March 17, 2015

வெற்றி அல்லது வெளியேறு !! - உலகக்கிண்ணம் 2015 - காலிறுதிகள் ஆரம்பம் #cwc15

உலகக்கிண்ணம் 2015: எட்டு அணிகள் முட்டி மோதும் காலிறுதிகள் என்ற தலைப்பில் இன்று ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு எழுதிய கட்டுரையை மேலதிக விஷயங்கள், தகவல்களுடன் இங்கே பதிகிறேன்.





உலகக்கிண்ணத்தின் 42 போட்டிகள் முடிந்து 6 அணிகள் வெளியேற, இதுவரை சிறப்பாக விளையாடியுள்ள 8 அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளன.

முதல் சுற்றின் இறுதிப் போட்டி வரை இறுதியாகத் தெரிவாகும் அணிகளில் சஸ்பென்ஸ் நீடிக்கும் விறுவிறுப்பை வழங்கியுள்ள இந்த உலகக்கிண்ணத்தில் தேவையற்ற, சுவாரஸ்யமற்ற போட்டிகள் என்று பெரிதாக இருக்கவில்லை என்பது மிக முக்கியமானது.

தெற்காசிய அணிகள் நான்கும் முதல் தடவையாகக் காலிறுதிகளுக்குத் தெரிவாகியுள்ளன.
கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் காலிறுதிகளுக்குத் தெரிவாகியிருக்கவில்லை.
2007இல் காலிறுதிகளாக இல்லாமல் Super 8 போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
அந்தவேளையில் முதற்சுற்றோடு இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேறியிருந்தன.

1996இல் முதல் தடவை காலிறுதிப் போட்டிகள் அறிமுகமாகிய வேளையில், பங்களாதேஷ் விளையாட ஆரம்பித்திருக்கவில்லை.

இம்முறை டெஸ்ட் விளையாடும் அணிகளில் இங்கிலாந்தும் சிம்பாப்வேயும் வெளியேறியிருக்கின்றன.
முன்னைய உலக சம்பியன்கள் அத்தனையும் மீண்டும் உலகக்கிண்ணத்தை குறிவைத்துள்ள இறுதி 8 அணிகளாக உள்ளன.


இதுவரை 30 நாட்களில் 14 மைதானங்களில், 41 போட்டிகள் முடிவுகளை வழங்கியிருக்க, ஒரேயொரு போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

35 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. - இது ஒரு உலகக்கிண்ண சாதனையாகும்.
அதில் கிறிஸ் கெய்ல் பெற்ற இரட்டைச் சதமும் அடங்கும்.
சங்கக்கார 4 சதங்களை தொடர்ச்சியாகப் பெற்று உலக சாதனை நிகழ்த்தி முன்னணியில் விளங்கும் அதே நேரம், இன்னும் நான்கு வீரர்கள் தலா இரண்டு சதங்களைப் பெற்றுள்ளார்கள்.

டில்ஷான், ஷீக்கார் தவான், இவர்கள் தவிர அடுத்தடுத்து இரு சதங்களைப் பெற்றுள்ள சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் மற்றும் பங்களாதேஷின் மஹ்முதுல்லா ஆகியோரும் பாராட்டுக்குரியவர்களே.

அணியாக இலங்கை 8 சதங்களைப் பெற்றுள்ளது.
தென் ஆபிரிக்கா ஐந்து சதங்களையும், இந்தியா நான்கு சதங்களையும், அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தலா மூன்று சதங்களையும் பெற்றுள்ளன.
35 சதங்கள் குவிக்கப்பட்டுள்ள தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மட்டுமே சதம் பெறாத ஒரே அணி.

இங்கிலாந்து பிராந்திய அணிக்காக விளையாடுவதற்காக சிம்பாப்வே அணியிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டெய்லர், தன்னுடைய இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையுடன் விடைபெறுகிறார்.
அத்துடன், மேலும் பல சிம்பாப்வே சாதனைகள், மைல் கற்களையும் தனதாக்கிவிட்டே செல்கிறார்.

சிம்பாப்வேக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் 
ஒரு உலகக்கிண்ணத் தொடரில் சிம்பாப்வே சார்பாகப் பெறப்பட்ட கூடுதல் ஓட்ட எண்ணிக்கை.
அதிக உலகக்கிண்ண சிக்சர்கள்.

