August 09, 2011

கிறீஸ் மனிதன் கதை உண்மையா?


இலங்கையை கடந்த ஒரு ஒரு வாரமாகக் கலக்கி வரும் ஒரு விடயமா கிறீஸ் மனிதன்/மனிதர் என்று சொல்லப் படும் மர்ம மனிதர் விவகாரம்.
திடீர் திடீரென இலங்கையில் குறித்த சில பகுதிகளில் தோன்றும் மர்ம மனிதர்கள் பற்றிய பரபரப்பு ஒரே குழப்பமாக இருக்கிறது.

முதலில் இலங்கையின் தென் கிழக்குப் பிராந்தியத்தின் சில ஊர்களில் இந்த மர்ம மனிதர்கள் பரவலாகப் பல்வேறு இடங்களில் திடீர் திடீரென வந்து பரபரப்பை ஊட்டியதாகக் கதைகள் பரவின.
அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களிலும் இவ்வாறு மர்ம மனிதர்கள் வந்துபோனதாகவும் காவல்துறை சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் செய்திகள் வந்தவண்ணமே இருந்தன.

ஊர்கள் பீதியில் இருப்பதாகவும், பெண்கள் பயந்துபோய் இருப்பதாகவும் கதைகள் வந்துகொண்டே இருந்தன..

அம்பாறையில் உள்ள எமது என்யர்கள் சிலரிடம் கேட்டபோது சிலர் கண்டதாக சொன்னார்கள். ஆனால் அவர்களது கருத்துக்கள் தெளிவில்லாமல், முன்னுக்குப் பின் முரணானதாக இருந்தது. சிலர் கண்டதாக ஆரம்பத்தில் சொன்னாலும் பின்னர் சில கேள்விகளின் பின்னர் "கறுத்த உருவம்; தூரத்தில் தெரிந்தது; அது மர்ம மனிதனாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்...." இப்படிக் குழப்பமான பதில்கள்..

இன்னும் நிரூபிப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.. காலடிகள் பதிந்த மண்ணின் புகைப்படங்கள் தவிர.

ஆனால் வன்முறை சம்பவங்கள் என்று எவையும் இடம்பெற்றதாக இல்லை.

இப்போது சில நாட்களாக மலையகப் பக்கம் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

ஆனால் செய்திகள் கொஞ்சம் பீதியை வரப்பன்னுகின்றன..

நான்கைந்து கொலைகள், சில தாக்குதல் சம்பவங்கள் போன்றவை நடந்திருக்கின்றன.. அதுவும் தோட்டப் பகுதிகளில்.. பகல் நேரங்களிலும் கூட..
லிந்துல, நுவர எலியா, பத்தன, ஹட்டன், தலவாக்கலை, கொடைகளை, பதுளை என்று பல்வேறு இடங்களிலும் கிறீஸ் மனிதர்களின் நடமாட்டம் பற்றி செய்திகள் வந்துகொண்டே இருந்தன.
(சிங்களத்தில் கிறீஸ் யக்கா - பே என்று அழைக்கிறார்கள்)

உடல் முழுதும் கிறீஸ் (grease) பூசிக்கொண்டு நடமாடும் மனிதர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தையும் மறைத்துக் கொண்டு கையில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் தாக்குவதாகத் தான் செய்திகள்.
இந்தத் தாக்குதல் அனைத்துமே பெண்களுக்கு எதிராகவே நடந்திருக்கின்றனவாம்.

ஆனால் தொடர்ந்து இவை வெறும் 'வதந்தி' என்றே போலீஸ் மறுத்துவருகிறது.
அண்மையில் நாவலப்பிட்டியில் வைத்து பெண் ஒருவரைத் தாக்கிய கிறீஸ் மனிதன் ஒருவனைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசனம் எங்களுக்கு வந்திருந்தது.

எங்கள் செய்திப் பிரிவினூடாக விசாரித்தோம்.. பயமும் குழப்பமுமே மக்கள் மத்தியில் அதிகம்.


இன்று காலை விடியலில் இது பற்றி அந்தந்தப் பகுதி நேயர்களிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று பார்த்தால், நேரில் கண்டவர்கள் யாருமே இல்லை.


கண்டேன் சொல்கிறேன் ; அழைப்பை எடுங்கள் என்று சொன்னவர்களும் தடுமாறுகிறார்கள்.
ஆனால் அப்படி கிறீஸ் (மர்ம) மனிதர்கள் உலவுவது உண்மையாக இருந்தால் இது ஒரே மனிதனாக இருக்க முடியாது. ஒரு மாபெரும் குழுவாக இருக்கவேண்டும்.
ஒரே நாளில் பல்வேறு இடங்களில் இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கிறதே.

