ஒரு பக்கம் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்திடம் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியிலும் பந்துவீச்சாளர் பக்கம் இருந்து நல்ல சகுனம் எதுவும் இதுவரை இல்லை.
இங்கிலாந்து தனது திறமைக்கேற்ற தகுதிக்கேற்ற White Wash தொடர்வெற்றியைப் பெற்றுக்கொள்ளப் போகும் சகல அறிகுறிகளும் தென்படுகின்றன.
ஆஸ்திரேலியா இலங்கையில் வந்த உடன் அடுத்தடுத்து இரு T 20 போட்டிகளில் அடிவாங்கி அதை ஒரு நாள் போட்டிகளில் தவிர்க்கப் படாத பாடு படப் போகிறது என்று நினைக்கையிலேயே வெற்றியுடன் ஒரு நாள் தொடரை ஆரம்பித்துள்ளது.
எவ்வளவு தான் மிகப் பலம் வாய்ந்த அணிகளாக இருந்தாலும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு கிரிக்கெட் சுற்றுலா வருகையில் எதிர்பாராத அதிர்ச்சிகளுக்குத் தம்மை தயார்படுத்திக்கொண்டே வரவேண்டியது நியதி.
எவ்வளவு தான் பலமான துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தாலும் சுழல் பந்து என்ற பெரும் சூறாவளிக்குள் அகப்பட்டு திக்கித் திணறித் தான் செல்வது வழக்கம்.
முன்னைய இந்தியாவின் வெங்கட்ராகவன் - பேடி - பிரசன்னா - சந்திரசேகர் தொடங்கி, அண்மைய இலங்கையின் முரளி - மென்டிஸ்- ஹேரத், இந்தியாவின் கும்ப்ளே - ஹர்பஜன் வரை தொடர்ந்தே இருக்கிறது.
அண்ணன்மார் எப்போ போவார்கள் என்று பார்த்திருந்த ஏனைய அணிகளுக்கு கும்ப்ளே, முரளிதரன் ஆகியோரின் ஓய்வுகள் உற்சாகத்தை ஓரளவுக்கு அளித்தது உண்மை தான்.
ஆனால் ஹர்பஜனால் இந்திய அணிக்கு தனித்து நின்று உள்ளூர்ப் போட்டிகளைப் பெரிதாக வென்று கொடுத்ததாக அண்மைக்காலத்தில் இல்லை.
அவர் பற்றி ஏற்கெனவே நான் எழுதிக் 'கிழித்து' விட்டதால் இந்தியா இங்கிலாந்தில் அடி வாங்கக் காரணம் பற்றி மட்டும் சிறிதாக நோக்குவோமானால்,
இந்தியாவுக்கு கிடைத்த தோல்விகளுக்கான நேரடியான ஒரே காரணம் என நான் நினைப்பது தேவையான வீரர்கள் இன்மை..
இதற்குக் காயங்கள், வீரர்கள் தேவையான நேரத்தில் பிரகாசிக்காமை, குறித்த சூழ்நிலை, கள நிலைமைக்கேற்ற வீரர்கள் விளையாடாமை என்று பலவற்றையும் உள்ளடக்கலாம்.
இங்கிலாந்தில் சுழல்பந்துவீச்சாளர்கள் பெரிதாக செய்ய மாட்டார்கள் என்பதையெல்லாம் முரளி, வோர்ன், கும்ப்ளே முன்பு உடைத்துக் காட்டியுள்ளார்கள்.. ஏன், பாகிஸ்தானின் சக்லேய்ன் முஷ்டாக், முஷ்டாக் அஹ்மத் கூட இங்கிலாந்தில் விக்கெட்டுக்களை அள்ளியுள்ளார்கள்.
எனவே இந்தியாவுக்கு ஒரு நல்ல சுழல்பந்துவீச்சாளர் இல்லாதமை இத்தொடர் முழுவதும் படுத்தி எடுக்கிறது.
ஹர்பஜனும் மிஸ்ராவும்.. நீயென்ன நானென்ன..
இது மூன்றாவது டெஸ்ட் போட்டி இல் ஆரம்பிக்கும்போது நான் 'விடியல் தரும் விளையாட்டு வலத்தில்' சொன்னது.
இந்தியா தோற்றுப்போன அந்தப் போட்டியில் அன்றூ ஸ்ட்ரோசின் விக்கெட்டை அதிக சுழற்சி காரணமாக எடுத்தாலும், மிஷ்ராவினால் அவரது அதிக சுழற்சியையும் தன் கால்கள் எல்லையைத் தாண்டி பல No ballகள் விழுவதையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தியா ஒரு நல்ல சுழல் பந்துவீச்சாளர் இல்லாத வறட்சியினால் இங்கிலாந்து ஓட்டங்களைக் குவித்த வேளையில் சுரேஷ் ரெய்னாவிடமிருந்தும் ஓவர்கள் தேவைப்பட்டிருந்தன..
