அலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..

ARV Loshan
27


இந்தப் பதிவு போட நான் எடுத்துக் கொண்ட காலம் மிக மிக அதிகம்.. ஒவ்வொரு நாளும் கிடைக்கும் சில நிமிடங்களில் சிறுக சிறுக பதிந்து சேமித்து இன்று வருகிறது..

பல வேலைகள்,பயணங்களினால் தாமதமானாலும் நாளை ஒரு முக்கியமான நாளாக எனக்கு ஒரு விஷேட நிகழ்வு இருந்தாலும் இன்று அரங்கேற்றாமல் விடுவதில்லை என்று நள்ளிரவு தாண்டி பதிவேற்றுகிறேன்..

தொடர்பதிவுகள் என்று கேட்டாலே எனக்கு அலர்ஜி! யாராவது அழைத்து அந்த அழைப்பையேற்று பதிவிடாவிட்டால், அழைத்தவரை அவமானப்படுத்தியோ, காயப்படுத்தியோ விடுவோம் என்பது ஒருபுறம், வருகிறேன் என்ற பின்னர் பதிவிடத் தாமதமாகி அழைத்தவர் வெறுத்துப் போய் என் பதிவுகளின் பக்கமே வராமல் விடுவது ஒரு பக்கம்!

வாழ்க்கையில் நேரகாலம் தவறக்கூடாத தொழில்களில் ஒன்றான ஒலிபரப்புத் துறையில் பணிபுரிவதால் பொதுவாகவே நேரந்தவறாமையை நான் நேர்த்தியாகக் கடைப்பிடித்து வந்தாலும், பதிவுகளில் மட்டும் குறிப்பாக இவ்வாறான தொடர்ச்சியான பதிவுகளில் நேரகாலத்தோடு நான் தோற்றுப்போகிறேன்.

இன்னும் இரு தொடர்பதிவுக்கான அழைப்புக்கள் சிலமாதங்களாக கிடப்பிலே இருக்கின்றன. எப்போது மனம் பதிவிடச் சொல்கிறதோ அப்போது நிச்சயம் அவை வரும். ஆனால் அப்போது அழைத்தவர்களுக்கே அது மறந்துவிட்டிருக்கும்.

இன்னுமொரு சிக்கல் நாம் அழைப்பு விடுக்கும் சில நண்பர்கள்; அவர்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறோம். நான் அழைப்பு விடுத்த பலர் பதிவிடவில்லை. மரியாதைக்கு நன்றியோடு சரி. என்னைப் போல் சிலர்.

பனையூரானின் அழைப்பையேற்று நான் பதிகின்ற இந்தப்பதிவை நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கும் போதே யாரைத் கூப்பிட்டுத் தொலைக்கப் போகிறோனோ என மனதில் எண்ண ஆரம்பித்திருப்பீர்கள்.

மு.மயூரன் இந்தத் தலைப்பை பதிவர் குழுமத்தில் ஆரம்பித்தபோதே என்னை யாரும் கூப்பிட்டு விடக்கூடாது என நினைத்துக்கொண்டிருந்தேன்.

பாழாய்ப் போன பனையூரான் (நிஜமாகத் திட்டவில்லை சகோதரா) அழைத்துவிட்டார்...

பலபேரும் பதிவிட வந்த கதை வாசிக்க சுவாரஸ்யமாகவே இருக்கிறது. என்னுடையதை எழுத எனக்கு அவ்வளவாக சுவாரஸ்யமில்லை (எனக்குத்தான் தெரியுமே...) உங்களுக்கு வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்குமாறு முயற்சிக்கிறேன்.

முன்பே ஒரு தடவை
என இதனை எழுதியுள்ளேன். எனினும் இம்முறை அதைக் கொஞ்சம் நீட்டி, கொஞ்சம் குறைத்து, சொல்லாத சில பல விஷயமும் பதியப்போகிறேன்.

இந்தப் பதிவைப் போடுவதற்காக பழைய என்னுடைய பதிவுகளைத் தட்டிப் பார்த்தபோது தான் தெரிய வந்தது நான் பதிவுகள் போட ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டதென்று..

ஒரு வருடம் பூர்த்தியான இந்நேரம் பதிவுகள் முந்நூறை அண்மிக்கின்றன.
#கீழே விபரம் சொல்லி இருக்கிறேன்..

பொருத்தமான நேரத்தில் இந்த தொடர்பதிவுக்கு அழைத்த பனையூரானுக்கு நன்றிகள்.. இதனால் எனக்கு பழைய பதிவுகளைக் கொஞ்சம் மீள வாசித்து பிழைகள் சிலவற்றை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.


விதி முறைகள்.

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.



இந்த வலைப்பூக்கள் எனக்கு ஆங்கில மொழியூடாகத்தான் முதலில் அறிமுகமாயின.அதுவும் ஒன்றில் அவை விளையாட்டுத்துறை சார்ந்தவையாக இருக்கும் அல்லது கவர்ச்சிப்படங்கள் சுமந்து வரும் ஏதாவது கில்மா வகையறாவாக இருக்கும். எனவே பெரிதாக அவை ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.(எழுதத்தானுங்கோ)

பிறகு தேடல்கள் மூலமாக,நண்பர்கள் மூலமாக, பல்வேறு தளங்களிலிருந்து தமிழ் வலைப்பூக்கள் அறிமுகமானபோது ஒரு மிக பிரமாண்டமான பிரமிப்பு எனக்கு இருந்தது. அத்தனை வலைப்பூக்களும் அத்தனை பேர் பதிவர்களாக இருப்பதும் ஒரு பெரும் வியப்பான மலைப்பான விடயமாகவே எனக்கு இருந்தது.இவாளவு நாட்களும் இவை பற்றித் தெரியாமல் இருந்து விட்டோமே என்று வெட்கமாகவும் கூட இருந்தது. அது போல் இவ்வளவு நுணுக்கமாக,நகைச்சுவையாக ,நாசூக்காக,நக்கலாக எல்லாம் எழுதுகிறார்களே என்று ஆச்சரியமாகவும் இருந்தது. சின்ன ஆசை ஒன்று.. பாடசாலைக் காலத்தோடு குறைத்துக்கொண்ட என் எழுத்து ஈடுபாட்டை மீண்டும் ஆரம்பிப்போமா என்று.


எனக்கு முதலில் தமிழின் வலைப்பூக்கள்/பதிவுகள் தெரியவந்தது அப்போதைய தேன்கூட்டு திரட்டி மூலம்.. அப்படியே தமிழ்மணம், திரட்டி, தமிளிஷ் என்று பல திரட்டிகள் மூலம் பல வலைப்பூக்கள் கிடைத்தன.

வாசிப்பதில் எனக்கிருந்த தணியாத தாகம் வலைப்பூக்களின் மீது தீராத,தீவிர வாசிப்பை இன்றுவரை ஏற்படுத்தி வந்துள்ளது.

பதிவிடுகிறேனோ இல்லையோ, பின்னூட்டம் இடுகிறேனோ இல்லையோ,அநேகமான (எனக்கு வாசிக்கப் பிடித்தவற்றையாவது) பதிவுகளை எப்படியாவது வாசித்துவிடுவேன்..

வானொலித் துறையில் விளம்பரங்கள், அறிக்கைகள், நிகழ்ச்சிக்கு சம்பந்தமான கவிதைகள் போன்ற சில என்று கொஞ்சம் எழுதி வந்தாலும், பின்னர் இலங்கையிலிருந்து வெளிவரும் சில சஞ்சிகைகளில் கட்டுரைகளும் எழுதி வந்தேன்.. வருகிறேன்..

அநேகமானவை விளையாட்டு சம்பந்தப் பட்டவை.. வேறு சில முன்பு புனை பெயர்களிலும் வந்தன.. (எல்லாவற்றிற்கும் சன்மானம் கிடைப்பதில்லை..)

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிறுக்குபவற்றைசேர்த்து வைத்துக் கொள்வதுண்டு. எப்போதாவது புத்தகம் ஒன்று போட்டால் பிரயோசனமாகுமென்று. அந்த டயரிக் கிறுக்கல்கள்,நேரம் கிடைத்தபோது எழுதியவை எல்லாவற்றையும் தேடி எடுத்து இங்கு ஏற்ற ஆசை.

ஆனால் என் வலைப்பதிவாளராகும் ஆசை ஏற்பட்டது சுமார் ஒரு ஆண்டுக்கு முன்புதான்.குறிப்பாக குறும்பும்,கேலியும் கொப்பளிக்கும் சில வலைப்பதிவாளர்களின் பதிவுகளையும், சொந்த விமர்சனங்களை சுவைபடத் தந்த வலைப்பதிவுகளையும் பார்த்த போது ஆஹா நானும் இப்படி ஒன்று தொடங்கினால் என்ன என்று யோசித்தேன். ஆனால் இருந்த பெரிய பிரச்சினை எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது . அதையும் விடப் பெரிய நகைச்சுவை unicode பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது.(பிரதீப் சொல்லித்தரும் வரை) unicodeஇல் டைப் செய்தால் தான் இலேசாக பதிவேற்றலாம் என்றும் அண்மைக்காலம் வரை தெரியாது.அதற்கு facebookஇற்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

Facebookஇன் மீது ஏற்பட்ட மோகம் தமிழில் தட்டச்சு மீதும் ஏற்படக் காரணமாக அமைந்தது Facebookஇல் உருவாக்கப்பட்ட தமிழ் அறிவிப்பாளர் ஒன்றியம்.அங்கு ஏற்பட்ட சில காரசாரமான (பிரயோசனமானதும் கூட) விவாதங்களில் பங்குபற்ற தமிழ் தட்டச்சை unicode வாயிலாகப் பழகிக்கொண்டேன்.
பம்பலப்பிட்டியில் தற்காலிகமாக நாங்கள் செட் கட்டடத்தில் (அது ஒரு சுதந்திரமான,உல்லாசமான அலுவலகம்) தங்கியிருந்த காலத்தில்- வெற்றி அலுவலகம் மற்றும் தற்காலிக கலையகம் அமைந்திருந்தது அங்கே தான், நான் facebookஇலேயே வாழ்ந்த நேரம் தான் அதிகம். (வேற என்ன வேலை தான் இருந்தது?காலையில் நிகழ்ச்சி,பிறகு கூட்டங்களை இருந்தால் அவை)

அதற்கு பிறகு தான் எங்களை தலைமை அலுவலகத்துக்கு மாற்றினர். (எங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை ஆயினும் நிர்வாக வேலைகளுக்கும் ஒலிப்பதிவு வேலைகளுக்கும் இலகுவாக இது அமைந்தது. நிறைய சின்ன சின்ன சிக்கல்களுக்கும் முடிவு காணுவதாக இது அமைந்தது ) தலைமை அலுவலகத்துக்கு நாங்கள் குடி பெயர்ந்த பிறகு தான் தெரிந்தது, நாங்கள் ரொம்ப நேசித்த facebookஇற்கு இங்க ஆப்பு வைக்கப்பட்டிருப்பது.(காரணம் ஏற்கெனவே இங்கு பலர் அளவு கடந்து அதை பாவித்து, செய்யும் வேலைகளையும் மறந்திருந்தனராம்). நான்முன்பு facebookஇல் 20-20 போட்டிகளை ரசித்து ஆடுவதும்,பழைய நண்பர்களைத் தேடுவதும் facebookஇன் மூலமாகத் தான் செய்துவந்தேன்.

