ஒரு பதிவுலக வாசகராக,பின்னர் பதிவராக, அண்மைக் காலத்தில் நண்பராக, தம்பி போல பழக்கமான ஆதிரைக்கு அண்மைக் காலத்தில் ஒரு பெரும் பிரச்சினை என்று அறிந்து மனம் மிக நொந்துபோனேன்..
எலியால் கிலி கொண்ட ஆதிரை..
வழமையாக எங்கள் இரவுநேர Gmail அரட்டையில் பல விஷயங்கள் அலசப்படுவது உங்களில் பெரும்பாலோனோர் அறிந்தவிஷயமே.. பிரபல,மூத்த பதிவரின் திருமணம் முதல் புல்லட்டின் காதல்கள்,வலையுலக மோதல்கள், கமலின் வழக்கு, நமீதா எடைக் குறைப்பு, நயனின் ஆடைக்கிழிசல் தொடக்கம் விளையாட்டு, அரசியல், பொருளாதாரம் என்று பல பயனுள்ள விஷயங்களும் இங்கே சாறு பிழியப்படுவதுண்டு..
ஒவ்வொருநாளும் சரியான நேரத்துக்கு வரும் ஆதிரை இரண்டு மூன்று நாள் மிஸ்ஸிங்.. என்னவென்று தேடிப் பார்த்தால் ஆளின் வீட்டில் எலிகளின் திருவிளையாடலால் மின்சாரம் துண்டிப்பாம்..
அடப்பாவமே என்று பார்த்தால், தொலைபேசியில் எடுத்து ஒரு அரைமணி நேரம் தங்கள் வீட்டு எலித் தொல்லைப் புராணமே பாடி அழுதுவிட்டார் ஆதிரை.. எனக்கும் வீட்டில் முன்பு எலித் தொல்லை இருந்ததால் அந்த துன்பம் நல்லாவே தெரிந்திருந்தது.
பார்க்க என் முன்னைய எலிப் பதிவு..
எலிகள் ஜோடியாக வீட்டிலே ரெக்கோர்ட் டான்ஸ் போடுமளவுக்கு நிலைமை மிக மோசம் என்று ஆதிரை சொன்னபோது, எனக்கு வீட்டில் இருந்ததை விட நிலைமை கட்டுக்கு மீறிப் போயிருப்பதை உணர்ந்துகொண்டேன்.
எலிக் குஞ்சுகளை பெற்றோரிடம் இருந்து தூர வீசியும், விட்டோம்மா பார் என்று மறுபடி வாரிசுகளை உருவாக்கி ஆதிரைக்கு சவால் விட்டுக் காட்டும் இனப்பெருக்கம் வேறு நடந்துகொண்டிருந்தது.
இதை விடக் கொடுமை இரண்டு நாள் ஆதிரை அலுவலகத்துக்கு லீவு.. ஆதிரை அணியும் டிறௌசர், சேர்ட் தொடக்கம் 'அத்தனை'யையும் கடித்து துவம்சம் செய்திருந்தன ஆதிரை வீட்டு எலிகள்..
(உடுத்திருந்த காரணத்தால் ஆதிரையின் சாரம் தப்பிக் கொண்டது என்று ஆறுதல் பட்டுக் கொண்டார் அவரின் உற்ற நண்பர் புல்லட்)
ஒவ்வொரு நாளும் லேட்டஸ்ட் ரஹ்மான்,யுவனின் பாடல்களுக்கு எலிகள் ஆடும் ரெக்கோர்ட் டான்சினால் நம்ம ஆதிரை தூக்கம் தொலைத்து நொந்து நூலாகி விட்டிருந்தார். உசிலை மணி கணக்கில் இருந்தவர் இரண்டே நாளில் லூஸ் மோகன் கணக்காக (சைசில்) மாறிவிட்டிருந்தார்..
இனியும் பார்த்திருந்தால் நட்புக்கே அர்த்தமில்லை என்று நினைத்தவனாக உதவட்டுமா என்று கேட்டால், வந்து காலிலே விழுந்துவிடுவார் போல.. "ப்ளீஸ் ஏதாவது செய்து என்னை எலியிடமிருந்து காப்பாற்றுங்கள்.. விசாப் பிள்ளையாரை விட்டிட்டு உங்களையே ஒவ்வொரு நாளும் கும்புடுறேன்" என்று தழு தழுக்க ஆரம்பித்தார்..
(என் உடல் அளவை வைத்து பிள்ளையாருடன் உள்குத்தாக ஒப்பிட்டாரோ தெரியல)
அடுத்த நாளே எனது அனைத்தும் அறிந்த அண்ணாமலை நண்பரான கஞ்சிபாயையும் அழைத்துக் கொண்டு ஆதிரை வீட்டுக்குப் போனேன்.
எல்லா தடயங்கள், சேத விபரங்களைப் பார்த்தவர், எலிக் குடும்பம் ஒன்று அல்ல, எலி சமுதாயமே அங்கே குடி பெயர்ந்திருப்பதை அறிந்துகொண்டார்..
"வாடகை எல்லாம் வாங்கிறீங்களோ?" கஞ்சிபாய் கேட்ட இந்தக் கேள்வி சீரியஸா கடியா என்று புரியவில்லை..
எலிப் பாஷாணம், மோர்டீன், தடியடிப் பிரயோகம்(எங்கள் வீட்டில் நாம் நடத்திய என் கவுண்டர் வழிமுறை இது தான்) என்று எதுவுமே பயனளிக்கவில்லை என்று அதிரை அழுததைக் கேட்ட கஞ்சிபாய், நீண்ட நேர சீரியஸ் சிந்தனைக்குப் பிறகு குரலை செருமிக் கொண்டு
"ஆதிரை, உங்கள் வீட்டில் நடக்கும் எலி அக்கிரமத்தை பார்த்தால் பாரம்பரிய எலி அழிப்பு முறை தான் சரிவரும் போல தெரியுது" என்றார்.
பாரம்பரிய முறையா? நானும் ஆதிரையும் கேள்வியோடும் கஞ்சிபாயைப் பார்த்தோம்..
"பூனை ஒன்றை வளர்த்தால் எல்லாம் ஈசி.. " கஞ்சிபாய் பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
"பூனை எண்டால் பால்,சாப்பாடு எண்டு செலவாகுமே.." ஆதிரை இழுத்தார்..
"உங்களை யார் பூனைக்கு சாப்பாடு போட சொன்னது? எலிக்கு கொஞ்ச சாப்பாடு வையுங்க.. இதனால எலிகள் உங்கள் வீட்டு பொருட்களை கடிக்காது.. பூனைக்கு பசிச்சா எலியைப் பிடிச்சு சாப்பிடட்டும்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எப்பூடி??"
கஞ்சி பாய் கேட்டு முடிக்கவும் ஆதிரை கொலைவெறியோடு என்னை நோக்கி கையில் கிடைத்த ஏதோ ஒரு பொருளோடு துரத்த ஆரம்பித்திருந்தார்..
பி.கு - இந்தக் கதை கொஞ்சமும் கற்பனையில்லை..
இப்போது ஆதிரை எலியால் கடிபட்ட ஓட்டை விழுந்த ஒரு டிரௌசரோடு, இரவுகளில் எலி ரெக்கோர்ட் டான்சால் காணாமல் போன தூக்கக் கலக்கக் கண்களோடு வேகமான,துடிப்பான,மலிவான பூனை தேடிக் கொண்டிருப்பதாக வெள்ளவத்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பதிவு பற்றியும் தலைப்பு பற்றியும் ஆதிரை மற்றும் அவர்,நான் சார்ந்த நண்பர்களோடும் கலந்துபேசி சம்மதம் பெறப்பட்டுள்ளது.. ஏற்கெனவே எனது விடியல் நிகழ்ச்சியிலும் சுருக்கமாக நகைச்சுவையாக 'கடி'க்கப்பட்டது..