சுழல்பந்துவீச்சாளர்களின் விளைநிலங்களில் ஒன்றான இந்தியாவுக்கு இப்படியா? என்ன கொடுமை இந்தியா?
இந்தியா அதனது அடுத்த கட்ட டெஸ்ட் சுழல்பந்துவீச்சாளர் ஒருவர் வளர்வதை அடுத்து சொந்தமண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரிலேயே (Home test series) பரீட்சித்துப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இந்தியாவின் படுதோல்வியும், முதலாம் இடத்தைப் பறிகொடுத்ததும் இனி இந்திய அணிக்குள் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும்.. மிக முக்கியமாகப் பந்துவீச்சாளர்கள்.
உற்று நோக்கிக் கவனிக்கப்பட்டு இடம் பறிக்கப்பட்டவர்கள் சிலரின் வரிசையில் பாவம் ஹர்பஜனும் இருக்கப் போகிறார்.
(இந்தியாவின் படுதோல்வி, இங்கிலாந்தின் படிப்படியான முதலிடம் நோக்கிய வளர்ச்சி பற்றித் தனிப்பதிவு இடலாம் என்னும் எண்ணமும் உண்டு..)
மறுபக்கம் இலங்கை...
இன்று இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி..
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இலங்கை முதல் இரு T20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை உறட்டி இருந்தும், ஒரு நாள் போட்டியில் அந்த வேகத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.
இலங்கை அணிக்கு ஜோன்சனின் வேகம் சிம்மசொப்பனம் ஆகியிருந்தது.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவை முதலாவது T20 போட்டியில் டில்ருவான் பெரேராவை வைத்தும், இரண்டாவது T20 போட்டியில் அஜந்த மென்டிஸ் என்ற பழைய மந்திரவாதியை Formக்குக் கொண்டு வந்தும் உருட்டியது போல, இன்று யாரை வைத்து சுருட்டப் போகிறது என்று காத்திருக்கிறேன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் ஆரம்பிக்கு முன்னர் எங்கள் அலுவலகத்தில் விளையாட்டு செய்திகள், நிகழ்ச்சிகளில் என்னுடன் ஈடுபடும் விமல், கோபி(கங்கோன்) ஆகியோரோடு கிரிக்கெட் பற்றிப் பேசும் போது நான் சொன்ன ஒரு விடயம்
"இருந்து பாருங்கள்.. ஹேரத், மென்டிஸ், ரண்டீவ் இல்லாவிட்டாலும் பெயரே அறியாத யாராவது ஒரு சுழல் பந்துவீச்சாளரை வைத்தாவது ஆஸ்திரேலியாவை சுருட்டி அனுப்பும் இலங்கை. நாங்கல்லாம் ஜயந்த சில்வாவை வைத்துக்கொண்டே டெஸ்ட் போட்டிகளில் வென்றவர்கள்"
முன்னையவரும், பின்னையவரும்.. மந்திரவாதிகள்??
சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ஆடும் அணி என்று பெயர் எடுத்த இந்தியாவே சச்சின், கங்குலி, திராவிட், லக்ஸ்மன் என்று நான்கு பெரும் நாயகர்கள் இருந்தபோதும் கூட, இலங்கையில் வைத்துத் தொடர் ஒன்றை வெல்ல முடியவில்லை என்றால் பாருங்களேன்..
(இந்த நால்வருடன் சேவாக் + கம்பீரும் சேர்ந்த துடுப்பாட்ட அணி இலங்கையுடன் கண்ட மிகப்பெரும் தோல்வியும் இங்கே ஞாபகப்படுத்தக் கூடியது.
http://www.espncricinfo.com/ci/engine/match/343729.html
நேற்றைய Birmingham படுதோல்வியைப் பெருமளவு ஒத்த படுதோல்வி இது. இந்திய அணி கண்ட மிக மோசமான இன்னிங்க்ஸ் தோல்விகள் இரண்டு இவை. நேற்றைய தோல்வி இந்தியாவின் மிக மோசமான மூன்றாவது பெரிய தோல்வி.. இலங்கையுடன் மூன்று வருடங்களுக்கு முன் கிடைத்தது நான்காவது பெரிய இன்னிங்க்ஸ் தோல்வி)
ஆஸ்திரேலியா அணி இம்முறை முதல் இரு தோல்விகளுக்குப் பிறகு முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறக் காரணமாக அமைந்த மாற்றம், ஜோன்சனின் பந்துவீச்சைத் தவிர சுழல்பந்துவீச்சை சிறப்பாக, நேர்த்தியாக எதிர்கொள்ளக் கூடிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம்..