அதுவும் இந்த மர்ம மனிதரைக் கண்டவர்கள் சொல்லும் குறிப்புக்களும் கோழப்பம்..

சிலர் சொல்கிறார்கள் பிடிபட்டால் தப்பும் எண்ணத்தில் உடல் முழுதும் கிறீஸ் தடவிக்கொண்டு வருகின்றார்கள் என்று. இன்னும் சிலர் இல்லை வெறும் கறுப்பு உடையை உடல் முழுதும் போர்த்திக்கொண்டு வருகிறார்கள் என்று சொன்னார்கள்; இன்னும் சிலரோ நீச்சல் உடை போன்ற வழுகக் கூடிய உடைகளை அணிந்து வருகிறார்கள் என்றார்கள்.

நேற்று பதுளையில் நடந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் மீதான தாக்குதல் பற்றி அவரிடம் கேட்டபோது யாரோ தன்னைத் தாக்கினார்கள் என்றும் தான் சரியாக அவர்களைக் கவனிக்கவில்லை என்றும் சொல்கிறார்.

வேறு ஒரு இடத்தில் நடந்த தாக்குதலில் காயப்பட்ட பெண் (இவரது கூந்தலை வெட்டிவிட்டார்கள்) இருவர் தன்னைத் தாக்கியதாகவும் ஆனால் அவர்கள் தாக்க மட்டுமே வந்தார்கள் போல் தெரிவதாகவும், பாலியல் சேஷ்டைகள் புரிய வந்தவர்கள் போல் தெரியவில்லை என்றும் சொல்கிறார்.

வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தரவயதுப் பெண்களாகவே இருக்கிறார்கள்.

தனியாகப் பெண்கள் இருக்கும், நடமாடும் இடங்களிலேயே இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் திருட்டுக்கள் எவையும் இதுவரை இடம்பெற்றதாகத் தகவல் இல்லை.


ஏன்?
என்ன நடக்கிறது என்ற குழப்பம், மர்மம் நீடிக்கிறது.
காவல்துறையின் அசமந்தமும், அக்கறையின்மையும் கூட கொஞ்சம் சந்தேகம் தருகிறது.

சிலவேளைகளில் இது வேறேதாவது பின்புல நோக்கத்துடன் முன்கொண்டு நடத்தப்படுகிறதா?
எங்காவது ஒரு இடத்திலே நடமாடிய ஒரு 'கிறீஸ் மனிதனைப்' பார்த்து வாய்ப்புக் கிடைத்தவர்கள் தமக்கு வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி விளையாடுகிறார்களோ?

செய்தியாளர்கள், அந்தப் பிரதேசத்தில் இருக்கும் ஆரவ்முள்ளவர்கள் யாரும் இன்னும் இது பற்றி விரிவாகப் பேச, எழுத ஆரம்பிக்கவில்லை.
இந்த மர்மம் துலங்கவேண்டும்..
அந்தப் பகுதி அப்பாவி மக்களின் பீதி அகலவேண்டும்.

இது பற்றி ஆராய, புலனாய்வு செய்தி சேகரிப்பில் ஈடுபட விரும்புவோருடன் இணைந்துகொள்ள விரும்புகிறேன்.

19 comments:

Mathuran said...

இதுபோன்ற சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றதாக என் தந்தை சொல்ல கேட்டிருக்கிறேன். சரிவர தெரியவில்லை. உங்கள் முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

மனிதர்களே இப்படி புரளிகளை பரப்பி விட்டு இலாபம் காண்கின்றனர் என்றே நினைக்கிறேன். இவர்கள் ஒரே குழுவாக இருக்க முடியாது. கேள்விப் பட்டவுடன், மக்கள் பயப்படுகின்றனர் என்று தெரிந்தவுடம் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருத்தர் கிளம்பி கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
எனக்கும் கிரீஸ் கள்ளன் அனுபவம் இருக்கு. அடுத்த பதிவுல் எழுதி விடலாம்.. நன்றி...

நிகழ்வுகள் said...

ஆச்சரியமாய் இருக்கே ..

Unknown said...

அந்தப் பகுதிகளில் எதைச் சொன்னாலும் 'பேய்த்தனமா' நம்புற ஆளுங்க இருப்பாங்களோ?
இப்படியே கொஞ்ச காலம் எதையாவது பண்ணிட்டு, குறிப்பிட்ட ஒரு சாரார் மீது பழிபோடக்கூடிய நோக்கத்துடன் திட்டமிட்டு யாராவது செய்கிறார்களோ?
அதுவும் இப்போதுள்ள சூழ்நிலையில் ஏதாவது...?
புதுசு புதுசா யோசிக்கறாங்கப்பா!

யோ வொய்ஸ் (யோகா) said...

இது மக்களை பயப்படுத்தும் நோக்கில் ஏதாவது ஒரு குழுவினரால் மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்றே நினைக்கிறேன்.

கண்டியில் இதன் தாக்கம் மிக அதிகம், சென்ற வாரம் நள்ளிரவு வேளையில் நான் பயணித்து கொண்டிருக்கும் போது இந்த மனிதனை பிடிக்க ஊரார் அனைவரும் திரண்டிருந்ததை அவதானித்தேன்.

எஸ் சக்திவேல் said...

நான் பதின்ம வயதுகளில் இருந்த போதும் (20- 25 வருடங்கள் முன்பு!), இதேமாதிரி கிறீஸ் மனிதன் கதை -அதுவும் ஊரில் இருந்தது. எனக்குத் துளியும் நம்பிகை இல்லை. இதுமாதிரிக் கதைகள் "மீள் சுழற்சியில்" வரும்.

அசால்ட் ஆறுமுகம் said...

அம்மா அப்பா முன்னர் இதேபோன்றொரு சம்பவத்தைப்பற்றி கூறிக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்......

ஒரு சந்தேகம்.. உடம்பு முழுவதும் கிறீஸ் பூசினால் குளிப்பதற்க்கு என்ன பாடு படவேண்டும்..... மணித்தியாலக்கணக்கில் எடுக்குமே!!!

anuthinan said...

//இது பற்றி ஆராய, புலனாய்வு செய்தி சேகரிப்பில் ஈடுபட விரும்புவோருடன் இணைந்துகொள்ள விரும்புகிறேன்.//

நானும்!!!!

//ஏன்?
என்ன நடக்கிறது என்ற குழப்பம், மர்மம் நீடிக்கிறது.//

ஏதும் திசை திருப்பும் முயற்சியாக இருக்காலம்..! அல்லது நீங்கள் சொல்ல்வது போல ஒரு சாரார் மேல் பழி போடா நினைக்கும் திட்டமாக அல்லது யாராவது ஹீரோவாக மாற ம்யற்சிக்கும் சம்பவமாக இருக்கலாம்!!!

முன்பனிக்காலம் said...

சண்டை முடிந்த பிறகு ஊடகங்களுக்கு சரியான பரபரப்பான தீனி இல்லாமல் இருந்தது. இப்படி கிரீஸ் மனிதன் மாதிரி ஏதாவது வந்தால் தான் உண்டு!போகிற போக்கில் கண்டியில் பனி மனிதன் உலாவுவதாகவும் கதை வரக் கூடும்.

aiasuhail.blogspot.com said...

மர்ம மனிதன் பீதியில் உறைந்துபோயுள்ள கிராமங்கள்.


http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/25998-2011-08-08-10-21-20.html

இக்கட்டுரை இந்த விடையங்கள் தொடர்பில் ஒரு தெளிவைத் தரும் என நினைக்கின்றேன்

அஜுவத் said...

கடந்த மூண்று நாட்களாக அக்கரைப்பற்றிலும் பெரும் கலேபரம்......... வெவ்வேறு விதமாக கண்டிருக்கிறார்கள் அதுதான் ஒரே குழப்பமாக இருக்கிறது
ஆனால் சப்பாத்து தடங்களை நானும் கண்ணூடாக கண்டேன். ஆனால் அந்த பகுதிகளில் சாதாரனமாக திருடர்கள் சப்பாத்துடன் நுழைவது மிக மிக அரிது; இதற்கு முன்பும் எத்தனயோ திருட்டு நடந்த இடங்களில் சாதாரண செருப்புத்தடங்களையும் விட்டு விட்டு ஓடிய செருப்புகளையுமே கண்டிருக்கிறோம்......... இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது

Anonymous said...

makkalidam puraliyai kilappivittu kovilkalil kollai adikka thiddamam,

ahamed ashfak said...

இன்று 2011-08-10ம் திகதி பி.ப.2.00 மணியளவில் ஓட்டமாவடியிலுள்ள அமீரலி கிராமத்தில் வைத்து நாட்‌டில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற மர்ம மனிதனை பொது மக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

Anonymous said...

நானும் கேள்விபட்டேன் அண்ணா, என் ஊரில் [நாவலப்பிட்டி] ஒரு கிரீஸ் மனிதனை பிடித்தார்கள் என்று. ஆனால் பிடிப்பட்ட ஒருவன் கூறினானாம், "என் ஒருத்தனை பிடித்து என்ன பண்ண போறீங்க? நாங்க 5000 பேர் இருக்கோம்." என்று. ஒருவேளை நம்ம ஜனாதிபதியுடைய தோஷத்தை நீக்க தான் இப்படி பண்றாங்கன்னும், அவங்க கோவேர்மென்ட் ஆளுன்கனும், அதான் போலீஸ் அவங்க மேல ஆக்ஷன் எடுக்க மாட்டேன்க்ராங்க என்றும் பலர் கூறி நான் கேட்டிருக்கிறேன் அண்ணா. உண்மையாதான் இருக்கும் அண்ணா.

kskkshan said...

enga uoorilum indha tholla adhihaithulladhu.ore marmamaha ulladhu.kallanai pidithhu 10 nimidaththi police vandhu alaithu selkinradham.pinnar vittu viduhiarhalam.

Bavan said...

எனக்குத் தெரிந்த கந்தளாய்ப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் தந்த நம்பத்தகுந்த தகவல்.

கிறீஸ் மனிதன் என்று அழைக்கப்படும் அந்த மனிதரை அவர்களிடம் பிடிபட்டதாகவும், பிடித்தவுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், அதன் பின்னர் அந்த கிறீஸ்மனிதர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விட்டுவிட்டார்கள் என்றும் சொன்னார்.

இவர்கள் கைவிரலில் போத்தலுடன் கூடிய மோதிரம் மாதிரி ஒன்று அணிந்திருக்கிறார்களாம், அதனால் அப்பிடியே வெட்டியவுடன் இரத்தம் போத்தலுக்கும் வந்துவிடுமாம்.

இவர்களின் முக்கிய இலக்கு பெண்கள், அதிலும் பாலூட்டும் தாய்மார்தானாம், என்று அந்த கந்தளாய் நண்பர் தெரிவித்தார்.

இந்த கிறீஸ் மனிதர்கள் நள்ளிரவுகளில் வீடுகளுக்கும் மதில் பாய்ந்து இறங்குவதாகவும், விளக்குமாறு போன்றவற்றால் முற்றத்தை கூட்டியும், பைப் இருந்தால் தண்ணீரை திறந்து விட்டும் உறங்கிக்கொண்டிருக்கும் மக்களை எழுப்பி அவர்கள் வெளியே வரும் போது தமது இரத்தம் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சொன்னார்.

தவிர, திருகோணமலையில் இதுவரை 3 இடங்களில் கிறீஸ் மனிதன் தோன்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காண்டீ said...

இந்த கிரீஸ் மனிதன் பீதியால் அப்பாவிகள் அதுவும் எங்களை போல் நிறம் குறைந்த அப்பாவிகள் இரவில் நடமாடவே பயமாய் இருக்கிறது .......
பயத்தில் இருக்கும் மக்கள் எங்களை போய் போட்டு தாக்கி விடுவார்கள் .
இது சில்மிஷரகளுக்கு ஏற்ற காலம் போல .....கிரீஸ் மனிதன் பெயரால் தங்கள் வேலையே காட்டுகிறார்கள் .!

Thava said...

கிரீஸ் மனிதன் பூதம் என்ற பதங்களை ஊடகங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் அவற்றின் மூலம் இந்த மாயை பெருமளவில் விலகிவிடும் . மற்றப்படி வெறுமனே அன்றாட திருட்டு முயற்சிகளும் சில்மிசம் செய்பவர்களின் செயல்களே இவ்வாறு பூதாகரமாக்கப்படுகின்றன.2 போட்டா எல்லாம் சரி. இதனை இந்த புரளி நிலைக்கு கொண்டுவந்த பெருமை ஊடகங்களையே சாரும்

Anonymous said...

