அவசரகால சட்டம் - நீக்கமும், நோக்கமும்.. இனி? + தூக்குத் தண்டனை தள்ளிவைப்பு

ARV Loshan
11

இலங்கையில் 1977ஆம் ஆண்டுக்குப் பிறந்த எங்கள் தலைமுறையினர் எல்லாருக்குமே சாதாரண சட்டத்துக்கும் அவசரகால சட்டத்துக்கும் (Emergency Regulations) இடையில் வித்தியாசம் தெரிந்திராது. இதுவே இலங்கையின் சட்டங்களின் நிலையாகிப் போனது.

அவசரகால சட்டம் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவே சர்வதேசத்தில் பிறப்பிக்கப்படும் என்று சட்டங்கள் பற்றி நாம் படித்துள்ளோம்..
இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமாக இலங்கை சுதந்திரம் அடையும் போது உருவாக்கப்பட்ட பொதுவான சட்டம் (Public Security Ordinance) 1953இலேயே மக்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராகக் கிளர்ந்த்போது முதலாவது அவசரகால சட்டத்தில் கொஞ்சம் வளைந்துபோனது.

இலங்கையின் அவசரகால சட்டமும் ஏனைய நாடுகளில் உள்ளதைப் போலவே அதே விதமான அடிப்படை விதிகளையே கொண்டிருப்பதாலோ என்னவோ, இலங்கை அரசுக்கெதிரான கிளர்ச்சிகள் 1970களில் உக்கிரமடைய ஆரம்பித்த நேரத்தில் புதிய மேலும் இறுக்கமான சட்டம் ஒன்று தேவைப்பட்டது.
அந்த வேளையில் உருவாக்கப்பட்டது தான் இன்று வரை எத்தனையோ இளைஞர்களை இல்லாமல் செய்தும், காணாமல் ஆக்கியும், கண்ணீர்க்கடலில் பெற்றோரையும் உறவினர்களையும் தள்ளி, மனைவியர் பலரை நிஜமாகவும், பெயரளவிலும் விதவைகளாகவும் வைத்திருக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டம் - The Prevention of Terrorism Act 0f 1979.



அவசரகால சட்டத்தின் சில நலிவான பாகங்களை வலுவூட்டும் விதமாக சட்டத்தின் அத்தனை ஓட்டைகளையும் அடைத்து இறுக்கமாகக் கொண்டுவரப்பட்ட இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டம் உலகின் அரசுகளால் கொண்டுவரப்பட்ட சட்டங்களில் மிக வலிதானதாகக் கருதப்படுகிறது.

அவசரகால சட்டத்தை நாம் அண்ணனாக எடுத்துக்கொண்டால், பயங்கரவாத தடைச் சட்டம் தம்பி என்று சொல்லாம்.
அவசரகால சட்டம் தான் இருக்கிறதே, அது இருக்க அப்புறம் ஏன் தனியாக பயங்கரவாத தடைச் சட்டம்???

அவசரகால சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் வாக்களிப்பில் விடப்படவேண்டும்.. ஆனால் PTA அரசினால் ஜனாதிபதியின் உத்தரவோடு நீட்டிக்கப்படலாம்.

மற்றும்படி பெயர்கள் தான் வேறுபட்டனவே தவிர விஷயம் ஒன்றாகவே இருந்துவருகிறது.

ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ரோகன விஜேவீர தலைமையில் மக்கள் விடுதலை முன்னனி (JVP) முதலில் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தபோது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கே பயன்படுத்தியது அவசரகால சட்டத்தைத் தான்.
தமிழ் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் J.R.ஜெயவர்த்தன மூர்க்கத்தனமாக அதை அடக்கக் கையில் எடுத்த ஆயுதம் தான் பயங்கரவாதத் தடைச் சட்டம்.

இதன் மூலம் நிறைவேற்றதிகாரம் கையில் இருந்தததால் ஜனாதிபதியே நேரடியாக நாடாளுமன்ற அனுமதியில்லாமல் பயங்கரவாதத்தை மட்டுமன்றி, அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் எந்தவொரு சக்தியையும் நசுக்கும் வகையில் இந்த சட்டத்தின் சில பிரிவுகள் இன்றுவரை உதவுகின்றன.

கூட்டம் கூட்டும் உரிமை. கைது செய்து, தடுத்து வைத்து, விசாரணை செய்யும் உரிமை, ஏதுவான காரணம் இன்றி எவராலும் எங்கே வைத்து விசாரிக்கக் கூடிய உரிமை, காரணம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்புப் படையினரால் தேடல் நடத்தக்கூடிய வசதி, நீதிம்ன்டற உத்தரவு எந்தவொரு நடவடிக்கைக்கும் தேவைப்படாத வசதி என்று இந்த இரு சட்டங்களுக்கும் பொதுவான பல விடயங்கள் உள்ளன.

எனினும் இலங்கையின் நீதிமண்டரங்களிலும் ஒரு வழக்கு அவசரகால சட்டத்தினூடாக செல்வதை விட பயங்கரவாதத் தடை சட்டத்தினூடாக  செல்லும்போது அதன் வலிமையும் சந்தேகனபருக்குக் கிடைக்கும் தனடனையும் அதிகமானதாக உள்ளது.
(அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான்)
இதனால் தான் அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீக்கி விட்டதாகப் பெரியளவில் பிரசாரம் செய்தும் கூட அது முதல் நாளில் தந்த பெரிய ஒரு போலியான மகிழ்ச்சியும் பிரம்மாண்ட தன்மையும் அடுத்த நாளே புஸ் ஆகிப் போயின..
வெளிநாடுகளில் கூட அரசின் இந்த விளம்பரம் பயன்படவில்லை.

அவசரகால சட்டம் போனாலும் அதன் தம்பி பயங்கரவாதத் தடுப்பு சட்டம் இருப்பதால் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என்பது சட்டம் தெளிந்த அறிஞர்கள் அனைவருமே ஏற்றுக்கொண்ட ஒரு விடயம்.
அதிலும் அவசரகால சட்டத்தில் இல்லாத மேலதிக இறுக்கங்கள் வேறு அதிலே உள்ளன.

உதாரணமாக சாதாரண சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது அவர் மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும்; அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும்.
அவசரகால சட்டத்தின் கீழ் அவர் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படலாம்.நீதிமன்றத்தில் ஒரு வாரத்துக்குள் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் கூட அந்த நபர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கான ஒரு சான்றே அன்றி வேறேதும் இல்லை.
அவசர கால சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் மட்டும் ஒருவர் 18 மாதகாலம் வரை தடுத்துவைக்கப்படலாம்..

அது நீதிமன்ற உத்தரவு இல்லாமலேயே மேலும் நீட்டிக்கப்படலாம்..
இப்போது அது தான் இல்லையே என்று ஆறுதல்படுவோருக்கு -----
பயங்கரவாதத் தடை சட்டத்தில் பாதுகாப்பு செயலாளர்  (1997ஆம் ஆண்டு முதல் சேர்க்கப்பட்ட புதிய விதி ) / ஜனாதிபதியின் உத்தரவுடன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் தடுத்து வைக்கப்படலாம்..

எனவே தடுப்புக் காவல், கைது, விசாரணை போன்றவற்றில் இனியும் கூட மாற்றங்கள் இருக்காது..
அவையெல்லாம் அப்படியே இருக்கும்.. ஆனால் நடவடிக்கை பாயும் சட்ட விதி மாறுபடும்..

பாதுகாப்பு, கைது சட்ட நடவடிக்கைகள் பற்றி ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கள் இவ்வளவு நாளும் அவசரகால விதிகளின் கீழும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும் மட்டறுக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு வந்தன(இது S.J.சூர்யாவின் இருக்கு - ஆனால் இல்லை காமெடி போல தான்)
இனிய அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக வாய் திறந்தாலும் படை நடவடிக்கை, கைதுகள் சம்பந்தமாக அதே பழைய குருடி கதவைத் திறடி கதை தான்.

அரசியல் கைதுகள் மட்டுமே இனி வரும் காலத்தில் வழக்குகள் மூலமாக வெல்லப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இதனால் தான் பல்வேறு அமைச்சர்களும் அவசரகால விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 'சாதாரண' சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்று சொல்லியுள்ளார்களே தவிர, விடுவிக்கப்படுவார்கள் என்றோ, அவர்கள் 'அரசியல் கைதிகள்' என்றோ சொல்லவில்லை.

இனியும் நாடாளுமன்ற அங்கீகாரம் ஜனாதிபதிக்கோ, பாதுகாப்பு செயலாளருக்கோ தேவைப்படாது.. (அது இவ்வளவு நாளும் மட்டும் தேவைப்பட்ட மாதிரி)
விரும்பியபடி PTA மூலமாக நடவடிக்கைகளை எடுக்க முடியும்.



ஆனாலும் அரசியல் வட்டார முணுமுணுப்பு ஒன்று உள்ளது.
அது அவசரகால சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி எவ்வாறு அறிவிக்கலாம் என்பது தான்.
அடுத்த மாதம் ஏழாம் திகதியே இப்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்டம் காலாவதியாகிறது. அதுவும் நாடாளுமன்ற நடைமுறைகளின்படி சபாநாயகரே அதை அறிவித்து நீக்க வேண்டும். அப்படியிருக்க நாடாளுமன்ற சிறப்புரிமைகளில் ஜனாதிபதி தலையிட்டது தான் அந்த சிக்கல்.
ஆனாலும் அறிவித்தலைக் கொடுக்க முதல் நாளே ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வந்து சபையை நடத்தியது இதற்கு ஒரு ஒத்திகை தான் என்று சொல்லப்படுகிறது.
பூனைக்கு மணி கட்டும் எலிகள் தான் இல்லையே,,

வெளிநாடுகளின் எச்சரிக்கை, நிர்ப்பந்தம் என்பதெல்லாவற்றையும் இந்த அவசரகால சட்ட நீக்கம் மூலமாக சமாளித்ததாக அரசாங்கம் காட்டி, ஐ.நாவில் வரப்போகிற நடவடிக்கையை முறியடிக்கத் தன் நேச நாடுகளிடம் உதவி கேட்கிறது.

முஷ்டி முறுக்கிக் கொண்டிருந்த இந்தியா தன் தலைப் பேன்களுடன் தடுமாறுகிறது..
அன்னா ஹசாரேயும், மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டமும் இந்தியாவைக் கொஞ்சம் சலனப்படுத்தி இலங்கையின் பிரச்சினையிலிருந்து அப்புறப்படுத்திவிட, நாமோ இன்னும் வாள் போனாலும், இன்னும் வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும் கொடுவாக் கத்தியை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் ஒரு முக்கிய விடயம் - அவசர கால சட்ட நீக்கத்தின் பின் கிரீஸ் மனிதர்களின் அட்டகாசங்கள் கிழக்கு, தென் கிழக்கு, மலையகப் பகுதிகளில் அறவே இல்லை..
ஆனால் வடக்கில் இன்னமும் உள்ளது.
"அவசரகால சட்டம் தான் வேண்டாம் என்றீர்களே.. இப்போ நீக்கிவிட்டோம்.. இனி எப்படி அந்த மர்ம மனிதர்களைக் கைது செய்வது ?" என்று அரசாங்கம் கையை விரித்துவிடும் என்று சிலர் ஆரூடம் கூறுகிறார்கள்.
எங்கள் அப்பாவி மக்களுக்குத் தான் அவசரகால சட்டம் போனாலும் PTA இருக்கு என்று தெரியாதே..