டெய்லருக்குப் பின் சிம்பாப்வேயின் எதிர்காலம் மீண்டும் திணறப்போகிறது.

பங்களாதேஷின் மஹ்முதுல்லா தனது அணிக்கான உலகக்கிண்ண சதத்தைப் பெற்றதோடு, அதை அடுத்தடுத்து மாற்றிப் பெருமை தேடியதோடு, காலிறுதிக்கும் அழைத்துப் போயிருக்கிறார்.

பாகிஸ்தானின் தலைவர் மிஸ்பா உல் ஹக் மற்றும் சிம்பாப்வேயின் ஷோன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 4 அரைச்சதங்களோடு 50 அடித்தோர் பட்டியலில் முன்னணி வகிக்கிறார்கள்.

ஓட்டக்குவிப்பில் உலகக்கிண்ண சாதனையை நெருங்கக்கூடியவராகத் தெரியும் குமார் சங்கக்கார ஐந்நூறை நெருங்கியுள்ளார்.
இலங்கையும் தென் ஆபிரிக்காவும் சந்திக்கவுள்ள காலிறுதியில் சங்காவை சந்திக்கவுள்ள டீ வில்லியர்சுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும்.



அதிக ஆறு ஓட்டங்கள்


அதிக நான்கு ஓட்டங்கள்


பந்துவீச்சாளர் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் இடது கை வேகப்புயல் மிட்செல் ஸ்டார்க் 16 விக்கெட்டுக்களோடு முன்னிலை பெற்றுள்ளார்.

இவரது அச்சுறுத்தும் பந்துவீச்சு மிகச் சிறந்த சராசரியை மட்டுமன்றி, மிகச் சிக்கனமான ஓட்டவேகத்தையும் வழங்கியிருக்கிறது.
இதுவரை இந்தத் தொடரின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்ற பெருமைக்காக ஸ்டார்க்குடன் போட்டிபோடக்கூடிய இன்னொருவரான நியூ சீலாந்தின் டிரென்ட் போல்ட் 15 விக்கெட்டுக்கள்.
இருவருமே இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள்.

அதேயளவான 15 விக்கெட்டுக்களை இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி பெற்றுள்ளார்.
இந்த வரிசையில் சேர்ந்துள்ள இன்னொருவர் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஸ்கொட்லாந்தின் ஜோஷ் டேவி.

டெஸ்ட் அந்தஸ்தில்லாத அணிகளுக்கு அடுத்த உலகக்கிண்ண வாய்ப்பு மறுக்கப்படுவது பற்றி வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், பந்துவீச்சில் டேவியும் துடுப்பாட்டத்தில் ஷைமன் அன்வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு தங்கள் செய்தியை அழுத்தமாகப் பதித்துள்ளார்கள்.

துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக, ஓட்டங்கள் மழைபோல குவியும் இந்த உலகக்கிண்ணத் தொடரில் பாவம் பந்துவீச்சாளர்களால் 5 ஐந்து விக்கெட் பெறுதிகளையே எடுக்க முடிந்திருக்கிறது.

ஓட்ட வேகத்தை மிக சிக்கனமாகக் கட்டுப்படுத்திப் பந்துவீசிய நியூ சீலாந்தின் டானியல் வெட்டோரி தான் சுழல்பந்து வீச்சாளர்களில் முன்னணியில் இருக்கிறார்.

இந்தியாவின் அஷ்வினும், தென் ஆபிரிக்காவின் தாஹிரும் அடுத்தவர்களாக சொல்லப்படக்கூடியவர்கள்.


அணிகளாக இந்திய, நியூ சீலாந்து பந்துவீச்சுக்கள் பலமாகத் தெரிகின்றன.
அதிலும் இந்திய அணி மட்டுமே தான் விளையாடிய 6 போட்டிகளிலுமே எதிரணிகளின் அத்தனை விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளது.
பலவீனமாக கருதப்பட்ட இந்திய அணியின் பந்துவீச்சின் எழுச்சி ஆச்சரியகரமானது.
தென் ஆபிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் ஒரிருவரிலேயே தங்கி நிற்கின்றன.
ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக மட்டுமே இன்னமும் சதம் பெறப்படவில்லை.