பெண்களின் இரத்தத்தை சிந்தி தனக்குத் தேவையான புதையலைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவொன்றினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கை என மக்கள் நம்புகின்றனர்.மேலும் இக் குழுக்கு தலைமை தாங்கும் நபர்கள் அரச தரப்பாக இருக்கக் கூடுமெனவும் நம்புகின்றனர்.
இவ்வாறு மக்களின் கருத்து இருக்க பொலிஸ் மா அதிபர் இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் போதைப் பொருள் பாவனை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறுகிறார்.
இதன் உண்மை நிலைதான் என்ன?
சரி,பொலிஸ் மா அதிபரின் கூற்றுப் படி கஹவத்தையில் இடம்பெற்ற பெண்கள் கொலையைத் தொடர்ந்தே கிறிஸ்மனிதன் எனும் பெயர் மக்கள்மத்தியில் பிரபல்யமடைந்தது என்கிறார். ஆனால் அதில் இருந்து இதுவரை நடந்த சம்பவங்களை நோக்கினால் அவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.
கஹவத்தைச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ஈடுபடுகின்றனர் எனக் கூறுகிறார். அவ்வாறெனில்
1.இவ்வாறு பிரதேசங்களில் காணப்படும் கயவர்ள் அனைவரும் ஒரே நேரத்தில் இவ்வாறு கிளம்புவார்களா?அதற்கு சில கால இடைவெளி எடுக்குமல்லவா?
2.அவ்வாறான நபர்கள் வேறுவகையான அதாவது ஒருவர் களவு,ஒருவர் சேஷ்டை என மல்டியாக செய்யாமல் இதுவரைநடந்த சம்பவங்கள் அனைத்திலும் கூறிய ஆயுதத்தினால் குறிப்பிட்ட கைப் பிரதேசத்தில் சேதப்படுத்தும் நிகழ்வுகளே இடம் பெற்றுள்ளன.ஏன் இவர்கள் ஒரே மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.?
3.ஏற்படுத்தும் காயங்கள் அணைத்தும் ஏற்கனவே திட்டமிட்டது போல் சிராய்ப்பு காயங்களாக ஒரே மாதிரியாக இருக்கின்றன.?
4.பொலிசார் ஏன் இவ்வாறு கைது செய்பவர்ள் அணைவரையும் தப்பிக்க வைக்கும் ஒரே மாதிரியான செயலில் ஈடுபட வேண்டும்?
5.மக்கள் கண்டதாக கூறும் அணைத்து கிறிஸ் பூதங்களும்ஒரே மாதிரியான தோற்றங்களில் எவ்வாறு தோன்ற முடியும்?
மேற்கூறிய அணைத்தும் இச் செயல்கள் அணைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட செயல்கள் என்ற வாதத்திற்குவலுச் சேர்க்கின்றன.
எனினும் இப் பிரச்சினைகளுடன் சேர்ந்து இன நல்லூறவு பாதிக்கும் வாய்ப்பும்,காணபவர்களையெல்லாம் சந்தேகப்படும் மனநிலையும் தோற்றுவிக்கப்பட்டுள்ள்ளது. பொலிஸார் நம்பகமானமுறையிலும் நடந்து கொண்டால் மக்கள் இவ்வாறு பொலிஸாருக்கு எதிராக களத்தில் குதிக்கமாட்டார்கள்.அப்பாவிப் பொதுமக்களை சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள்.பொலிசாருக்கும் மக்களும் இடையிலான நல்லுறவு கட்டியெழுப்புவது அவசியமாகும்.
இவ்வாறு சம்பவங்கள் நடைபெறுகையில் பொலிஸ் உயர்அதிகாரிகள் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது வெற்று அறிக்கைகள் விடுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

நேற்றிரவு ஓட்டமாவடிப் பிரதேசத்தில் 16 வயதுப் பெண் மலசலகூடம் சென்ற போது தென்னை மரத்தில் இருந்து இரங்கிய மர்ம நபர் கைகளை பிடித்து கீறி சிராய்ப்புக் காயங்களை ஏற்படுத்தியதாகவும் அதன் பின் தான் மயங்கியதாகவும் கூறினார்.பின்னர் அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது மரங்களில் தாவிச் செல்வது போன்று மரங்கள் அசைந்தாகவும் கூறினார்கள். இதிலிருந்தும் மேலும் சில சம்பவங்களை வைத்து பார்க்கும் போது நன்கு பயிற்றப்பட்ட குழுவே இது என எண்ணத் தோன்றுகிறது.

மேலும் சில சம்பவங்கள் உள்ளது.படங்களும் உள்ளது பகிர்ந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
(சமிர் அஹமட்
kalkudahmuslims.com செயற்பாட்டாளர்)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner