ணப் போட்டிகள் என்றால் 2003 இலங்கைக்கு எதிரான முதற் சுற்றுப்போட்டி (சமநிலை முடிவு - அணித் தலைவர் பொல்லொக் போட்ட தவறான கணக்கு)

& நேற்றைய அரையிறுதி..
நேற்றைய போட்டியில் கூட நேரடிக் காரணம் என்று டக்வேர்த் லூயிஸ் மழை விதியை சொல்ல முடியாது.
தென் ஆபிரிக்கா கடைசி ஓவர்களில் தான் வெளுத்து வாங்கும் என்றால் இனி புத்தம்புதியதாய் ஒரு விதியை அவர்களுக்கு என்று மட்டும் அறிமுகம் செய்யவேண்டியது தான்.


அத்துடன் நியூ சீலாந்து துரத்தியபோது தென் ஆபிரிக்கா தவறவிட்ட முக்கியமான பிடிகளும் உலகின் மிகச்சிறந்த களத்தடுப்பு அணிகளில் ஒன்று கூட, பதற்றமான சூழ்நிலைகளில் எவ்வாறு மோசமாக விளையாடுகிறது என்று மீண்டும் காட்டியிருந்தது தென் ஆபிரிக்கா.நாணய சுழற்சியில் வென்றவுடன் தென் ஆபிரிக்கா முதலில் துடுப்பாட எடுத்த முடிவு, தென் ஆபிரிக்கா இந்த உலகக்கிண்ணம் முழுவதிலும் முதலில் துடுப்பாடியபோது  குவித்த மிகப் பிரம்மாண்டமான ஓட்ட எண்ணிக்கைகளில் மட்டுமன்றி, நியூ சீலாந்து இரண்டாவதாகத் துடுப்பாடி வெற்றி இலக்குகளைத் துரத்தியபோது தடுமாறியதையும் கவனத்தில் கொண்டே.


மீண்டும் ஒரு தடவை ஆரம்ப இணைப்பாட்டம் தென் ஆபிரிக்காவைக் கைவிட்டது.


7வது தொடர்ச்சியான போட்டியில் தென் ஆபிரிக்காவின் கொக் - அம்லா 50 ஓட்டத்தைக் கூட இணைப்பாட்டமாக பெறமுடியவில்லை.எனினும் ஃபப் டூ ப்ளேசிஸ், டீ வில்லியர்சின் வேகமான இணைப்பாட்டம் அணியின் ஓட்டங்களை சடுதியாக அதிகரிக்க, வழமையான டீ வில்லியர்சின் 360 பாகைக் கோண அதிரடி ஆரம்பிக்கும் என்று பார்த்திருந்தால் ஆரம்பித்தது மழையின் விளையாட்டு.மழை வந்த நேரத்தில் 38 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை எடுத்திருந்த தென் ஆபிரிக்கா, அதன் பின்னர் 7 ஓவர்கள் குறைக்கப்பட்ட பின், 5 ஓவர்களில் 65 ஓட்டங்களை எடுத்தது.

மழையின் பிறகு டூ ப்லேசிசின் ஆட்டமிழப்பும், டீ வில்லியர்சின் ஓட்ட வேகம் குறைந்ததும் தென் ஆபிரிக்காவைப் பாதித்தது.


டூ ப்ளேசிஸ் 82 ஓட்டங்கள். 
ஏபி டீ வில்லியர்ஸ் 45 பந்துகளில் 65

ஆனால், டேவிட் மில்லர் அதிரடியாக வெளுத்து வாங்கி 18 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பெற்றார்.


ஓவர்கள் குறைக்கப்பட்டதால், மழைவிதி - டக்வேர்த் லூயிஸ் பிரயோகிக்கப்பட்டு நியூ சீலாந்துக்கு இலக்கு 298 என்று வழங்கப்பட்டது.

ஆனால், தென் ஆபிரிக்க அணி கடைசி 10 ஓவர்களில் சராசரியாக 150 - 180 ஓட்டங்களைக் குவிக்கும் அணி என்ற அடிப்படையில் இது அவர்களைப் பாதித்தது என்றே சொல்லமுடியும்.

ஆனால் விதியும், விதிமுறையும் பொதுவானதன்றோ ??


டிரென்ட் போல்ட் கைப்பற்றிய 2 விக்கேட்டுக்களோடு இந்த உலகக்கிண்ணத்தில் 21 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்து முதலிடத்தில் இருக்கிறார்.

அத்துடன் ஒரு உலகக்கிண்ணத் தொடரில் கூடுதலான விக்கெட்டுக்களை வீழ்த்திய (20 - 1999 உலகக்கிண்ணம்) நியூ சீலாந்து வீரர் என்ற ஜெப் அலட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.


நியூ சீலாந்தின் ஆரம்ப அதிரடி தலைவர் மக்கலமினால் பொறி பறக்கத் தொடங்கியது.


தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து ராஜா, டேல் ஸ்டெய்ன் வீசிய வேகப்பந்துகளை நாலா திசைகளிலும் சிதறடித்தார்.


4 ஆறு ஓட்டங்கள், 8 நான்கு ஓட்டங்களோடு அதிவேகமாக 26 பந்துகளில் 59 ஓட்டங்கள்.மறுபக்கமாக கடந்த போட்டியின் இரட்டைச்சத நாயகன் கப்டில் நிதானமாக 34 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதிப் போட்டியில் இன்னும் 10 ஓட்டங்களை பெற்றால் கப்டில்,  உலகக்கிண்ணத் தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்று, இதுவரை சங்கக்காரவின் வசமுள்ள சாதனையைத் தன் வசப்படுத்திக் கொள்வார்.


பின்னர் டெய்லரின் 30 ஓட்டங்களுக்குப் பிறகு, போட்டியின் போக்கை மாற்றிய இணைப்பாட்டம், கவனம் சிதறாது, ஆனால் தேவையற்றுப் பதறாது, அதேவேளையில் ஓட்ட வேகத்தையும் குறையவிடாது - க்ராண்ட் எலியட் - கோரி அண்டர்சன் ஆகியோர் பெற்ற சத இணைப்பாட்டம்.அண்டர்சன் வழமையாக ஆடும் அதிரடி ஆட்டத்திலிருந்து மாறுபட்டு, விக்கெட்டை இழக்காமல் ஆடிய அரைச்சத ஆட்டம் போட்டியை நியூ சீலாந்துக்கு தந்தது.அதேபோல, இந்த உலகக்கிண்ணத் தொடரில் இதுவரை துடுப்பால் பெரியளவு பங்களிப்பை வழங்காமல் இருந்த எலியட் நேற்று ஆடிய ஆட்டம் அவரது வாழ்நாளின் உன்னதமான ஆட்டம் எனலாம்.

தென் ஆபிரிக்காவிலே பிறந்து, வளர்ந்து கிரிக்கெட்டும் ஆடிய (தென் ஆபிரிக்க A அணிக்கும் ஆடியவர்) எலியட், 36 வயதிலே இந்த உலகக்கிண்ண அணிக்குள் அழைக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தையும் சர்ச்சையையும் தோற்றுவித்திருந்தது.


எனினும் ஆர்ப்பாட்டமில்லாத அதிரடி மூலம் எலியட் தனக்கான காரணத்தை அழுத்தமாகக் காட்டிவிட்டார்.
இதிலே இன்னொரு சுவாரஸ்யமான விடயம், கடந்த வருடம் மெல்பேர்ன் விஜயம் செய்த நியூ சீலாந்தின் 20 வீரர்கள் கொண்ட குழுவில் இந்த கூலான மனிதர் எலியட் இருக்கவில்லை.

3 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்களுடன் 73 பந்துகளில் மிகக் கூலாக வெளுத்துவாங்கிய எலியட், டேல் ஸ்டெய்னின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்ஸராக மாற்றியது உலகக்கிண்ண கிரிக்கெட் சரித்திரத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது.போட்டியின் கடைசி ஒரு மணி நேரமும், இரண்டு அணிகளுக்கும் சாதகமாக மாறி மாறி ஒரு பரபரப்பு திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்க, கடைசி இரு ஓவர்களில் பெறப்படவிருந்த 23 ஓட்டங்கள் சாதகத் தன்மையை அதிகமாக தென் ஆபிரிக்க பக்கம் வழங்கியிருந்தன.


அதிலும் மோர்க்கல், ஸ்டெய்ன் ஆகியோர் வீசியிருந்த இரு ஓவர்களை சாதுரியமாகவும், பதறாமலும்  வெட்டோரியும் எலியட்டும் கையாண்ட விதம் பதறாத காரியம் சிதறாது என்பதைக் காட்டியது.
தென் ஆபிரிக்க வீரர்களோ பதறி பல பிடிகளையும், ரன் அவுட் வாய்ப்புக்களையும் தவறவிட்டு அரியதான உலகக்கிண்ண இறுதிப்போட்டி வாய்ப்பைத் தவறவிட்டார்கள்.கண்ணீர் மல்க தென் ஆபிரிக்க வீரர்கள் மைதானத்தில் இருந்து அகன்றதும், 92இல் இதே மைதானத்தில் தவறவிட்ட இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை 23 ஆண்டுகளின் பின் அதே இடத்தில் பெற்ற உற்சாகத்தின் நெகிழ்ச்சியோடு நியூ சீலாந்து கூடிக் கொண்டாடிய 40000க்கும் அதிகமான ரசிகர்களோடு வெற்றியைப் பகிர்ந்ததும் சோகமும் சந்தோஷமும் ஒன்று சேர்ந்த மறக்கமுடியாத நிகழ்வுகள்.எந்தவொரு காரணமோ, சாட்டோ சொல்லாமல், "சிறந்த அணி வென்றது. இறுதிப் போட்டியில் பங்கெடுக்கும் அணிகளுக்கு வாழ்த்துக்கள். ரசிகர்களுக்கு நன்றிகள்" என்ற தழுதழுக்கும் வார்த்தைகளோடு டீ வில்லியர்ஸ் மேலும் ஒருபடி மனதில் எழுந்துவிட்டார்.
மறுபக்கம் நியூ சீலாந்தில் நடைபெற்ற 300வது ஒருநாள் சர்வதேசப் போட்டியை சரித்திரபூர்வமான வெற்றியாக மாற்றி, இறுதிப் போட்டிக்காக இந்த உலகக்கிண்ணத் தொடரில் முதல் தடவையாக நியூ சீலாந்தை விட்டு அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையோடு பறக்கவிருக்கும் மக்கலம் ஒரு உதாரணத் தலைவராக எழுந்து நிற்கிறார்.

