சாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பலவீனங்கள்..

ARV Loshan
18
ICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009 பற்றி முன்னைய பதிவில் "ICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை" பார்த்தோம்..

இப்போது அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பலவீனங்கள் பற்றிக் கொஞ்சம் சுருக்கம்,கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்..
நேற்றைய வெற்றி பலராலும் முதல் மூன்று வாய்ப்புள்ள அணிகளுள் (தென் ஆபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா) இல்லாமல் இருந்த இலங்கையை இப்போது hot favouritesஆக மாற்றியுள்ளது என்பது அதிசயமே..

எட்டு அணிகளையும் எட்டிப் பார்க்கலாம்.. வாங்க..

பிரிவு A


மேற்கிந்தியத்தீவுகள்

மேற்கிந்தியத்தீவுகளை யாராவது அதிர்ஷ்ட தேவதை ஆசிர்வதித்தால் மட்டுமே அரையிறுதி பற்றி சிந்திக்கலாம்.

டரன் சமி, டெர்ரி டௌலின் போன்றோர் பிரகாசிக்கக் கூடிய வீரர்கள்.


பாகிஸ்தான்

கலைஞரின் அறிக்கைகள் போல, இந்திய அரசியல்போல, கண்டியின் காலநிலைபோல எளிதில் ஊகிக்கமுடியாத அணி!

இலங்கையில் வைத்து கடைசி இரு ஒருநாள் போட்டிகளை வெற்றி கொண்டதைப்போல, தொடர்ச்சியாக எல்லாப் போட்டிகளிலும் பெறுபேறுகள் காட்ட ஏனோ முடியாமலுள்ளது. (இன்னமும் உள் வீட்டு சிக்கல்களா?)

கம்ரன் அக்மல், இம்ரான் நசீர், ஹொயிப் மாலிக், யூனிஸ்கான், யூசுஃப், சயீட் அஃப்ரிடி, மிஸ்பா உல் ஹக், பவாட் அலாம், உமர் அக்மல் என்று நீண்ட பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும், தடுமாறும் பந்து வீச்சும், மோசமான களத்தடுப்பும் பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்லவிடாத காரணிகளாகத் தெரிகின்றன. மொஹமட் ஆசிப், உமர் குல், நவீட் உல் ஹசன் மூவருமே பிரகாசித்தால் வாய்ப்புண்டு.

உமர் அக்மல், உமர் குல் பிரகாசிக்கக்கூடியவர்கள்.


இந்தியா

சேவாக், சாஹிர்கான் இல்லாத வெற்றிடங்கள் நிரப்பப்படமுடியாத ஓட்டைகள். எனினும் அரையிறுதி வாய்ப்பு உறுதியான அணிகளுள் ஒன்று.

கம்பீர் பூரண சுகத்துடன் அணிக்குள் வந்தால் - Form இலுள்ள சச்சின், தோனி, யுவராஜ் எனப் பட்டைகளப்பும் அணி.

ரெய்னா டிராவிட்டை நம்பியிருக்கலாம்...

நேஹ்ரா, ஹர்பஜன் தவிர அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் என்றால் அது யுவராஜ் சிங் தான் எனுமளவுக்கு பலவீனமான பந்துவீச்சுத்தான் கொஞ்சம் உறுத்துகிறது.

தோனி மனம் வைத்தால் 2007 T 20 மகிழ்ச்சியை மீண்டும் பார்க்கலாம் எனுமளவுக்கு பலரால் தூக்கிப் பிடிக்கப்பட்டாலும், இன்னும் சச்சின் இல்லையேல் அணியில்லை (அடுத்தபடியாக யுவராஜ்) எனும் நிலையிருக்கிறது.

சச்சின், யுவராஜ், டிராவிட், தோனி என்று நால்வரையும் நம்பியிருக்கலாம்.



அவுஸ்திரேலியா

எப்படி இருந்த அணி?...
முன்புபோல Hot Favourites என்று முத்திரை குத்த முடியாவிட்டாலும் இங்கிலாந்தை 6 -1 என்று துவைத்தெடுத்த துணிச்சலோடும் எல்லா வீரர்களும் formக்குத் திரும்பிய மகிழ்ச்சியோடு குதித்திருக்கிறது.

பொன்டிங், கிளார்க், ஜோன்சன், லீ இந்த நான்கு பேரும் வெற்றித் தினவெடுத்து நிற்கின்றனர் என்றால்,

கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட புதியவர்களை விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன், கலும் பெர்குசன் மற்றும் புதிய அவதாரமெடுத்துள்ள கமரான் வைட் ஆகியோரும் நம்பிக்கையளிக்கின்றனர்.

ஆடுகளங்களும் சாதகமானவை என்பதனால் அரையிறுதி நிச்சயம் என்றே தோன்றுகின்றது.

பெர்குசன், ஜோன்சன், வைட், ஷேன் வொட்சன், லீ - இந்தப் பஞ்ச பாண்டவரைப் பார்த்திருங்கள்.



பிரிவு B


இலங்கை

வெளிநாட்டு மைதானங்களில் வெற்றிகளை சுவைக்கும் நம்பிக்கையை சங்கக்காரவின் தலைமையில் மேலும் ஊட்டும் துணிச்சல் கொண்ட அணி. பாகிஸ்தான் அணிபோலவே சிலவேளை நம்பிக்கையில் மண்ணைப் போட்டுவிடும்.

96இலிருந்து ஜெயசூரியவை நம்பியிருந்தது போல, இப்போது அவருடன் சேர்த்து /அவரில்லாவிடில் டில்ஷானை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

அண்மைக்காலத்தில் தேடிக்கொண்டிருந்த – அர்ஜூன. அரவிந்த காலத்திலிருந்த பலமான, நம்பகமான மத்திய வரிசை வாய்த்திருக்கிறது.

பல்வகைமை கொண்ட பயமுறுத்தும் பந்துவீச்சாளர்களும் (முரளி, மென்டிஸ், மாலிங்க, குலசேகர, துஷார, மத்தியூஸ், ஜெயசூரிய) துடிப்பான களத்தடுப்பும் அரையிறுதி தாண்டி இறுதிக்கும் கொண்டு செல்லலாம்.

நேற்றைய வெற்றி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்று நம்புகிறேன்.

தென்னாபிரிக்க ஆடுகளங்களில் சறுக்கி வந்த மகேலவும், சங்காவும் நேற்று அபாரமான அரைச்சதங்கள் மூலம் இலங்கை வென்றது நம்பிக்கைகளையும், வாய்ப்புக்களையும் அதிகப்படுத்தியுள்ளது.

சங்கக்கார, டில்ஷான். மென்டிஸ் பிரகாசிப்பார்கள்.



தென்னாபிரிக்கா

Chokers - முக்கியமான தருணங்களில் சோர்ந்து – தோற்று விடுவோர் என்பதை '92 உலகக்கிண்ணம் முதல் நிரூபித்து வருபவர்கள். சொந்த செலவிலே சூனியம் வைக்கும் அணி.

சொந்த மண்ணில் இந்த முறை இதை மாற்றியமைத்து வெற்றிவாகை சூடுவோம் என்று சூளுரைத்துக் களம் புகுந்தது.

எனினும் நேற்று இலங்கைக்கெதிராகப் பெற்ற தோல்வியினால் ஒருநாள் தரப்படுத்தலில் பெற்றிருந்த முதலாமிடத்தையும் இழந்துவிட்டு தடுமாறுகிறது.

ஸ்மித் கிப்ஸ் (குணமடைந்து அடுத்த போட்டிக்கு வந்தால்), கலிஸ், டிவில்லியர்ஸ், டுமினி, பௌச்சர். மோர்க்கல் என்று நீண்ட துடுப்பாட்ட வரிசையும், பலமான நிறைவான பந்துவீச்சாளர்களும், துடிப்பான களத்தடுப்பும், பூரண சொந்த நாட்டு ரசிகர் ஆதரவும் இருந்தும் கூட துரதிஷ்டமும் பதற்றமும் துரத்துகிறது.

அரையிறுதிக்குள் எப்படியாவது வந்துவிடுவார்கள்...
மீதி அவர்களது கையிலேயே....

ஸ்மித், ஸ்டெயின், கலிஸ், டிவில்லியர்ஸ் - கவனித்துப் பார்க்கலாம்.



இங்கிலாந்து

இவர்களுக்கு ஏன் ஒருநாள் போட்டிகள்?
பிளின்டொப், பீட்டர்சன் இல்லாமல் என்ன செய்யப்போகிறார்கள்?

யுவராஜூம் இந்தியாவும் இந்தப்பிரிவில் இல்லை என்பதில் ஸ்டுவர்ட் புரோட் குழுவினர் நிம்மதியடையலாம். முதல் சுற்றில் ஒரு போட்டியில் வென்றாலே பெரிய அதிசயம்.

ஜோ டென்லி, லூக் ரைட் பிரகாசிக்கலாம்.



நியூசிலாந்து

என்னைப் பொறுத்தவரை இந்த சாம்பியன் கிண்ணத்தின் கறுப்புக்குதிரைகள் இவர்கள் தான்!

ஆடுகளங்களின் சாதகமும், இளமைத்துடிப்பும் சில பலமான அணிகளை அதிர்ச்சிக்குள்ளாகக்கூடும்.

ஷேன் பொண்ட்டின் மீள்வருகை உற்சாகத்தை அதிகரித்துள்ளது. சகலதுறைவீரர்களே இந்த அணியின் பலம்.

ஜெசி ரைடர், நீல் புரூம், ஷேன் பொண்ட் - கலக்கலாம்.


^^^^^^^^^^^^^^^^^^


ஏதோ ஒரு அணி இரண்டாவது தடவையாக ICC சாம்பியன்ஸ் கிண்ணத்தைத் தனதாக்கப் போகின்றது என்பது உறுதி!

இறுதிப்போட்டியில் அண்ணனும் தம்பியும் (இந்தியா - இலங்கை) மோதலாம்...
இல்லையேல்...

இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரை ஆரம்பித்து வைத்த இரு அணிகளே இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கலாம்.

பொன்டிங்கின் அணி இம்மூவரில் ஒருவரை இறுதிப்போட்டியில் சந்திக்கவும் வாய்ப்புக்கள் உண்டு!

நீங்க என்ன சொல்றீங்க?


Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*