இந்தியா ...

ARV Loshan
16

முதலில் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள் என் அன்புக்குரிய அத்தனை இந்திய நண்பர்களுக்கும்..

சுதந்திரம் என்ற சொல் எனக்கு எப்போதும் இரு நாடுகளை ஞாபகப்படுத்தும்..

ஒன்று இந்தியா.... பாரதியின் கவிதைகள், காந்தியின் அகிம்சை, பகத் சிங்கின் வீரம், தியாகிகளின் போராட்டங்கள்....

அடுத்தது அமெரிக்கா .. அந்த வலிமையான போராட்டமும், சிதறிக்கிடந்த குடியரசு மாநிலங்களை ஒன்றாக இணைத்ததும், அமெரிக்காவின் சுந்தந்திரப் போராட்டப் பிரகடனமும்..அதன் பின் தம்மை ஆண்ட பிரித்தானியரையே தம் பின்னால் வரச் செய்த வளர்ச்சியும்..

எமக்குத் தான் 'சுதந்திரம்' என்ற சொல்லின் மகத்துவம், அது தரும் உணர்ச்சி இன்னும் முழுமையாகக் கிட்டவில்லையே...

-----------------

இந்தியா இலங்கைக்குத் தந்த தாக்கங்கள்; தந்துகொண்டே இருக்கும் தாக்கங்கள் பற்றி அடுக்கப் போனால் மொழி, அரசியல், கலை, உணவிலிருந்து இன்றைய எம் வலைப்பதிவு வரை வந்து வாழ்க்கை முழுக்க நிறைக்கும்..

இன்றைய விடியலில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு "இந்தியா என்றவுடன் உங்கள் மனதிலே உடனே ஞாபகம் வருவது என்ன?" என்று நேயர்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன்....

அப்பப்பா எத்தனை விதமான கருத்துக்கள்..
இந்தியா - ஒரு வித்தியாசமான கலவை

அதிகமாக சொல்லப் பட்டவையும் வித்தியாசமானவையாகக் குறிப்பிடப்பட்டவையும்..

அதிகமாக சொல்லப் பட்டவை முதலில்..

மகாத்மா காந்தி (அதிகப்படியானோரின் தெரிவு)
கலைகள்
சினிமா
கோவில்கள், தலங்கள்
அப்துல் கலாம் (அட பாருங்களேன் சச்சினைக் கூட வென்றிட்டார்)
சச்சின் டெண்டுல்கர்
சேலை, வேட்டி
ரஹ்மான்
தாஜ்மஹால்
இளையராஜா
கமல்ஹாசன்
MGR
பெண்களின் ஆடைகள்
விஜய்
அரசியல் நாடகங்கள் (முள்ளிவாய்க்கால் துரோகம் முக்கியமாக சொல்லப்பட்டது)
கலைஞர் கருணாநிதி (அவரது சூழ்ச்சி, கபடங்கள் எல்லாமே கிழிக்கப்பட்டன)
ஜெயலலிதா
கிரிக்கெட்
உலகக்கிண்ணம்
இந்தியத் தேசிய கீதம்
தேசிய ஒற்றுமை
IPKF  (இந்திய அமைதி காக்கும் படையின் இலங்கை வருகை)
பாரதி
வைரமுத்து
திலீபனின் உண்ணாவிரதம்
IPL
அரசியல்வாதிகள்
2G Spectrum ஊழல்

ஒரு நேயரின் வாசகம் - நம்மினத்தை நிர்க்கதிக்குள் தள்ளிய மூல சூத்திரதாரி...

எனக்கும் தலைப்புப் பற்றி நேயர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது மனதில் எனக்கும் இந்தியா பற்றி எவ்வளவோ விஷயங்கள் வந்து போனது..