அத்துடன், தங்களது வெற்றிக்கொண்டாட்டங்களை தாங்கள் தங்கியிருந்த ஹொட்டேலில் சென்று கொண்டாடாமல், சோகத்தில் தவித்திருந்த தென் ஆபிரிக்க வீரர்களை முதலில் தேற்றி, அவர்களுடன் இணைந்திருந்த பிறகே மைதானம் விட்டுச் சென்ற நியூ சீலாந்து அணி மற்றும் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் ஆகியோர் மனதில் மேலும் உயரிய இடத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த அணி எப்போதுமே எதிரணிகளுக்கு உயரிய கௌரவம் வழங்கும் பேராண்மை மிக்க ஒரு அற்புத அணி.

நேற்றைய மறக்கமுடியாத போட்டியின் சாதனையாளர்களை தொடர்ந்து வரும் ஒவ்வொரு உலகக்கிண்ணத்திலும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கப்போகும் நாம், தென் ஆபிரிக்கவீரர்கள் துயரம் தாழாமல் கதறி அழுத்த புகைப்படங்களையும் இலேசில் மறந்துவிடப்போவதில்லை.
ஆமாம், தென் ஆபிரிக்காவுக்கு மீண்டும் ஒரு உலகக்கிண்ணம் கையருகே வந்து கை நழுவிப் போயுள்ளது. அவர்களின் பொற்காலத்துக்குரிய போராட்ட வீரர்கள் இவர்களில் பலர் அடுத்த உலகக்கிண்ணத்தில் விளையாடுவார்களா என்பதும் சந்தேகமே.
பாவம்...
உலகக்கிண்ணம் வெல்லும் சகல ஆற்றலும் தகுதியும் கொண்ட அணி மீண்டும் மிக அருகே வந்து வெளியேறி இருப்பது எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்குமே கவலையே.


தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து, தொட்டதெல்லாம் துலங்கும் நியூ சீலாந்து யாரை இறுதிப் போட்டியில் மெல்பேர்னில் சந்திக்கும் என்பதற்கான விடை நாளை கிடைக்கும்.


நியூ சீலாந்தின் காலாகாலமான எதிரியும் டஸ்மான் கடல் பிரிக்கும் பக்கத்து நாடும், உலகக்கிண்ணப் போட்டிகளை சேர்ந்து நடத்தும் அவுஸ்திரேலியாவா, அல்லது நியூ சீலாந்தைப் போலவே இந்த தொடரில் எந்தவொரு போட்டிகளையும் தோற்காமல் வென்று வரும் இந்தியாவா என்பதை நாளை தெரிந்துகொள்வோம்.

இந்தியாவும் நியூ சீலாந்தும் சந்தித்தால், தோல்வியுறாத இரு அணிகள் உலகக்கிண்ண இறுதியில் சந்திக்கும் முதல் வரலாறாக அமையும்.
அவுஸ்திரேலியாவும் நியூ சீலாந்தும் சந்தித்தால், போட்டிகளை நடத்திய இரு நாடுகள் உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் சந்திக்கும் இரண்டாவது சந்தர்ப்பமாக அமையும்.
2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதியில் இந்தியாவும் இலங்கையும் சந்தித்திருந்தன.

அதேபோல, இந்த உலகக்கிண்ணத்தில் ஏற்கெனவே முதற்சுற்றில் மோதிய இரு அணிகள் மீண்டும் சந்திக்கும் ஒரே சந்தர்ப்பமாக அமையும்.

இப்போது கறுப்புத் தொப்பிகளை சந்திக்கும் அடுத்த அணி யார் என்பதைத் தீர்மானிக்கும் 'சிட்னி' ஆடுகளம் பற்றி பரவலாகப் பேசப்படும் விடயங்கள் பற்றியும் இன்று இரவு அடுத்த இடுகையுடன் சந்திக்கிறேன்.No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner