இங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா.. என்ன கொடுமை இது..

ARV Loshan
15

ICC சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளில் எதிர்பாராத என்னென்னவோ எல்லாம் நடந்து முடிந்தாயிற்று....

Favourites என்று (என்னால் மட்டுமல்ல பிரபல விமர்சகர்களாலும் - முன்னாள் வீரர்களால்) எதிர்வு கூறப்பட்ட பல அணிகள் பந்தாடப்பட்டு அடுத்த சுற்றான அரையிறுதிக்குச் செல்லமுடியாமல் தட்டுத்தடுமாறிய வண்ணம் உள்ளன.

யாருமே – ஏன் அந்த அணிகளின் அபிமானிகளே எதிர்பார்த்திராத பாகிஸ்தானும், இங்கிலாந்தும் அரையிறுதி செல்வதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இப்போது அரையிறுதிக்கு முதலில் தெரிவாகியுள்ள இரு அணிகளும் இதுவரை சாம்பியன்ஸ் கிண்ணங்களை (மினி உலகக் கிண்ணத்தை) இதுவரை வென்றதில்லை.

கடந்த ஐந்து தடவை போல இம்முறையும் புதிய அணியொன்றுதான் (இதுவரை வெல்லாத அணி) கிண்ணத்தை சுவீகரிக்கப் போகிறதோ?

இன்றிரவு நடந்த இந்திய - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி மழையினால் குழம்பியது காரணமாக மற்றொரு வாய்ப்புள்ள அணியாகக் கருதப்பட்ட இந்தியாவின் வாய்ப்புக்களும் அருகியுள்ளன.

இலங்கை அணியின் நேற்றைய தோல்வி (இத்தொடரில் இரண்டாவது) கடுப்பைத்தந்தாயினும், வழமைபோல் சுருண்டுவிடாமல் இறுதிவரை போராடித் தோற்றதில் ஒரு திருப்தி.

பந்து வீசும் போது வாரி அள்ளி நியூசிலாந்துக்கு கொடுத்திருந்தாலும், விக்கெட்டுக்கள் சரிந்த பின்னரும் மகேல ஜெயவர்த்தனவும், நுவான் குலசேகரவும் துடுப்பெடுத்தாடிய விதம் ரசிகர்களைக் கொஞ்சமாவது ஆறுதல்படுத்தியிருக்கும்.

மக்கலம், றைடர், கப்டில், வெட்டோரி ஆகியோரின் துடுப்பெடுத்தாட்டமும், வழமையை விடக் கட்டுப்பாடான பந்துவீச்சும் நியூசிலாந்தை வெற்றியாளர்கள் ஆக்கியது. எனினும் நேற்று அதிரடி ஆட்டத்தை வழங்கிய ஜெசி ரைடர் உபாதை காரணமாகத் தொடரில் இனி விளையாட முடியாமல் போயிருப்பது நியூசிலாந்துக்கு மிகப் பெரிய இழப்பே.

இலங்கை அணியின் பொருத்தமற்ற அணித்தெரிவுகளே காரணம் என்று சொல்லலாம். இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆடுகளமொன்றில் திலான் துஷாரவை விட்டுவிட்டு விளையாடியது.

பின்னர் நேற்று ஜெயசூரிய 3விக்கெட்டுக்கள் எடுக்கக்கூடிய ஆடுகளத்தில் முரளிதரனை விட்டுவிட்டு விளையாடியது.

ஏன் இந்தக் குழப்பம்!

எவ்வளவு தான் அடிவிழுந்தாலும், உலகத்தின் சாதனைப் பந்துவீச்சாளரை, தனித்து நின்று போட்டியொன்றை வென்று தரக்கூடிய முரளியை அணியிலிருந்து நீக்குவது புத்திசாலித்தனமான செயல் அல்லவே.


மீண்டும் தாங்கள் Chokers அல்லது Jokers என்று நிரூபித்துள்ளார்கள் தென் ஆபிரிக்கர்கள். போட்டிகளை நடாத்தும் நாடாக முதலிலேயே அடுத்த சுற்றுக்கு வாய்ப்பில்லாமல் வெளியேறியுள்ளது. 2003 உலகக்கிண்ணம், 2007 T 20 உலகக்கிண்ணம் மீண்டும் இப்போதும் தம் உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள்.

இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பெருந்தன்மையுடன் கனவானாக நடந்துகொண்ட ஸ்ட்ரோஸ், நேற்றுத் தென் ஆபிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஓடமுடியாமல் தவித்தபோது ஓடுவதற்கு சகவீரர் ஒருவரை அழைக்க அனுமதி கேட்டபோது மறுத்தது வியப்புக்குரியது.

இலங்கை அணியின் மத்தியூசை மீள் அழைத்தது குறித்து பயிற்றுவிப்பாளர் அன்டி ஃபிளவர் உள்ளிட்ட பலரும் தெரிவித்த எதிர்மறை விமர்சனங்களும் வெற்றியினை நோக்காகக் கொண்ட அழுத்தங்களுமே இத்தனை காரணங்களாக இருக்கலாம்.

ஸ்மித் தனித்து நின்று வெற்றியை தட்டிப் பறித்துவிடுவார் என்பதினாலேயே அவருக்காக இன்னொருவர் ஓடும் வாய்ப்பை ஸ்ட்ரோஸ் வழங்கவில்லை என்று தெளிவாகவே தெரிகிறது..

"தசைப் பிடிப்புக்களுக்கு ரன்னர் வழங்கப் படுவதில்லை.. முற்றுப் புள்ளி" என்று மிகத் தீர்மானமாக முடித்துவிட்டார் ஸ்ட்ரோஸ்..


எனினும் இலங்கை அணியுடனான போட்டியின் பின் மனதில் உயரத்தில் வைத்திருந்த ஸ்ட்ரோஸ் இப்போது தடாலெனக் கீழே விழுந்து விட்டார்.

எனினும் ஸ்மித்தின் தனித்த போராட்டம் இன்னும் கண்ணுக்குள் நிழலாடுகிறது..தலைவனுக்குரிய ஒரு இன்னிங்க்ஸ்.

எனினும் தென் ஆபிரிக்காவின் துரதிர்ஷ்டம் இன்னும் துரத்துகிறது.

தென் ஆபிரிக்கா இன்னும் 13 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்றிருந்தால் நிகர ஓட்ட சராசரி வீதத்தின் (net run rate)அடிப்படியில் வாய்ப்பு இருந்திருக்கும்.. எனினும் இப்போது தென் ஆபிரிக்கா சகல வாய்ப்புக்களையும் இழந்து வெளியேறியுள்ளது.

இப்போது இலங்கை,இந்தியாவின் வாய்ப்புக்களைப் பார்க்கலாம்..

நாளை நியூ சீலாந்தை இங்கிலாந்து வென்றால் இலங்கை அரை இறுதி செல்லும்..
இலங்கை ரசிகர்கள் எல்லா தெய்வங்களுக்குமாக இங்கிலாந்தின் வெற்றிக்காகவும் வீரர்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார் என்பது மட்டும் உறுதி..

(இப்படித் தான் ஒழுங்கா விளையாடாவிட்டால் யாரையெல்லாமோ நம்பி இருக்க வேண்டும்..)

நியூ சீலாந்து நாளை வென்றால் இலங்கைக்கு ஆப்பு..

மறுபக்கம் இந்தியா இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றே ஆகவேண்டும்..

இந்தப் பலவீனமான பந்துவீச்சாளர்களோடு மேற்கிந்தியத் தீவுகளை வெல்லவும் சிரமப்படும் என்று நினைக்கத் தோன்றுகிறது.அதேவேளை ஆஸ்திரேலியா தனது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்கவும் வேண்டும்..

அத்துடன் இந்தியா பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறவும் வேண்டும்.. ஆஸ்திரேலியா மோசமாகத் தோற்கவும் வேண்டும்.. (நடக்குமா?)
பாகிஸ்தானை நம்பி இந்தியா.. என்ன கொடுமை இது..

பார்க்கும்போது, இலங்கையை விட இந்தியாவுக்கு வாய்ப்புக்கள் மிக மிக அருகியுள்ளதாகவே தென்படுகிறது..

எனினும் கிரிக்கெட்டில் எதைத் தான் எதிர்வுகூற முடியும்?

இங்கிலாந்தின் இளைய அணியின் முயற்சியும், அசராத அபார ஆட்டமும், கோலிங்க்வூடும், மொரகனும், இறுதியாக ஷாவும் ஆடிய ஆட்டங்கள் அவர்களுக்கு கிண்ணத்தை வழங்கினாலும் ஆச்சரியமில்லை. அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வரிசை, குறிப்பாக பொன்டிங், ஹசி ஆகியோர் அதிரடியாக ஆடுவது எதிரணிகளுக்கு ஆபத்து அறிகுறி.. பாகிஸ்தானும் புத்துணர்ச்சியோடு நிற்கிறது..

நான்(எம்மில் பலரும் தான்) போட்ட கணக்குகள் பலவும் தப்புக் கணக்குகள் ஆயிப் போயினவே..

ஆனாலும் ஒரு சந்தோசம்.. அறை(கன்னத்தில் அடிப்பதை சொன்னேன்),வம்பு,விவகார புகழ் ஹர்பஜனுக்கு வருவோர்,போவோர் எல்லாம் தாக்கினாங்க பாருங்க.. என்ன ஒரு திருப்தி..

பார்க்கலாம்.. இங்கிலாந்து,பாகிஸ்தானோடு சேர்ந்து கொள்ளப் போகின்ற நாடுகள், அவுஸ்திரேலியா, இலங்கையா.. நியூ சீலாந்து, இந்தியாவா என்று..

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*