சிறுவயதில் இந்தியா என்பது எனக்கு அறிமுகமானது தமிழக அரசியல் மூலமாக.. அப்பா தீவிர MGR ரசிகர்.. MGR இறக்கும் வரை தீவிர அதிமுக அனுதாபி. அதன் பின் கலைஞரின் தமிழுக்காக தி.மு.க தவறு செய்தாலும் மெளனமாக ரசித்தவர்.
அப்போது ஐந்து வயது கூட ஆகியிருக்கவில்லை ஆனால் அப்பா வீட்டில் அரசியல் பேசும்போது மனதில் திமுக - அதிமுக, MGR - கலைஞர் என்பன தான் இந்தியாவின் அமசங்கலாக மனதில் பதிந்து போனவை.

சினிமா ஏனோ இந்தியாவாக மனதுக்குள் நிற்கவில்லை. (அப்போதே அப்படி ஊறிவிட்டது போலும்)
அதன் பின்னர் கிரிக்கெட்.. அப்போது ஸ்ரீக்காந்த், கவாஸ்கர், கபில்தேவ் என்பவர்கள் இந்தியாவின் பிம்பமாக மாறிப்போனார்கள்.
இந்திய அணியின் ரசிகனான எனக்கு ஸ்ரீக்காந்த், அசாருதீன், வெங்க்சர்க்கார் ஆகியோர் என் ஹீரோக்கள்.
87ஆம் ஆண்டு வரை நீடித்த இந்த உறவு அந்த ஆண்டில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (!?) நுழைந்தபின் முழுக்க மாறிப்போனது.

இடையில் எனது வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொண்ட காலத்தில் முதலில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம் பின்னர் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி என்று இந்தியப் பேச்சுவழக்கு இந்தியா என்றவுடன் என் மனதில் நிறையும் பல எண்ணங்களாகிப் போயின.

அதன் வழியாக மனதில் பதிந்து போன இந்தியர்கள் மனதுக்கும் நெருக்கமாகிப் போனார்கள்..
மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா, இந்திரா காந்தி, ஏன் எழுத்தாளர்கள்.. இப்படிப் பலர்..
நான் வாசித்த மகாபாரதமும், ராமாயணமும் இந்தியாவைப் பற்றிய பெருமையான எண்ணங்களை மனதில் விதைத்தது.
இன்றுவரை இந்தியாவுக்கு எப்போது பயணித்தாலும் சிறுவயதில் மகாபாரதத்தில் வந்த இடங்கள் எங்கேயாவது இருக்கா என்று தேடும் சுவாரஷ்யம் நீடிக்கிறது.
சிறுவயதில் மனதில் நிறைந்த வாசிப்பு மூலமாக இன்றும் கூட இந்திய அரசியலின் சுவாரஷ்யங்கள் மனதில் இலங்கை அரசியலை விடப் பிடித்துள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசியலும் கூட (விரல் நுனியில் இல்லாவிட்டாலும்) கொஞ்சம் அதிகமாகவே தெரிந்துவைத்திருக்கிறேன்.

இந்திய அரசியலை விரும்பும் அளவுக்கு இந்திய அரசியல்வாதிகளை வெறுக்க அநேகமான இலங்கையர் போலவே எனக்கும் காரணமாக அமைந்த பின்னணி அவர்கள் மற்றும் இந்திரா காந்தி அம்மையாரின் மரணத்துடன் ஆரம்பமானது.
 இந்தியப் படைகளின் வருகையும் அவர்களது அட்டூழியங்களும் மனதில் வெறுப்பை மண்டவைத்த விடயங்களாகின.

இந்திய விமானங்கள் யாழ் வானில் பறந்து உணவுப் பொட்டலங்கள் போட்டபோது பூரிப்புடன் இந்தியாவைப் போற்றிய அப்போதைய என் சிறுவயது மனதில்,
சுதுமலையில் தலைவர் பிரபாகரனின் உரை முடிய அவர் அப்படியே விமானத்தில் (Helicopter) ஏற்றப்பட்டது, பின் ஆயுதக் களைவு, திலீபனின் உண்ணாவிரதம் என்று இந்தியா என்றாலே வெறுப்பாக மாறியது இன்றும் அப்படியே திரைப்படம் போல ஓடுகிறது.