ஆனாலும் இங்கு facebook இல்லாததால் நேரம் ரொம்பவே மிச்சம் ஆனது. அதை வலைப்பூவை உருவாக்குவதில் பயன்படுத்திக் கொண்டேன்.(இப்பவாவது நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்கலாம் என்றுதான்). அந்த நேரத்தில் தான் எம் செய்திப் பிரிவில் அருண் என்ற தம்பி செய்திக்கென்று தனியாக வலைப்பூவோன்றை சிறப்பாக வடிவமைத்துக்கொண்டிருந்தார்.அவரைப் பின் பற்றியும் எங்கள் கணினி முன்னோடி பிரதீப்பின் சில வழிகாட்டல்கலோடும் ஒரு மங்களமான நாளில் என் வலைப்பதிவுப் பயணம் ஆரம்பமானது.

.விடுபட்டுப் போயிருந்த எழுத்துவேலைக்கு நல்லதொரு தீனி கிடைத்துள்ளது.இப்போவெல்லாம் அவசரமாக எழுதி எழுதி, கையெழுத்து மோசமாகுவதாலும் ,சோம்பலாலும் கையால் எழுதுவதைக் குறைத்து வந்த எனக்கு unicodeஇல் தட்டிப் பதிப்பது சுவாரஸ்யமாகவே உள்ளது.கொஞ்சப்பேராவது(தன்னடக்கம் ?!) என் பக்கம் வந்து போவதும்,பின்னிணைப்பு இடுவதும் மேலும் உற்சாகத்தைத் தருகிறது.. மேலும் வரும்


பதிவிடப் பயன்படுத்திய கருவிகள்

இணையப் பாவனையுடைய கணினிக்கான அத்தனை சாதனங்களும்... அப்படி சொன்னால் கொலைவெறியோடு துரத்த வருவீர்கள்...

தட்டச்சுவது – பயன்படுத்தும் விசைப்பலகை பற்றி என்னென்ன சர்ச்சைகள் வந்தாலும் நான் அதிகமாப் பயன்படுத்துவது Phoentic - ஒலிக்குறிப்பு முறைதான். எனக்கு பாமினி, தமிழ்99 போன்றவையும் தெரியும் என்ற போதும் இதுதான் வேகமாகவும் இலகுவாகவும் இருக்கிறது.

எனினும் 300ஐ அண்மிக்கும் எனது பதிவுகளில் பெரும்பாலானவை என்னால் தாள்களில் எழுதப்பட்டு எனது அலுவலகத்தில் காரியதரிசியாகக் கடைமையாற்றும் அருந்ததி அக்காவினாலும், தற்போது சிலமாத காலமாக எமது அறிவிப்பாளர் வனிதாவினாலும் தட்டச்சி பின் நான் யூனிகோடுக்கு மாற்றி பதிவிடுவது பற்றி முன்னம் ஒரு சில பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்.

வீட்டில் குழப்படிகாரக் குட்டிமகனோடும். பல வேலைகளோடும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளோ, கிரிக்கெட்டோ பார்த்துக்கொண்டோ, ஒரு சில நேரம் போரடிக்கும் கூட்டங்களின் போதும் கூட (Higher Management/ Operations meeting) மனதில் தோன்றும் விஷயங்களை எழுதுவது இலகுவாக இருக்கிறது.

எனது மிகப்பெரிய ஹிட்டான பதிவுகளில் ஒன்றான 'என்னை ஏமாற்றிய அசின்' இவ்வாறானதொரு போரடித்த ஒரு 3 மணிநேரக் கூட்டத்தில் எழுதி முடித்து அருந்ததி அக்கா தட்டச்சித் தந்தது.

முகாமையாளராக இருப்பதில் இப்படி ஒரு அனுகூலம்.



சிக்கல் இல்லாத நிர்வாகம், அழுத்தம் தராத மேலிடம், உள்வீட்டு சண்டைகள் இல்லாத கூட்டு முயற்சியும் தேடலும் கொண்ட என் கீழ் பணிபுரியும் அறிவிப்பாளர்கள் ஊழியர்கள், அமைதியான குடும்ப சூழல் ஆகியன எனது பதிவுப் பயணம் இடையூறில்லாமலும் பெரிய இடைவெளிகள் இல்லாமலும் பயணிக்க உதவுகிறது..

ஏற்கெனவே பல நல்ல நண்பர்களைக் கொண்டுள்ள எனக்கு வலைப்பதிவரான பிறகு மேலும் மேலும் நல்ல நண்பர்கள் பலர் இலங்கையிலும் கடல் கடந்தும் கிடைத்துள்ளார்கள்..

ஒருவர் இருவரை சொல்லி பலரை விட்டு பலரும் கோவித்துக் கொள்ளாமல் யாருடைய பெயரையும் குறிப்பிடாமலே விட்டு விடுகிறேன்..

எனினும் இன்று வரை எனது பதிவுகள் மற்றும் வலைத்தளம் ஆகியவற்றின் வளர்ச்சிப் பாதையில் மறக்க முடியாத நண்பர்கள் சிலரை சுருக்கமாக இங்கே சொல்லி விரிவாக எனது வெகு விரைவில் வரவிருக்கும் முன்னூறாவது பதிவிலே சொல்லப் போகிறேன்.. நண்பர்கள் பிரதீப், ஹிஷாம், வந்தியத்தேவன், சயந்தன், ஹர்ஷேந்த்ரா, தமிழ்நெஞ்சம், கோவி.கண்ணன், என்ன கொடும சார், அதிஷா, பரிசல்காரன், ஆதிரை, புல்லட், அருண், சதீஷ், மாயா, கானா.பிரபா, இன்னும் பல இந்திய இலங்கை நண்பர்கள்.. மறக்க மாட்டேன் என்றும் உங்களை..

இன்று எனது அலுவலகத்திலேயே என்னுடன் சக பதிவர்களாக ஹிஷாம்,அருண், சதீஷ், ரஜினிகாந்த் என்று நான்கு பேர் இருப்பது ஒரு மகிழ்வு என்றால் பல அன்புக்குரிய நண்பர்கள், தம்பிகள்,தங்கைகள் (பனையூரான் உட்பட.. ) என் பதிவுகள் தங்களுக்கு வலைத்தளம் ஆரம்பிக்கும் ஆர்வம் தந்தது என்று சொல்வதும் ஒருவகை பெருமையே. (இவனே எழுதிறான் நாங்கள் எழுத மாட்டோமா என்று தன்னம்பிக்கை வந்திருக்கும்..)

பதிவுலகம் வந்த பின்னர் வானொலி நிகழ்ச்சிகளுக்கும் தினம்தோறும் புதிய விஷயங்கள் கிடைக்கின்றன.. பார்வை விரிந்துள்ளது..கணினித் தொழிநுட்ப அறிவும் பல நண்பர்களால் கூடியுள்ளது.. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மேலும் அதிகரித்துள்ளது..

இன்னும் சொல்ல ஆசை தான்.. ஆனால் ரொம்பவும் நீளுதே..

அதனால் அடக்கி முடிக்கிறேன்..

யாரையும் நான் அழைக்கப் போவதில்லை.. மன்னிக்க.. வாசிக்கும் யார் விரும்பினாலும் இந்த தொடரை தொடரலாம்..(நான் தான் மிகத் தாமதமாக இதைப் பதிவேற்றுவதால் எல்லோரும் அனேகமாக எல்லோரையும் அழைத்து விட்டார்கள். இனி நான் எங்கு பொய் யாரைத் தேடுவேன்??)


ஒரு தகவல் தம்பட்டம்..
கடந்த 6ஆம் திகதியோடு நான் வலைப் பதிவராக மாறி ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதாம்.. ஒரு ரசிகை மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.. உண்மை தான்..

இன்னொரு உபரித் தகவல்..
சில தொடர் பதிவு விளையாட்டுக் கருப்பொருள்கள் நல்லா இருக்கு.. யாரும் அழைக்காமலே வரப் போகிறேன்..





Post a Comment

27Comments

Please Select Embedded Mode To show the Comment System.*