வயதேறியவராகத் தளர்ந்து தெரியும் லசித் மாலிங்கவே காயங்கள், உபாதைகளால் அல்லாடும் இலங்கை அணியின் பந்துவீச்சைத் தாங்கி நிற்கிறார்.
துடுப்பாட்டத்தின் பலத்தினால் காலிறுதிக்குள் நுழைந்துள்ள இலங்கை அணிக்கு இனி பந்துவீச்சும் கைகொடுத்தால் தான் அடுத்த படிகள் ஏறமுடியும்.

பலமான 8 அணிகளின் மோதலும், தோற்றாலே தொடரின் அடுத்த போட்டி இல்லை என்னும் knockout சுற்றுக்களின் ஆரம்பம், ஒவ்வொரு அணியுமே சிறு பலவீனமும் இல்லாமல், முதற்சுற்றில் விட்ட கவனயீனமான குறைகளையும் களைந்துகொண்டு விளையாடினாலே 3 போட்டிகளிலும் வென்று கிண்ணத்தைக் கைப்பற்றலாம்.

இந்த எட்டில், இந்தியா, நியூசீலாந்து ஆகிய இரு அணிகள் மட்டுமே எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாதவை.
மிக எதிர்பார்த்து கொஞ்சம் ஏமாற்றிய அணியாகத் தென் ஆபிரிக்கா.
கொஞ்சம் தாமதமாக பலமேறிய அணிகளாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை.
ஆச்சரியப்படுத்தக்கூடிய அணிகளாக மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ்.
இதுவரை ஒரேயொரு சறுக்கலை நியூ சீலாந்துக்கு எதிராக சந்தித்தாலும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றும் உத்வேகத்தோடு காணப்படும் அவுஸ்திரேலியா.

வெளியேறிய அணிகள் பற்றி சிலாகித்தும், அலசி ஆராய்ந்தும் தனியொரு பதிவே போடவேண்டும்.


அயர்லாந்து அணி உண்மையில் ஒரு துரதிர்ஷ்டசாலி அணி.
தெரிவாகியுள்ள 8 அணிகளுக்கும் சவால் கொடுக்கக்கூடிய அணி.
தான் விளையாடிய ஒவ்வொரு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் ஒவ்வொரு டெஸ்ட் விளையாடும் அணியைக் கவிழ்த்துப் போட்டது.
2007இல் பாகிஸ்தான்
2011இல் இங்கிலாந்து
இம்முறை மேற்கிந்தியத் தீவுகள்.
இன்னும் பந்துவீச்சைக் கொஞ்சம் பலமேற்றினால் இன்னும் சவால் விடக்கூடிய அணி.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இனியாவது டெஸ்ட் அந்தஸ்து வழங்குவது பற்றி அக்கறை செலுத்தியே ஆகவேண்டும்.

காலிறுதி போட்டிகள் 

இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா 




சிட்னியில் இடம்பெறும் முதலாவது காலிறுதி, நாணய சுழற்சியிலும் ஓட்டங்கள் குவிக்கப்படுவதிலும் அதிகமாகத் தங்கியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

இன்று வெளியாகியுள்ள சிட்னி ஆடுகளத்தின் புகைப்படத்தை அவதானிக்கும்போது 280 - 300 வரையான ஓட்டங்கள் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கான சாதகத்தன்மை குறைவாகவும் (மேக மூட்டமாக இருந்தாலும், மழை பெய்தாலும் இது மாறலாம்) சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகத் தன்மை கொண்டதாகவும் தெரிகிறது.


இலங்கை அணிக்கு பழக்கமான சொந்த மண் ஆடுகளத்தன்மை இலங்கைக்கு சாதகத்தை வழங்கினாலும், எந்த ஆடுகளங்களிலும் அடித்து நொறுக்கும் தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வரிசை பயமுறுத்தக்கூடியது .
மிகச் சிறப்பான ஓட்டக்குவிப்பில் காணப்படும் சங்கக்கார, டில்ஷான் எதிர் தென் ஆபிரிக்காவின் ஓட்டக்குவிப்பு இயந்திரங்கள் டீ வில்லியர்ஸ் மற்றும் அம்லா ஆகியோருக்கிடையிலான ஓட்டக்குவிப்பு மோதலாக நோக்கப்படும் இந்தப் போட்டியில், இரண்டு அணிகளதும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பும் அவசியப்படும்.