87  வரை எங்கள் இணுவில் வீட்டை விட்டு எப்போதுமே இடம்பெயராத நாம், இந்தியப் படைகளின் செல்லடியில் வீட்டையும் ஆசையாக வளர்த்த ப்ரவ்ணி (Browney) என்ற நாயையும் விட்டுவிட்டு தோட்டக் காணிகளால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடித்தப்பி, இணுவில் கந்தசுவாமி கோவிலில் தஞ்சம் புகுந்ததும் தொண்ணூறு நாட்கள் இருந்த காலமும் மனதில் மறக்காதது.
அந்தத் தொண்ணூறு நாள் வாழ்க்கையே அப்படியென்றால் வருடக்கணக்காக அகதி வாழ்வு வாசிக்கும் பலர் பற்றி எண்ணுகையில்... சபிக்கப்பட்ட சமூகம் நாம்..

இந்திய ராணுவம் எங்கள் ஊரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், வெள்ளைக் கொடியுடன் அப்பாவும் ஊரவரும் வீடு பார்க்க சென்றிருந்தார்கள்..
அப்பா வந்து சொன்ன கோரக் காட்சிகள்..
அம்மாவுக்கு தான் சொன்னாலும் காதில் விழுந்த அந்தக் கோரக் காட்சிகள்.. கொடுமை.. இன்னும் மறக்காதவை..
இதற்குள் ஒரு தமிழ் சிப்பாய் சொன்னானாம் "யோவ் மானேஜர் (எங்கள் அப்பா அப்போது வங்கி உத்தியோகத்தர்) ஏன்யா பயப்படுறே.. உன் குழந்தை, குட்டியோடு வந்து குந்துய்யா"
அவன் கேட்ட இன்னொரு கேள்வியை அப்பா இப்போதும் அடிக்கடி சொல்வார் "உங்களுக்குத் தான் கிணறு இருக்கு, சொந்த வீடுகள் பெரிய காணிகளோட இருக்கு.. கோவில் குளம், வீடு வரப்பு, வசதியான வாழ்க்கை என்று நல்லாத் தானே இருக்கீங்க? அப்பிடி இருக்கும்போது ஏன்யா தனிநாடு? தமிழ்நாடு மாதிரியே சேர்ந்து இருங்களேன்"

எம் சிக்கலின் அடிநாதம் தெரியாமலேயே அனுப்பப்பட்ட அடிமைகளில் ஒருவன் அவன்..
தமிழனே அப்படி இருக்கையில் தனித்து வெறியோடு வந்த மற்ற மாநிலத்தவர்களிடம் மனிதத்தை எதிர்பார்த்திருக்க முடியுமா?
அவர்கள் தங்கள் கேளிக்கைப் பொருட்களை வெறியோடு எடுக்க வந்தோர் தானே?

இந்தியப் படைகளின் வெறிச் செயல்களில் என் உறவுகள் யாரும் அகப்படாவிட்டாலும் கூட, தெரிந்த நண்பர்களின் சகோதரியர், அறிந்த சிலர் பாதிக்கப்பட்டபோது மனம் முழுவதும் வெறுப்போடு இந்தியா என்றாலே (தமிழ் தவிர்த்து) ஒரு வெறுப்புக்குரிய விடயமாக மாறிப்போனது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு வெறித்தனமான திருப்தி இருந்தது உண்மை. இப்போது மனம் கொஞ்சம் பக்குவப்பட்ட நிலையில் அதற்காக வெட்கப்பட்டாலும் போர்க்களத்தில் நிகழ்ந்த தர்மப் பழிவாங்கலாக நினைத்து ஆறுதல்படுத்திக்கொள்கிறேன்.
எனினும் இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வருவதும், இந்தியாவில் இருக்கும் நண்பர்களும் எப்போதும் இந்தியாவின் பசுமையான நினைவுகளைத் தருபவை..
கடல் கடந்து உயிரிக் காப்பாற்றிக்கொல்லச் செல்லும் எங்கள் உறவுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்னை பூமியாக இந்தியாவை எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்பவன் நான்.

எனது பதிவுகளில் அடிக்கடி சொல்வது போல இந்திய அரசியல்வாதிகளின் மீது இருக்கும் வெறுப்பு ஒரு பக்கம் கிடக்க, அப்பாவிகளான, எம் மீது இரக்கமும் மாறா அன்பும் வைத்திருக்கும் அந்த அன்பு தமிழக உறவுகளை நம் எப்போதும் நன்றியோடு நேசிக்கவேண்டும்..
இங்கே என்ன நடக்கிறது என்டர தெளிவே இல்லாமல், வெயிலிலும் மழையிலும் காய்ந்தும் நனைந்தும் போராட்டம் நடத்தி, குரல் எழுப்பி, ஏன் தீயிலும் குளித்த அவர்கள் எப்போதும் எங்கள் நினைவுகளில் வைக்கக் கூடியவர்களே..

முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்திலும், யுத்தத்தின் இறுதி நாட்களிலும் இந்தியா எமக்கு உதவவில்லை என்றும், இலங்கை இராணுவத்துக்கு உதவியது என்றும் 'இந்தியா - துரோகி' என்றும் குரல் எழுப்பி இந்தியாவை சபிக்கும் எம்மிற் பலர்  ஒன்றை மறந்துவிடுகிறோம்....
தொப்புள் கொடி உறவாக இருந்தாலும் எம் பிரச்சினையை நாம் அல்லவா தீர்க்க வேண்டும்?
மற்றவர் யாராயினும் தேவையில்லாத தலைவலியை எடுத்துக் கொள்வார்கள் என நினைப்பது தப்பல்லவோ?

தங்கள் அரசியல் நலனுக்காக இலங்கைக்காக இந்திய அரசு உதவியதையும் உணர்ச்சியை ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தோமானால் நியாயம் என்றே தோன்றும்....

ஆனால் மனதோரம் வரும் சிறு வழியும், அதனால் பொங்கும் வெறுப்பும் ஏதோ சில தருணங்களில் எப்படியாவது வெளிப்பட்டு விடுகிறது.
அது நண்பர்களின் உறவுகளில் விரிசல் வராமல் பார்த்துக்கொள்கிறேன்..
இன்று எனது தொழிலும் கூட இந்தியாவை மையமாகத் தான் கொண்டு  ஏதோ ஒருவிதத்தில் ஓடுகிறது..
பாடல்கள், சினிமா... ஏன் கிரிக்கெட்டும் கூட..
தமிழர் எம் கலைகள், கலாசாரம்,பொழுதுபோக்குகளின் ரசனைகளின் மையமே இந்தியா தானே?

ஆனாலும் எங்கள் தனித்துவத்தையும் காத்து நிற்பது காலத்தின் கடமையாக எமக்கு அமையும் என்பதை நாம் நினைவில் கொள்வது எங்கள் எதிர்கால இருப்புக்கும், என்றோ ஒருநாள் எம் சந்ததி,பரம்பரை தனியாக இலங்கைத் தமிழர் என்றொரு இனம் 'வாழ்ந்தது' என்று அறிவதற்கும் முக்கியமானது.

இந்தியாவுடனான எம் உறவுகள் எப்படியும் பல்வேறு வடிவில் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் தொடரும்.. வசப்படுத்தும்.. மகிழ்விக்கும்.. ஆட்கொள்ளும்.. ஆக்கிரமிக்கும்..

காரணம் 'தமிழ்' என்ற ஒரே இரத்தம் பாக்குநீரிணை கடந்தும் எமக்குள் ஓடுகிறது....


இந்தியா - ஒரு வித்தியாசமான கலவை தான்..


Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*