-----------------------------------


இன்று ஆறுதல் தந்த ஒரு விடயம், ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்துக்காக இருபது வருடங்கள் சியரியில் வாடிக்கொண்டிருக்கும் மூவருக்கு நாள் குறித்துக் காத்திருந்த தூக்குத்தண்டனை நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டமை..

ஒத்திவைக்கப்படுமா என்று சந்தேகத்தோடு இருந்த எம் எல்லாருக்கும், எட்டு வாரங்கள் தள்ளிப் போனது கொஞ்சம் ஆறுதல் என்றாலும், இந்த எட்டு வாரத்துள் இன்னும் இருக்கமாகுமோ என்ற சந்தேகம் எழாமலும் இல்லை.

ஒன்று பட்ட மக்கள் எழுச்சியும், அதிலும் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றிய ஒரே குறிக்கோளுடனான போராட்டமும் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி புதியது.
இந்த ஒரு மனிதாபிமான கடமைக்கு ஒன்றாகக் குரல் கொடுத்துக் களத்தில் குதித்த மக்கள் இனியும் தங்களுக்காக தாங்களே வீதியில் இறங்குவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
இது எம் நாட்டிலும் தொற்றிக்கொண்டால் நல்லது என்ற நப்பாசையும் வருகிறது.
எங்கள் நாட்டில் வீதிக்கு இறங்கப் பயம், நம்பிக்கையின்மை மட்டுமன்றி ஒற்றுமையின்மையும் முக்கியமானது.

எதுவரினும் பரவாயில்லை என்று தன்னலமின்றி இறங்கிப் போராடிய அத்தனை தமிழக உறவுகளும் பாராட்டுதற்குரியவர்கள்..
அந்தத் துணிச்சலும் ஒருமித்த குரலும் மரியாதைகளுக்குரியவை.
வணங்குகிறேன்.


ஆனால் தன்னைத் தான் மாய்த்துக்கொண்ட செங்கொடியின் மரணம் கவலைக்கும் அனுதாபத்துக்கும் மட்டுமன்றி, கண்டனத்துக்கும் உரியது.
முத்துக்குமார் அன்று.. இன்று செங்கொடி..
இலங்கையில் நாம் இழந்த உயிர்கள் போதும்.இனியும் இழக்க உயிர்கள் வேண்டாமே..

தமிழக முதலமைச்சர் தூக்குத் தண்டனையை ரத்தாகும் அதிகாரம் இல்லை என்றவுடன், 'கை விரித்தார் ஜெ' என்று ஏமாற்றத்துடன் இருந்த மக்கள், இன்று தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேறிய தீர்மானத்தால் மகிழ்ந்தோம் என்றால் மறுபேச்சில்லை.
அந்த நம்பிக்கை ஒளியூட்டிய தமிழக முதல்வருக்கு நன்றிகள்.

ஆனால் இந்த மூன்று உயிர்களும் காப்பாற்றப்ப்படுமானால் அது உண்மையாக மனிதாபிமானத்தின் வெற்றியாக அமையும் என்று உறுதிபடக் கூறலாம்.
மீண்டும் சட்ட சிக்கல்கள், ஓட்டை ஓடிசல்கள் பேச்சுக்களில் வந்து போகும்..
இந்திய ஜனாதிபதியின் கருணை மன்னிப்பு, தமிழக முதல்வரின் அதிகாரம் என்று வருகின்ற வாரங்கள் இந்திய சட்டப்புத்தகங்களின் சகல பக்கங்களையும் புரட்டிப்போடும்.

ஆனால்ம் சில நாட்கள் கொதித்த மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் எட்டுவார கால இடைவெளிக்குள் அடங்காமல், மறக்காமல் இருக்கட்டும் என்பதே எனது விருப்பம்.


Post a Comment

11Comments

Please Select Embedded Mode To show the Comment System.*