ரிக்கி பொன்டிங் + மைகேல் கிளார்க்.
இந்த இருவருடன் சுழல் பந்தை எதிர்கொண்டு ஆடக்கூடிய வொட்சன், மைக்கேல் ஹசி ஆகியோரும் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்ததாலேயே ஆஸ்திரேலியா வெல்வதைப் பற்றியல்ல, தோல்வியிலிருந்து தப்புவதைப் பற்றியே சிந்திக்கலாம்.
ஆனால் அண்மைக்காலத்தில் இலங்கை வந்த அணிகளில் ஆஸ்திரேலியா கொஞ்சம் வித்தியாசமானது.. இலங்கை அணியை அச்சுறுத்தக் கூடிய வேகப்பந்துவீச்சு அவர்களின் பலம்.
ஆனால் இலங்கை ஆடுகளங்களில் ஒருநாள் போட்டிகளில் கூட மூன்று வேகப் பந்துவீச்சாளருடன் விளையாடுவதைப் பற்றி யோசிக்கின்ற அணிகள் டெஸ்ட் போட்டிகளிலும் எப்படியும் ஒரு சுழல்பந்துவீச்சாளரைப் பயன்படுத்தவேண்டுமே..
ஓரளவு சிறப்பாக செய்த ஸ்டீவ் ஓகீப் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இல்லை. முதலாவது போட்டியில் கொஞ்சமாவது இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களை யோசிக்கவைத்த சேவியர் டோஹெர்ட்டியும் டெஸ்ட் குழுவில் இல்லை.
நேத்தன் லியோன், மைக்கேல் பியர் ஆகிய அனுபவமற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இலங்கையின் துடுப்பாட்ட சக்கரவர்த்திகளால் 'ஆசீர்வாதம்' செய்யப்படப் போகிறார்களா?
அல்லது ஷேன் வோர்ன் இலங்கையில் வைத்து நட்சத்திரமாகக் கிளம்பியது போல இவர்களும் மாறுவார்களா?
முதலாவதுக்கே வாய்ப்புக்கள் அதிகம்.. அதற்கு முதல் ஒருநாள் தொடர் என்ன தரும்?
இன்றைய போட்டிக்குப் பின் நாம் ஊகித்துக்கொள்ளலாம் என நினைக்கீறேன்..
என்னைப் பொறுத்தவரை துடுப்பாட்டவீரர்கள், பந்துவீச்சாளர்களின் தாக்கத்தைவிட தலைவர்களின் நுட்பமான தீர்மானங்களும், தீர்மானமிக்க வழிநடத்தல்களுமே இந்த ஒருநாள் தொடரின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கும் என நினைக்கிறேன்.
இதை மைக்கேல் கிளார்க்கின் சில முடிவுகள் முதல் போட்டியில் காட்டி இருந்தன.
ரண்டீவும் ஹேரத்தும்... போட்டாபோட்டி...
இலங்கைத் தேர்வாளரின் முதல் மூன்று டெஸ்ட் சுழல் பந்துவீச்சுத் தெரிவுகளான ரங்கன ஹேரத், அஜந்த மென்டிஸ் , சுராஜ் ரண்டீவ் ஆகியோருடன் இரண்டு சச்சித்ரக்கள் இருக்கிறார்கள். சச்சித்ர சேனநாயக்க & சச்சித்ர சேரசிங்க.
இவர்களுடன் பலரும் மறந்துபோன மாலிங்க பண்டாரவும் இருக்கிறார். தொடர்ந்து விக்கெட்டுக்களையும் எடுத்துக் கொண்டிருக்கும் அவரையும் கொஞ்சம் கவனிக்கலாமே...
எனக்கென்னவோ இலங்கை ஆஸ்திரேலியாவை சுழலால் சுருட்டும் என்றே தோன்றுகிறது...
(இலங்கையின் வழமையான பலமான துடுப்பாட்டமும் துணை வருமிடத்து)டெஸ்ட்டில் இந்தியாவின் முதலிடம் போனாலும், இன்று முதல் அடுத்துவரும் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை வென்றால் இலங்கைக்கு ஒருநாள் தரப்படுத்தல் முதலிடம் சொந்தமாகும்..