இதுவரை நடந்த போட்டிகளில் இலங்கையின் பந்துவீச்சை விட தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சின் பலம் அதிகமாகவே தெரிகிறது.
காயமுற்றுள்ள ரங்கன ஹேரத் சிட்னி போட்டிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதன் மூலம் இலங்கை அணியின் பலவீனப்பட்டுப் போயுள்ள பந்துவீச்சு நிதானப்படும் எனத் தெரிகிறது. நேற்றும் இன்றும் பயிற்சிகளில் ஹேரத் பந்துவீசி இருக்கிறார்.
அத்துடன் தேவைப்படும்போது முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தும் அணித் தலைவர் மத்தியூஸ் தனது காலில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து பூரண குணமடைந்து தன்னுடைய ஓவர்களை வீசுவது இலங்கைக்கு முக்கியமானது.

குலசேகர கடந்தபோட்டியில் மீண்டும் பந்துவீச்சில் கலக்கியிருப்பது தென் ஆபிரிக்க அணிக்கு எதிராகவும் தொடர்ந்தால் இலங்கைக்கு மேலதிகமாக லக்மால் அல்லது சமீர துஷ்மந்த சேரும்போது இலங்கையின் பந்துவீச்சு திடப்படும்.

அண்மைக்காலத்தில் காயத்தினால் சிதைந்து போயுள்ள இலங்கை அணி, களத்தடுப்பிலும் சோர்ந்து போயுள்ளது.
களத்தடுப்பைப் பொறுத்தவரை தென் ஆபிரிக்கா உச்சமட்டத்திலே இருக்கிறது.

இரண்டு அணிகளுக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் குழப்பம் இருக்கிறது.
திரிமன்னேயா அல்லது அடித்தாடும் குசல் ஜனித் பெரேராவா என்ற குழப்பம் இலங்கைக்கு 
தொடர்ந்து தடுமாறும் குயின்டன் டீ கொக்கை நீக்குவதா வைத்திருப்பதா என்ற குழப்பம் தென் ஆபிரிக்காவுக்கு.

இப்படியான முக்கிய ஆட்டங்களில் தாங்களாகத் தோற்று அதிர்ச்சி தந்து வெளியேறி chokers என்ற அவப்பெயரை வைத்துள்ள தென் ஆபிரிக்கா அதை அடித்தாடி அசத்தும் ஏபி டீ வில்லியர்சின் தலைமையில் மாற்றவேண்டும் என்று கங்கணத்தோடு களமிறங்குகிறது.

இலங்கையோ தங்கள் கிரிக்கெட் சிகரங்கள் மஹேல, சங்கா ஆகியோருக்கு விடைகொடுக்க உலகக்கிண்ணம் ஒன்றை மீண்டும் எதிர்பார்க்கிறது.

சங்காவை தென் ஆபிரிக்கா எவ்வாறு இலக்கு வைக்குமோ, அதே போல கணப்பொழுதில் தனது 360பாகை கோணத்தில் அடித்தாடும் ஆற்றல் மூலம் போட்டிகளைத் தனது வசப்படுத்தும் டீ வில்லியர்சை இலங்கை அவர் நிலைக்க முதல் வீழ்த்தவேண்டி இருக்கும்.

மனவுறுதி, உலகக்கிண்ண அனுபவம், ஆடுகள அனுகூலம் என்பவற்றில் இலங்கை அதிக வாய்ப்புக்களைக் கொண்டிருந்தாலும், தென் ஆபிரிக்கா குறைத்து மதிப்பிட முடியாத பலமான அணி.
எனினும் உலகக்கிண்ணத்தின் Knockout ஆட்டங்கள் தென் ஆபிரிக்காவுக்கான மரணப் பொறிகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன.
1992 அரையிறுதி
1996 காலிறுதி
1999 அரையிறுதி
2003 இலங்கையுடன் சமநிலை முடிவை அடுத்து முதல் சுற்றோடு வெளியேற்றம்
2007 அரையிறுதி
2011 காலிறுதி

இதுவரை இலங்கை அணியும் தென் ஆபிரிக்காவும் சந்தித்துள்ள 4 உலகக்கிண்ணப் போட்டிகளில் 1992இல் இலங்கை வென்றிருந்தது.
இறுதியாக 2007இல் லசித் மாலிங்க 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை எடுத்தும், ஒரேயொரு விக்கெட்டினால் தென் ஆபிரிக்கா வென்ற விறுவிறுப்பான போட்டி.

