கோ தந்த பிரமிப்பு + திருப்திக்குப் பிறகு வரும் ஜீவாவின் படம் என்பதால் எதிர்பார்ப்போடு காத்திருந்த படம்.
பாரதியின் புதிய ஆத்திசூடியின் "ரௌத்திரம் பழகு" என்பது எப்போதும் என மனதுக்கு மிக நெருக்கமான வாசகம் என்பதும் திரைப்படம் பற்றிக் கொஞ்சமாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
(வேலைப்பளு மிகுந்த கடந்த வாரங்களால் ஒசியாகப் பார்க்கக் கிடைத்தும் பிளையார் தெரு கடைசி வீடு, மார்க்கண்டேயா மிஸ் ஆனதில் ஆறுதல்)
தன்னை சுற்றி சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒருவன் பொங்கியெழும் ரௌத்திரம் தேவையானது என்று போதிக்கிறது கதை.
புதுமுக இயக்குனர் கோகுலின் கதையை நம்பி எடுத்திருக்கும் ஜீவா துணிச்சல்காரர் தான். ஆனால் திரைக்கதையிலும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம்..
முக்கிய நட்சத்திரங்கள் - ஜீவா, ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீநாத், சத்யன், பாபு அன்டனி, சென்ராய்
இதில் பிரகாஷ் ராஜ் ஆரம்பக் காட்சிகளில் பளீர்.. திரைப்படத்துக்கு ஒரு கம்பீரமான அறிமுகத்தைக் கொடுக்கிறார்.
மிகச் சிறிய பாத்திரமாக முடிந்துபோனது கவலை தான்.
பாபு அன்டனி வீணடிக்கப்பட்டதாக உணர்கிறேன்..
சென்ராய் - குருவி தலையில் பனங்காய். படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து எல்லாரும் டெர்ரராக சொல்லும் 'கெளரி' இவர் தான் எனும்போது சப்பென்றாகிவிடுகிறது.. (படம் இதுவரை பார்க்காதோருக்கு வெரி சொறி)
எவ்வளவு தான் கோரத்தைக் காட்ட முனைந்தாலும் காமெடியாகவே இருப்பது படத்தின் weak link.
ஸ்ரீநாத் - கலகலக்க வைக்கிறார். நல்ல நடிப்புத் திறமையுள்ள இவருக்கு, ஈரம் படத்துக்குப் பின் கொஞ்சம் பெரிய பாத்திரம்.
சத்யன் - சில காட்சிகளே ஆனாலும் சிரிக்க வைக்கிறார். அப்பாவித் தனமாக பில்ட் அப் காட்டும் சீன்கள் சிரிப்பு வெடிகள். குறிப்பாக "அட ஏன் நீங்க என் பெயர் சொல்லல?" மற்றும் "ஏன் ஆர்ம்சைத் தொட்டுப் பாருங்க"
ஜெயப் பிரகாஷ் - படத்தில் அதிகமாக என்னைக் கவர்ந்தவர். குணச்சித்திர நடிப்பில் அடுத்த விருதுக்குரியவர் தயாராகிறார்.
ஒவ்வொரு படத்திலும் முத்திரை பதித்து வருகிறார்.
கவுன்சிலர், கல்லூரி ரவுடி, கௌரியின் நேரடி உதவியாளர், ஜீவாவின் தாயார், கிட்டுவாக வரும் ஹிந்தி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா என்று சிறு சிறு பாத்திரங்களும் இயற்கையாகவே பொருந்திப் போகின்றார்கள்.
ஸ்ரேயா - கொஞ்சம் நடிக்க முயன்றிருக்கிறார். வேறெந்தப் படத்திலும் இதுவரை (நான்) பார்த்திராத அளவுக்குக் கவர்ச்சி காட்டுகிறார். அதுவும் ஒரு பாடல் காட்சியில் அப்படியொரு கவர்ச்சி.. தனியே மேல்சட்டையுடன் ஓடுகிறார், தாவுகிறார், தாவுகிறார்...
பாவம் அப்பாவி ஜீவா.
அனேக காட்சிகளில் ஜீவாவின் அக்கா மாதிரியொரு தோற்றம்.. முப்பது பராயம் நெருங்குகிறதோ?
ஜீவா- படிப்படியான முன்னேற்றம் என்றால் அது ஜீவா தான். கோவுக்குப் பிறகு இந்தப் பாத்திரம் சரி தான். தன்னால் முடிந்தளவு எல்லாமே செய்கிறார். ஆக்ரோஷம், துடிப்பு, காதல் என்று அனைத்து உணர்ச்சிகளையும் அந்த கூர் மூக்குக்கு இடையில் இருக்கும் இரு குட்டிக் கண்களில் கொட்டித் தருகிறார்.
தந்தையின் தயாரிப்பில் நீண்ட காலத்துக்குப் பின் இறங்கியுள்ளதால் அதிக, அதீத ஈடுபாடோ?
இசை - பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் தனது அறிமுகத்தில் பெரிதாக ஈர்க்கவில்லை பிரகாஷ் நிக்கி..
பாரதியின் வரிகளில் அறிமுகப் பாடல் ஏமாற்றம்.
சண்டைக்காட்சிகளில் அடிதடியுடன் இசையும் சேர்ந்து இரைச்சல்.
ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம்
ரசிக வைக்கிறார். கமெரா கோணங்களில் ஈர்க்கிறார். தூர இருந்து கமெராவில் சில காட்சிகள் கண்களுக்குக் கொடுவருவதில் சிம்பிளாக சாதிக்கிறார்.
பாடல் காட்சிகளில் கற்பனை வறட்சி இருந்தாலும் ஒளிப்பதிவால் ஏதோ சமாளித்துவிடுகிறார்.
சண்டைக்காட்சிகள் - நான் மகான் அல்லவில் பாராட்டுக்களைப் பெற்ற அதே அனல் அரசு. வித்தியாசமாக அமைத்து அட சொல்லவைத்துள்ளார்.கலக்கல்.
மிரட்டுகிற மாதிரி செய்து காட்டி இருக்கிறார்.
ஜீவா ரௌத்திரத்துடன் அடிக்கும் ஒரே அடியில் வில்லன்கள் விழுந்துவிடுவது கொஞ்சம் உறுத்தினாலும், தனுஷின் சண்டைக்காட்சிகலையே நம்பும் எமக்கு, தாத்தா பிரகாஷ்ராஜிடம் பழகிய வித்தைகளை அதே வேகத்துடன், நியாயத்துடன் அடிக்கும் அடிகள் இடி போல இறங்கும் (நன்றி முன்பு வாசித்த ராணி காமிக்ஸ் ;)) என்பதை நம்பலாம்.
இயக்குனர் கோகுல் முதல் திரைப்படத்திலேயே சமூக நீதி, சமூக நியதிகளை அக்கறையுடன் போலியில்லாமல் பேசி இருப்பது அவர் மீது நம்பிக்கையைத் தருகிறது.
எனினும் முதல் பாதியில் காட்டியுள்ள நேர்த்தியையும் வேகத்தையும் இரண்டாம் பாதியிலும் காட்டியிருந்தால் பாராட்டு மழையும் வசூல் மழையும் சேர்ந்தே பொழிந்திருக்கும்.
இயக்குனரை சில பாத்திரப் படைப்புக்களுக்காகப் பாராட்டும் அதே இடத்தில் தான் அளவுக்கதிகமான வில்லன் கூட்டம், ஓவர் பில்ட் அப்புடன் வரும் சென்ராய், ராஜேந்திரன் போன்ற பாத்திரங்களைக் காட்டி சொதப்புவதில் குட்டவும் வேண்டி வருகிறது.
கோகுல் இந்தக் குறைகளைக் களைந்து அடுத்த திரைக்கதையை சீராகத் தந்தால் இன்னொரு ஷங்கராக வந்தாலும் ஆச்சரியமில்லை என்பேன்.
முடிவு (இதை சொல்லாமல் விடுவது தார்மீக நியாயம்) கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தால் படம் கொஞ்சம் ஓடி இருக்குமோ என்னவோ? ஆனால் இப்படித்தான் அமைய வேண்டும் என்று முடிவெடுத்து அதையே செய்தியாகத் தந்துள்ள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தவே வேண்டும்.
ரௌத்திரம் - நல்ல முயற்சி.. ஆனால் முழுமையில்லை.
பி.கு ஆனால் மு.கு (பிற்குறிப்பு ஆனால் முக்கியமான குறிப்பு)
சமூகத்திலே எது நடந்தாலும் எமக்கு என்ன என்று இருக்கும் பலர் போல இருந்துவிடாது, யாராவது துணிச்சலான ஒருவர் தட்டிக் கேட்க முன்வரும்போது தான் நீதி, நியாயம் கிடைக்கும் என்ற செய்தி மிக முக்கியமானது தான்.
அதை நேரடியாகப் படம் பார்க்கும் திரையரங்கில் உணர்ந்தேன்..
ஈரோஸ் திரையரங்கில் கிடைத்த அழைப்பில் நான் மனைவி,மகனுடன் தான் சென்றிருந்தேன்.
திரையரங்கைப் புதுப்பித்துள்ளார்கள். திருப்தியாக உள்ளது.
திரை,ஆசனங்கள் புதிதாகியுள்ளன. ஏசி நன்று.. தரைவிரிப்பு அழகாக உள்ளது. ஆனால் Dolby ஒலித்தெளிவு போதாது.
நாம் இருந்த Balconyஇல் எங்களுக்குப் பின் ஆசனத்தில் தனியாக ஒரு நபர் அமர்ந்திருந்தார். நடுத்தர வயது. இடைவேளை நேரம் ஹர்ஷு ஓடிச் சென்று பல்கனியின் விளிம்பில் நின்றதை எமக்குக் காட்டிவரும் அவரே.
ஆனால் இடைவேளையின் பின் ஸ்ரேயாவின் கவர்ச்சிமிகு பாடல் காட்சி போய்க்கொண்டிருந்த நேரத்தில் எனக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த அவர் அசாதாரணமாக அசைவது போலிருந்தது.
திரும்பிப்பார்த்தால் அவரது கைகள் ஆசனத்தின் மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்தன..புரிந்துகொண்டேன்.
அவருக்குப் பின்னால் யாரும் இருக்கவில்லை.
ஆனால் அவரின் வலது மூலையில் இரு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் கவனித்தார்களோ தெரியாது.
பொது இடத்தில் இப்படி அசிங்கம் செய்கிறாரே என்று ஒரு முறைப்பு முறைத்தேன்..
இருட்டுக்குள் அவசர அவசரமாகத் தன்னை சுதாரித்துக்கொண்டு என் கண்களைத் தவிர்த்தார்.
கொஞ்ச நேரத்தின் பின்மீண்டும் ஏதோ அரவம் கேட்டவுடன் திரும்பினேன்.. தலையைக் குனிந்த அந்த ஆசாமி, அவசர அவசரமாகத் தான் சேர்ட்டை இழுத்து தன கால்சட்டையை மறைத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டார்.
முதல் தரமே எழுந்து அறைந்திருக்கலாமோ என்று யோசித்தாலும், பொது இடம் என்பதிருக்க, அவன் யாரையும் தொந்தரவு செய்யாமல் தன்பாட்டில் தானே சுய இன்பம் பெற்றுக்கொண்டிருந்தான் என்ற எண்ணமும் வந்தது.
பொது இடமொன்றில் அவன் செய்தது தப்பா இல்லையா என்ற எண்ணம் மனதில் இன்னும் உண்டு..
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?