இன்று பகல் வேளையிலிருந்து இலங்கை முழுவதும் ஒரு திடீர் பரபரப்பு தொற்றி இருந்தது..
செல்பேசிகளின் வழியாக வரும் செய்தி சரங்கள் (sms news alerts)மூலமாக "இன்று இரவு சரியாக 8.05க்கு இலங்கையின் எல்லா தொலைகாட்சி அலைவரிசைகளையும் பாருங்கள்.. இலங்கையின் மிகப்பெரும் புதிய மாற்றத்துக்கான வழி காத்திருக்கிறது" என்ற செய்தியே இத்தனை பரபரப்புக்கும் காரணம்.
எங்களிடமும் இப்போது ஒரு தொலைக்காட்சிஇருப்பதனால் எனக்கு ஏதாவது தெரிந்திருக்கும் என்று ஏராளமான நண்பர்கள்,தெரிந்தவர்கள்,நேயர்கள் என்று எனக்கு மாறி மாறி அழைப்பும் கேள்விகளடங்கிய எஸ்.எம்.எஸ் களும் ..
எனக்கென்றால் ஒன்றுமே தெரியாது.. செய்தி,தொலைக்காட்சி பக்கமும் விஷயம் யாருக்கும் தெரியவில்லை.. புதிதாய் ஆரம்பித்தது தானே .. சின்னப் பெடியங்கள் என்று சொல்லவில்லைப் போலும்..
வந்த எல்லா எஸ்.எம்.எஸ்.களுக்கும் இரவு வரை காத்திருங்கள் பதிலை அனுப்பிவிட்டு, இரவு மனைவி,மகனோடு வெளியே போயிருந்த ரவுண்ட்சையும் அவசர அவசரமாக சுருக்கிக் கொண்டு வீடு வந்து, விறு விருப்பாக போய்க் கொண்டிருந்த அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் போட்டியையும் விட்டு விட்டு உள்ளூர் தொலைக்காட்சிகளில் அகப்பட்ட எதோ ஒரு அலைவரிசையைப் போட்டால்,
ஒரு தொடரூந்து(புகையிரதம்/ட்ரெயின்) அதற்குள் எல்லா இனத்தவரும்..(குறியீடுகள் மூலமாக..குல்லா அணிந்த இஸ்லாமியர்,குறி போட்ட தமிழர்,, கிறிஸ்தவ தமிழர் இல்லையோ???) இரண்டு வேறு வேறு கொம்பார்ட்மேன்ட்களில் இரு சிறுவர்கள் நட்புப் பார்வையோடு..
பார்த்தவுடனேயே விளம்பரம்..அதுவும் இன ஒற்றுமை பற்றி அரசின் விளம்பரம் என்று புரிந்துவிட்டது..ஆனாலும் ஏதாவது புதுசா சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால்...
எல்லா உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் இந்த அரச விளம்பரம்..
அந்த தொடரூந்து இரு துண்டுகளாகப் பிரிகிறது.. பயணம் செய்த எல்லா இனத்தவரும் சேர்ந்து பிரிந்த கொம்பார்ட் மென்ட்களை சேர்த்து நண்பர்களை இணைக்கிறார்கள்..
யாழ்தேவிக்கான (இலங்கைத் திரட்டியல்ல.. உலகப் புகழ் பெற்ற கொழும்பு -யாழ்ப்பாணம் இடையிலான புகையிரதம்) விளம்பரமாம் இது.. அட சாமிகளா..
இதுக்குத் தான் இத்தனை பில்ட் அப்பும் பரபரப்புமா?
இத்தோடு முடிந்தால் பரவாயில்லை..
யாழ்தேவிக்கான பாதை சமைக்க பணம் கொடுக்கப் போவது இலங்கையின் அப்பாவிப் பொதுமக்களாகிய நாமாம்..
உத்துறு மித்துரு என்ற லொத்தர் சீட்டை வாங்கட்டாம்..
கொடுமையிலும் பெருங் கொடுமை உத்துறு மித்துருவுக்கு செய்த தமிழாக்கம்..
உத்துறு என்றால் சிங்கள மொழியில் வடக்கு.. மித்துரு என்றால் நண்பன்..
தமிழில் போடப்பட்ட தொலைக்காட்சி விளம்பர அட்டையில் தெற்கின் நண்பன் என்று காணப்பட்டது..
குரல் கொடுத்த பிரபல தமிழ் அறிவிப்பாளரும் உத்துறு மித்துரு - தெற்கின் நண்பன் என்றே கூறுகிறார்..
எங்கே போய் நாம் முட்டிக் கொள்வோம்?
எத்தனை விஷயங்களுக்காக முட்டிக் கொள்வோம்?
எல்லாவற்றிலும் கொடுமை..
இதற்காகவா அவசரப்பட்டு எம்மையும் இழுத்துக் கொண்டு வீடு வந்தாய் என மனைவி நக்கலாய் என்னைப் பார்த்த பார்வை..
தேவையா எனக்கு?