அந்தப் போட்டியில் விளையாடிய இலங்கை அணியின் நால்வர் நாளையும் விளையாடவுள்ளார்கள். மஹேல, சங்கா, அரைச்சதம் பெற்ற டில்ஷான் & மாலிங்க.

தென் ஆபிரிக்காவுக்காக அந்தப் போட்டியில் பூஜ்ஜியத்தோடு ஆட்டமிழந்த ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே தென் ஆபிரிக்காவில் எஞ்சியிருக்கிறார்.

எனினும் இப்போது எல்லோரையும் விட - இலங்கையின் பிரதமரே எச்சரிக்கையாக இருக்குமாறு சொல்லும் அளவுக்கு - ஏபியின் மீது அனைவரது கவனமும், பயமும் இருக்கிறது.

இதேவேளையில், 
சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் 'ஸ்டம்ப்' முறையில் 100 ஆட்டமிழப்புகளை மேற்கொண்ட முதல் விக்கெட்காப்பாளராக தன்னை பதிவு செய்துகொள்வதற்கு இலங்கை அணியின் குமார் சங்கக்காரவுக்கு இன்னும் ஒரேயொரு ஆட்டமிழப்பு தேவையாகவுள்ளது.

இதுவரை 403 போட்டிகளில், 352 இன்னிங்ஸ்களில் விக்கெட் காப்பாளராக விளையாடியுள்ள சங்கக்கார 482 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டுள்ளார்.

இதில் 383 பிடியெடுப்புகளும்,  99 'ஸ்டம்ப்களும்' அடங்குகின்றது. இதன்படி ஒருநாள் வரலாற்றில் 100 விக்கெட்டுக்களை 'ஸ்டம்ப்' முறையில் வீழ்த்திய முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற அவருக்கு தேவை ஒரு விக்கெட் மாத்திரமே.

ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் இவ் இலக்கை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://gossip.sooriyanfm.lk/569/2015/03/icc-cricket-world-cup-2015




இரு அணிகளும் நாளை - புதன்கிழமை வெளிப்படுத்தும் ஆட்டத்திறன் மற்றும் ஆற்றலிலே தான் அரையிறுதிக்கான வாய்ப்பு உள்ளது.

--------------------

இன்று வரும் அடுத்த பகுதியிலே ஏனைய மூன்று காலிறுதிகளையும் ஆறு அணிகளையும் பற்றி பார்க்கலாம்.

இன்றைய நாள் - மார்ச் 17 இன்னொரு முக்கியமான சிறப்பான நாளும் கூட.... இலங்கை  கிரிக்கெட் ரசிகர்களுக்கு.
இலங்கை அணி 1996ஆம் ஆண்டு நாம் அனைவரும் பெருமைப்படும் முதலாவது (இப்போதைக்கு ஒன்றேயொன்று) உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றிய நாள்.

உலகை வென்ற இலங்கை !!! - 1996 உலகக்கிண்ணத்தின் பெருமை பொங்கும் நினைவுகள். #cwc15



இதிலே சுவாரஸ்யமான விடயம், 1996இல் இலங்கை உலகக்கிண்ணத்தை வென்றபோது இலங்கை அணியில் விளையாடியிருந்த மூன்று முக்கியமானவர்கள் இலங்கை அணியில் முக்கியஸ்தர்களாக விளங்குகிறார்கள்.

தலைமைத் தேர்வாளர் சனத் ஜெயசூரிய , பயிற்றுவிப்பாளர் மார்வன் அத்தப்பத்து, வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ்.
இவர்களோடு ஏனைய இரு தேர்வாளர்கள் பிரமோதய விக்கிரமசிங்க மற்றும் ஹஷான் திலகரத்ன ஆகியோரும் கூட.
இவர்களுக்கு இன்னொரு உலகக்கிண்ணத்தை சுவைக்கும் வாய்ப்பை மத்தியூசின் அணி வழங்குமா பார்க்கலாம்.


தரவுகள் & படங்கள் : icc-cricket.com
                                           cricket.com.au

1 comment:

manojhkumar said...

ippothaikku alla loshan eppothume ithu onnuthaan

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner