சாம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப்போட்டியில் ஓட்டங்கள் குவிக்கக்கூடிய ஒரு திடலில் சொந்த நாடு தென்னாபிரிக்காவைப் பந்தாடிய இலங்கை அணிக்கு நேற்றைய தினம் ஜொஹனர்ஸ் பேர்க்கின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் காத்திருந்தது அதிர்ச்சி!
பலவீனமான அணி என்று இங்கிலாந்தைப் பலபேர் (அடியேனும் சேர்த்து) குறிப்பிட்டபோதிலும், இலங்கை அணியின் பயிற்றுனர் ட்ரெவர் பேய்லிஸ் - இங்கிலாந்து அணியை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று சொன்னதன் அர்த்தம் நேற்றிரவு புரிந்தது.
நாணயச் சுழற்சியின் வெற்றியும் ஆடுகள சாதகத் தன்மையும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை unplayable champion bowlers ஆக மாற்றியிருந்தது.
அதிலும் ஜிம்மி அன்டர்சன் - வாய்ப்பேயில்லை – அப்படியொரு துல்லியம். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தூண்கள் நான்கும் 17 ஓட்டங்களுக்குள் சாய்ந்தபோது 200 என்பதே சாத்தியமில்லாத ஒன்றாகவே தென்பட்டது.
ஆனால் சமரவீர, கண்டாம்பி, மத்தியூசின் பொறுமையான போராட்டமிக்க துடுப்பாட்டமும். பின்னர் முரளியின் அதிரடியும் 200 ஓட்டங்களைத் தாண்டச் செய்தது.
இலங்கை அணிக்கு மத்தியூஸ் ஒரு நல்ல சகலதுறை வீரராகக் கிடைத்திருப்பதுபோல – மத்தியவரிசையைப் பலமாக்க ஒரு வீரரைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் (சிறிதுகாலம் சாமரசில்வா இருந்தார்) கண்டாம்பி வந்துள்ளார்.
இந்தியாவுடன் அதிரடிக்குப் பிறகு, நேற்றைய ஆட்டம் அவரது முதிர்ச்சியைக் கூட்டுகிறது.
ஏஞ்சலோ மத்தியூஸ் இரண்டாவது ஓட்டமொன்றைப் பெற முனைந்த வேளையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கிறார். பந்துவீச்சாளர் ஒனியன்ஸ் வழி மறித்ததினாலேயே ஓடமுடியாமல் போனது தெரிந்தும் நடுவர் ஆட்டமிழப்பு வழங்க, புகைந்து கொண்டே பவிலியன் திரும்புகிறார் மத்தியூஸ்.
எனினும் தன் வீரர் மீதும் தவறிருப்பதை உணர்ந்து கொண்ட இங்கிலாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் உடனடியாக மத்தியூஸை மீள அழைத்தார்.
ஏனைய எந்தவொரு அணித்தலைவராவது இவ்வாறு நடந்திருப்பார்களா என்றால் சந்தேகமே!
தன்னை மீண்டும் ஒருதரம் கனவானாக நிரூபித்திருக்கும் ஸ்ட்ரோஸ் கிரிக்கெட் பணமயமாக்கப்பட்டு வெற்றிகளை நோக்கியதாக மட்டுமே அமைந்திருந்தாலும் sportsmanship இன்னும் சாகவில்லை என்றும் காட்டியுள்ளார்.
ஏற்கெனவே அவுஸ்திரேலியா அணியுடனான ஆஷஸ் தொடரில் தனது கண்ணியத் தன்மையை வெளிப்படுத்திருந்த ஸ்ட்ரோசை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ..
ஆனாலும் பரிதாபம் வந்த மத்தியூஸ் ஒரு சில பந்துகளிலேயே ஆட்டமிழந்தார்.. அப்போது ஸ்ட்ரோசின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே.. அது ஒரு சிறுகதை..
ஆனால் இப்படிப் பட்ட கண்ணியமான ஸ்ட்ரோஸ் துடுப்பெடுத்தாடும் பொது ஆட்டமிழப்பில்லாத பந்துக்கும் ஆட்டமிழப்பு கேட்ட சங்கக்காராவை என்ன சொல்வது?
கண்ட கண்ட பந்துகளுக்கும் தேவையில்லாமலும் ஆட்டமிழப்புக்களை கேட்டு கண்ணியமானவர் என்று கருதப்பட்டு வந்த தனது பெயரை நேற்று களங்கப்படுத்திக் கொண்டார்.
தலைவராக வந்த பின்னரே இவர் இவ்வாறு மோசமாக மாறியிருக்கிறார் என நினைக்கிறேன்..
இதிலும் நேர்முக வர்ணனையாளர் ஒருவர் appealing team ஒன்று அறிவிக்கப்பட்டால் அதன் தலைவராகவும் சங்கக்காரவே இருப்பார் என்று சொன்னது மகா கேவலம்.
குலசேகர இலங்கை அணிக்காக ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசினாலும், மாலிங்க,மத்தியூஸ் ஆகியோர் இடையிடையே சிறப்பாகப் பந்து வீசினாலும் கூட, முரளி,மென்டிசினால் நேற்றைய ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலைக் கொடுக்க முடியவில்லை.
முரளியை அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் எல்லா அணிகளுமே இலகுவாக விளையாடுவது உறுத்துகிற ஒருவிடயம்.
திட்டமிட்டு பொறுமையாக ஆடிய இங்கிலாந்து எதிர்பார்த்ததை விட இலகுவாக வெற்றியைப் பெற்றது.
கோலிங்க்வூட்டின் ஆக்ரோஷம், ஷாவின் பொறுமை, மோர்கனின் நேர்த்தியான நிதானமான துடுப்பாட்டம் என்று இங்கிலாந்து நேற்றைய தினம் உண்மையில் ஒரு வெற்றிகர அணி என்று காட்டியது..
நேற்றைய போட்டியில் கவனித்த இன்னும் சில விஷயங்கள்.. எவ்வளவு தான் ஆடுகளம் ஸ்விங்,மேலெழும் தன்மைக்கு உதவினாலும் பந்தை பலமாக ,டைமிங்குடன் அடித்தால் இலகுவாக சிக்சர்களைப் பெற முடிந்தது.. கோளிங்க்வூடும்,ஷாவும், ஏன் குலசேகர, முரளியும் கூட அலட்டிக் கொள்ளாமல் சிக்சர் அடித்திருந்தனர்.. மைதானம் ஒப்பீட்டளவில் சிறியது.. தென் ஆபிரிக்கா-ஆஸ்திரேலியா உலக சாதனை ஓட்டங்களைக் குவித்ததும் இதே மைதானத்தில் தான். இலங்கை அணி இன்னொரு வேகப் பந்துவீச்சாளரை எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்..
இப்போது பிரிவு B ஒரு குழப்பமான ஒன்றாக மாறியுள்ளது.. எல்லா அணிகளுக்குமே வாய்ப்பு..
நாளை இலங்கை - நியூ சீலாந்து அணிகள் மோதும் போட்டி முடிவொன்றைத் தரும்.. (இலங்கை அணி மறுபடி என் மூக்கை உடைத்துவிடுமோ?? ஓவர் பில்ட் அப் உடம்புக்காகாது என்று நிறையப் பேர் சொன்னாங்களே.. கேட்டியா லோஷன்?)
இப்போது ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை பந்தாடிக் கொண்டுள்ளது.. (ஆரம்பத்தில் தடுமாறினாலும்..)
இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் -இந்தியா மினி கிரிக்கெட் யுத்தமே நடைபெறப் போகிறது.. இது தான் இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் முக்கியமான போட்டியென்றால் அது நியாயமே..
விறுவிறுப்பாக ரசிப்போம்.. இந்தியாவும் சேவாக்,யுவராஜ் இல்லாமல் நொண்டியடிக்கிறது.. (இவங்களும் மூக்கை உடைச்சிருவாங்க போல தெரியுதே.. )
கிரிக்கெட் என்றால் இப்படித்தான்.. ;)